Sunday, 25 October 2026

83. உத்தர சுவாமிமலை

 ராகம் - கானடா 

தாளம் - அங்க தாளம் (9)

தகதகிட (2 1/2) + தகிட (1 1/2) + தகதிமி (2) + தகதிமிதக (3)

தத்ததன தான தனதன தனதான 

முப்பொழுது மாய வலைதனி லுழல்நாயேன் 

..முத்திநெறி காணு முணர்விலன் மொழிகூறு 

துப்பெதுமி லாத அறிவிலி துவளாமல் 

..சுத்தவருள் ஞான அடியிணை அருளாயோ

அப்பணிச டாம குடசிவ குருநாதா

..அற்புதக லாப மயில்மிசை வருவோனே

ஒப்புயர்வி லாத உமையவ ளருள்பாலா

..உத்தரசு வாமி மலையுறை பெருமாளே


பதப்பிரிவு:

முப்பொழுது(ம்) மாய வலைதனில் உழல் நாயேன், 

..முத்திநெறி காணும் உணர்விலன், மொழிகூறு 

துப்(பு) எது(ம்) இலாத அறிவிலி - துவளாமல், 

..சுத்த அருள் ஞான அடி‌ இணை அருளாயோ

அப்(பு) அணி சடா மகுட சிவ குருநாதா

..அற்புத கலாப மயில்மிசை வருவோனே

ஒப்(பு) உயர்(வு‌) இலாத உமையவள் அருள் பாலா

..உத்தர சுவாமிமலை உறை பெருமாளே