Tuesday, 28 February 2017

03. திருச்சிராப்பள்ளி - (பதிகம் 1)

ஈசன் வெண்பா

பாடல் 1:
விடைமேல் வலம்வரும் வித்தகன்; கொன்றைச்
சடைமேல் பிறையணி சங்கரன்; வில்வத்
தொடையோ டரவணி சோதியன்;  பொற்றாள்
அடைக்கலம் சேர்தல் அழகு.

* தொடையோ டரவணி - தொடையோடு அரவு அணி
* தொடை - மாலை

பாடல் 2
தூயவர்; ஓர்கழல் தூக்கி நடமாடும்
மாயவர்; மாதவளுக் கின்னருள் செய்திட்ட
தாயவர்; பூதமைந் தானவர்; கற்குன்று
மேயவர்; தண்தாளை மெச்சு. 2

* மாயவர் - மாயம் (மறைத்தல்) செய்பவர். ஐந்தொழில்களில் ஒன்று திரோதானம் என்னும் மறைத்தல்.
* மாதவளுக் கின்னருள் செய்திட்ட - மாது அவளுக்கு இன்னருள் செய்திட்ட.
* மாது - வணிகர் குலப் பெண் இரத்னாவதி.
* பூதமைந் தானவர் - பூதம் ஐந்து ஆனவர்.
* கற்குன்று - கற்களால் ஆன மலை.

பாடல் 3

சிரத்தில் பிறைநிலா சீரா றணிந்து
கரத்தில் மழுமான் கனலிவை யேற்று
மரத்தின் நிழலில் மகிழ்ந்தமர் நாதன்;
புரத்தை யெரித்தோன் புகல். 3

சிரத்தில் பிறைநிலா சீரா றணிந்து - சிரத்தில் பிறை நிலா, சீர் ஆறு அணிந்து
*சீராறு - சீராக ஓடும் கங்கை நதி
கரத்தில் மழுமான் கனலிவை யேற்று
மரத்தின்....
கரத்தில் மழு,மான்,கனல் இவை ஏற்று ஆல மரத்தின்...
*மழு - கோடரி
*கனல் - நெருப்பு
*புரம் - திரிபுரம்
*புகல் - துணை

பாடல் 4

விண்ணவர் போற்றும் விமலன்; விரிசடையில்
வெண்ணிலாச் சூடும் விடையன்; பணிவோர்க்குத்
தண்ணிழல் தந்திடும் தங்கத் தருவவரின்
பண்ணிசை போற்றுந்தாள் பற்று.

*வெள்விடை - வெள்ளை ரிஷபம்
*பாகன் - தலைவன்
*தருவவரின் - தரு அவரின். தரு - மரம்.
*தங்கத் தரு - உயர்ந்த/சிறந்த தரு.
*பண்ணிசை - இனிய இசை/பதிகம்/துதி.

பாடல் 5

எண்ணுதற் கெட்டா எழில்வடி வானவர்;
கண்ணுதற் றேவர்; கருணைக் கடலவர்;
பெண்ணுறை மேனியர் பெய்கழ லேத்திட
மண்ணுயிர் ஈட்டும் வரம்.

*கடலவர் - கடல் அவர்.
*பெய்கழல் - இனிய,அழகிய கழல்கள்.

பாடல் 6

முத்தலைச் சூரனின் மெய்த்தவம் மெச்சியே
இத்தலம் மீதமர்ந்(து) இன்னருள் நல்கிடும்
சத்தியம் ஈதெனச் சாதுவெண் மர்க்குரை
வித்தகன் பாதமே வித்து.

*முத்தலைச் சூரன் - திரிசிரன் என்ற அசுரன்.
*சாதுவெண் மர்க்குரை - எட்டு முனிவர்களுக்கு உபதேசம். சனக,சனந்தன, சனாதன, சனத்குமாரரோடு, பதஞ்சலி, வ்யாக்ரபாதர், திருமூலர், சிவயோகமுனி. இது திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோவிலில் தக்ஷிணாமூர்த்திக்கு உரிய தனிச்சிறப்பு.

பாடல் 7

முத்தாபம் அற்றவன் முப்புரம் செற்றவன்
முத்திக்கு வித்தவன் மும்மலம் தீர்ப்பவன்
முத்தமிழ் ஏத்திடும் முச்சங்கக் கோனவன்
முத்தான தாள்களே முற்று. 7

*முற்று - முடிவு. அனைத்தும் அவன் பாதங்களையே அடைகின்றன.

பாடல் 8

நீதி வழங்காத நீசன்மேற் கோபமுற்(று)
ஆதி உறந்தையை மண்ணால் அழித்தானைச்
சோதி வடிவாகத் தோன்றிய நாதனைப்
பாதி மதியனைப் பாடு.

*நீதி வழங்காத நீசன் - உறந்தையை  (உறையூரினை) தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழன், சார முனிவரின் கோரிக்கைக்குச் செவி சாய்க்கவில்லை. அதனால், அவர் சிராப்பள்ளி ஈசனை நாடவே, ஈசன்,  சினங்கொண்டு உறையூர் மேல் மண்மாரியைப் பொழிந்து மூடினார். வெக்காளியம்மன் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் மனமிரங்கி மீண்டும் நல்லருள் புரிந்தார்.

*பாதி மதியன் - பிறை நிலா அணிந்தவன்.

பாடல் 9

ஐயாறு மேவிய ஐயனே; உன்றனை
மெய்யாவென் றேயுள்கி மெச்சினேன்;  துய்யனே;
செய்யதே(சு) உள்ளோனே; தேவனே; உன்னடியே
உய்யுமா(று) என்றுணர்ந்தேன் ஓர்ந்து.

*உள்கி - உள்ளத்தால் உருகி
*செய்ய தேசு - சிவந்த ஒளி
*உய்யுமாறு - உய்யும் ஆறு - வாழ்வதற்கு / ஈடேறுவதற்கு வழி.
*ஓர்ந்து - தேர்ந்தெடுத்து
*இறைவன் அடியே உய்ய வழி வகுக்கும் என்று உணர்ந்து தேர்ந்தெடுத்தேன்.

பாடல் 10

நாதத்தி னுள்ளுறை நாதனை  ஓதும்நால்
வேதத்தி னுட்பொருளை மேதகுஆல் கீழமர்ந்து
போதந் தருஞான போதகனை எவ்விதப்
பேதமுமி லாதோனைப் பேணு.

பேணு - போற்று.

Monday, 27 February 2017

02. அறுசமயக் கடவுளர் துதி (வெண்பா)

1. காணபத்யம்:
விநாயகர்:

வாரண மாமுகனை வல்வினை தீர்ப்பவனைச்
சாரண கின்னரர்கள் சாற்றுநல் வேதியனைக்
காரண மானவனைக் காக்குந்நற் காவலனைப்
பூரண  மானவனைப் போற்று

சாரணர், கின்னரர் - 18 வகை சிவ  கணங்களைச் சேர்ந்தவர்கள்.
சாற்றும் - சாற்றுதல் - புகழ்ந்துப் பேசுதல்
காரண மானவனை - காரணம் ஆனவனை. அனைத்திற்கும் காரணம் விநாயகனே.

2. கௌமாரம்:
முருகன்:

கந்தனை வள்ளிமகிழ் காந்தனை யாவரும்
வந்தனை செய்திடும்  வையகத்து  வேந்தனைச்
சிந்தனை செய்யவே தீவினை தீண்டாமல்
வந்தவன் காத்திடு வான்

3. சைவம்:
சிவன்:

ஆழிசூழ் வையத்தை ஆண்டருளும் ஆதியனே!
காழிவாழ் சம்பந்தன் கைதொழும் வேதியனே!
வீழிமிழ லைமேவும் வித்தக வேந்தே!நீ
வாழியென் பார்க்கருள வா

4. சாக்தம்:
அம்பாள்:

தாயே இபமுகன் தன்னை அளித்தவளே
நீயே துணையென நித்தமும் போற்றிடும்
சேயேன் சிறப்பொடு வாழ அருள்புரி
வாயே உமையே மகிழ்ந்து

இபமுகன் - யானை முகன்

5. வைணவம்:
விஷ்ணு (சக்கரத்தாழ்வார்):

உக்கிர மாவுருவே ஓங்கிவளர் சோதியே
வக்கிரந் தீர்ப்பவனே மாதவன் கைதவழ்
சக்கர நாயகனே தத்துவப் பேருணர்வை
இக்கணமே ஈவாய் எமக்கு

திருமால் கையில் தாங்கும் சக்கரம், திருமாலே என்று கருதி பாடியது. சக்கரத்தை பாடினால் சக்கரபாணியை பாடுவதாகும்.

* உக்கிர மா உரு - விஷ்ணுவின் உக்கிரமான ஸ்வரூபம் சக்ராயுதம்.
* ஓங்கிவளர் சோதி - சக்ராயுதம், கனல் ரூபம்.  தீமைகளை எரித்து அழிக்கும் வல்லமை பெற்றது. சுடர் ஆழி என்று,  பெரியாழ்வார்  திருப்பல்லாண்டில் புகழ்கிறார்.
* ஸ்ரீ சுதர்சன காயத்ரி மந்திரம், ஜ்வாலா சக்ராய என்று கூறுகிறது. ஜ்வாலை - நெருப்பு.
* வக்கிரம் - துன்பம்
* தத்துவப் பேருணர்வு - தத்துவ ஞானம். ஸகல தத்வ ப்ரதிஷ்டித என்று சுதர்சன அஷ்டகத்தில் வரும்.

6. சௌரம்:
சூரியன்:

ஞாயிறு நாளனை ஞாலத்தின் பேரொளியை
ஆயிரங் கைகொண்(டு) அருள்செயும் ஆதவனைக்
காரிய காரணனைக் காரிருள் போக்கிடும்
சூரியனை நாளும் துதி

* ஞாலம் - உலகம்.
* பேரொளி - சூரியனின் ஒளி, உலகிற்கு இன்றியமையாதது.
* ஆயிரம் கை - ஆயிரம் கிரணங்கள்.
* காரிய காரணன் - செய்யும் செயல்கள் அனைத்திற்கும் காரணமானவன்.

Friday, 10 February 2017

01. குரு வந்தனம்

ஜகத்குரு காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மீது இயற்றிய வெண்பா.





















ஆதிகுரு நாதனே ஆலின் நிழலமர்
வேதியனே வேதம் தழைத்தோங்க மேதினிமேல்
வந்துதித்துக் காஞ்சியில் வாழ்முனியே நின்னடியார்
வெந்துயர் தீர்ப்பாய் விரைந்து.


ஆலின் நிழல் - ஆல மரத்தின் நிழல்
வெந்துயர் - கடுமையான துயரம் - சம்ஸாரம் என்னும் சுழல்.