முருகப்பெருமான் மீது பதிகம் - திருச்சந்த விருத்தம் அமைப்பில்.
தான தான தான தான தான தான
தானனா
தான என்பது தனன, தந்த, தத்த, தன்ன, தய்ய என்று சில இடங்களில் வரலாம்.
1.
நீப மாரு மார்வ னேநி சாச ரர்த மாவியைக்
கோப முற்ற ழித்த தீர குக்கு டப்ப தாகனே
தாப மூன்றை யுந்த கர்த்தி டுஞ்ச தாசி வச்சுதா
பாப மூட்டை யாவை யும்பொ சுக்கி எம்மை ஆள்வையோ?
பதம் பிரித்த வடிவம்:
நீபம் ஆரும் மார்வனே! நிசாசரர் தம் ஆவியைக்
கோபமுற்றழித்த தீர! குக்குடப் பதாகனே!
தாபம் மூன்றையும் தகர்த்திடும் சதாசிவச் சுதா!
பாப மூட்டை யாவையும் பொசுக்கி எம்மை ஆள்வையோ?
நீபம் - கடம்பு
நிசாசரர் - அரக்கர்கள்
குக்குடம் - கோழி (சேவல்)
பதாகை - கொடி
2.
சந்தி ரன்ச லம்பு னைந்தி டீச னார்வ ணங்கிட
மந்தி ரத்தின் அர்த்த மீதென் றன்று போதம் நல்கினாய்!
பந்தி பந்தி யாக வந்து வந்த னைசெய் பத்தர்தம்
புந்தி யுள்பு குந்து பொற்ப தத்தை வைத்த ருள்வையோ?
பதம் பிரித்த வடிவம்:
சந்திரன் சலம் புனைந்தி(டு) ஈசனார் வணங்கிட
மந்திரத்தின் அர்த்தம் ஈதென்(று) அன்று போதம் நல்கினாய்!
பந்தி பந்தியாக வந்து வந்தனை செய் பத்தர் தம்
புந்தியுள் புகுந்து பொற்பதத்தை வைத்தருள்வையோ?
3.
வண்டு லாவு நீல மோடு வாகை வெட்சி செண்பகம்
புண்ட ரீகம் நற்க டம்பு பூணு மம்பு யத்தனே!
தண்டை கொஞ்சு செய்ய தாள்த ரிப்ப தென்றெ னுச்சிமேல்?
அண்ட ருய்ய அன்று சூர ழித்த ஆதி தேவனே!
பதம் பிரித்த வடிவம்:
வண்(டு) உலாவு நீலமோடு வாகை வெட்சி செண்பகம்
புண்டரீகம் நற்கடம்பு பூணும் அம் புயத்தனே!
தண்டை கொஞ்சு செய்யதாள் தரிப்பது என்று என் உச்சிமேல்?
அண்டர் உய்ய அன்று சூர் அழித்த ஆதி தேவனே!
நீலம் - நீலோத்பல மலர்
வாகை, வெட்சி, செண்பகம், புண்டரீகம், கடம்பு - மலர்கள்
4.
இஞ்சி சூழி லங்கை வேவ பாணம் விட்ட மாயவன்
கொஞ்சி யேம கிழ்கு மார! கோல வள்ளி நாயகா!
தஞ்ச மென்று நின்னை நாடி வந்து சார்ப வர்க்குநீ
அஞ்ச லென்று கையு யர்த்தி ஆள்வொ மென்று சொல்வையோ?
பதம் பிரித்த வடிவம்:
இஞ்சி சூழ் இலங்கை வேவ பாணம் விட்ட மாயவன்
கொஞ்சியே மகிழ் குமார! கோல வள்ளி நாயகா!
தஞ்சமென்று நின்னை நாடி வந்து சார்பவர்க்கு நீ
'அஞ்சல்' என்று கை உயர்த்தி 'ஆள்வொம்' என்று சொல்வையோ?
இஞ்சி - மதில்
5.
தெய்வ யானை சேரும் மார்ப! தேவர் லோகம் மீட்டவா!
பொய்வ ழிக்கி ழுத்த ழுத்து புள்ளு வர்க ளோடியான்
உய்வ தற்கொர் மார்க்க மின்றி ஒன்று சேர்ந்தி ராமலே
மெய்வ ழிக்கு ளேசெ லுத்தி என்னை ஆள வல்லையோ?
பதம் பிரித்த வடிவம்:
தெய்வ யானை சேரும் மார்ப! தேவர் லோகம் மீட்டவா!
பொய்வழிக்கு இழுத்து அழுத்து புள்ளுவர்களோடு யான்
உய்வதற்கு ஒர் மார்க்கம் இன்றி ஒன்று சேர்ந்திராமலே
மெய்வழிக்குளே செலுத்தி என்னை ஆள வல்லையோ?
புள்ளுவர் - கீழ்க்குணத்தவர்
6.
சூத மாய்க்க விழ்ந்து நின்ற சூரன் வீழ வேல்விடும்
நாத னேந ராரி யோடு தேவர் யக்ஷ கின்னரர்
வேதன் மாத வர்க ளோடு மேன்மை கொண்ட யாவரும்
ஓதும் நாத ரூப னேயெ மக்கு ணர்வ ளிப்பயே.
பதம் பிரித்த வடிவம்:
சூதமாய்க் கவிழ்ந்து நின்ற சூரன் வீழ வேல்விடும்
நாதனே! நராரியோடு தேவர் யக்ஷ கின்னரர்
வேதன் மா தவர்களோடு மேன்மை கொண்ட யாவரும்
ஓதும் நாத ரூப னே! எமக்(கு) உணர்(வு) அளிப்பயே.
சூதம் - மா மரம்
7.
கீரன் வேண்ட வெற்பி டித்தொ ராயி ரத்த வர்களைப்
பாரி டத்தி டத்தி ருந்து காத்த சத்தி பாணியே
தார காசு ரன்ற னாகம் வச்சி ரத்தி னாற்பிளந்
தார வார மோடு தேவர் போற்ற நின்ற ஐயனே!
பதம் பிரித்த வடிவம்:
கீரன் வேண்ட வெற்(பு) இடித்(து) ஒர் ஆயிரத்தவர்களைப்
பாரிடத்(து) இடத்(து) இருந்து காத்த சத்தி பாணியே!
தாரகாசுரன் தன் ஆகம் வச்சிரத்தினால் பிளந்(து)
ஆரவாரமோடு தேவர் போற்ற நின்ற ஐயனே!
கீரன் - நக்கீரர்
பாரிடம் - பூதம் (கற்கிமுகி)
திருப்பரங்குன்றத்தில் நக்கீரர் 999 பேர்கள் அடைந்திருந்த குகைக்குள் சிக்கிக்கொண்டார். ஆயிரம் நபர்கள் சேரந்ததும் அனைவரையும் உண்பேன் என்று இருந்த கற்கிமுகி பூதத்திடமிருந்து தப்பிக்க, திருமுருகாற்றுப்படை பாடினார். முருகன், வேல் எறிந்து, அந்தக் குகையை தகர்த்து அனைவரையும் விடுவித்தான் என்று திருப்பரங்கிரி தலபுராணம் கூறுகிறது.
8.
ஓரெ ழுத்து மந்தி ரத்தி னுட்க ருத்த றிந்திடா
நீர ஜன்ற னைக்க டிந்து நீண்வி லங்கி ழைத்தனை
காரி யங்கள் யாவு மேக லங்கி நின்ற போதிலவ்
வார ணன்சொ ரூப மாகி யாக்கி னைப்ர பஞ்சமே
பதம் பிரித்த வடிவம்:
ஓரெழுத்து மந்திரத்தின் உட்கருத்(து) அறிந்திடா
நீரஜன் தனைக் கடிந்து நீள் விலங்(கு) இழைத்தனை
காரியங்கள் யாவுமே கலங்கி நின்ற போதில் அவ்
ஆரணன் சொரூபம் ஆகி ஆக்கினை ப்ரபஞ்சமே.
நீரஜன் - பிரமன்
ஆரணன் சொரூபம் - ப்ரம்ம சாஸ்தா வடிவம்
9.
தந்தி மாமு கத்த வன்ற னக்கு கந்த தம்பியே
தந்தி யாத ரத்து டன்வ ளர்த்த தையல் நாயகா
தந்தி செய்த பூஜை யேற்ற ஜம்பு நாதர் பாலனே
தந்தி ரங்கள் யாவு மேத்து சண்மு காவ ருள்வையே.
பதம் பிரித்த வடிவம்:
தந்திமாமுகத்தவன் தனக்(கு) உகந்த தம்பியே!
தந்தி ஆதரத்துடன் வளர்த்த தையல் நாயகா!
தந்தி செய்த பூஜை ஏற்ற ஜம்புநாதர் பாலனே!
தந்திரங்கள் யாவும் ஏத்து சண்முகா! அருள்வையே.
ஆதரம் - ஆசை
10.
நீல மார்சி கண்டன் நெற்றி லோச னத்து தித்தவா
நீல மார்சி கண்ட மேற்று யிற்ப வன்வி ழைபவா
நீல மார்சி கண்டி யேறி நீர கம்வ லஞ்செய்வாய்
நீல மார்சி கண்ட னாக யானி ராத ருள்வையே
பதம் பிரித்த வடிவம்:
நீலம் ஆர் சிகண்டன் நெற்றி லோசனத்(து) உதித்தவா!
நீலம் ஆர் சிண்டம் மேல் துயில்பவன் விழைபவா!
நீலம் ஆர் சிகண்டி ஏறி நீரகம் வலம் செய்வாய்!
நீலம் ஆர் சிகண்டனாக யான் இரா(து) அருள்வையே.
நீலமார்சிகண்டன் - நீலம் ஆர் சி கண்டன் - விடம் நிறைந்த பெருமையுடைய கழுத்தை உடையவன் - சிவன்
நீலமார்சிகண்டம் - நீலம் ஆர் சிகண்டம் - விடம் நிறைந்த பாம்பு - ஆதிசேஷன்
நீலமார்சிகண்டி - நீலம் ஆர் சிகண்டி - நீல நிறக் கழுத்துடைய மயில்
நீலமார்சிகண்டன் - நீலம் ஆர் சிகண்டன் - விடம் தோய்ந்த சொற்களை (கடுஞ்சொற்களை) பேசுபவன்
11.
வெற்றி யேய ளித்து வீரர் கோட்டி யைப்பு ரந்திடும்
கொற்ற வைக்கு மார னேதொ ழும்ப னேன்பு னைந்தபா
குற்ற முற்றி ருப்பி னுங்கு றையி தென்றொ துக்கிடா
துற்ற வையெ மக்கி வையெ னப்ப தத்தி லேற்பயே.
பதம் பிரித்த வடிவம்:
வெற்றியே அளித்து வீரர் கோட்டியைப் புரந்திடும்
கொற்றவைக் குமாரனே! தொழும்பனேன் புனைந்தபா
குற்றம் உற்(று) இருப்பினும் குறை இ(து) என்(று) ஒதுக்கிடா(து)
'உற்றவை எமக்(கு) இவை' எனப் பதத்தில் ஏற்பயே.
புரத்தல் - காத்தல்
No comments:
Post a Comment