Tuesday, 24 September 2019

66. தஞ்சைப் பெரிய கோயில் (பதிகம் 28)

வணக்கம்.

தஞ்சை பிரகதீஸ்வரர் மேல் ஒரு பதிகம்.

அறுசீர் விருத்தம்.

மா விளம் தேமா (அரையடி)

1.
நாமம் ஆயிரம் கொண்ட
..நாத ஆதியும் தேவும்
காமன் வெந்திட அன்று
..கண்ணால் நோக்கிய கோவும்
சேமம் அருளிடு வானும்
..சேவின் மேல்வரு வானும்
சாமம் பெரிதுகப் பானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

2.

தெய்வத் திருமுறை தன்னைத்
..தில்லைப் பதியினில் கண்ட
வைய கத்தினை ஆண்ட
..மன்னன் அருண்மொழித் தேவன்
கையால் செய்பணி ஏற்ற
..கண்ணோர் மூன்றுடை யானும்
தையற் கிடமளித் தானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

நம்பியாண்டார் நம்பி அவர்களின் துணைக்கொண்டு, திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரின் அருள்வாக்கால், தில்லையில் நடராஜரின் சன்னிதி அருகில் உள்ள ஒரு அறையில் தேவாரப் பாடல் சுவடிகள் உள்ளதை அறிந்த இராஜராஜ சோழன், அவற்றை மீட்டு, நமக்குக் கிடைக்கும்படி செய்தார்.

அருண்மொழித் தேவன் - இராஜராஜ சோழன்

தையல் - பெண் (பார்வதி)

3.

கண்ணார் நுதலுடை யானும்
..கருத்தில் நிறைந்திடு வானும்
பெண்ணோர் பாகனும் வெள்ளைப்
..பெற்றம் மிசையமர் வானும்
பண்ணார் தமிழினில் ஆரும்
..பரனும் கயல்குதித் தாடும்
தண்ணார் வயலுடை யானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

தஞ்சையில் உள்ள நீர் வளம் மிக்க வயல்கள் யாவும் இறைவனுடைய வயல்கள் என்றவாறு...

4.

மழுவும் வன்னியும் ஏந்தும்
..வனப்பார் இணைக்கரத் தானும்
பழுதில் அடியவர் செய்யும்
..பணியை விரும்பிடு வானும்
குழையார் செவியுடை யானும்
..கொடிபோல் இடையுடை மங்கை
தழுவும் மார்புடை யானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

5.

சங்கை தவிர்த்திடு வானும்
..சதியோ டிசைந்திடு வானும்
வெங்கண் கரியுரி தன்னை
..மேனி மேலணி வானும்
அங்கை குவித்திடும் அன்பர்க்(கு)
..அஞ்சேல் என்றருள் வானும்
தங்கம் போல்மிளிர் வானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

6.

ஏங்கும் அடியவர்க் கென்றும்
..இரங்கி அருளிடு வானும்
ஓங்கு பெருஞ்சுட ராக
..உயர்ந்து பரவிடு வானும்
தீங்கி ழைத்திடு செற்றார்
..சிதைய மேருவை வில்லாய்த்
தாங்கும் கரமுடை யானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

7.

மேவார் முப்புரம் அன்று
..வேவப் புன்னகைத் தானும்
நாவால் நவிற்றிடு வார்க்கு
..நன்மை பலவளிப் பானும்
பாவம் தீர்த்திடு வானும்
..பாவைக் கிடமளித் தானும்
தாவும் புனற்சடை யானும்
..தஞ்சைப் பெருவுடை யானே.

8.

பவளம் போல்மிளிர் வானும்
..பனியார் மலையுறை வானும்
துவசத் தினிலெரு தேற்ற
..துரியத் தினிலமர் வானும்
குவளை விழியுடை யம்மை
..குலவும் வீறுடை யானும்
தவளப் பொடியணி வானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

துவசத் தினிலெரு தேற்ற
..துரியத் தினிலமர் வானும்

துவசத்தினில் எருது ஏற்ற
..துரியத்தினில் அமர்வானும்

துவசம் - கொடி
துரியம் - உயர்ந்த யோக நிலை (ஸஹஸ்ரார சக்ரம் எனவும் கொள்ளலாம்)

கொடியில் இடபத்தை வைத்துக்கொண்ட உயர்ந்த யோக நிலையில் அமர்வானும் என்னும்படியாக..

குவளை விழியுடை யம்மை
..குலவும் வீறுடை யானும்

குவளைப்பூ போன்ற கருவிழிகள் கொண்ட அன்னை, தன்னோடு சேரும் பெருமை மிக்கவன்.

9.

இமவான் மகிழ்மரு கோனும்
..எளியார்க் கிரங்கிடு வானும்
கமலன் சிரத்தினைக் கிள்ளிக்
..களைந்த வல்லவன் தானும்
நமனை எற்றிய கோவும்
..நலமார் மறையுறை வானும்
சமகத் தினில்திளைப் பானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

10.

அஞ்செ ழுத்துடை யானும்
..அல்லில் நடமிடு வானும்
பஞ்சம் தீர்த்திடு வானும்
..பணியை அணிந்திடு வானும்
நெஞ்சில் நிறைந்திடு வானும்
..நீறு பூசிடு வானும்
தஞ்சம் அளித்திடு வானும்
..தஞ்சைப் பெருவுடை யானே.

பணிவுடன்,
சரண்யா

No comments:

Post a Comment