Wednesday, 31 January 2018

27. வண்ணப் பாடல் - 06 - திருஆலவாய் (மதுரை)

பாகேஸ்வரி ராகம்
சதுஸ்ர ஏக தாளம் (திஸ்ர நடை)

தான தான தனதனனா

ஆல நீழல் அடியமரும்
..ஆதி யோக குருமணியே!
ஞால மீதில் உயர்வுறவே
..ஞான போதம் அருளுகவே;
சூல பாணி! சுடரொளியே!
..தூய னே!து யரையரிவாய்;
ஆல காலம் உறுமிடறோய்!
..ஆல வாயின் அதிபதியே!

ஞான போதம் - ஞான உபதேசம்.

பாடலைக் கேட்க:

https://drive.google.com/open?id=0By387kvntVlPcGFXcUQ4RjNuSjg

Tuesday, 30 January 2018

26. திருமூக்கீச்சரம் (உறையூர்) (பதிகம் 12)

வணக்கம்.

அடுத்த பதிகம் - திருமூக்கீச்சரம் (உறையூர்)

எண்சீர் விருத்தம்.

வாய்பாடு - காய் காய் மா தேமா (அரையடி)

சேவேந்தும் சேவடியை உடையாய் போற்றி
..செல்வங்கள் தனபதிக்குத் தந்தாய் போற்றி
நாவேந்தும் நாமங்கள் கொண்டாய் போற்றி
..நன்மைபல எமக்கென்றும் தருவாய் போற்றி
மூவேந்தர் பூசித்த முதல்வா போற்றி
..மோனத்தில் ஆழ்ந்திருக்கும் குருவே போற்றி
தேவேந்தி ரன்போற்றும் திருவே போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 1

குறிப்புகள்:
சேவேந்தும் சேவடி:
சே - நந்தி / ரிஷபம். பிரதோஷ காலத்தில் நந்தியின் தலைமேல் கொம்பிற்கு இடையில் நின்று ஆடுகிறார் சிவன் என்பது ஐதீகம். மேலும் அதிகார நந்தி உற்சவத்தில் நந்தி, தன் இருகரங்களால் இறைவனின் திருவடிகளைத் தாங்குவார்.

அதனால் சேவேந்தும் சேவடியை உடையாய் என்று பாடியுள்ளேன்.

தனபதி - குபேரன் (இந்தப் பதிகம் அக்ஷய திரிதியை அன்று தொடங்கினேன்)

நாவேந்தும் நாமங்கள் - நமது நா உச்சரிக்கும் நாமங்கள்

மூவேந்தர் - சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆராதிக்கும் பெருமான், உறையூர் பஞ்சவர்ண சுவாமி.

திருமூக்கீ்ச்சரம் - இன்றைய நாளில் உறையூர் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் - ஸ்ரீ பஞ்சவர்ண சுவாமி. இறைவி - காந்திமதி அம்மை. செங்கட் சோழனால் திருப்பணி செய்யப்பட்ட மாடக்கோயில்களுள் ஒன்று. யானைகள் நுழைய முடியாத சிறு வாயில் உள்ளதால் மூக்கீச்சரம் என்று திருமுறைகள் கூறுகின்றன.

தசமுகனின் செருக்கறுத்த சதுரா போற்றி
..தலையோட்டில் பலிதேரும் தலைவா போற்றி
விசயனுக்குப் பாசுபதம் அளித்தாய் போற்றி
..வெள்விடைமேல் வருகின்ற விமலா போற்றி
முசுகுந்தன் துதிசெய்த விடங்கா போற்றி
..முத்தமிழில் மகிழ்ந்திடுமெம் முத்தே போற்றி
திசையெண்மர் பணிந்தேத்தும் தேவே போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 2

முசுகுந்தன் பூஜை செய்த 7 சோமாஸ்கந்த விக்ரகங்கள் சப்த விடங்கத் தலங்களில் உள்ளன. அதனால் விடங்கா என்ற விளியைப் பயன்படுத்தியுள்ளேன்

மங்கைக்கோர் கூறளித்த மன்னா போற்றி
..மதுமல்கு மலரணியும் பெம்மான் போற்றி
கங்கைக்குச் சடையிலிடம் தந்தாய் போற்றி
..காவிரியின் தென்கரையில் அமர்ந்தாய் போற்றி
அங்கண்ணாள் காந்திமதி நாதா போற்றி
..அம்பலத்தில் ஆடிடுமெம் அரசே போற்றி
செங்கண்ணன் செய்மாடத் துறைவோய் போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 3

காந்திமதி - உறையூரில் அம்பாளின் பெயர் காந்திமதி.
உறையூர், செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்.

பத்திக்குப் பரிந்திடும்சிற் பரனே போற்றி
..பண்ணிசையில் உறைகின்ற பதியே போற்றி
எத்திக்கும் நின்றேத்தும் எழிலே போற்றி
..இடபத்தின் மேலேறும் இறையே போற்றி
முத்திக்கு வழிசெய்யும் வித்தே போற்றி
..முன்நடுபின் இல்லாத மூலா போற்றி
தித்திக்கும் தமிழ்க்கடலில் திளைப்பாய் போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 4

கரியுரியைத் தரித்திடும்மா தேவா போற்றி
..கையினில்தீ ஏந்திநடம் புரிவோய் போற்றி
அரிஅயனும் காணாத சோதீ போற்றி
..அடிபணிவார்க் கருளிடும்அற் புதமே போற்றி
நரியையுயர் பரியாகச் செய்தாய் போற்றி
..நாடகங்கள் பலசெய்த நம்பா போற்றி
திரிபுரத்தைச் சிரிப்பாலே எரித்தாய் போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 5

உயர் பரி - உயர்ரகக் குதிரை

மறைநான்கும் புகழ்ந்தேத்தும் மணியே போற்றி
..மருள்நீக்கி ஆட்கொள்ளும் ஒளியே போற்றி
குறையேதும் இல்லாத கோவே போற்றி
..குற்றங்கள் பொறுத்திடும்சற் குருவே போற்றி
பிறைமதியைச் சடைமுடியில் முடிந்தோய் போற்றி
..பேதையென்றன் உளம்கவரும் கள்வா போற்றி
சிறைவண்டார் மலர்சூடும் சீலா போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 6

சிறை - அழகு

புகழ்ச்சோழன் பூசனைசெய் பொலிவே போற்றி
..புண்ணியம்செய் அடியார்தம் புகலே போற்றி
இகழ்ந்தாரைத் தண்டிக்கும் அரனே போற்றி
..எளியாருக் கெளிதான ஈசா போற்றி
நிகழ்ந்தேறும் அனைத்திற்கும் சாட்சீ போற்றி
..நினைத்தெழுவார் இடர்களையும் நிமலா போற்றி
திகழ்ந்தோங்கி ஒளிவீசும் சுடரே போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 7

புகழ்சோழன் அவதார தலம் - உறையூர்
புகல் - துணை
நினைத்தெழுவார் - நினைத்து எழுவார்

நறையாரும் மலர்ப்பாத நம்பா போற்றி
..நள்ளிருளில் நடமாடும் நாதா போற்றி
மறிமழுவைக் கையேந்தும் பதியே போற்றி
..மாறனது சபைவந்த அம்மான் போற்றி
நிறமைந்தாய் உதங்கர்முன் நின்றாய் போற்றி
..நினைவினிலே நிலவுகின்ற நிறைவே போற்றி
சிறியேனை ஆட்கொள்ளும் செல்வா போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 8

மாறன் - பாண்டியன்
அம்மான் - பாண்டியனின் சபைக்கு ஒரு வணிகனின் மாமனாக வந்து சிவபெருமான் வாதம் செய்தார்.

உதங்க மகரிஷிக்கு ஐந்து நிறங்களில் இந்தக்கோவிலில் சிவபெருமான் காட்சி தந்தார்

தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தாய் போற்றி
..சலந்தரனை மாய்த்திட்ட சதுரா போற்றி
துக்கத்தைத் துடைத்தருளும் தூயா போற்றி
..சுடராழி மாலுக்குத் தந்தாய் போற்றி
கொக்கின்வெண் சிறகணியும் கோவே போற்றி
..கொடியின்மேல் இடபத்தைக் கொண்டாய் போற்றி
சிக்கல்கள் தீர்த்திடுமெம் ஐயா போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 9

அன்னவத்தே எழுவிடத்தை நுகர்ந்தோய் போற்றி
..ஆறங்கம் அருமறையின் கருவே போற்றி
இன்னிசையுள் உறைகின்ற சுவையே போற்றி
..ஈறில்லாப் பெருமையுடை எம்மான் போற்றி
பொன்னவையில் நடமாடும் புனிதா போற்றி
..புலித்தோலை அரையிலணி பரனே போற்றி
தென்னனுடல் வெப்பொழித்த தீரா போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 10

அன்னவம் - கடல்
தென்னன் - பாண்டியன்

பதிகம் நிறைவுற்றது.

சரண்யா 

Tuesday, 16 January 2018

25. சிவன் சேவடி போற்றி - பொது (பதிகம் 11)

வணக்கம்.

சந்தவசந்தம் google குழுவில் 2017 ஜூன் மாதத்தில், கவிஞர் திரு வி. சுப்பிரமணியன் (சிவசிவா) அவர்கள் ஷட்பதி என்னும் கன்னட யாப்பைப் பற்றி எடுத்துச்சொல்லி, அதில் ஒரு பதிகம் எழுதிருந்தார். அவரது படைப்பால் உந்தப்பட்டு, அடியேனும் அந்தப் புதிய யாப்பினைக் கையாள விரும்பினேன். சிவபெருமான் அருளால் அவர் மீது இந்த ஷட்பதி அமைப்பில் ஒரு பதிகம் எழுதினேன்.

ஸ்தலம் - பொது.

ஷட்பதி பற்றி, அவர் சொல்லியவை சில - உங்கள் பார்வைக்காக.

கன்னடத்தில் "ஷட்பதி" என்ற பாடல் அமைப்பு - இலக்கியங்களில் பல பாடல்கள் உள்ளனவாம். (இக்காலத்திலும் எழுதுகின்றனரா என்று அறியேன்).
இந்த "ஷட்பதி" என்ற பாடல் அமைப்பின் யாப்புக் குறிப்புச் சுருக்கம் -

(நான் அறிந்த அளவில்):

X X
X X
X X X +1

X X
X X
X X X +1

X = எவ்வகைச் சீர்/சீர்கள் அமைப்பும் இருக்கலாம். அதே அமைப்பு "X"

குறியீடு காட்டும் எல்லா இடங்களிலும் வரும்.

1. ஆறு அடிகள்
2. எல்லா அடிகளிலும் ஒரே எதுகை பயின்று வரும்.
3. 1,2,4,5 - அடிகள் அளவொத்து அமைவன. சீர் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணாக அமையும். (உதாரணமாக - அடிக்கு 2 சீர்களோ 4 சீர்களோ). அடியின் முதற்பாதியில் உள்ள சீர் அமைப்புப் பிற்பாதியிலும் அமையும்.
4. 3,6 - இவ்வடிகள் அளவொத்து அமைவன. ஏனைய அடிகளைவிட நீளமாக அமைவன. (இவ்வடிகளின் அமைப்பு: முதலடியின் சீர் அமைப்பு + முதலடியின் முதற்பாதி சீர் அமைப்பு + இறுதியில் கூடுதலாக ஓர் நெடில் எழுத்து).

ஷட்பதி அமைப்பில் அடியேனின் அர்ப்பணம்.

சிவன் சேவடி போற்றி

ஷட்பதி அமைப்பில் சிவபெருமான் மீது பத்துப் பாடல்கள்.

தலம் - பொது.

மா மா
மா மா
மா மா மாங்காய் (அரையடி)

மறைகள் புகழும்
இறைவன் கழலை
முறையாய் நாமும் பணிவோ மே
பிறையை அணியும்
கறைசேர் கண்டன்
நிறைவை நமக்குத் தருவா னே. 1

முடியா மறையின்
முடிவா னவனின்
அடியை எண்ணித் துதிப்போ மே
அடியும் இடையும்
முடிவும் இல்லா
விடையன் வெற்றி தருவா னே. 2

அடி இடை முடிவு இல்லா - ஆதி மத்ய அந்த ரஹித
விடையன் - எருதில் வருபவன்

விடையே றிவரும்
சடையன் தாளைத்
திடமாய் நாமும் பிடிப்போ மே
நடரா சனெனும்
படகைப் பற்றிக்
கடலைக் கடந்து களிப்போ மே. 3

கடல் - ஸம்ஸாரம்

கேடில் லாத
தோடன் கழலை
நாடி நன்மை அடைவோ மே
ஈடில் லாத
சேடன் அருளால்
ஓடி வினைகள் ஒழியும் மே. 4

கேடு இல்லாத - கெடுதல் இல்லாத (அழிவு இல்லாத)
தோடன் - தோடுடைய செவியன் - தோடணிந்தவன்
சேடன் - பெரியவன்

சதியோ டிசையும்
பதியின் பதத்தைக்
கதியென் றேநாம் அடைவோ மே
மதில்மூன் றெரித்த
நதியைப் புனைந்த
மதியன் புகழைப் பறைவோ மே. 5

சதி - பார்வதி
இசைதல் - சேர்தல்
மதியன் - நிலவைத் தலையில் அணிபவன்
பறைதல் - பாடுதல்

நரையே றேறும்
பரமன் பதத்தை
உருகி நிதமும் தொழுவோ மே
மரையை ஏந்தும்
பரையோர் பாகன்
கரையேற் றிநமைக் காப்பா னே. 6

நரையே றேறும் - நரை ஏறு ஏறும்
நரை - வெள்ளை
ஏறு - காளை மாடு
மரை - மான்
பரை - பெண் / பராசக்தி

மழுவை ஏந்தும்
அழகன் சிவனின்
கழலை நாமும் தொழுவோ மே
மழையாய் அருளைப்
பொழியும் இறைவன்
நிழலாய் நம்மைத் தொடர்வா னே. 7

கரியின் தோலை
உருவி அணிந்த
அரையன் அடியைப் பணிவோ மே
நரியைப் பரியாய்
உருமாற் றியவன்
விரைவாய் வந்து காப்பா னே. 8

அலையார் கடலில்
நிலைகொண் டவனும்
அலர்மேல் உறையும் அயனும் மே
நிலமும் வானும்
அலைந்தும் அறியாத்
தலைவன் தாளைப் பணிவோமே. 9

மணியார் கண்டன்
பிணிவார் சடையன்
பணிவார்க் கருளும் பரமே சன்
அணியார் உமையை
அணையும் தலைவன்
துணையாய் நமக்கு வருவா னே. 10

பிணிவார் சடை - கட்டிய நீண்ட சடை
அணியார் உமை - அணி - அழகு. அழகு நிறைந்த உமா தேவி
அணைதல் - சேர்தல் / புணர்தல் - அர்த்தநாரீஸ்வரர் என்று கொள்ள வேண்டும்

பதிகம் நிறைவுற்றது.

பணிவுடன்,
சரண்யா

Thursday, 4 January 2018

24. திருவானைக்கா (பதிகம் 10)

ஆனைக்கா அண்ணல் மீது மற்றொரு பதிகம். முன்னர் எழுதிய பதிகத்தில், கூறப்படாத தல சிறப்புகள் சிலவற்றை இதில் சேர்த்துள்ளேன்.

நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா.

காய் காய் காய் காய்.

வெண்ணாவல் கீழமரும் வேதத்தின் மெய்ப்பொருளைப்
பண்ணாரும் பரமனைத்தென் ஆனைக்கா உறைவானைப்
பெண்ணாரும் மேனியனைப் பிறைமௌலிப் பெம்மானைக்
கண்ணாரும் நுதலானைக் கண்ணாரக் கண்டேனே. 1

  • வெண்ணாவல் - திருவானைக்கா ஸ்தல வ்ருக்ஷம் - வெள்ளை நாவல். 
  • பண்ணாரும் பரமன் - இசையால் சூழப்பட்டவன் அல்லது பண்கள் யாவும் புகழ்ந்து அனுபவிக்கும் பரமன்.


வண்டினமும் மயிலினமும் வந்தமரும் சோலையினில்
எண்டிசையோர் நின்றேத்த இனிதாக அமர்ந்தானைக்
கண்டமதில் ஆலாலம் கருநாகம் அணிவானை
அண்டமெங்கும் நிறைவானை ஆனைக்காக் கண்டேனே. 2

சோழனது முத்துவடம் ஏற்றானைச் சுந்தரனின்
தோழனுமாய்த் தூதனுமாய் ஆனானைத் துதிசெய்த
வேழமதற்க் கருளியநல் வித்தகனைத் திருமாலுக்(கு)
ஆழியுகந் தளித்தானை ஆனைக்காக் கண்டேனே. 3


  • சோழ மன்னன், காவிரியில் நீராடிய போது, அவனது முத்து மாலை நழுவி, ஆற்றில் வீழ்ந்தது. வீழ்ந்த கணத்தில், அம்மன்னன், "இறைவா, நீயே ஏற்றுக்கொள்வாயாக" என்று சம்புகேசரை வேண்ட, அடுத்த நாள், திருமஞ்சனக் குடத்தில் அந்த ஆரம் இருந்தது.

செங்கண்ணன் கட்டியதோர் சீர்மாடம் அமர்ந்தானை
வெங்கண்மாத் தோலினைத்தன் மேனியின்மேல் அணிவானை
நங்கண்முன் நிறைவானை நால்வேதம் புகழ்வானை
அங்கண்மூன் றுடையானை ஆனைக்காக் கண்டனே. 4

  • செங்கண்ணன் - செங்கட் சோழன். (முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து ஜம்புகேஸ்வரரை பூஜை செய்ததன் பயனாய் அடுத்த பிறவியில் சோழ மன்னனாக பிறந்து, (முற்பிறவியில் யானையிடம் கொண்ட வெறுப்புத் தொடரவே இப்பிறவியிலும்) யானைகள் நுழைய முடியாத மாடக் கோயில்கள் 72 ஐக் காவிரி ஆற்றின் கரையில் கட்டினான். திருச்சி உறையூர், சுவாமிமலை, திருநறையூர் சித்தீச்சரம், அழகாப்புத்தூர், திருப்பேணுப்பெருந்துறை (கும்பகோணம் அருகில் உள்ளவை) போன்றவை.
  • வெங்கண்மா - கோபம் கொண்ட கண்கள் உடைய யானை. (அட்ட வீரட்டச் செயல்களில் ஒன்று)
  • நங்கண் - நம் கண்
  • அங்கண் - அம் கண் - அழகிய கண்


ஊதியமாய்த் திருநீற்றைத் தந்தெயிலொன் றமைத்தானை
வேதியனை வேண்டுபவர்க் கருள்வோனை மின்னொளிரும்
சோதியனைத் தூயவனைத் துயரறுக்கும் நாயகனை
ஆதியந்தம் ஆனவனை ஆனைக்காக் கண்டேனே. 5


  • திருநீற்றுப் பிரகாரம் (விபூதி பிரகாரம்) உண்டான சம்பவம். 
  • ஆதியந்தம் ஆனவனை - தோற்றமும் முடிவும் சிவனே.


பந்தற்செய் சிலம்பியினைப் பாராளச் செய்தானைச்
செந்தீயாய் நிமிர்ந்தானைச் சேர்ந்தறியாக் கையானை
வெந்தீயைக் கையேந்தி வெங்காட்டில் விளையாடும்
அந்தண்பூம் புனலானை ஆனைக்காக் கண்டேனே. 6

  • சிலம்பி - சிலந்தி 
  • வலை அமைத்து வணங்கிய சிலந்தி, அடுத்த பிறவியில் செங்கட் சோழனாய், ஆனைக்காவில் பிறந்தார். யானைகள் நுழையமுடியா மாடக் கோயிலைக் கட்டினார்.
  • சேர்ந்தறியாக் கையன் - கூப்பிய கைகள் இல்லாதவன். நமக்கு ஏதாவது வேண்டுமென்றாலோ அல்லது நம்மைவிட பெரியவரைப் பார்த்தாலோ நாம் கைகளைக் கூப்பி வணங்குவோம். ஆனால் இறைவனிடம் எல்லாம் இருக்கிறது. அவருக்கு வேண்டுவது என்று எதுவும் இல்லை. மேலும் இறைவனே பெரியவன். அவரைவிடப் பெரியவன் வேறு யாரும் இல்லை. ஆதலால் அவர் கைகளைக் கூப்ப வேண்டியது இல்லை. அவர் கைகள் சேர்ந்து இருக்காது. சேர்ந்தறியாக் கையானை என்று மாணிக்கவாசக பெருமான், திரு அம்மானையில் பாடியுள்ளார்.
  • வெங்காடு - இடுகாடு
  • அந்தண்பூம் புனல் - அம் (அழகிய) தண் (குளிர்ந்த) பூம் புணல் (பூப் போல் வாசம் மிகுந்த நீர் - அப்பு லிங்கம்)

பிரமனது பாவத்தைப் போக்கியநற் பெரியோனை
அரவமுடன் அருமலர்கள் பலவணியும் அழகோனைத்
திருவருளைத் தருவோனைத் தென்னானைக் காவானைக்
கருமேக மிடறோனைக் கண்ணாரக் கண்டேனே. 7


  • திலோத்தமையின் அழகில் ஒரு கணம் மனத்தை இழந்த பிரமனுக்கு ஸ்த்ரீ தோஷம் உண்டானது. அதிலிருந்து விடுவிக்கும் பொருட்டு, இத்தலத்தில், அன்னை ஐயனாகவும், ஐயன் அன்னையாகவும் வேடமிட்டு, பிரம்மா முன் சென்றனர். பெண் உருவத்தில் ஐயனைக் கண்ட பிரமன், தோஷத்திலிருந்து விடுபெற்றார்.


மறையாரும் பெரியானை வானதியை முடிந்தானை
நறையூறும் தாள்தூக்கி நடமாடும் வல்லானைச்
சிறையென்றும் நிறைந்தூறும் திருவானைக் காவுறையும்
கறைசேரும் கழுத்தானைக் கண்ணாரக் கண்டேனே. 8

  • மறை - வேதம்; ஆர்தல் - அனுபவிக்கும்
    • வேதம் யாவும் அனுபவிக்கும் பெரியவனை
  • வானதி - வானிலிருந்து தோன்றிய நதி - கங்கை. சத்ய லோகத்தில் இருக்கும் பிரமனின் கமண்டல நீரே கங்கை.
    • முடிதல் - அணிதல்
    • கங்கையை தலையில் அணிந்தானை. 
  • நறை - தேன். 
    • தேன் ஊறும் இனிய காலைத் தூக்கி நடனம் ஆடும் வல்லவனை
    • (மலர்களால் அடியார்கள் சிவனை பூஜிப்பதால், அம்மலர்கள் அவன் பாதத்தில் சேர்கிறது. அதனால் அம்மலர்களின் தேன், சிவன் காலடியில் ஊறுகிறது)
  • சிறை - நீர்நிலை. ஆனைக்காவில் ஜம்புநாதருக்குக் கீழே எப்போதும் ஊற்று ஒன்று, ஊறிக்கொண்டே இருக்கும்.
    • நீர் நிலைகள் என்றும் ஊறும் (வற்றாத) திருவானைக்காவில் உறையும் கறை படிந்த (விடமுள்ளதால்) கழுத்துடையவனைக் கண்ணாரக் கண்டேனே

புனலாரும் சடையானைப் புறத்தார்க்குச் சேயோனைக்
கனலேந்தும் கரத்தானைக் கைத்தூக்கி ஆள்வானை
மனதாரத் துதிப்போர்க்கு வரம்வாரிப் பொழிவானை
அனலாகி எழுந்தானை ஆனைக்காக் கண்டேனே. 9


  • புறத்தார்க்குச் சேயோன் - மாறுபட்ட கருத்து உடையோர்க்கு (வேதத்தை மதிக்காதோர்) எட்டாதவன்.
  • கைத்தூக்கி ஆள்வான் - அபயம் அளிப்பவன் (அபய ஹஸ்தம் தூக்கிய நிலையில் இருக்கும்) அல்லது நமது கையைப் பிடித்து சம்ஸார சாகரத்திலிருந்து நம்மைத் தூக்கி ஆள்பவன்


மும்மூன்று துளைமுன்நின் றேத்திடுவார்க் கருள்வானை
ஐம்மூன்று விழியானை அகிலாண்ட நாயகிக்குச்
செம்மூன்று விரல்தூக்கிச் சிவஞானம் தந்தானை
ஐம்பூதம் ஆனோனை ஆனைக்காக் கண்டேனே. 10
  • மும்மூன்று - ஒன்பது துளைகள் உள்ள சாளரம் வழியாக இறைவனைப் பார்ப்பது மிகவும் விசேஷம்.
  • ஐம்மூன்று - ஐம்முகம் உடைவர். ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்கள். ஆக 15 கண்கள். ஆனைக்கா கோவிலுக்கு அருகில் பஞ்ச முக லிங்கம் (இராஜேஸ்வரம் என்று அந்தக் கோவிலுக்குப் பெயர்).


ஆனைக்கா அண்ணலின் அருள் வேண்டி...

பணிவுடன்,
சரண்யா.