ஆதிசங்கரர் அருளிய காலபைரவாஷ்டகத்தை ஒட்டி அமைந்துள்ளது.
சந்த விருத்தம்
தான தான தான தான தான தான தானனா
1.
மேக வூர்தி மெச்சு கின்ற மென்ச ரோஜ பாதனை
நாக மாரு மார்ப னைநி லாவு லாவு கேசனை
யோகி யோர்வ ணங்கு தேவை நக்க னையு தாரனைக்
காசி நாத னான கால பைர வன்ற னைத்துதி
பதம் பிரித்த வடிவம்:
மேகவூர்தி மெச்சுகின்ற மென் சரோஜ பாதனை
நாகமாரு மார்பனை நிலா உலாவு கேசனை
யோகியோர் வணங்கு தேவை நக்கனை உதாரனைக்
காசி நாதனான கால பைரவன் தனைத் துதி
மேக ஊர்தி - மேகத்தை வாகனமாக கொண்ட இந்திரன்
2.
மாலி கோடி மிஞ்சு தேச னைப்ப வந்த ணிப்பனை
நீல கண்ட னைநி னைத்த தீயு மூன்று கண்ணனைக்
கால கால னைம ரைக்க ணாள னைத்ரி சூலனைக்
காசி நாத னான கால பைர வன்ற னைத்துதி
பதம் பிரித்த வடிவம்:
மாலி கோடி மிஞ்சு தேசனைப் பவம் தணிப்பனை
நீலகண்டனை நினைத்த(து) ஈயும் மூன்று கண்ணனைக்
காலகாலனை மரைக்கணாளனை த்ரிசூலனைக்
காசி நாதனான கால பைரவன் தனைத் துதி
மாலி - சூரியன்
தேசன் - தேஜஸ் உடையவன்
பவம் - பிறப்பு
மரை - தாமரை
3.
சூல மோடு பாச தண்டம் ஏந்தி நிற்கும் ஆதியை
நீல வண்ண னைப்பி றப்பி றப்பி லாத நித்தனை
வாலி மைமி குந்த ஐய னைநி ருத்த போகனை
காசி நாத னான கால பைர வன்ற னைத்துதி
பதம் பிரித்த வடிவம்:
சூலமோடு பாச தண்டம் ஏந்தி நிற்கும் ஆதியை
நீல வண்ணனைப் பிறப்(பு) இறப்பிலாத நித்தனை
வாலிமை மிகுந்த ஐயனை நிருத்த போகனை
காசி நாதனான கால பைரவன் தனைத் துதி
4.
புக்தி முக்தி தந்தி டும்வ னப்பு டைச்சொ ரூபனைப்
பக்தர் யாவ ரும்வி ழைநி ரந்த ரத்தி றத்தனை
சொக்கி னாலி ழைத்த மத்தி நாண ணிந்த கீதனைக்
காசி நாத னான கால பைர வன்ற னைத்துதி
பதம் பிரித்த வடிவம்:
புக்தி முக்தி தந்திடும் வனப்புடைச் சொரூபனைப்
பக்தர் யாவரும் விழை நிரந்தரத் திறத்தனைச்
சொக்கினால் இழைத்த மத்தி நாண் அணிந்த கீதனைக்
காசி நாதனான கால பைரவன் தனைத் துதி
புக்தி - இவ்வுலக இன்பம்
முக்தி - பேரின்பம்
சொக்கு - பொன்
மத்தி - இடை
நாண் - கயிறு
5.
தர்ம மோங்க வைப்ப னைய தர்ம மார்க்க நாசனைக்
கர்ம பந்தம் நீக்கி வீடு பேற ளிக்க வல்லனைச்
சொர்ண வண்ண நாக ஆரம் ஆர்ந்தி டுஞ்சு தேசனை
காசி நாத னான கால பைர வன்ற னைத்துதி
பதம் பிரித்த வடிவம்:
தர்மம் ஓங்க வைப்பனை அதர்ம மார்க்க நாசனைக்
கர்ம பந்தம் நீக்கி வீடு பேறு அளிக்க வல்லனைச்
சொர்ண வண்ண நாக ஆரம் ஆர்ந்திடும் சுதேசனைக்
காசி நாதனான கால பைரவன் தனைத் துதி
ஓங்குதல் - தழைத்து வளருதல்
ஆர்தல் - நிறைதல் / சூழ்தல்
சுதேசன் - சு - மங்களமான, தேசன் - ஒளிமிக்கவன்
6.
இரத்தி னம்ப தித்தி ழைத்த பாது கைய ணிந்தனைப்
பரத்து வம்மி குந்த அத்து வைத னைவி கிர்தனை
மிருத்து தன்செ ருக்க ழித்த வெய்ய வல்லெ யிற்றனைக்
காசி நாத னான கால பைர வன்ற னைத்துதி
பதம் பிரித்த வடிவம்:
இரத்தினம் பதித்து இழைத்த பாதுகை அணிந்தனைப்
பரத்துவம் மிகுந்த அத்துவைதனை விகிர்தனை
மிருத்து தன் செருக்கழித்த வெய்ய வல்லெயிற்றனைக்
காசி நாதனான கால பைரவன் தனைத் துதி
மிருத்து - யமன்
7.
அட்ட காச மிட்ட யன்ப டைத்த அண்ட கோளமும்
அட்டொ டுக்கும் வீர னைப்ப வந்த ணிக்கு மத்தனை
அட்ட சித்தி ஈவ னைக்க பால மாலை சூடியை
காசி நாத னான கால பைர வன்ற னைத்துதி
பதம் பிரித்த வடிவம்:
அட்டகாச(ம்) இட்(டு) அயன் படைத்த அண்டகோளமு(ம்)
அட்(டு) ஒடுக்கு(ம்) வீரனைப் பவம் தணிக்கு(ம்) அத்தனை
அட்ட சித்தி ஈவனைக் கபால மாலை சூடியை
காசி நாதனான கால பைரவன் தனைத் துதி
பவம் தணிக்கு(ம்) அத்தனை can also be read as பவம் தணிக்கு(ம்) மத்தனை - மத்தன் - ஊமத்தை பூ அணிந்தவன்
8.
பூத நாத னைப்பெ ரும்பு கழ்கொ டுத்த ருள்வனை
சீத கங்கை தாவு காசி வாழ்வொ ரூழ றுப்பனை
நீதி யோங்கு பாதை யிற்செ லுத்தி யாள்பு ராணனை
காசி நாத னான கால பைர வன்ற னைத்துதி
பதம் பிரித்த வடிவம்:
பூத நாதனைப் பெரும் புகழ் கொடுத்தருள்வனை
சீத கங்கை தாவு காசி வாழ்வொர் ஊழ் அறுப்பனை
நீதி ஓங்கு பாதையில் செலுத்தி ஆள் புராணனை
காசி நாதனான கால பைரவன் தனைத் துதி
No comments:
Post a Comment