Wednesday, 26 July 2017

14. திருக்கற்குடி [உய்யக்கொண்டான் திருமலை] (பதிகம் 8)

வணக்கம்.
அடுத்த பதிகம் - திருக்கற்குடி - உய்யக்கொண்டான் திருமலை.

கலி விருத்தம்.
வாய்பாடு - விளம் மா விளம் மா

பாத்திரம் ஏந்திப் பலிதனில் மகிழும்
சாத்திரம் போற்றும் சற்குரு நாதா!
மாத்திரைப் போதில் வாட்டம ரிந்து
காத்தருள் வாயே கற்குடித் தேவே. 1

வாட்டம ரிந்து - வாட்டம் அரிந்து
அரிதல் - அழித்தல்

தவமது புரிவோய்! தாரணி மார்பா!
சிவசிவ எனநின் சீர்ப்பெயர் சொலாது
பவவினை தனிலே பயந்துழன் றிடுமெம்
கவலைகள் அறுப்பாய் கற்குடித் தேவே. 2

தாரணி மார்பா - தார் அணி மார்பா
தார் = பூமாலை

அருத்தஅம் புலியை அணிந்திடும் அரனே!
நிருத்த!என் றுன்றன் நீள்கழல் பேணா(து)
இருட்டினில் உழலும் எமக்குயர் வான
கருத்தினை அருள்வாய் கற்குடித் தேவே. 3

அருத்த அம்புலி - பாதி நிலா (அர்த்த = அருத்த)
நிருத்த - நிருத்தன் என்பதன் விளி - நிருத்தா. அணுக்க விளி நிருத்த. பெருமா என்பதை பெரும என்றும் விளிப்பதுண்டு. அதுபோல் நிருத்தா என்பதை நிருத்த என்று விளித்துள்ளேன்.
நிருத்தம் = நாட்டியம். நாட்டியம் ஆடுபவன் நிருத்தன்.
கருத்து - மனம்

பொற்பதம் தூக்கிப் பொற்சபை தனிலே
அற்புத நடனம் ஆடிடும் அரசே
கற்பிதச் சூழைக் களைந்திடு வாயே
கற்பகத் தருவே கற்குடித் தேவே. 4

சூலம(து) ஏந்தும் சுத்தசெஞ் சுடரே!
ஆலதன் நிழலில் அமர்ந்தறம் உரைக்கும்
பாலதன் வண்ணா! பாலனைக் காக்கக்
காலனை உதைத்த கற்குடித் தேவே. 5

மார்க்கண்டேயன் காலனால் துரத்தப்பட்டப் போது பல ஆலயங்களில் உள்ள இலிங்கத் திருமேனியை வணங்கி வந்தான்.

உய்யக்கொண்டான் திருமலையில் உள்ள இறைவனை வணங்கிய போது, இறைவன் அவன் முன்னே தோன்றி, "உனக்குப் புத்துயிர் அளிக்கிறேன்" என்று சொன்னார். அதனால் உஜ்ஜீவநாதர் என்று பெயர் பெற்றார்.

பின்னர், திருவேற்காட்டில் மர்கண்டேயனை "சிரஞ்சீவி" என்று அருளி, திருக்கடவூரில் காலனை உதைத்தார் என்று தலவரலாறு தெரிவிக்கிறது.

எயிலவை மூன்றை எரித்தசெந் தழலே!
முயலகன் மேலே ஆடிடும் முதல்வா!
மயிலமர் கோன்சொல் மந்திரப் பொருள்கேள்
கயிலையம் பதியே! கற்குடித் தேவே. 6

எயில் மூன்று - திரிபுரம்
தழல் - தீ
முயலகன் - தீமைகளின் உருவகமான அரக்கன்.
முயலகம் என்பது வலிப்பு வியாதி. அதனால் இறைவன் முயலகன் மீது ஏறி நின்று அவனை வெளிவிடாமல் ஆடுகிறார் என்றால், வியாதிகள் நம்மை அணுகாது காக்கிறார் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.
மயிலமர் கோன் - முருகன்

அருளுடைச் சுடரே! அருமருந் தே!யெம்
பெருவினை பிணியைப் பெயர்த்திடும் பரனே!
ஒருபுறம் உமைக்குத் தந்தநற் சீலா!
கருணையின் உருவே! கற்குடித் தேவே! 7

இமிழ்கடல் தனிலே எழுவிடந் தனைத்தெள்
அமிழ்தெனப் பருகி அவனியைக் காத்தோய்!
தமிழ்தனில் மகிழ்வோய்! தவமுனிக் கருளும்
கமழ்சடை யானே கற்குடித் தேவே. 8

இமிழ் = ஒலித்தல். அலையோசை ஒலிக்கும் கடல்.
கமழ்தல் = மணம் வீசுதல் / பரவுதல். பரவிய சடையன்.

அலையினில் துயிலும் அச்சுதன் தானும்
கலைமகள் கோவும் கண்டறி யானே!
மலைமகள் மருவும் மலர்ச்சுடர் ஒளியே!
கலையமர் கரத்தோய்! கற்குடித் தேவே 9

கலைமகள் கோ = பிரமன்
கலையமர் கரத்தோய் - மான் அமரும் கரம் உடையவர் (மானைக் கையில் கொண்டவர்)

விண்ணவர் போற்றும் வித்தக வேந்தே!
வெண்ணில வணியும் விரிசடை யோனே!
பெண்ணுறை தேகா! பேரெழிற் கோவே!
கண்ணுத லானே! கற்குடித் தேவே! 10

No comments:

Post a Comment