Tuesday 5 June 2018

42. திருச்சிராப்பள்ளி முத்துக்குமார ஸ்வாமி பதிகம்

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ஸ்ரீ முத்துக்குமார சுவாமியை எண்ணி எழுதிய வெண்பாக்கள்.

விநாயகர் துதி:

தீரா வினையாவுந் தீர்க்கும் கயமுக
வீரா! சிராப்பள்ளி மேவும் குமரனின்
சீலம் புகழச் சிறியேனுக்(கு) உன்னிரு
காலால் அருளுக காப்பு

தண்டத்தை ஏந்திய தாண்டவன் றன்மகனே
அண்டத்தை ஆள்வோனே ஆரமுதே எண்டிசையோர்
கொண்டாடும் முத்துக் குமரா எனக்குன்றன்
தண்டா மரைப்பாதம் தா. 1

அழகன் குமரனை அன்றாடம் போற்றப்
பழவினை யாவும் பறைவது திண்ணம்
தொழுதிடும் அன்பர் துயரைக் களையும்
பழனிவளர் பாலனைப் பாடு. 2

கரமதில் வேலுடைக் கந்தனே! நின்னைக்
கருதிடும் அன்பர் கடுந்துயர் தீர்ப்பாய்;
வருவினை யாதையும் மாய்ப்பாய்; குமரா!
வரமிக ஈவாய் மகிழ்ந்து. 3

அவனது தாளை அடையும் அடியார்
அவலம் அழிவதில் ஐயம் இலையே
சிவன்றன் குமரனைச் சீராய்த் துதிக்க
கவலைகள் தீர்ந்திடும் காண். 4

அடியின் அழகை அகமுவந்து பாட
வடிவே லுடனே வருவான் அருள்வான்
குடியைப் புரக்கும் குமரன் அருளால்
நொடியில் அழிந்திடுமே நோய். 5

திருமால் மருகனே; தீந்தமிழ் ஏத்தும்
குருவே; குமரனே; கோதிலா வள்ளி
மருவும் அழகனே; வானவர் கோவே;
வருவாய்; வரமருள் வாய். 6

கந்தன் பெயரைக் கருத்தினில் வைத்திடச்
சிந்தைக் கவலை சிதைந்திடுமே - வெந்துயர்
தன்னைக் களையும் சரவணன்; வானவர்
மன்னன்; தருவான் வரம். 7

கயமுகனைப் போரினில் கண்டித் தருள்செய்
கயமா முகனிளவால்! கந்தா!என் முன்னே
நயமுடனே நீவந்தால் நன்மைகள் சேரும்!
பயமதுவாய் ஓடும் பயந்து. 8

கயமாமுகன் - கஜமுகாசுரன்
அடுத்து வரும் கயமாமுகன் - விநாயகன்,
இளவால் - இளவல் - தம்பி. விளிக்கும் (அழைக்கும்) போது - இளவால் என்று வரும்.

சிங்க முகனைச் செருவில் அழித்தவன்றன்
தங்கப் பதமிரண்டைச் சாரும் அடியார்க்கு
மங்காப் புகழும் வளமும் நலன்களும்
நங்கோ னருள்வான் நயந்து. 9

சூரனைப் போரினில் தோல்வி யுறச்செய்த
தீரனை ஈசனின் செல்வக் குமரனை
வீரனைக் கற்குன்று மேவும் கருணையனைப்
பூரணனை எந்நாளும் போற்று. 10

சூரன் - சூரபத்மன்.
கற்குன்று - கற்களால் ஆன மலை. - திருச்சிராப்பள்ளி.

பதிகம் நிறைவுற்றது.

No comments:

Post a Comment