Monday, 30 July 2018

46. திருவெறும்பூர் - (பதிகம் 18)

“மாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய்” - என்ற வாய்பாடு. ஒரோவழி வேறு காய்ச்சீர் வரக்கூடும்.

நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா

மடமாதோர் புரங்கொண்டான் மதியத்தைச் சிரங்கொண்டான்'
நடமாடிப் பலிதேர்வான் நகைத்தேமுப் புரஞ்செற்றான்
இடர்யாவும் களைஈசன் எழிலாரும் எறும்பூரில்
அடலேற்றின் மிசைஊர்வான் அருளாரும் பெருமானே 1

மடமாது ஓர் புரம் கொண்டான் - மட - அழகு. அழகிய பெண்ணை ஒரு பக்கம் கொண்டான்
மதியம் - சந்திரன்
அடல் ஏற்றின் - அடல் ஏறு - அடல் - வலிமை மிக்க

கருதுந்தன் னடியார்கள் கடுந்தொல்லை தனைத்தீர்ப்பான்
ஒருதும்பை மலர்தூவி உளமாரத் துதிசெய்வோர்
இருள்நீக்கி ஒளிசேர்ப்பான் எழிலாரும் எறும்பூரில்
அருளீயும் பரமேசன் அமுதூறும் கரத்தானே 2

ஒரு தும்பை - உயர்வான தும்பை மலர்

ஆலத்தை மிடறேற்றான் அறம்நால்வர்க்(கு) உரைசீலன்
சூலத்தைக் கரமேற்றான் துயர்போக்கும் மணிகூடன்
ஏலப்பூங் குழலாள்கோன் எழிலாரும் எறும்பூரில்
கோலக்கூத் தினையாடும் குறையில்லாப் பெரியோனே 3

மணிகூடம் - திருவெறும்பூர் தலத்தின் மற்றொரு பெயர்
ஏலப்பூங் குழலாள் - திருவெறும்பூர் தலத்தின் அம்பிகை

அமுதூறும் அருந்தாளன் அகிலம்போற் றிடுந்தேசன்
நமனைத்தன் இடக்காலால் நன்றாய்எற் றியதீரன்
இமையோர்கட் கிரங்கீசன் எழிலாரும் எறும்பூரில்
இமவானார் மகளோடே இனிதாக அமர்வோனே 4

பேரோரா யிரங்கொண்டான் பெருநீர்நஞ் சினையுண்டான்
தேரேறிச் சமர்செய்து திரியும்முப் புரஞ்செற்றான்
ஈராறு கரன்தாதை எழிலாரும் எறும்பூரில்
வேரூன்றி அமர்பெம்மன் வினைதீர்க்கும் இறையோனே 5

தலையோட்டில் பலிதேர்வன் தவசீலன் முக்கண்ணன்
அலைவீசும் கடல்தந்த ஆலாலம் விழைந்துண்டான்
இலையாரும் நுனைவேலன் எழிலாரும் எறும்பூரில்
கலையேந்தி நடமாடும் கரைசேர்க்கும் பெருமானே 6

ஒருநான்கு மறைபோற்றும் உயர்ஞான குருநாதன்
திருமார்பில் மணிமாலை சிரமாலை அணிவாமன்
இருநான்கு வரைத்தோளன் எழிலாரும் எறும்பூரில்
திருவாரி வழங்கீசன் செகம்காக்கும் பெருமானே 7

வரை - மலை
இருநான்கு - எட்டு
எட்டுப் பெரிய மலை போன்ற தோள்கள் - அட்ட புஜம் - கைகள் எட்டுடைக் கம்பன் எம்மானை என்ற சுந்தர மூர்த்தி நாயனார் தேவாரம்.

துடியேந்தும் ஒளிக்கரத்தான் துளிர்வில்வம் விழைதூயன்
முடிவில்லான் நிகரில்லான் முதலில்லான் மழுவாளன்
இடுகாட்டில் நடமாடி எழிலாரும் எறும்பூரில்
திடமாக அமர்செய்யன் சிவையோர்பால் உடையானே 8

சிவை - பார்வதி
துடி - உடுக்கை

உரகம்மேல் துயில்வானும் மரையின்மேல் உறைவானும்
சரணங்கள் முடிதேடிச் சலிப்புற்றார் அவர்முன்னோர்
எரியாக எழுபெம்மான் எழிலாரும் எறும்பூரில்
பரிவாய்வீற் றிருகோமான் பணிமாலை அணிவானே 9

உரகம் - பாம்பு
மரை - தாமரை மலர்
எரி - நெருப்பு
பணி - பாம்பு

கணையொன்றால் புரம்மூன்றைக் கனல்மூட்டி எரிவீரன்
சுணைவேலன் உமைபாகன் சுருதிக்குப் புணையாவான்
இணையில்லான் பரமேட்டி எழிலாரும் எறும்பூரில்
துணையாய்வந் தருள்நம்பன் துயர்போக்கும் பெருமானே 10

சுணை - கூர்மை
புணை - ஆதாரம்

பதிகம் நிறைவுற்றது.

பணிவுடன்,
சரண்யா

Thursday, 5 July 2018

45. திருக்கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம் ஏகாம்ரேஸ்வரர் கோயில்) - (பதிகம் 17)

கட்டளைக் கலித்துறை

பண்ணிசை போற்றும் பரனே! விடமார் பணியணிவோய்!
எண்ணுதற் கெட்டா எழிலே! ஒளியே! இறையவனே!
பெண்ணொரு பாகா! பிறைமதி சூடும் பெரியவனே!
கண்ணொரு மூன்றுடைக் கச்சிக் கரும்பே! கனிந்தருளே! 1

உள்ளம் உருகி உமையாள் வணங்க ஒலியுடனே
வெள்ளம் பெருக்கி வெருண்டிட வைத்த மிளிர்சடையா!
துள்ளி எழுந்தவள் தூயவன் உன்றனைத் தொட்டணைக்கக்
கள்ளச் சிரிப்பால் கவர்ந்திட்ட கம்பா! கனிந்தருளே! 2

மண்ணால் இலிங்கம் செய்து, கம்பை ஆற்றின் கரையில் அன்னை, சிவபெருமானை வணங்கினாள். அவள் பக்தியை சோதிக்க, ஐயன், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தார். மிகுந்த ஒலியுடன் வந்த வெள்ளம், இலிங்கத் திருமேனியை ஏதாவது செய்துவிடுமோ என அஞ்சி, இலிங்கத்தை இறுக அணைத்துக்கொண்டாள். பின் கள்ளச் சிரிப்போடு ஐயன், அன்னை முன் வந்து நின்றார்.

மாமரம் கீழே மகிழ்வோ டமர்ந்திடும் மன்னவனே!
சேமம ருள்பவ! தீந்தமிழ்ப் பாட்டில் திளைப்பவனே!
பூமியென் றாகிப் பொலிவோ டிலகிடும் புண்ணியனே!
காமனைக் காய்ந்தவ! கச்சிக் கரும்பே! கனிந்தருளே! 3

காஞ்சி ஸ்தல விருக்ஷம் - மாமரம்
காஞ்சிபுரம் - பிரிதிவி ஸ்தலம்
இலகுதல் - விளங்குதல்

இலைமலி சூலத்தை ஏந்திடும் நாதா! எழிலிமய
மலையர சன்தரு மாதவள் நேயா! வடவரையைச்
சிலையென ஏந்தித் திரிபுரம் சாய்த்த திடமுடையாய்!
கலையணி கையுடைக் கச்சிக் கரும்பே! கனிந்தருளே! 4

எழிலிமய - எழில் இமய / எழிலி மய
எழிலி - மேகம். மேகம் சூழ்ந்த மலை.

இருநாழி நெற்கொண் டிமவான் மடந்தை இருநிலத்தே
திருவாரும் கையால் சிறப்போ டறமிடச் செய்தவனே!
தருநீழல் கீழே சனகா தியர்க்குயர் தத்துவம்சொல்
கருநீல கண்டனே! கச்சிக் கரும்பே! கனிந்தருளே! 5

உலகில் உயிரினங்களுக்கு உணவளித்தல் முதலான 32 அறங்களை புரிய, சிவபெருமான் 2 நாழி நெல் கொடுத்தார். அன்னை, காசியில் அன்னபூரணியாக அந்த நெல்லைக் கொண்டு
அறங்கள் செய்து, இந்தக் காஞ்சியில் அமர்ந்து தவம் செய்தாள் என்பது புராணம்.

நறையார் மலர்கொடு நல்லோர் துதிக்க நலமருள்வோய்!
மறையார் பொருளே! மதிசேர் சடையா! மலர்ச்சுடரே!
அறையார் கழலணி அஞ்செழுத் தோனே! அதிபதியே!
கறையார் மிடறுடைக் கச்சிக் கரும்பே! கனிந்தருளே! 6

அறை - ஓசை

மாலயன் காணா வளர்சோதீ! மாசில்லா மாமணியே!
வேலை விடத்தை விரும்பிய கண்ட! விடையவனே!
சீலம ருள்பவ! சீதனைச் சூடிய சிற்பரனே!
காலனைச் செற்ற கழலுடைக் கம்பா! கனிந்தருளே! 7

பொன்னம் பலத்தே பொலிவுடன் ஆடிடும் புண்ணியனே!
வன்னியு டுக்கை மழுமறி ஏந்திடும் மாமையனே!
வன்புலித் தோலணி வல்லவ! காருண்ய வாரிதியே!
கன்னியொர் பாகமு கந்தவ! கம்பா! கனிந்தருளே! 8

விரிசடை மேலே மிளிரும் நிலவை விழைந்தணிவோய்!
எரிவண னே!வெள் ளெருது மிசையமர் இன்முகனே!
பரசுகம் தந்திடும் பண்ணவ னே!ஒண் பரசுடையாய்!
கரியுரி போர்த்தவ! கச்சிக் கரும்பே! கனிந்தருளே! 9

பண்ணவன் - கடவுள்

அந்தகன் கர்வம் அழித்த அரனே! அருமருந்தே!
வந்தனை செய்வோர் வளமுடன் வாழ வரமருள்வோய்!
சுந்தரர் வேண்டிடத் துல்லியக் கண்ணளி தூயவனே!
கந்தர னே!திருக் கச்சிக் கரும்பே! கனிந்தருளே! 10

சுந்தரருக்குக் கண்பார்வை கொடுத்த தலம் கச்சி ஏகம்பம்.
கந்தரன் - கபாலத்தை ஏந்தியவன்

பதிகம் நிறைவுற்றது.

பி.கு. -

அபிராமி அந்தாதி பாடல்கள், கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ளன.

இலக்கணக் குறிப்பு:

(இலக்கணம் தெரிந்து தான் படிக்க வேண்டும் என்று இல்லை. தெரிந்துகொள்ள விழைவோர், இலக்கணத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். இல்லாவிட்டால், இறை அனுபவத்தை மட்டும் பருகலாம்.)

கட்டளைக் கலித்துறை என்பது நான்கு அடிகள், அடிதோறும் ஐந்து சீர்கள் கொண்ட யாப்பு வகை.

சீர் தோரும் வெண்டளை பயில வேண்டும். அடிதோறும் வெண்டளை பயில வேண்டிய அவசியம் இல்லை.

அடி எதுகை அமைய வேண்டும்.

அடிகளுள், 1, 5 சீர்கள் மோனை நிச்சியம் அமைய வேண்டும். 1,3,5 சீர்கள் மோனை பெற்றிருப்பின் மிகவும் உத்தமம்.

ஒவ்வொரு அடியிலும், நேரசையில் துவங்கினால், 16 எழுத்துக்களும் (மெய் எழுத்துக்கள் நீங்கலாக), நிரையசையில் துவங்கினால், 17 எழுத்துக்களும் (மெய் எழுத்துக்கள் நீங்கலாக) அமைய வேண்டும்.

அடியின் நடுவில் விளங்காய் சீர்கள் வரக்கூடாது. அடியின் ஈற்றுச் சீர், விளங்காய் சீர் அல்லது மாங்கனி சீராக வரவேண்டும். அப்போது தான் எழுத்து எண்ணிக்கை சரியாக இருக்கும்.

பணிவுடன்,
சரண்யா