ராகம் - ஆஹிர்பைரவி
தாளம் - மிஸ்ர சாபு (தகதிமி தகிட)
சந்தக் குழிப்பு:
தனதன தான தனதன தான தனதன தான தனதான
வியனென வாகி வளியொளி யாகி விரிபுன லாகி நிலமாகி
..விதையது வாகி விதியது மாகி விமலசொ ரூப நிலையாகி
உயரிய ஞான மறைபொரு ளாகி உயிரொலி யாகி நிறைவோனே
..உனதிரு பாத மகிமையை நாளும் உவகையொ டோத அருள்வாயே
அயனரி யாதி அமருல கோரும் அறியவொ ணாத வடிவோனே
..அறுமுக னோடு மிபமுக னோடும் அழகுடன் ஆடும் அயிலோனே
செயமுக மீது சிறுநகை யோடு சிரகிரி மேவு பெருமானே
..சிறியனை ஆள நரைவிடை ஏறி விழைவொடு நீயும் வருவாயே
விதை - மூலம் / தொடக்கம்
விதி - முறை / வழிமுறைகள்
உயிரொலி - பிரணவம்
அயில் - சூலம்
செயமுகம் - செய - வெற்றி அல்லது (செய்ய -> செய) அந்தி வண்ணம் (சிவப்பு நிறம்) தவழும் முகம்
விழைவொடு - மகிழ்வொடு
சரண்யா
No comments:
Post a Comment