Monday, 27 December 2021

72. திருச்சிராப்பள்ளி (பதிகம் 29)

திருச்சிராப்பள்ளி தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் அருள்மிகு தாயுமானவர் மேல் இருவிகற்ப இன்னிசை வெண்பா. ஒவ்வொரு வெண்பாவிலும் சுகந்தக்குழலாள் (மட்டுவார்குழலம்மை) பெயர் வருமாறு அமைந்துள்ளது. பத்தாவது வெண்பா மட்டும் இருவிகற்ப நேரிசை வெண்பா.

காப்பு

வந்தித்த மங்கை மகவுபெற அன்னையாய்
வந்துதவும் அத்தன் மதுவார் சுகந்தக்
குழலியொடு காட்சி கொடுக்கும் சதுரன்
கழலிணை தந்திடும் காப்பு.


எந்தாயும் இங்கெமக்(கு) இன்னருள் நல்கிடும்
தந்தையும் ஆய தலைவன் சுகந்தக்
குழலாள் மருவும் குழகன் ஒளிசேர்
அழல்வண்ணன் ஈசன் அவன். 1


அந்திவண்ணன்; சாரமுனி அர்ப்பணித்த தூயசெவ்
வந்தி மலரேற்ற வள்ளல் சுகந்தக்
குழலா ளொடுமகிழும் கோவெண்ண வொண்ணா
அழகு வடிவன் அரன். 2

சுகந்தக் குழலா ளொடுமகிழும் வெண்ண வொண்ணா அழகு வடிவன் - சுகந்தக்குழலாளொடு மகிழும் எண்ண ஒண்ணா அழகு வடிவன் 
எண்ண ஒண்ணா - நினைத்துப்பார்க்க முடியாத


மந்தகா சத்தால் மதில்மூன் றழித்தவன்
அந்தமும் ஆதியும் அற்றான் சுகந்தக்
குழலாளோர் கூறுகந்த கொற்றவன் எம்மான்
மழமால் விடையூர் மணி. 3

மந்தகாசம் - புன்னகை


பந்தம் அறுக்கும் பரசுடையான் மாலயன்முன்
செந்தழலாய் ஆழ்ந்தோங்கு தேசன் சுகந்தக்
குழலாள் மகிழும் குழையன் அருளால்
பழவினை தீர்ந்திடும் பார். 4


கந்தனைப் பெற்றவன் காமனைச் செற்றவன்
செந்தமிழ் போற்றிடும் தேவன் சுகந்தக்
குழலம்மை நாயகன் கோகழிக் கோமான்
உழையேந்து வான்கழலை உன்னு. 5


சுந்தரனின் தோழனாய்த் தூதுசென்ற அந்தணன்
சந்திரன் சூடும் சடிலன் சுகந்தக்
குழலாள் கொழுநன்வெண் கொக்கிறகைப் பூண்ட
பழநிமலன் தாளைப் பணி. 6

சுந்தரனின் தோழனாய்த் தூதுசென்ற அந்தணன் - சுந்தரருக்காக திருவாரூர் தியாகேசப் பெருமான் கோயில் சிவாச்சாரியார் வடிவு கொண்டு பரவை நாச்சியார் வீட்டிற்குத் தூது சென்றார்.


உந்திக் கமலனுக் கொண்சுடர் ஆழியும்
தந்திருப் பாகமும் தந்தோன் சுகந்தக்
குழலாள் தழுவும்சீர் கொன்றையணி மார்பன்
மழுமறியை ஏந்தும்மா மன். 7

உந்திக் கமலனுக் கொண்சுடர் ஆழியும் - உந்திக்கமலனுக்கு ஒண்சுடர் ஆழியும்
தந்திருப் பாகம் - தம் திருப் பாகம் - சங்கரநாராயண உருவம்


அந்தழல் ஓம்பிடுவார்க் காதாரம் ஆனவனைச்
சிந்தையில் தங்கும் சிவனைச் சுகந்தக்
குழலியொடு நட்டம் குதூகலமாய் ஆடும்
எழிலனை என்றும்நீ ஏத்து. 8

அந்தழல் ஓம்பிடுவார்க் காதாரம் ஆனவனை - அந்தழல் ஓம்பிடுவார்க்கு ஆதாரம் ஆனவனை


வந்தனைசெய் மாணிக்காய் மந்தன் தமையனைப்
பந்தாடி மீட்டளித்த பரமன் சுகந்தக்
குழலாள் அணையும் கொழுந்தோளன் நல்ல
வழிநிற்பார்க் கீவான் வரம். 9

மந்தன் - சனைச்சரன்
மந்தன் தமையன் - எமன்
நல்ல வழிநிற்பார்க் கீவான் வரம் - நல்லவழி நிற்பார்க்கு ஈவான் வரம்


அகந்தை அரிவான் அனைத்தும் அறிவான்
சுகந்தனை நல்கும் துணைவன் - சுகந்தக்
குழலாள் மணவாளன் கூத்தன் இருக்க
உழல்வதென் நெஞ்சே உரை. 10

சுகந்தனை நல்கும் துணைவன் - சுகம் தனை நல்கும் துணைவன்

Saturday, 25 December 2021

71. விநாயகர் - சந்த விருத்தம்

 தான தான தான தான தான தான தானனா

குறிப்பு - தான என்பது சில இடங்களில் தந்த / தத்த / தய்ய / தனன என்றும் வரலாம்


1. 

தந்தி மாமு கத்த னேத யாக ராஉ மாசுதா

கந்த னுக்கு முந்தி னாய்க ணேச னேவி நாயகா

இந்து வின்செ ருக்க ரிந்த ஈடி லாத வீரனே

வந்த னைசெய் பத்த ருக்கு வந்த ருள்ச மர்த்தனே


தந்தி மா முகத்தனே தயாகரா உமாசுதா

கந்தனுக்கு முந்தினாய் கணேசனே விநாயகா

இந்துவின் செருக்கரிந்த ஈடிலாத வீரனே

வந்தனை செய் பத்தருக்(கு) உவந்தருள் சமர்த்தனே


2.

ஐந்து கையு டைய தேவ அந்த மில்லி இன்முகா

ஐந்து பூத வடிவ மான நாத ஆதி காரணா

ஐந்தெ ழுத்தி றைவன் ஆசி யாலெ ழுந்த வேழமே

ஐந்து மேதி ரிந்தி டாத டக்கி எம்மை ஆள்வையே


ஐந்து கையுடைய தேவ அந்தமில்லி இன்முகா

ஐந்து பூத வடிவமான நாத ஆதி காரணா

ஐந்தெழுத்(து) இறைவன் ஆசியால் எழுந்த வேழமே

ஐந்துமே திரிந்திடா(து) அடக்கி எம்மை ஆள்வையே


3.

ஆனை மாமு கத்த னைஅ ழித்த கொற்ற வாரணா  

ஆனை யாக வந்து வள்ளி அஞ்சி ஓட வைத்தவா

ஆனை யான உன்னை ஔவை ஆசை யோடு போற்றவே

தேனு லாவு செந்த மிழ்க்க விக்கொ டுத்த தேவனே


ஆனை மா முகத்தனை அழித்த கொற்ற வாரணா  

ஆனையாக வந்து வள்ளி அஞ்சி ஓட வைத்தவா

ஆனையான உன்னை ஔவை ஆசையோடு போற்றவே

தேனுலாவு செந்தமிழ்க் கவிக்கொடுத்த தேவனே


4.

முப்பு ரத்தை முற்று மாய ழிப்ப தற்கு முக்கணார்

செப்ப மிக்க தேரி லேறி வேக மாய்க்கி ளம்பிட

அப்பர் வந்த தேரின் ஆழி அச்சு டைந்து  நின்றிடத்

தப்பு ணர்ந்து நின்னை ஏத்த வெற்றி தந்த தந்தியே


முப்புரத்தை முற்றுமாய் அழிப்பதற்கு முக்கணார்

செப்பமிக்க தேரில் ஏறி வேகமாய்க் கிளம்பிட

அப்பர் வந்த தேரின் ஆழி அச்(சு) உடைந்து  நின்றிடத்

தப்(பு) உணர்ந்து நின்னை ஏத்த வெற்றி தந்த தந்தியே


5.

வேத வ்யாசர் வேண்ட வேவி ரைந்து பார தத்தினை

நாத நினது தந்த மொன்று டைத்தி யற்றி வைத்தவா

பேத மின்றி யாவ ரும்பி ரேமை யோடு வாழ்ந்திட

ஆதி நாய காவி நாய காஉ வந்த ருள்வையே


வேத வ்யாசர் வேண்டவேவிரைந்து பாரதத்தினை

நாத நினது தந்தம் ஒன்(று) உடைத்(து) இயற்றி வைத்தவா

பேதமின்றி யாவரும் பிரேமையோடு வாழ்ந்திட

ஆதி நாயகா விநாயகா உவந்(து) அருள்வையே