Friday, 12 August 2022

76. மதுரை மீனாக்ஷி அம்மன் - வண்ணம்

சந்தக் குழிப்பு:

தான தனதன தான தனதன

தான தனதன தனதான


ஆதி முடிவிலி யான அரனொரு

..பாக மமரெழில் மலையாளே

....ஆல மமுதுசெய் நாத ரொடுநடம்

......ஆடு மரகத மயிலாளே


பாத மலரிணை பாடி வழிபடு

..பான்மை யுளருள முறைவோளே

....பாத கமெயுறு பாழ்ந ரகில்விழு

......பால னெனதிடர் களைவாயே


வேதன்‌ மகபதி மாலு மமரர்கள்

..மீள மதலையை அளிமாதே

....வேத நெறியழி யாமல் நிலைபெற

...... மேவும் அமுதருள் முலையாளே


கூத லிளமதி ஓதி மிசையணி

..கோம ளமிலகு  சிவகாமி

....கோடு வளைஅபி ராமி வளமிகு

......கூடல் நகருறை உமையாளே 


பதம் பிரித்த வடிவம்:

ஆதி முடிவு இலியான அரன் ஒரு

..பாகம் அமர் எழில் மலையாளே

....ஆலம் அமுதுசெய் நாதரொடு நடம்

......ஆடு மரகத மயிலாளே


பாத மலரிணை பாடி வழிபடு

..பான்மையுளர் உளம் உறைவோளே

....பாதகமெ உறு பாழ் நரகில் விழு

......பாலன் எனது இடர் களைவாயே


வேதன்‌ மகபதி மாலும் அமரர்கள்

..மீள மதலையை அளிமாதே

....வேதநெறி அழியாமல் நிலைபெற

...... மேவும் அமுதருள் முலையாளே


கூதல் இளமதி ஓதி மிசை அணி

..கோம ளமிலகு சிவகாமி

....கோடு வளை அபிராமி  வளமிகு

......கூடல் நகர் உறை உமையாளே 


குறிப்பு:

வேதநெறி அழியாமல் நிலைபெற

...... மேவும் அமுதருள் முலையாளே

திருஞானசம்பந்தருக்கு திருமுலைப்பால் அருளிய வரலாறு

கூதல் - குளிர்ந்த

இளமதி - பிறைச் சந்திரன்

ஓதி - கூந்தல் (இங்கு தலை)

கோமளம் - அழகு

கோடு வளை - கோடு - மலை (இங்கு மேரு மலை)

திரிபுர சம்ஹாரத்தில் சிவனுக்கு இடப்புறம் இருந்தாள் அம்பிகை. அட்ட வீரட்டச் செயல்களில், திரிபுர சம்ஹாரத்தின் போது மட்டும் அம்பிகையும் உடனிருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அதனால், மேருமலையை சிவன் இடக்கையில் வில்லாகப் பிடித்தார் என்பது, அம்பாளே மேருமலையை வளைத்துப் பிடித்தாள் என்பது ஒரு கருத்து.

கூடல் நகர் - மதுரை



https://youtu.be/5-aMfoh-w0I?si=isUoomLPXH2iI-Vl


No comments:

Post a Comment