Friday, 3 March 2017

04. திருஆலவாய் (மதுரை) - (பதிகம் 2)

ஆலவாயான் விருத்தம்

கலி விருத்தம்
வாய்பாடு - தேமா கூவிளம்  (அரையடி).

ஞால மேத்திடும் ஞான சீலனே
சூல மேந்திடும் சுத்த சோதியே
கால காலனே கந்தன் தந்தையே
ஆலின் கீழமர் ஆல வாயனே. 1

கான கத்திலே கச்சைக் கட்டியே
வான வர்களும் வாழ்த்த ஆடிடும்
மீன லோசனி  மேவும் நாதனே
ஆனைத் தோலணி ஆல வாயனே. 2

*கச்சை - சதங்கை

கோதி லாதவன் கோல மேனியன்
சோதி யானவன் சோர்வி லாதவன்
தாதி லாதவன் தாபம் தீர்ப்பவன்
ஆதி யானதென் ஆல வாயனே. 3

*கோது - குற்றம்
*கோலம் - அழகு
*தாது - தோற்றம்/மூலம்

ஏற தேறியே எங்கும் வந்திடும்
நீறு பூசிய நீல கண்டனே
பேறு நல்கிடும் பிஞ்சு வெண்மதி
ஆறு சூடிடும் ஆல வாயனே. 4

*ஏறு - காளை மாடு
*ஏற தேறியே - ஏறு அது ஏறியே.

மன்னன் வேண்டிட மாறி ஆடிடும்
இன்னல் நீக்கிடும் இன்ப வெள்ளமே
மின்னல் போலவே மேனி கொண்டொளிர்
அன்ன மேந்திடும் ஆல வாயனே. 5

*பாண்டிய மன்னனுக்காக இடதுக்காலை நிலத்தில் ஊன்றி, வலதுக்காலை மேலே தூக்கி ஆடிய வைபவம்.
*அன்னம் ஏந்திடும் - பலி தேர்ந்து உண்பது.

தீயும் நீரதும் தீண்டி டாமலே
மாயம் செய்தவர் மானம் காத்தவர்
தாயு மானவர் தண்ணி ழல்தரும்
ஆய தேசுடை ஆல வாயனே. 6

*சம்பந்தர், சமணர்களை எதிர்த்து  அனல், புனல் வாதங்களில் வெற்றி பெறுவதற்குக் காரணமானவர், சொக்கநாத பெருமான் என்று பொருள் வர முதல் இரு அடிகளைப் பாடியுள்ளேன்.
*ஆய தேசு - ஆயம் - தங்கம். பொன் போல் ஒளிர்பவன்.

முப்பு ரத்தினை முற்றுங் காய்ந்தவர்
வெப்பு நோயறு வெந்த நீற்றினர்
அப்ப ராளுடைப் பிள்ளை பாடிய
அப்ப னேதிரு ஆல வாயனே. 7

*பாண்டியனின் வெப்பு நோய், சம்பந்தர் பாடிய திருநீற்றுப் பதிகத்தால் தீர்ந்தது. நோயினைத் தீர்த்தவர் சொக்கநாத பெருமான் என்பதால், நோயினை  வெற்றி கொண்டவர் (அறுத்தவர்) ஆலவாய் அண்ணல் என்று பாடியுள்ளேன்.
*வெந்த நீற்றினர் - திருநீறு அணிந்தவர்
*ஆளுடைப் பிள்ளை - ஞானசம்பந்தர்

மாலும் வேதனும் ஆழ்ந்தெ ழுந்துமே
சால நேடியும் சற்றுங் கண்டிலர்
கோல வெண்கடல் தன்னில் தோன்றிய
ஆல முண்டதென் ஆல வாயனே. 8

*ஆல முண்டதென் ஆல வாயனே - ஆலம் உண்டது என் ஆலவாயனே/ ஆலம் உண்ட தென் ஆலவாயனே

மண்ணைத் தூக்கினார் வந்திக் காகவே
புண்ணைத் தாங்கினார் பைம்பொன் மேனியில்
வண்ண மைந்துடை மண்ணு யிர்க்கருள்
அண்ண லேதிரு ஆல வாயனே. 9

*வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தபோது, மக்கள் யாவரும் மண்ணைச் சுமந்து, அணைக்கட்ட முற்பட்டனர். அப்போது வந்தி என்னும் பிரட்டிக்காக, பெருமான், மண்ணைச் சுமந்து, பிட்டைக் கூலியாக அவளிடமிருந்து பெற்று, மன்னனிடம் சரிவர வேளை செய்யாததால் பிரம்பால் அடிபெற்றார். அந்த அடி, அனைவரின் முதுகிலும் விழுந்தது.
*வண்ண மைந்துடை - நிறங்கள் ஒரைந்துடையாய் - மாணிக்கவாசகர் சிவபுராணம் ப்ரயோகம்.

தொண்டை யில்விடம் தேக்கிக் காத்தவர்
மண்டை யோட்டுவெண் மாலை  பூண்டவர்
துண்டத் திங்களை சூடும் சுந்தரர்
அண்டம் ஆளுமென் ஆல வாயனே. 10

*துண்டத் திங்கள் - பிறை நிலா
*சுந்தரர் - அழகானவர். மதுரை பெருமானின் பெயரும் - சுந்தரேசர்.

No comments:

Post a Comment