Thursday, 4 July 2019

61. குறும்பா - பொது (பதிகம் 25)

அனைவருக்கும் வணக்கம்.

குறும்பா வகை ஒன்றில் சிவபெருமான் மீது ஒரு பதிகம் எழுதியுள்ளேன்.

தலம் - பொது

ஐந்து அடிகள்.
அடிதோறும் வெண்டளை பயிலும்.
அடிகள் 1,2,5 - 3 சீர்கள்
அடிகள் 3,4 - 2 சீர்கள்
1,2 ஆம் அடிகள் முதல் சீர் மோனை
3,4 ஆம் அடிகள் முதல் சீர் மோனை
1,3,5 - முதல் சீரில் எதுகை.
1,2,5 - ஈற்றுச் சீர் இயைபு
3,4 - ஈற்றுச் சீர் இயைபு

வாய்பாடு:

காய் காய் மா
காய் காய் மா
காய் காய்
காய் காய்
காய் காய் மா

1.
கையினிலே ஏந்திடுவான் ஓடு
காதினிலே சூடிடுவான் தோடு
பையரவம் ஆர்கண்டன்
பார்புகழும் கார்கண்டன்
தையலொரு பாகனைநீ நாடு

2.
சென்னியிலே வைத்திடுவான் ஆறு
தேகமதில் பூசிடுவான் நீறு
வன்னியினை ஏந்திடுவான்
மன்றமதில் ஆடிடுவான்
மன்னுபுகழ் ஈசனெனக் கூறு

3.
மாலயனும் காணவொணாச் சோதி
வைய(ம்)முத லானவற்றிற்(கு) ஆதி
சீல(ம்)மிகத் தந்திடுவான்
தீவினைகள் தீர்த்திடுவான்
நீலமணி கண்டனெனப் போதி

போதி - போதித்தல்

4.

ஆனைமுகன் ஆறுமுகன் தாதை
அன்பருக்குக் காட்டிடுவான் பாதை
ஞானமருள் மௌனகுரு
நன்மையருள் தேவதரு
ஏனனவன் நீக்கிடுவான் சூதை

ஏனம் - பன்றி, பன்றிக்கொம்பை, சிவன் ஆபரணமாய் அணிந்துள்ளார். அதனால் ஏனன் என்னும் பெயர் அவர்க்கு.
சூது - பிறப்பு முதலிய துன்பம்

5.
அப்பனுடை வாகனமாம் மாடு
ஆடரங்காம் வெள்ளைநிறக் காடு
அப்புறையும் அஞ்சடையன்
அக்கரமோர் ஐந்துடையன்
ஒப்புயர்வில் லாதவனைப் பாடு

வெள்ளைநிறக் காடு - திருவெண்காடு

6.
அந்தகனின் கர்வமழித் தானே
ஆதவனின் பல்லையுடைத் தானே
சுந்தரனின் தோழனவன்
தூயசெழுஞ் சோதியவன்
சந்திரனை உச்சியில்வைத் தானே

7.
நாற்றிசையும் ஏத்துமுயர் நாமம்
நவில்வார்க்குத் தந்திடுமே ஏமம்
கூற்றுதைத்த பெம்மானைக்
கோலமிகு எம்மானைப்
போற்றிமகிழ் வார்பெறுவார் சேமம்

8.
அற்புதங்கள் ஆற்றுகின்ற மாயன்
அன்னைசிவ காமிமகிழ் நேயன்
அற்பனெனைக் காத்திடுவான்
அஞ்செலெனக் கூறிடுவான்
பொற்சபையில் ஆடுமுயர் தூயன்

9.

நான்மறையும் ஏத்துகின்ற நாதன்
நாண்மலர்கள் ஆர்ந்திடும்பொற் பாதன்
பான்மதிசேர் செஞ்சடையன்
பார்வதியோர் பாலுடையன்
மான்மழுவை ஏந்துமுயர் வேதன்

10.

தில்லையிலே ஆடிடுவான் கூத்து
சீர்பெறுவாய் நீயதனைப் பார்த்து
கல்லாலின் கீழமர்வான்
சொல்லாமல் சொல்லிடுவான்
எல்லையிலா ஈசனைநீ ஏத்து

பதிகம் நிறைவுற்றது.

நமச்சிவாய வாழ்க.

அன்புடன்,
சரண்யா

No comments:

Post a Comment