Friday, 30 March 2018

34. திருப்பராய்த்துறை (பதிகம் 14)

பல்வகை வெண்பாக்கள்.

அலையார் நதிசூடும் அண்ணலை; என்றும்
நிலையாய் இருக்கும் நிறைவைக்; - கலையார்
அராவணி கண்டனை; அண்டம் பணியும்
பராய்த்துறை நாதனைப் பாடு. 1

கலை - ஒளி / அழகு
நிறைவு - அனைத்திற்கும் எல்லையாக (முடிவாக) இருப்பவர்

தோடணி ஈசனைத் தூமலர்க் கொன்றையைச்
சூடிடும் தேசனைச் சோதிப் பிழம்பாக
நீடுயர்ந்(து) ஓங்கு நியரைப் பராய்மரக்
காடுறை கள்வனைக் காண். 2

நீடு - என்றும் நிலையாய் இருப்பது
உயர்ந்து - அளவில் வளர்ந்து வருவது
ஓங்கு - எல்லா இடங்களிலும் பரவுவது
நியர் - ஒளி

நீடுயர்ந்(து) ஓங்கு நியரைை -
என்றும் நிலையாய் இருந்து, வளர்ந்து, பரவும் ஒளியை

பிறையை அணிந்திடும் பிஞ்ஞகனை எங்கும்
உறைவோனை வெள்விடைமேல் ஊர்வோனை வேதம்
பறையும் பொழில்சூழ் பராய்த்துறை தன்னில்
நிறையும் பதியை நினை. 3

கழலும் சடைமுடியும் காண முயன்ற
அழகன் அயனிடையே நின்ற அழலைப்
பழவினை தீர்க்கும் பராய்த்துறை தேவைத்
தொழுதிடச் சேரும் சுகம். 4

கழல் - திருவடி
அழகன் - திருமால்
அழல் - தீ

கருப்புவில் ஏந்திய காமனைக் காய்ந்த
நெருப்பனைத் தொண்டர்க்கு நேயனை மேரு
பருப்பதவில் ஏந்தும் பராய்த்துறை யானை
விருப்புடனே என்றும் விழை. 5

விழைதல் - மதித்தல்

சித்தியைத் தந்திடும் தேவாதி தேவனைப்
புத்தியுள் நின்றொளிர் புண்ணிய மூர்த்தியைப்
பத்தர்க் கருள்செய் பராய்த்துறை நாதனை
நித்தமும் நெஞ்சில் நிறுத்து. 6

கயிலை மலையானைக் காரிருளில் நட்டம்
பயிலும் நிருத்தனைப் பாவை பசும்பொன்
மயிலாள் மருவும் பராய்த்துறை யானை
அயிலேந்தும் கோவை அடை. 7

பசும்பொன் மயிலாம்பிகை - திருப்பராய்த்துறை அம்பாள் பெயர்.
அயில் - சூலம்.

வெண்ணிலவைச் சூடும் விமலனை வேயமுதைப்
பெண்ணுறையும் தேகனைப் பெற்றமுவந் தூர்வானைப்
பண்ணிசை போற்றும் பராய்த்துறை நாதனை
எண்ணிடுவார்க்(கு) ஏற்றம் எளிது. 8

பெற்றமுவந் தூர்வானை - பெற்றம் உவந்து ஊர்வானை
பெற்றம் - எருது

கோதிலாக் கோமானைக் கூற்றுதைத்த தீரனைச்
சூதம் அறுப்பானைச் சுந்தரத் தேமலர்ப்
பாதனைச் சான்றோர் பறையும் பராய்த்துறை
நாதனை நம்புதல் நன்று. 9

சூதம் - பிறப்பு

தாயிற் சிறந்த தயாபரனைத் தத்தளிக்கும்
சேயனெனைக் காப்பவனைச் சீர்புனல் காவிரி
பாயும் எழிலார் பராய்த்துறை மேவிய
மாயனை நாவார வாழ்த்து. 10

சரண்யா

Wednesday, 7 March 2018

33. திருமால் - சிவன் சிலேடைகள்

1.
கிரியினை ஏந்திடுவான் கெட்டவிடம் உண்டான்
கரியினை மாய்த்தான் கரிக்கருள் செய்தான்
வரமிகவே தந்திடுவான் வையம் அளக்கும்
அரியை அரனென்(று) அறி

திருமால்:
  • கோவர்த்தன மலையை ஏந்திய தீரன் 
  • பூதனையிடம் விடந்தோய்ந்த பாலை அருந்தியவன்
  • குவலயாபீடம் என்ற யானையை மாய்த்தவன்
  • கஜேந்திரனுக்கு அருள் செய்தவன்
  • வரமிக அருள்பவன்
  • திரிவிக்கிரமனாய் உலகை அளந்தவன்

சிவன்:
  • திரிபுர சம்ஹாரம் போது மேரு மலையை வில்லாக ஏந்தியவன்
  • பாற்கடலில் வந்த விடத்தை உண்டவன் 
  • தாருகா வன முனிவர் ஏவிய யானையைக் கொன்று, அதன் தோலை உரித்து மேலாடையாக அணிந்தவர்
  • ஆனைக்காவில் பூஜை செய்த யானைக்கு முக்தி அளித்தவர்
  • வரங்கள் பல தருபவர்
  • இந்த உலகம் வாழ படியளப்பவர் (2 நாழி நெல் அளந்து அன்னையுடன் 32 வகை அறங்கள் வளர்த்தார்.


2.
வில்லேந்தி மாற்றாரை வெல்லும்; அடியார்கள்
சொல்லில் மகிழும்; சுடராழி கொள்ளும்;
எருதைத் தழுவி எழிலாளைச் சேரும்
திருமால் சிவனென் றுணர்

ஆழி - பெரியது/சக்கரம்
சுடர் - நெருப்பு/ஒளி.

திருமால்:
  • இராமனாய் வில்லேந்தி இராவணாதி அசுரர்களை வென்றார்.
  • அடியார்கள் பாடலில் மகிழ்வார்.
  • ஒளியுடைய சக்கரத்தைக் கையில் வைத்துக் கொண்டவர்.
  • நப்பின்னை பிராட்டியை மணம் செய்து கொள்ள, கண்ணனாய் வந்து காளையை அடக்கினார்.

சிவன்:
  • திரிபுர ஸம்ஹாரத்திற்காக வில்லேந்தினார்.
  • அடியார்கள் பாடலில் மகிழ்வார்.
  • அளவற்ற தேஜஸ் (தேசு) தன்னிடம் கொண்டவர்.அல்லது பெரிய நெருப்பினைக் கையில் ஏந்தியவர்.
  • ரிஷபத்தைத் தழுவி, அதன் மேல் ஏறி, அன்னை பார்வதியுடன் சேர்ந்து அமர்வார்.

3.
கங்கை நதிதந்தான் கார்முகில் போலருள்வான்
சங்கொலி தன்னில் திளைப்பான் எழிலாரும்
மங்கைக் கிடமளித்தான் மாயம்செய் ஈசனைப்
பங்கயக் கண்ணனாய்ப் பார்

திருமால்:
  • விஷ்ணு, திரிவிக்கிரமனாய் உலகை அளந்தபோது, பிரம்மா தன் கமண்டல நீரால் அவர் பாதத்தை அபிஷேகம் செய்ய, அதுவே ஆகாச கங்கையாய்க் கீழே வந்தது.
  • பாஞ்சஜன்யத்தை ஊதி குதூகலமாய் பாரத யுத்தத்தை நடத்தினார்.
  • திருமால், இலக்குமிக்குத் தன் மார்பில் இடம் அளித்தார்

சிவன்:
  • சிவபெருமான் தன் சடையில் அந்த பிரவாகத்தைத் தாங்கி, பாரத பூமியில் ஓடச் செய்தார், பகீரதன் வேண்டுதலினால்.
  • சிவபெருமான் விரும்பும் 18 இசை வாத்தியங்களில், சங்க நாதமும் ஒன்று
  • சிவன், பார்வதிக்குத் தன் இடபாகம் தந்தார்.


4.
கம்பம் தனிலெழும் கையில் மழுவேந்தும்
வம்பார் இலைசூடும் வான்நீலம் ஆர்ந்திடும்
கொம்பணியும் பாம்பின்மேல் கோலமாய்க் கூத்தாடும்
நம்பனை நம்பியென்று நம்பு

  • கம்பம் - திருக்கச்சி ஏகம்பம் / தூண்
  • மழு - சிவன் கையில் மழு / பரசுராமர் கை கோடரி
  • இலை - வில்வம் / துளசி
  • வான்நீலம் - பெரிய விடம் (நீல நிற விடம்) கழுத்தில் நிறையும் / அழகிய நீல மேனி
  • கொம்பு - பன்றிக் கொம்பு அணிதல் / வராக அவதாரம்
  • பாம்பின் மேல் கூத்து - திருவாசி (பாச்சிலாச்சிராமம்) என்ற தலத்தில் பாம்பின் மேல் நடராஜர் ஆடுவார். முயலகன் இருக்காது. / காளிய நடனம்.
  • நம்பன் - சிவன் / நம்பி - விஷ்ணு


அன்புடன்,
சரண்யா

32. சிவன் சிலேடைகள்

1. அன்பே சிவன்

எங்கும் நிறைந்திருக்கும் ஏசுபவர்க்(கு) எட்டாது
பங்கம் அறியாது பற்றிடுவார்க்(கு) என்றும்பேர்
இன்பம் அளிக்கும் இதயத்துள் தங்கிடும்
அன்பே சிவனென்(று) அறி

2. தேங்காய் - சிவன்

முக்கண் பதிந்த முகமிருக்கும் ஓடேந்தும்
செக்கச் சிவந்தநல் தேசுலவும் நீராரும்
ஓங்கி வளரும் ஒளிமதிக் கீற்றணியும்
தேங்காய் சிவனெனச் செப்பு

தேங்காய்:
  • முகப்பில் மூன்று புள்ளிகள் இருக்கும்
  • மேலுள்ள ஓடு காயைத் தாங்கும்
  • செக்கச் சிவந்த (shades of brown) ஓடாக இருக்கும்
  • இளநீர் நிறைந்திருக்கும்
  • உயரத்தில் (உயர்ந்த மரத்தில்) வளரும்
  • உடைத்து நறுக்கினால், அழகிய நிலாவைப் போன்ற வெள்ளை நிறத் துண்டம் இருக்கும்


சிவன்:
  • முகத்தில் மூன்று கண்கள் உடையவர்
  • பிரம்ம கபாலத்தைக் கையில் கொண்டவர்
  • சிவந்த ஒளி வீசும் மேனியர்
  • கங்கை நீர் பாயும் சடையர்
  • உயர்ந்து வளரும் சோதி
  • ஒளிவீசும் நிலாத்துண்டம் அணிபவர்


3. மயில் - சிவன்

நீல மணிகண்டன் நீண்முடிக் கொண்டையன்
கோலமாய்க் காட்டினில் கூத்தாடும் சீலன்
அயிலுடைப் பேரரசன் அஞ்சிறகு பூணும்
மயிலைச் சிவனென வாழ்த்து

சிவன்:
  • விடமுண்டதால் கழுத்தில் மணி போல் நீல நிறத்தில் கறை இருக்கும்.
  • நீண்ட சடைமுடிக் கொண்டை இருக்கும்
  • அழகாக காட்டில் நடனமாடும் வித்தகன்
  • அயில் = சூலம் (கூறிய வேல்). சூலத்தைக் கையில் ஏந்தும் பெரியவன்.
  • அழகிய கொக்கின் இறகை அணிவார்

மயில்:
  • நீல நிறத்தில் கழுத்து இருக்கும் (மயில் கழுத்து colour) என்று சொல்வது உண்டு.
  • தலையில் கொண்டை நீட்டிக்கொண்டிருக்கும்.
  • அழகாய் காட்டில் நடமிடும் திறமை உடையது.
  • அயில் - அழகு. அழகுடைய பெரிய பறவை. (பறவைகளுள் அழகில் இதுவே அரசன்)
  • அழகிய தோகை (இறகுகள்) இருக்கும்.

4. புத்தகமும் சிவனும்

ஞானியர் போற்றிடும் ஞானத்தை நல்கிடும்
தானாய்த் திரிவோர்க்குத் தக்க துணையாகும்
சீலர் மனத்துள் திகழ்ந்திடும் நல்லதொரு
நூலைச் சிவனென நோக்கு

  • அறிவுள்ளோர் போற்றும் பொருள்
  • அறிவைத் தரும் பொருள்
  • தானாய்த் திரிவோர்க்கு - தனியாக இருப்பவர்களுக்கு மிக நல்ல துணையாய் இருக்கும் பொருள்
  • சீலர் - உயர்ந்த குணம் படைத்தவர் மனத்தினுள் எப்போதும் திகழும் பொருள்
  • நூல் - புத்தகம்
  • நல்ல புத்தகமும் எம் ஐயன் சிவபெருமானும் ஒன்றே என்று காண்க.

5. சிவன் - விளக்கு

எரியினை ஏந்திடும் எங்கும் பரவும்
இருளினை நீக்கும் இழையை அணியும்
அருமலர் ஏற்கும் அகத்தில் திகழும்
அரனே அணையா விளக்கு.
  • எரி - நெருப்பு / சுடர்
  • இழை - முப்புரி நூல் / திரி
  • விளக்கிற்கும் பூவைத் தூவி பூஜை செய்வர்
  • அகம் - மனம் / இல்லம்
6. சின்டெக்ஸ் டேங்க் - சிவன் சமீபத்தில், சென்னையில் பறக்கும் இரயிலில் சென்ற போது, குடியிருப்பு வளாகங்களில், மொட்டை மாடியில், தண்ணீருக்காக வைக்கப்பட்டிருந்த, பல "Sintex" தொட்டிகள் சிவலிங்கத் திருமேனிகள் போல் தோன்றியன. அதனை வைத்து அடியேனின் முயற்சி. நீரினைத் தாங்கிநிற்கும் நேரத்தில் தந்தருளும் பாரினில் உள்ளோர்க்குப் பாங்குடனே - சீருடைய மன்றத்தில் மையமாய் மாண்போ டிலங்கிடும் சின்டெக்ஸ்நீர்த் தொட்டி சிவன் சிவன்: *முடியில் கங்கையை வைத்திருப்பார் *பாரில் உள்ளோர் வேண்டிட, தகுந்த நேரத்தில் தகுந்தனவற்றைத் தருவார். *சிறப்புடைய சபையில் நடுநாயகமாக பெருமையோடு விளங்குவார் சின்டெக்ஸ்டேங்க்: *தன்னுள்ளே தண்ணீரைத் தேக்கி வைத்திருக்கும் *மக்களுக்கு வேண்டிய போது, தேக்கிய தண்ணீரைத் தரும் *மொட்டை மாடியில் (திறந்த வெளியில்) முக்கிய இடம் பிடித்திருக்கும்.


அன்புடன்,
சரண்யா

31. பொது சிலேடைகள்

1. காசும் உலகும்

சுற்றிச் சுழலும் சுகத்தை அளித்திடும்
பற்றைக் கொடுத்துப் பரமன் நினைவகற்றும்
மாசு கலந்த மனத்தினைத் தந்திடுமிக்
காசினி ஆகுங்காண் காசு

காசினி - உலகம்.

காசு:
  • பலரிடமும் சுற்றி, நம்மிடம் வரும்.
  • வேண்டியதைப் பெற்றுக் கொடுத்து சுகத்தை அளிக்கும்.
  • பல பொருட்களின் மீது பற்றைத் தந்து, இறைவன் பற்றிய நினைவை நம்மிடமிருந்து விலக்கிவிடும்.
  • பேராசை, கஞ்சத் தனம் போன்ற தாழ்ந்த குணம் நிறைந்த மனத்தினைக் கொடுக்கும்.


உலகம்:
  • சூரியனைச் சுற்றும், தன்னைத் தானே சுழற்றிக் கொள்ளும்.
  • வெளிப்படையாக பார்க்க இன்பம் தருவதாய் இருக்கும், இங்கு வீடு, நிலம் வாங்க வேண்டும் என்ற பற்றைக் கொடுக்கும்.
  • இதுவே நிரந்தரம் என்ற மாயையைத் தந்து இறைவன் பற்றிய நினைவை மறைத்து விடும்.
  • பல குற்றங்கள் செய்ய தூண்டும்.

2. செல்பேசியும் செபமாலையும்

அல்லும் பகலும் அமர்ந்திடும் கையினில்;
தொல்லை தருமே தொலைத்தோர் மனதிற்குச்;
செல்லும் இடமெங்கும் சேர்ந்துடன் வந்திடும்
செல்லாகும் சீர்செபமா லை

3. வேப்பமரமும் தாயும்

இலையை விரிக்கும் இதத்தைக் கொடுக்கும்
நிலையைக் குலைத்திடு நோயினை நீக்கிடும்
காப்பினை இட்டுயர் காவல் அளித்திடும்
வேப்பமரம் தாயென மெச்சு

தாய்:
  • வாழை இலையை விரித்து உணவு பரிமாறுவாள்
  • அன்பு மொழியால் இதத்தை மட்டுமே தருவாள்
  • நம்மை வாட்டிடும் துன்பத்தைத் தன் அரவணைப்பால் துடைத்திடுவாள்
  • காப்பு - திருநீறு அல்லது இரட்சைக் கயிற்றைக் கைகளில் கட்டி, காவல் அளிக்க வைப்பாள்

வேப்பமரம்:
  • இலைகளை விரித்து நல்ல நிழலைக் கொடுத்து நமக்கு இதமளிக்கும்.
  • பல நோய்களுக்கு மருந்து வேப்பங்கொழுந்து/காய்
  • ஊர் எல்லைகளில் காவல் புரியும் தெய்வமாய்க் கருதப்படும். மற்றொன்று, வேப்பிலைக் காம்பினைக் காப்பாக சிறுவர்களுக்குக் கட்டுவார்கள். அம்மை நோயின் போது படுக்கைக்கு அருகிலும், வீட்டு வாசலிலும் வேப்பிலையை வைப்பார்கள்.


4. நிலவும் உயிரும்

சமீபத்தில் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம உபன்யாசம் கேட்கும் போது, அம்பாள் எவ்வித மாறுதலும் இல்லாதவள் என்றும் ஜீவராசிகளுக்கே ஆறு விதமான மாறுதல்கள் (பிறத்தல், இருத்தல், வளர்தல், மாறுபடுதல், தேய்தல், இறத்தல்) உண்டு என்றும் கேட்டேன். எனக்கு நிலவின் நினைவு வந்தது (பிறந்து-வளர்ந்து-தேய்ந்து-மறைந்து மீண்டும் பிறந்து...). அதனால் நிலவையும் உயிரினத்தையும் ஒப்பிட்டு ஒரு சிலேடை முயன்றேன்.

குறிப்பு - சந்திரனின் கலைகள் - இரண்டு வகை.

1. அழியாது எப்போதுமே இருக்கக் கூடிய 16 கலைகள் (15 திதி நித்யா தேவிகள் + ஸதா என்னும் கண்ணுக்குப் புலப்படாத கலை (அம்பாளே தான்)).

2. வளர்ந்து - தேய்ந்து சுழலக்கூடிய 15+15 = 30 கலைகள்.

இப்பாடலில் அடியேன் எடுத்துக் கொண்டுள்ளது இந்த இரண்டாம் வகையான கலைகளே.

நன்றி திரு பாலு மாமா (Sahasranaman Balasubramanian)

இதில் இறப்பிற்குப் பின் அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபிறப்பு உண்டு என்பதால் அதனையும் இறுதியில் சேர்த்துள்ளேன்.

பாடல்:

புதிதாய்ப் பிறக்கும் பொலிவோ டிலகும்
அதிவேக மாய்வளரும் அன்றாடம் மாறும்
குலையும் இறக்கும் குலாவிப் பிறக்கும்
நிலவும் உயிரினமும் நேர்

  • இலகுதல் - விளங்குதல்
  • குலைதல் - தேய்தல் (deterioration)
  • குலாவுதல் - வளைதல் (மீண்டும் / again)
  • இறந்ததும் சுற்றித் திரிந்து மீண்டும் பிறவி எடுத்தல்


அன்புடன்,
சரண்யா