Wednesday, 13 March 2019

55. திருப்பரங்குன்றம் பதிகம்

திருப்பரங்குன்றம்

அறுசீர் விருத்தம்

அரையடி வாய்பாடு - மா மா காய்

தீரா வினைகள் களைவானும்
..தேவர் குறையைத் தீர்த்தானும்
ஆரா வமுதாய் இனிப்பானும்
..அழகின் உருவாய்த் திகழ்வானும்
காரார் தேகன் மருகோனும்
..கயிலை நாதன் சேயோனும்
பாரோர் போற்றும் பெரியோனும்
..பரங்குன் றமரும் பெருமானே. 1

கயமா முகனுக் கிளையவனும்
..கதிர்வேல் கையில் கொண்டவனும்
வயலூர் தனிலே உறைபவனும்
..வள்ளிக் கிசையும் அழகோனும்
அயனின் கர்வம் கடிந்தவனும்
..அரனுக்(கு) உபதே சித்தவனும்
பயம்போக் கியெமைக் காப்பவனும்
..பரங்குன் றமரும் பெருமானே. 2

அருண கிரிக்கோர் ஆசானாய்
..அரிய தமிழைத் தந்தோனும்
கரியின் கொம்பைப் புணர்வோனும்
..கருமா மிடற்றன் புதல்வோனும்
சுருதிப் பொருளாய் நிறைவோனும்
..சூரன் மார்வைத் துளைத்தோனும்
பரிவோ டெமக்கும் அருள்வோனும்
..பரங்குன் றமரும் பெருமானே. 3

அரிய தமிழ் தானளித்த மயில் வீரா, செபமாலை தந்த சற்குருநாதா என்று அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

கரி - யானை. யானை வளர்த்த பெண் - தெய்வானை.
கொம்பு - கொடி போன்ற அழகிய, மென்மையான பெண்.
சந்ததம் பந்தத் தொடராலே பாடலில் - தந்தியின் கொம்பைப் புணர்வோனே என்று வரும்.

நீபத் தொடையார் மார்பினனும்
..நிறைவெண் மதிபோல் முகத்தவனும்
தீபத் தொளியாய் மிளிர்பவனும்
..தெய்வ யானை நாயகனும்
ஆபத் துகளை அழிப்பவனும்
..அருளை வாரி அளிப்பவனும்
பாபத் திரளைத் தகர்ப்பவனும்
..பரங்குன் றமரும் பெருமானே. 4

நீபம் - கடம்பு. கடம்ப மலர் மாலை திகழும் மார்பன்.

எண்ணத் துள்ளே நிறைவானும்
..ஏத மில்லா எழிலானும்
விண்ணோர் இடுக்கண் களைந்தானும்
..வேதம் போற்றும் வித்தகனும்
கண்ணின் மணியாய் அடியாரைக்
..காக்கும் கருணை மாகடலும்
பண்ணின் முதலாய்த் திகழ்வானும்
..பரங்குன் றமரும் பெருமானே. 5

ஏதம் - குற்றம்

அச்சம் தீர்க்கும் அயிலோனும்
..அங்கா ரகனுக் கதிபதியும்
உச்சம் அடியார்க் களிப்பவனும்
..ஓங்கா ரத்தின் கருப்பொருளும்
கொச்சை நகரின் கோமானும்
..குறமின் கொடியோ டிணைவானும்
பச்சை மயில்மீ தமர்வானும்
..பரங்குன் றமரும் பெருமானே. 6

அங்காரகனின் (செவ்வாய்) அதிபதி முருகன் என்பார்.
கொச்சை நகர் - சீர்காழி. திருஞானசம்பந்தர் அவதரித்த ஊர். சம்பந்தர், முருகப் பெருமானின் அவதாரம் என்று சொல்வார்கள்.

நற்ற வத்தோர் உள்ளொளியும்
..நக்கீ ரர்போற் றும்மிறையும்
ஒற்றை மருப்பன் சோதரனும்
..உயர்மெய்ஞ் ஞானம் தருபவனும்
சுற்றி வந்த பகைமைதனைத்
..தோல்வி அடையச் செய்தவனும்
பற்றைப் போக்கும் பெரியவனும்
..பரங்குன் றமரும் பெருமானே. 7

நக்கீரர் - திருமுருகற்றுப்படை பாடத் தொடங்கிய இடம் திருப்பரங்குன்றம்

ஒற்றை மருப்பன் - ஒற்றைக் கொம்பு / தந்தம் கொண்டவன் - ஏகதந்தன் - விநாயகன்

சத்தி வேலைப் பிடித்தோனும்
..சமரம் புரியும் சதுரோனும்
சித்தர் போற்றும் குருபரனும்
..செந்தில் மேவும் சேவகனும்
முத்திப் பேற்றை அளிப்போனும்
..முத்த மிழ்ச்சங் கக்கோனும்
பத்தர்க் கருளும் பரம்பொருளும்
..பரங்குன் றமரும் பெருமானே. 8

முத்தமிழ்ச் சங்கம் - மதுரை பாண்டியன் சபையில் முருகப்பெருமான் அமர்ந்து கட்டிக் காத்தார்.

மங்கை பங்கன் விழியிருந்து
..வந்த கதிரில் உதித்தவனும்
கங்கை நதியின் அணைப்பாலே
..கவினார் பொய்கை அடைந்தவனும்
துங்க ஆறு முகத்தானும்
..தொல்வி னைகள் அறுப்பானும்
பங்கம் அறியாப் பாலகனும்
..பரங்குன் றமரும் பெருமானே. 9

அவனி உய்யப் பிறந்தானும்
..அணுவின் அணுவாய் உறைவானும்
சிவனுக் குயர்மந் திரப்பொருளைச்
..செவியில் உபதே சித்தானும்
குவளைக் கண்ணாள் குஞ்சரியும்
..குறமின் கொடியும் அணைதேவும்
பவசா கரத்தை அரிவோனும்
..பரங்குன் றமரும் பெருமானே. 10

பணிவுடன்,
சரண்யா