Friday 23 February 2024

81. வண்ணப் பாடல் - சிக்கல்

தத்த தனதான தத்த தனதான 

    தத்த தனதான தனதான 


பித்த மொடுவீளை சுற்று வளியோடு 

    பெட்ட கமதான உடல்மீதே

பித்த னெனவாகி முற்றி மனமாடி 

    பெற்பு நிலைமாறி உழலாதே 


பத்தி நெறிபேணும் உத்த மர்களோடு

    பத்தி செயும்வாழ்வை அடைவேனோ 

பத்ம மணிபாதம் நித்தம் மறவாது 

    பற்றும் நினைவான தருள்வாயே 


முத்த னையமூரல் அத்தி மகளோடு 

    முற்று மகிழ்வோடு வருவேளே 

முக்க ணிறையோனும் மெச்ச உபதேசம் 

    மொய்த்த குருநாத முருகோனே 


தித்தி மொழி வேலை ஒத்த விழிமாது 

    சித்ர வளிநாத மயிலேறித் 

திக்கு முழுதாளும் வித்த கவிநோத

    சிக்க லுறையாறு முகவேளே 

     

பதம் பிரித்த வடிவம் 

பித்தமொடு ஈளை சுற்று வளியோடு 

    பெட்டகம் அதான உடல்மீதே

பித்தன் எனவாகி முற்றி மனம் ஆடி 

    பெற்பு நிலைமாறி உழலாதே 


பத்தி நெறிபேணும் உத்தமர்களோடு

    பத்தி செயும்வாழ்வை அடைவேனோ 

பத்ம மணிபாதம் நித்தம் மறவாது 

    பற்றும் நினைவான(து) அருள்வாயே 


முத்தனைய மூரல் அத்தி மகளோடு 

    முற்று மகிழ்வோடு வருவேளே 

முக்கண்  இறையோனும் மெச்ச உபதேசம் 

    மொய்த்த குருநாத முருகோனே 


தித்தி மொழி வேலை ஒத்த விழிமாது 

    சித்ர வளிநாத மயிலேறித் 

திக்கு முழுதாளும் வித்தக விநோத

    சிக்கல் உறை ஆறு முகவேளே 

     

பெற்பு - இயல்பு 

தித்தி - இனிய 

No comments:

Post a Comment