Thursday, 5 July 2018

45. திருக்கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம் ஏகாம்ரேஸ்வரர் கோயில்) - (பதிகம் 17)

கட்டளைக் கலித்துறை

பண்ணிசை போற்றும் பரனே! விடமார் பணியணிவோய்!
எண்ணுதற் கெட்டா எழிலே! ஒளியே! இறையவனே!
பெண்ணொரு பாகா! பிறைமதி சூடும் பெரியவனே!
கண்ணொரு மூன்றுடைக் கச்சிக் கரும்பே! கனிந்தருளே! 1

உள்ளம் உருகி உமையாள் வணங்க ஒலியுடனே
வெள்ளம் பெருக்கி வெருண்டிட வைத்த மிளிர்சடையா!
துள்ளி எழுந்தவள் தூயவன் உன்றனைத் தொட்டணைக்கக்
கள்ளச் சிரிப்பால் கவர்ந்திட்ட கம்பா! கனிந்தருளே! 2

மண்ணால் இலிங்கம் செய்து, கம்பை ஆற்றின் கரையில் அன்னை, சிவபெருமானை வணங்கினாள். அவள் பக்தியை சோதிக்க, ஐயன், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தார். மிகுந்த ஒலியுடன் வந்த வெள்ளம், இலிங்கத் திருமேனியை ஏதாவது செய்துவிடுமோ என அஞ்சி, இலிங்கத்தை இறுக அணைத்துக்கொண்டாள். பின் கள்ளச் சிரிப்போடு ஐயன், அன்னை முன் வந்து நின்றார்.

மாமரம் கீழே மகிழ்வோ டமர்ந்திடும் மன்னவனே!
சேமம ருள்பவ! தீந்தமிழ்ப் பாட்டில் திளைப்பவனே!
பூமியென் றாகிப் பொலிவோ டிலகிடும் புண்ணியனே!
காமனைக் காய்ந்தவ! கச்சிக் கரும்பே! கனிந்தருளே! 3

காஞ்சி ஸ்தல விருக்ஷம் - மாமரம்
காஞ்சிபுரம் - பிரிதிவி ஸ்தலம்
இலகுதல் - விளங்குதல்

இலைமலி சூலத்தை ஏந்திடும் நாதா! எழிலிமய
மலையர சன்தரு மாதவள் நேயா! வடவரையைச்
சிலையென ஏந்தித் திரிபுரம் சாய்த்த திடமுடையாய்!
கலையணி கையுடைக் கச்சிக் கரும்பே! கனிந்தருளே! 4

எழிலிமய - எழில் இமய / எழிலி மய
எழிலி - மேகம். மேகம் சூழ்ந்த மலை.

இருநாழி நெற்கொண் டிமவான் மடந்தை இருநிலத்தே
திருவாரும் கையால் சிறப்போ டறமிடச் செய்தவனே!
தருநீழல் கீழே சனகா தியர்க்குயர் தத்துவம்சொல்
கருநீல கண்டனே! கச்சிக் கரும்பே! கனிந்தருளே! 5

உலகில் உயிரினங்களுக்கு உணவளித்தல் முதலான 32 அறங்களை புரிய, சிவபெருமான் 2 நாழி நெல் கொடுத்தார். அன்னை, காசியில் அன்னபூரணியாக அந்த நெல்லைக் கொண்டு
அறங்கள் செய்து, இந்தக் காஞ்சியில் அமர்ந்து தவம் செய்தாள் என்பது புராணம்.

நறையார் மலர்கொடு நல்லோர் துதிக்க நலமருள்வோய்!
மறையார் பொருளே! மதிசேர் சடையா! மலர்ச்சுடரே!
அறையார் கழலணி அஞ்செழுத் தோனே! அதிபதியே!
கறையார் மிடறுடைக் கச்சிக் கரும்பே! கனிந்தருளே! 6

அறை - ஓசை

மாலயன் காணா வளர்சோதீ! மாசில்லா மாமணியே!
வேலை விடத்தை விரும்பிய கண்ட! விடையவனே!
சீலம ருள்பவ! சீதனைச் சூடிய சிற்பரனே!
காலனைச் செற்ற கழலுடைக் கம்பா! கனிந்தருளே! 7

பொன்னம் பலத்தே பொலிவுடன் ஆடிடும் புண்ணியனே!
வன்னியு டுக்கை மழுமறி ஏந்திடும் மாமையனே!
வன்புலித் தோலணி வல்லவ! காருண்ய வாரிதியே!
கன்னியொர் பாகமு கந்தவ! கம்பா! கனிந்தருளே! 8

விரிசடை மேலே மிளிரும் நிலவை விழைந்தணிவோய்!
எரிவண னே!வெள் ளெருது மிசையமர் இன்முகனே!
பரசுகம் தந்திடும் பண்ணவ னே!ஒண் பரசுடையாய்!
கரியுரி போர்த்தவ! கச்சிக் கரும்பே! கனிந்தருளே! 9

பண்ணவன் - கடவுள்

அந்தகன் கர்வம் அழித்த அரனே! அருமருந்தே!
வந்தனை செய்வோர் வளமுடன் வாழ வரமருள்வோய்!
சுந்தரர் வேண்டிடத் துல்லியக் கண்ணளி தூயவனே!
கந்தர னே!திருக் கச்சிக் கரும்பே! கனிந்தருளே! 10

சுந்தரருக்குக் கண்பார்வை கொடுத்த தலம் கச்சி ஏகம்பம்.
கந்தரன் - கபாலத்தை ஏந்தியவன்

பதிகம் நிறைவுற்றது.

பி.கு. -

அபிராமி அந்தாதி பாடல்கள், கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ளன.

இலக்கணக் குறிப்பு:

(இலக்கணம் தெரிந்து தான் படிக்க வேண்டும் என்று இல்லை. தெரிந்துகொள்ள விழைவோர், இலக்கணத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். இல்லாவிட்டால், இறை அனுபவத்தை மட்டும் பருகலாம்.)

கட்டளைக் கலித்துறை என்பது நான்கு அடிகள், அடிதோறும் ஐந்து சீர்கள் கொண்ட யாப்பு வகை.

சீர் தோரும் வெண்டளை பயில வேண்டும். அடிதோறும் வெண்டளை பயில வேண்டிய அவசியம் இல்லை.

அடி எதுகை அமைய வேண்டும்.

அடிகளுள், 1, 5 சீர்கள் மோனை நிச்சியம் அமைய வேண்டும். 1,3,5 சீர்கள் மோனை பெற்றிருப்பின் மிகவும் உத்தமம்.

ஒவ்வொரு அடியிலும், நேரசையில் துவங்கினால், 16 எழுத்துக்களும் (மெய் எழுத்துக்கள் நீங்கலாக), நிரையசையில் துவங்கினால், 17 எழுத்துக்களும் (மெய் எழுத்துக்கள் நீங்கலாக) அமைய வேண்டும்.

அடியின் நடுவில் விளங்காய் சீர்கள் வரக்கூடாது. அடியின் ஈற்றுச் சீர், விளங்காய் சீர் அல்லது மாங்கனி சீராக வரவேண்டும். அப்போது தான் எழுத்து எண்ணிக்கை சரியாக இருக்கும்.

பணிவுடன்,
சரண்யா

1 comment:

  1. மிக நன்றாய் இருக்கிறது. இலக்கண விளக்கத்துடன் இலக்கியமாக இயற்றிட்டாய் சரண்.

    ReplyDelete