Friday, 11 August 2017

15. திருமீயச்சூர் (பதிகம் 9)

நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா

வாய்பாடு: காய் காய் காய் காய்

மாயத்தார் அறியவொணா மகிமையுடைச் சத்தியனும்
தேயத்தோர் தாமேத்தும் தேனமுதம் ஆனவனும்
நேயத்தோ டெமையாளும் நிர்மலனும் நித்தியனும்
மீயச்சூர் தனிலுறையும் வினைபோக்கும் இறையவனே. 1

மாயத்தார் - மாயையில் கட்டுண்டோர்.
தேயத்தோர் - அறிவில் சிறந்த சான்றோர்.
ஏத்துதல் - வழிபடுதல்

பெண்ணுறையும் மேனியனும் பேரொளியாய்த் திகழ்பவனும்
கண்ணொருமூன் றுடையவனும் கருணைமிகு தேவனும்நற்
பண்ணிசையில் மகிழ்பவனும் பவளநிறம் கொண்டவனும்
வெண்ணிலவை அணிபவனும் மீயச்சூர் உறைகோவே. 2

சடையதன்மேல் விரிநதியும் தண்மதியும் புனைவோனும்
உடையதுவாய் மதகரியின் வன்தோலை உடுப்போனும்
நடுநிசியில் இடுகாட்டில் நடமாடி மகிழ்வோனும்
விடையதன்மேல் வருவோனும் மீயச்சூர் உறைகோவே. 3

விரிநதி - விரிந்து பாயும் கங்கை நதி
தண்மதி - குளிர் மதி
மதகரி - மத யானை

படவரவைத் தொடையெனவே பாங்காக அணிவோனும்
இடமதனை மடமாதிற்(கு) இடமாக அளித்தோனும்
வடவரையை வில்லாக வைத்தெயில்மூன் றெரித்தோனும்
விடமதனை உண்டோனும் மீயச்சூர் உறைகோவே. 4

படவரவு - பட + அரவு = படமெடுக்கும் பாம்பு
தொடை - மாலை
இடம் - இடபாகம்
மடமாது - மடம் + மாது = அழகிய பெண்; மடம் = அழகு.
வடவரை = வட + வரை = மேரு மலை. வடக்கே உள்ள மலை.
எயில் மூன்று = திரிபுரம்

சோதனைகள் யாவையுமே தோல்வியுறச் செய்பவனும்
ஓதுமறை நான்கினுளே உறைவோனும் ஒளிர்வோனும்
கீதமதில் திளைப்போனும் கேழல்கொம் பணிவோனும்
மேதினியை ஆள்வோனும் மீயச்சூர் உறைகோவே. 5

கேழல் - பன்றி; வராகம்.
சிவபெருமான், தனது அடியைக் காண முடியாத வராகத்தின் (விஷ்ணு) வெண் கொம்புகளில் ஒன்றையுடைத்து, தனது இடையில் அணிகலனாக அணிந்துள்ளார்.

மான்மழுதீ இவையேந்தி நடம்புரியும் வல்லோனும்
வான்வளிதீ நீர்மண்ணென் றைம்பூதம் ஆனோனும்
தேன்வழியும் மலர்மாலை தனைச்சூடும் சேகரனும்
மேன்மைபல தருபவனும் மீயச்சூர் உறைகோவே. 6

காலனைஓர் காலாலே கடிந்தோனும் மோனத்தில்
ஆலதனின் நீழற்கீழ் அறங்கூற அமர்ந்தோனும்
கோலவடி வானவனும் குற்றங்கள் பொறுப்பானும்
வேலவனைத் தந்தோனும் மீயச்சூர் உறைகோவே. 7

தசமுகனின் செருக்கதனைத் தகர்த்தவனும் பின்னரவன்
இசைமடுத்து மகிழ்ந்தவனும் இன்னருளைத் தந்தவனும்
விசயனுக்குப் பாசுபதம் விருப்புடனே அளித்தவனும்
திசையெட்டும் பணிந்தேத்தும் திருமீயச் சூர்க்கோவே. 8

சக்கரத்தை மாலுக்குத் தந்தானும் மதியாத
தக்கனவன் பெருவேள்வி தகர்த்தானும் முன்னவனும்
முக்கணனும் பிறவானும் மூவானும் இறவானும்
விக்கினங்கள் தீர்ப்பானும் மீயச்சூர் உறைகோவே. 9

முன்னவன் - ஆதி.
முக்கணன் - முக்கண்ணன்
பிறவான்,மூவான்,இறவான் -> ஜன்மம், ஜரா, ம்ருத்யு இம்மூன்றும் இல்லாதவன்

கன்னல்விற் காமனைஓர் கண்ணாலே காய்ந்தோனும்
இன்னல்கள் தீர்ப்பானும் இன்பங்கள் சேர்ப்பானும்
அன்னத்தை வெண்டலையில் அகமுவந்தே ஏற்பானும்
மின்னல்போல் ஒளிர்வானும் மீயச்சூர் உறைகோவே. 10

கன்னல் - கரும்பு
வெண்டலை - வெண்மையான மண்டை ஓடு = வெண் தலை.

Wednesday, 26 July 2017

14. திருக்கற்குடி [உய்யக்கொண்டான் திருமலை] (பதிகம் 8)

வணக்கம்.
அடுத்த பதிகம் - திருக்கற்குடி - உய்யக்கொண்டான் திருமலை.

கலி விருத்தம்.
வாய்பாடு - விளம் மா விளம் மா

பாத்திரம் ஏந்திப் பலிதனில் மகிழும்
சாத்திரம் போற்றும் சற்குரு நாதா!
மாத்திரைப் போதில் வாட்டம ரிந்து
காத்தருள் வாயே கற்குடித் தேவே. 1

வாட்டம ரிந்து - வாட்டம் அரிந்து
அரிதல் - அழித்தல்

தவமது புரிவோய்! தாரணி மார்பா!
சிவசிவ எனநின் சீர்ப்பெயர் சொலாது
பவவினை தனிலே பயந்துழன் றிடுமெம்
கவலைகள் அறுப்பாய் கற்குடித் தேவே. 2

தாரணி மார்பா - தார் அணி மார்பா
தார் = பூமாலை

அருத்தஅம் புலியை அணிந்திடும் அரனே!
நிருத்த!என் றுன்றன் நீள்கழல் பேணா(து)
இருட்டினில் உழலும் எமக்குயர் வான
கருத்தினை அருள்வாய் கற்குடித் தேவே. 3

அருத்த அம்புலி - பாதி நிலா (அர்த்த = அருத்த)
நிருத்த - நிருத்தன் என்பதன் விளி - நிருத்தா. அணுக்க விளி நிருத்த. பெருமா என்பதை பெரும என்றும் விளிப்பதுண்டு. அதுபோல் நிருத்தா என்பதை நிருத்த என்று விளித்துள்ளேன்.
நிருத்தம் = நாட்டியம். நாட்டியம் ஆடுபவன் நிருத்தன்.
கருத்து - மனம்

பொற்பதம் தூக்கிப் பொற்சபை தனிலே
அற்புத நடனம் ஆடிடும் அரசே
கற்பிதச் சூழைக் களைந்திடு வாயே
கற்பகத் தருவே கற்குடித் தேவே. 4

சூலம(து) ஏந்தும் சுத்தசெஞ் சுடரே!
ஆலதன் நிழலில் அமர்ந்தறம் உரைக்கும்
பாலதன் வண்ணா! பாலனைக் காக்கக்
காலனை உதைத்த கற்குடித் தேவே. 5

மார்க்கண்டேயன் காலனால் துரத்தப்பட்டப் போது பல ஆலயங்களில் உள்ள இலிங்கத் திருமேனியை வணங்கி வந்தான்.

உய்யக்கொண்டான் திருமலையில் உள்ள இறைவனை வணங்கிய போது, இறைவன் அவன் முன்னே தோன்றி, "உனக்குப் புத்துயிர் அளிக்கிறேன்" என்று சொன்னார். அதனால் உஜ்ஜீவநாதர் என்று பெயர் பெற்றார்.

பின்னர், திருவேற்காட்டில் மர்கண்டேயனை "சிரஞ்சீவி" என்று அருளி, திருக்கடவூரில் காலனை உதைத்தார் என்று தலவரலாறு தெரிவிக்கிறது.

எயிலவை மூன்றை எரித்தசெந் தழலே!
முயலகன் மேலே ஆடிடும் முதல்வா!
மயிலமர் கோன்சொல் மந்திரப் பொருள்கேள்
கயிலையம் பதியே! கற்குடித் தேவே. 6

எயில் மூன்று - திரிபுரம்
தழல் - தீ
முயலகன் - தீமைகளின் உருவகமான அரக்கன்.
முயலகம் என்பது வலிப்பு வியாதி. அதனால் இறைவன் முயலகன் மீது ஏறி நின்று அவனை வெளிவிடாமல் ஆடுகிறார் என்றால், வியாதிகள் நம்மை அணுகாது காக்கிறார் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.
மயிலமர் கோன் - முருகன்

அருளுடைச் சுடரே! அருமருந் தே!யெம்
பெருவினை பிணியைப் பெயர்த்திடும் பரனே!
ஒருபுறம் உமைக்குத் தந்தநற் சீலா!
கருணையின் உருவே! கற்குடித் தேவே! 7

இமிழ்கடல் தனிலே எழுவிடந் தனைத்தெள்
அமிழ்தெனப் பருகி அவனியைக் காத்தோய்!
தமிழ்தனில் மகிழ்வோய்! தவமுனிக் கருளும்
கமழ்சடை யானே கற்குடித் தேவே. 8

இமிழ் = ஒலித்தல். அலையோசை ஒலிக்கும் கடல்.
கமழ்தல் = மணம் வீசுதல் / பரவுதல். பரவிய சடையன்.

அலையினில் துயிலும் அச்சுதன் தானும்
கலைமகள் கோவும் கண்டறி யானே!
மலைமகள் மருவும் மலர்ச்சுடர் ஒளியே!
கலையமர் கரத்தோய்! கற்குடித் தேவே 9

கலைமகள் கோ = பிரமன்
கலையமர் கரத்தோய் - மான் அமரும் கரம் உடையவர் (மானைக் கையில் கொண்டவர்)

விண்ணவர் போற்றும் வித்தக வேந்தே!
வெண்ணில வணியும் விரிசடை யோனே!
பெண்ணுறை தேகா! பேரெழிற் கோவே!
கண்ணுத லானே! கற்குடித் தேவே! 10

Monday, 10 July 2017

13. திருவிடைமருதூர் (பதிகம் 7)

வணக்கம்.

அடுத்த பதிகம் - திருவிடைமருதூர்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

(மங்கள ரூபிணி மதியணி சூலினி என்ற தமிழ்ப் பாடல் அமைப்பு. அயிகிரி நந்தினி அமைப்பும் கூட..)

வாய்பாடு:
விளம் விளம் விளம் விளம்
..விளம் விளம் காய்

மங்கள வடிவினர் மறைதனில் உறைபவர்
..மன்னுயிர் காத்திடும் மன்னரவர்
திங்கள ணிந்திடும் செந்நிற மேனியர்
..தீவினை தீர்த்திடும் தேவரவர்
அங்கயற் கண்ணியின் அங்கரம் பற்றிய
..அம்புலி அதளணி அரசரவர்
எங்களை ஆண்டிடும் எழில்மிகு நாயகர்
..இடைமரு தூருறை இறையவரே. 1

அம்புலி - அம் + புலி -> அழகிய புலி
அதள் - தோல்

விண்ணவர் ஏத்திடும் வித்தகக் குருவவர்
..வெள்விடை ஏறிடும் பாகனவர்
பெண்ணுறை மேனியர் பிறைமதி சூடிடும்
..பேரொளி யாய்த்திகழ் பரமனவர்
கண்ணுதற் தேவவர் கனைகடல் இருந்தெழு
..கார்விடம் தனைநுகர் ஈசனவர்
எண்ணுதற்(கு) இனியவர் எழில்வடி வானவர்
..இடைமரு தூருறை இறையவரே 2

தன்னிகர் அற்றவர் தத்துவம் ஆனவர்
..தண்ணருள் தந்திடும் தேசனவர்
நன்மைகள் யாவையும் நயமுடன் அருள்பவர்
..நரைவிடை மேல்வரும் நம்பனவர்
மின்னொளிர் மேனியர் மெய்ந்நிலை தருபவர்
..மேதினி காத்திடும் பாலனவர்
இன்னிசை தனில்மகி ழும்பர மானவர்
..இடைமரு தூருறை இறையவரே 3

நம்பன் - ஆணிற்சிறந்தோன் ; கடவுள் ; சிவன்.
பாலன் - காவலன் (க்ஷேத்ரபாலன் என்பதில் வருவது போல்)

கடலிருந் தெழுவிடம் தனைநுகர்ந் தவரவர்
..காசினி வாழ்வதற் கருளியவர்
படவர வணிபவர் பழவினை தீர்ப்பவர்
..பணிபவர்க் கருளிடும் பரமனவர்
நடுநிசி யில்நடம் ஆடிடும் நாயகர்
..நாடிடும் அன்பருள் ளிருப்பரவர்
இடரது நசிப்பவர் இன்பம ளிப்பவர்
..இடைமரு தூருறை இறையவரே 4

நீறத னைத்திரு மேனியில் அணிபவர்
..நீண்டழ லானவி கிர்தனவர்
பேறுகள் அருள்பவர் பிஞ்சுவெண் ணிலவணி
..பெருமுலை நாயகி நாதனவர்
ஆறது சூடிடும் அருமறை வித்தகர்
..ஐவிரற் கோவணம் தனையணிவர்
ஏறதில் ஏறிடும் இன்முகம் உடையவர்
..இடைமரு தூருறை இறையவரே 5

விகிர்தன் - கடவுள்
ஏறு - காளை

கூற்றுவ னையிடக் காலினா லுதைத்தவர்
..கூவிள மாலையைச் சூடுபவர்
போற்றிடும் அடியவர்க் கருளினைப் பொழிபவர்
..பொற்சபை யில்நடம் ஆடுபவர்
வேற்றுவி காரமி லாதவர் மானிடர்
..வேதனை யாவையும் விரட்டுபவர்
ஏற்றம ளிப்பவர் இருவினை அறுப்பவர்
..இடைமரு தூருறை இறையவரே 6

அயனவ னுடையொரு சிரந்தனை அரிந்தவர்
..அபயம ளித்திடும் அண்ணலவர்
நயமுட னேநலம் யாவையும் அளிப்பவர்
..நானிலம் போற்றிட ஆடுபவர்
முயலகன் மேல்நடம் ஆடிடும் நாயகர்
..முத்திய ளித்திடும் முத்தனவர்
எயிலவை மூன்றினை எரியுறச் செய்தவர்
..இடைமரு தூருறை இறையவரே 7
அயன் - பிரமன்

மடமையி னால்மதி யால்நினை யாதுவெண்
..மலையினைப் பெயர்த்திட முனைந்தவனின்
மடமையை அழித்திடப் பெருவிரல் ஒன்றினை
..மலையினில் ஊன்றிய மாவலியர்
மிடறத னில்விடம் அதனைய டைத்தவர்
..மேனியில் நீறினைப் பூசுபவர்
இடபம தில்வரும் இசைவடி வானவர்
..இடைமரு தூருறை இறையவரே 8

மடமை - அறிவின்மை / கர்வம்
வெண்மலை - கயிலை மலை (பணி மூடிய வெள்ளை மலை)
*இராவணின் கர்வத்தை அடக்கிய கதை
மிடறு - தொண்டை
நீறு - விபூதி
இடபம் - ரிஷபம் / காளை

நேமியை ஏந்திய நாரண னுங்குளிர்
..நீரச மலர்மிசை உறைபவனும்
பூமியு ளாழ்ந்துமே விண்ணிலெ ழுந்துமே
..புரிதலுக் கரிதென உணர்த்தியவர்
சேமம ளிப்பவர் தேனமர் மலர்திகழ்
..சேவடி தொழுபவர்க் கருளுபவர்
ஏமம ருள்பவர் எங்குமு றைபவர்
..இடைமரு தூருறை இறையவரே 9

நேமி - சக்கரம்
நீரச மலர் - தாமரை மலர்
மிசை - மேல்
நீரச மலர் மிசை உறைபவன் - பிரமன்
சேமம் - நன்மை
ஏமம் - பாதுகாப்பு

குண்டிகைக் கையரும் சாக்கிய ரும்பிற
..கூட்டமும் தாமறி யாப்பெரியர்
வெண்டலை யில்பலி தேர்ந்திடும் அந்தணர்
..விசயருக் கத்திரம் அருளியவர்
துண்டவெண் மதியினைச் சூடிடும் சுந்தரர்
..தூயசெஞ் சுடரெனத் திகழுபவர்
எண்டிசை யோர்புகழ்ந் தேத்திடும் நாயகர்
..இடைமரு தூருறை இறையவரே 10

குண்டிகைக் கையர் - கமண்டலத்தைக் கையில் வைத்திருக்கும் சமணர்கள்
சாக்கியர் - பௌத்தர்கள்
பிற கூட்டம் - மற்ற நாத்திகர்கள்
வெண்டலை - வெள்ளை தலை - பிரம்ம கபாலம்
விசயன் - அர்ஜுனன்

இடைமருதூர் பதிகம் நிறைவுற்றது.

12. காஞ்சி முனி

கலி விருத்தம் - வாய்பாடு -  விளம் மா (அரையடி)

கருணையின் உருவே! காஞ்சியின் முனியே!
வரமிக அருளும் வையகக் குருவே!
கருதிடும் அடியார் கவலைகள் அறுக்கும்
அருமருந் தே!நற் கதியருள் வாயே!

சரண்யா.
08-06-2017

இன்று வைகாசி அனுஷம். காஞ்சி காமகோடி பீடாதிபதி பரமாச்சார்யாள் மகாபெரியவா ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி.

Friday, 9 June 2017

11. பொது - திருக்குறுந்தொகை (பதிகம் 6)

வணக்கம்.

அடுத்த முயற்சி - குறிப்பாக இன்ன தலம் என்றில்லாமல், பொதுவாக, சிவபெருமான் மீது புனைந்த பாடல். அப்பர் பெருமானின் வட்டனை மதிசூடியை... என்ற தேவார அமைப்பில்.

கட்டளைக் கலிவிருத்தம் திருக்குறுந்தொகை அமைப்பில்.

இலக்கண குறிப்பை இப்பதிவின் இறுதியில் காண்க.

நாத னைந்நட மாடிடுந் தேவனை
வேத னைவ்விட முண்டவென் ஐயனைக்
கீத னைக்கெடி லத்துறை வேந்தனை
ஆத னையடி யேன்மறந் துய்வனோ. 1

ஆதன் - பெரியோன்/ஆன்மா
கெடிலத்துறை - கெடிலம் - திருவதிகை வீரட்டானத்தில் ஓடும் ஆறு.

தூய னைத்துயர் நீக்கிடும் ஈசனை
மாய னைம்மறைக் காட்டிலு றைவனை
நேய னைந்நிறம் ஓரைந் துடையனை
ஆய னையடி யேன்மறந் துய்வனோ. 2

ஆயன் - பொன் மயமானவர்

முத்த னைம்முது குன்றமர் கோவினைப்
பித்த னைப்பிறை சூடிய பேரெழிற்
சித்த னைச்சிரிப் பாலெயில் மூன்றெரி
அத்த னையடி யேன்மறந் துய்வனோ. 3

முதுகுன்று - விருத்தாச்சலம் (திருமுதுகுன்றம்)

கமல னுங்கரி யானும் அறிந்திடா
நிமல னைந்நீள் தழலாய் எழுந்தனை
விமல னைவ்விடை ஏறிடும் பாகனை
அமல னையடி யேன்மறந் துய்வனோ. 4

கமலன்-பிரமன்
கரியான்-விஷ்ணு

விருத்த னைவெண் குளிர்மதி சூடியை
நிருத்த னைநெடு நாகம் அணிந்தனைக்
கருத்த னைக்கார் மிடறுடை ஈசனை
அருத்த னையடி யேன்மறந் துய்வனோ. 5

மெய்ய னைம்மென் மலரணி புன்சடைச்
செய்ய னைச்சேர்ந் தறியாக் கரத்தனைக்
கையி னில்கன லேந்திநின் றாடிடும்
ஐய னையடி யேன்மறந் துய்வனோ. 6

சேர்ந்தறியாக் கரத்தன் - கூப்பிய கைகள் இல்லாதவன். நமக்கு ஏதாவது வேண்டுமென்றாலோ அல்லது நம்மைவிட பெரியவரைப் பார்த்தாலோ நாம் கைகளைக் கூப்பி வணங்குவோம். ஆனால் இறைவனிடம் எல்லாம் இருக்கிறது. அவருக்கு வேண்டுவது என்று எதுவும் இல்லை. மேலும் இறைவனே பெரியவன். அவரைவிடப் பெரியவன் வேறு யாரும் இல்லை. ஆதலால் அவர் கைகளைக் கூப்ப வேண்டியது இல்லை. அவர் கைகள் சேர்ந்து இருக்காது. சேர்ந்தறியாக் கையானை என்று மாணிக்கவாசக பெருமான், திரு அம்மானையில் பாடியுள்ளார்.

விண்ண வர்விரும் பித்தொழும் வேந்தனை
எண்ணு தற்கினி தான இறைவனைப்
பெண்ணு றைபெரு மானைப் பெருந்துறை
அண்ண லையடி யேன்மறந் துய்வனோ. 7

பெருந்துறை - திருப்பேணுபெருந்துறை (திருப்பந்துறை) என்று கும்பகோணம் - பூந்தோட்டம் பாதையில், நாச்சியார்க்கோவிலுக்கு அருகில் உள்ள பாடல் பெற்ற தலம். அல்லது திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில் (புதுக்கோட்டைக்கு அருகில்) என்றும் கொள்ளலாம்.

பூத னைப்புவி காத்திடும் பேரெழிற்
பாத னைப்பை அரவம் அணிந்தனைச்
சீத னைச்செஞ் சடைமேல் முடிந்தனைத்
தாத னைத்தமி யேன்மறந் துய்வனோ. 8

பூதன் - தூயன்.
சீதன் - சந்திரன்.
தாதன் - தந்தை.

கோதி லாக்கோ கழிதனில் வந்தனை
நீதி யைநிலை பெற்றிடச் செய்தனைச்
சோதி யைச்சுட ராயொளிர்ந் தோங்கிய
ஆதி யையடி யேன்மறந் துய்வனோ. 9

கோகழி - திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவில்.

உமையி னையொரு பாகம் உடையனை
இமைய வர்பணிந் தேத்தும் எழிலனைச்
சமண ருந்தர மில்லோ ருமறியா
அமுதி னையடி யேன்மறந் துய்வனோ. 10

இமையவர் - தேவர்கள்
சமண ருந்தர மில்லோ ருமறியா - சமணரும் தரம் இல்லோரும் அறியா.
தரம் இல்லோர் - நாத்திகர்.

பி.கு:
1. இப்பதிகத்தில் பத்துப் பாடல்கள்.
2. பாடலுக்கு நான்கு அடிகள்.
3. ஒவ்வோர் அடியிலும்:
1. முதல் சீர் 'மா'
2. இரண்டாம் சீர் நேர் அசையில் தொடங்கும்
3. 2-3-4 சீர்களுக்கு இடையே வெண்டளை பயிலும்
4. அடி நேர் அசையில் தொடங்கினால், அடியில் 11 எழுத்துக்கள். நிரை அசையில் தொடங்கினால், 12 எழுத்துக்கள்.

ஐயா திரு பசுபதி அவர்களின் "கவிதை இயற்றிக் கலக்கு" புத்தகத்தில் அவர் கூறி இருந்ததை இங்கு பகிர்கிறேன். "கட்டளைக் கலிவிருத்தத்தில், 2-3-4 சீர்களுக்கு இடையே வெண்டளை பயின்று வருமாறு அமைத்தால், இந்த எழுத்துக் கணக்குகள் தானே சரியாகிவிடும்".

4. சந்தத்திற்காக சில வரிகளில் ஒரு ஒற்று (எ.டு. ந்,வ்,ம்) வரின் சிறக்கும்
5. முதல் சீரிலும், மூன்றாம் சீரிலும் மோனை வராது, முதல் சீர் முதல் அசை, இரண்டாம் சீர் இரண்டாம் அசை ஆகியவற்றில் மோனை பயின்று (கள்ள மோனை) அமைந்துள்ளது.