Monday, 29 April 2019

57. வண்ணப் பாடல் - 14 - திருவேரகம்

திருவேரகம்

ராகம் - ஹமீர்கல்யாணி
தாளம் - ஆதி (கண்ட நடை)

தானதன தானதன தானதன தானதன
..தானதன தானதன தனதான

ஆறுமுக வேல்முருக! மால்மருக! மாமயிலில்
.ஆடிவிளை யாடிவரும் அழகோனே
..ஆகமமும் நான்மறையும் ஆருமிறை யே!கருணை
...ஆரடியை யேஅடைய அருள்வாயே

வீறுடைய தோள்வலிய! தேவகணம் மேன்மையுற
.மேவலரின் ஈடரியும் அதிதீரா!
..மேழகம தேறிவரும் மேதினிகு மாரனினை
...நாயக!வி சாக!குக! குமரேசா!

நீறணியும் மேனியுடை நேயரவர் தீவினையை
.நீறெனவெ காயுமுமை புதல்வோனே!
..நீபமலர் மாலையணி வீர!சிவ பால!குண
...நேய!குற மாதுமகிழ் மணவாளா!

ஏறதனின் மேலமரும் ஈசனது காதில்மிக
.ஏமமுறு போதனைசெய் குருநாதா
..ஈரமுடை மாவொடெழில் மேவுமுயர் சோலைநிறை
...ஏரகநி லாவிஎமை உடையோனே

பதம் பிரித்த வடிவம்:

ஆறுமுக வேல்முருக! மால்மருக! மாமயிலில்
.ஆடி விளையாடி வரும் அழகோனே
..ஆகமமும் நான்மறையும் ஆரும் இறையே! கருணை
...ஆர் அடியையே அடைய அருள்வாயே

வீறுடைய தோள்வலிய! தேவகணம் மேன்மையுற
.மேவலரின் ஈடரியும் அதிதீரா!
..மேழகம் அது ஏறிவரும் மேதினி குமார(ன்) நினை
...நாயக! விசாக! குக! குமரேசா!

நீறணியும் மேனியுடை நேயர் அவர் தீவினையை
.நீறெனவெ காயும் உமை புதல்வோனே!
..நீபமலர் மாலை அணி வீர! சிவ பால! 
...குணநேய! குறமாது மகிழ் மணவாளா!

ஏறு அதனின் மேல் அமரும் ஈசனது காதில் மிக
.ஏமம் உறு  போதனைசெய் குருநாதா
..ஈரம் உடை மாவொடு எழில் மேவும் உயர் சோலைநிறை
...ஏரகம் நிலாவி எமை உடையோனே!


ஆருமிறையே - ஆரும் இறையே - ஆர்தல் - அனுபவித்தல். 
கருணை ஆர் அடியை - ஆர்தல் - நிறைதல். கருணை நிறையும் பாதங்கள்.

வீறுடைய தோள் வலிய -  வீறு - பெருமை. பெருமை நிறைந்த வலிமையான தோள்கள் உடையவன்.
மேவலர் - பகைவர் (அசுரர்கள்)
ஈடு - வலிமை / தகுதி

மேழகம் - செம்மறி ஆடு
மேதினி குமாரன் - பூமியின் பிள்ளை - அங்காரகன். அங்காரகனின் அதிபதி முருகன்.

திருநீறு அணியும் அன்பர்களின் தீவினைகளை எரித்து, சாம்பலாக்கும் உமை பாலன்.

நீபம் - கடம்பம்

ஏமம் - உயர்வானது (ஹேமம் - தங்கம்)
உறுதல் - நிறைதல்
ஈரம் - பசுமை
மா - வயல்
ஈரம் உடை மா - நீர் நிறைந்த பசுமையான வயல்.



Monday, 22 April 2019

56. திருஅன்பிலாலந்துறை - (பதிகம் - 22)

வணக்கம்.

அடுத்த பதிகம்.

திருஅன்பிலாலந்துறை (அன்பில்)

அறுசீர் விருத்தம்

எல்லாச் சீர்களும் மாச்சீர்

செய்யன் சசிசேர் சடையன்
..செங்கண் மாத்தோல் உடையன்
மெய்யன் மாதோர் பாகன்
..வெல்லும் மழுவை ஏந்தும்
கையன் கயிலை நாதன்
..கண்ணார் நுதலன் விமலன்
ஐயன் உறையும் கோயில்
..அன்பில் ஆலந் துறையே. 1

செய்யன் - செய் என்றால் சிவப்பு. சிவந்த மேனியன்.
மா - யானை. மதம் கொண்டதால், யானையின் கண் சிவந்திருக்கும். யானையின் தோலை அணிந்தவர்.

சித்தத் துள்ளே நிறையும்
..தேவன் விடைமேல் ஊரும்
பித்தன் பேயன் கொடிய
..பிணிகள் தீர்க்கும் ஈசன்
முத்தி அருளும் முதல்வன்
..முளைவெண் மதியை அணியும்
அத்தன் உறையும் கோயில்
..அன்பில் ஆலந் துறையே 2

வையம் வாழ விடத்தை
..மகிழ்ந்து புசித்த நேசன்
கையில் மானும் மழுவும்
..கனலும் கொண்ட தேசன்
பையார் நாகம் அணியும்
..பரமன் பிரமன் சிரத்தில்
ஐயம் தேர்வான் கோயில்
..அன்பில் ஆலந் துறையே 3

விருத்தன் பாலன் விடையன்
..வெங்காட் டினிலே இரவில்
நிருத்தம் ஆடும் சீலன்
..நிமலன் வேதம் உணர்ந்த
கருத்தன் கமல மலரான்
..கருவம் கடிந்த கோமான்
அருத்தன் உறையும் கோயில்
..அன்பில் ஆலந் துறையே. 4

வம்பார் கொன்றைச் சடையன்
..வடிவார் மங்கை கேள்வன்
நம்பன் நாத வடிவன்
..ஞானம் அருளும் போதன்
உம்பர் தருவாய் வரங்கள்
..உவந்த ளிக்கும் வள்ளல்
அம்பொன் வண்ணன் கோயில்
..அன்பில் ஆலந் துறையே. 5

அன்பில் தலத்து இறைவி - சௌந்தரநாயகி. அதனால் வடிவார் மங்கை என்று வைத்தேன்.

சூலம் ஏந்தும் கையன்
..சோதி வடிவன் தூயன்
வேலன் தாதை அடியார்
..மிடியைப் போக்கும் மன்னன்
கோலச் சடையில் தேனார்
..கொன்றை அணியும் வாமன்
ஆல மிடற்றான் கோயில்
..அன்பில் ஆலந் துறையே 6

வண்டார் குழலி நாதன்
..வாரி சூடும் இறைவன்
சண்டே சுரருக் கருளும்
..சடிலன் அம்மை யப்பன்
கண்டத் துள்ளே ஆல
..காலம் அடைத்த தீரன்
அண்டத் அரசன் கோயில்
..அன்பில் ஆலந் துறையே. 7

முப்பு ரத்தைக் காய்ந்த
..முக்கட் பரமன் அனலன்
ஒப்பு யர்வில் லாத
..ஒருவன் மாறன் உடலின்
வெப்பு நோயொ ழித்த
..வெந்த நீற்றன் விகிர்தன்
அப்பன் உறையும் கோயில்
..அன்பில் ஆலந் துறையே. 8

ஒருவன் - ஏகன். அவன் மட்டுமே நிலையானவன். உயர்ந்தவன். Ultimate, supreme.

மாறன் - பாண்டியன்.

தஞ்சம் அடைவார்க் கருளும்
..தலைவன் நெற்றி நயனன்
பஞ்சம் தீர்க்கும் கையன்
..பஞ்சக் கரத்தான் தந்தை
வஞ்சம் இல்லாப் பெரியோன்
..வாம தேவன் குழகன்
அஞ்சல் தீர்ப்பான் கோயில்
..அன்பில் ஆலந் துறையே. 9

அஞ்சல் - பயம் அடைதல்

பாதி மதிசேர் சடையன்
..பரிதி அனைய ஒளியன்
வேதம் போற்றும் தேவன்
..விறகு விற்ற செல்வன்
சீதப் புனலை எளிதாய்ச்
..சென்னி தன்னில் ஏற்ற
ஆதி உறையும் கோயில்
..அன்பில் ஆலந் துறையே. 10

விறகு விற்ற செல்வன் - பாண்டிய நாட்டுத் திருவிளையாடல்களுள் ஒன்று (விறகு வெட்டியாக வந்தது)

சீதப் புனல் - குளிர்ந்த நீர் - கங்கை

பதிகம் நிறைவுற்றது.

பணிவுடன்,
சரண்யா