Sunday, 11 June 2023

79. திருப்பரங்குன்றம் - பரங்கிரிநாதர்

திருப்பரங்குன்றம் - பரங்கிரிநாதர்

குரம்பை மலசலம் - திருப்புகழ் அமைப்பு


தனந்த தனதன தனதன தனதன

தனந்த தனதன தனதன தனதன

தனந்த தனதன தனதன தனதன .... தனதான


சுரந்தி ருகுவலி இருமலொ டுறுகுளிர்

 மிகுந்த தலைவலி பெருவயி றெரிகுலை

  சுரந்த பலபிணி எதுவுமென் உடலினை .... அணுகாதே


தொடர்ந்து பகலிர வெனமறு சுழலினை

 அடைந்து பலமுறை அயர்வுறு நிலையது

  துரந்து நினதடி எனதிரு தயமதில் .... இடவேணும்


சிரந்த னிலிளைய மதியமும் வரநதி

 கரந்தை அறுகுடன் அரவமும் முடிபவ

  செறிந்த குழலுடை உமையவள் தழுவிடும் .... மணிமார்பா


சிறந்த லயமொடு கவிபல எழுதிடு

 திறந்த னையுடைய புகலிய ரசுபணி

  சிவந்த ழையவருள் இரசத சபையுறை .... பெரியோனே


நிரந்த ரமெமது படைகளும் உயிர்களும்

 எனுந்தி மிரமொடு திரியசு ரரையொரு

  நிமிர்ந்த அளவினில் எரியுற அருளிய .... திறலோனே


நெடுங்க டலிலெழு விடமதை மிடறினில்

 ஒடுங்க அணிசிவ இமையவர் நலமொடும்

  நெடும்பு கழினொடும் இலகிட வரமிக .... அருள்வோனே


பரந்த வெளியினில் எழிலொலி கழலினை

 அணிந்து களிநட மிடுமுயர் குருபர

  பதஞ்ச லியினொடு புலிபத முனிதொழும் .... இறையேநின்


பதந்தி னமும்நினை அடியவர் இருவினை

 அதஞ்செய் அரகர வளமிகு பொழில்வளர்

  பரங்கி ரியிலக மகிழ்வொடு மருவிய .... பெருமானே


பதம் பிரித்த வடிவம்:

சுரம் திருகுவலி இருமலொடு உறுகுளிர்

மிகுந்த தலைவலி பெருவயிறு எரிகுலை

சுரந்த பலபிணி எதுவும் என் உடலினை .... அணுகாதே


தொடர்ந்து பகலிரவு‌ என மறுசுழலினை

அடைந்து பலமுறை அயர்வுறு நிலையது

துரந்து நினது அடி எனது இருதயம் அதில் .... இடவேணும்


சிரம் தனில் இளைய மதியமும் வரநதி

கரந்தை அறுகுடன் அரவமும் முடிபவ

செறிந்த குழலுடை உமையவள் தழுவிடும் .... மணிமார்பா


சிறந்த லயமொடு கவி பல எழுதிடு

திறம் தனை உடைய புகலி அரசு பணி

சிவம் தழைய அருள் இரசத சபை உறை .... பெரியோனே


நிரந்தரம் எமது படைகளும் உயிர்களும்

எனும் திமிரமொடு திரி அசுரரை ஒரு

நிமிர்ந்த அளவினில் எரியுற அருளிய .... திறலோனே


நெடுங்கடலில் எழு விடமதை மிடறினில்

ஒடுங்க அணி சிவ இமையவர் நலமொடும்

நெடும் புகழினொடும் இலகிட வரமிக .... அருள்வோனே


பரந்த வெளியினில் எழில் ஒலி கழலினை

அணிந்து களிநடமிடும் உயர் குருபர

பதஞ்சலியினொடு புலிபத முனிதொழும் .... இறையே நின்


பதம் தினமும் நினை அடியவர் இருவினை

அதம் செய் அரகர வளமிகு பொழில்வளர்

பரங்கிரியில் அகமகிழ்வொடு மருவிய .... பெருமானே


இரசத சபை - வெள்ளி அம்பலம் 

புகலி அரசு - திருஞானசம்பந்தர்.

புகலி - சீர்காழியின் ஒரு பெயர்

புலிபத முனி - வியாக்ரபாதர் 

78. காஞ்சி காமாக்ஷி

காஞ்சிபுரம் - காமாக்ஷி அம்மன்

வண்ணப் பாடல்

ஓங்கும் ஐம்புலனோட - எட்டிக்குடி (காஞ்சிரங்குடி) திருப்புகழ் சந்தம்


தாந்த தந்தன தான தனத்தம் தனதான


மீண்டு மம்புவி மீதி லநர்த்தன் பிறவாமல்

..மேம்ப டும்பழ தீவி னைகட்டுண் டலையாமல்


மாண்ட ருங்கன தாளை நினைக்குங் குணமோடு

..வான்பு கழ்ந்திடு வாழ்வு மளித்தென் றனையாள்வாய்


தாண்ட வம்புரி நாத ரிடப்பங் கினிலாரும்

..சாந்த மும்பெரு வார முடைச்சங் கரிவாமி


காண்ட வன்பரி வார மனைத்தும் பணிதாயே

..காஞ்சி யம்பதி மாவ டியத்தன் குழைமாதே


பதம் பிரித்த வடிவம்:


மீண்டும் அம்புவி மீதில் அநர்த்தன் பிறவாமல்

..மேம்படும் பழ தீவினைகட்டுண்(டு) அலையாமல்

மாண் தரும் கன தாளை நினைக்கும் குணமோடு

..வான் புகழ்ந்திடு வாழ்வும் அளித்து என்றனை ஆள்வாய்

தாண்டவம் புரி நாதர் இடப்பங்கினில் ஆரும்

..சாந்தமும் பெரு வாரம் உடைச் சங்கரி வாமி

காண்டவன் பரிவாரம் அனைத்தும் பணி தாயே

..காஞ்சி அம் பதி மாவடி அத்தன் குழைமாதே


காண்டவன் - இந்திரன்


காஞ்சி அம் பதி மாவடி அத்தன் குழைமாதே - காஞ்சியில் மா மரத்தின் அடியில் அம்பாள் லிங்கம் அமைத்துப் பூஜை செய்து கொண்டிருக்கையில், சிவபெருமான், அன்னையைச் சோதிக்கும் பொருட்டு, வெள்ளப்பெருக்கை உண்டாக்கினார். சிவபெருமானுக்கு அதனால் ஆபத்து வந்துவிடப்போகிறது என்று பதறி, அந்த மணலால் ஆன லிங்கத் திருமேனியை அணைத்துக்கொண்டாள். 

குழையத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கை வல்லி என்று அபிராமி பட்டர் பாடுகிறார். அன்னையும் குழைய, அத்தனும் குழைந்து தன்னோடு சேர்த்துக் கொண்டார்.



77. திருச்சிராப்பள்ளி மட்டுவார்குழலம்மை

திருச்சிராப்பள்ளி

வண்ணப் பாடல்

சுகந்த குந்தளாம்பாள் - மட்டுவார்குழலம்மை


தனதன தான தனதன தான

தனதன தான .... தனதான


நரையெரு தேறி இறையவ ரோடு

நகரமு லாவு .... மகராணீ

   நறைமலர் ஆரும் வரியளி சேரும்

   நறுமணம் வீசு .... குழலாளே


பரிபுரம் ஆடு பதமலர் நாடு

பழவடி யார்கள் .... அவரோடே

   படிறுடை நானும் இனியுற வோடு

   படிமிசை வாழ .... அருள்வாயே


இருடிகள் வேள்வி தனையடு சூரன்

இடிபடு மாறு .... சமர்நீலீ

   இபமுக னோடும் அறுமுக னோடும்

   இனிதுற வாடு .... ஜகன்மாதா


திரிபுரம் வேவ ஒருகணை யேவு

சிவனிட மாரும் .... எழிலாளே

    திருமுறை வேத எதிரொலி மோது

    சிரகிரி மேவும் .... உமையாளே


பதம் பிரித்த வடிவம்:


நரை எருது ஏறி இறையவரோடு

நகரம் உலாவு .... மகராணீ

    நறைமலர் ஆரும் வரியளி சேரும்

    நறுமணம் வீசு .... குழலாளே

பரிபுரம் ஆடு பதமலர் நாடு

பழ அடியார்கள் .... அவரோடே

    படிறு உடை நானும் இனி உறவோடு

    படிமிசை வாழ .... அருள்வாயே

இருடிகள் வேள்விதனை அடு சூரன்

இடிபடுமாறு .... சமர் நீலீ

    இபமுகனோடும் அறுமுகனோடும்

    இனிது உறவாடு .... ஜகன்மாதா

திரிபுரம் வேவ ஒருகணை ஏவு

சிவன் இடம் ஆரும் .... எழிலாளே

     திருமுறை வேத எதிரொலி மோது

     சிரகிரி மேவும் .... உமையாளே