திருவானைக்கா (கரிவனம்)
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
வாய்பாடு - விளம் மா காய் (அரையடி)
விரிசடை முடிமேல் வெண்மதியும்
.. விரிநதி தனையும் புனைவோனே
திரிபுரந் தன்னைச் சிரிப்பாலே
.. தீக்கிரை யாக்கிச் சாய்த்தோனே
அரியவன் தங்கை அவள்செய்த
.. அரும்பெருந் தவத்தில் மகிழ்ந்தோனே
கரியினுக் கருள்செய் பெரியோனே
.. கரிவனம் மேவும் பெருமானே. 1
*சிரிப்பாலே - முப்புரத்தை, தன் மந்திரப் புன்னகையாலேயே எரித்தார்.
*அரியவன் - அரி அவன். அரி - திருமால்.
*கரி - யானை
*கரிவனம் - ஆனைக்கா.
மாலயன் அறியா மலர்ச்சுடரே
.. மாதொரு பாகம் கொண்டோனே
சீலனே தில்லைச் சிற்சபையில்
.. சீர்மிகு நடனம் புரிவோனே
வேலவன் தன்னை விண்ணோர்தம்
.. வெந்துயர் தீர்க்கத் தந்தோனே
காலனைக் காலால் உதைத்தோனே
.. கரிவனம் மேவும் பெருமானே. 2
விண்ணவர் போற்றும் வித்தகனே
.. வெள்விடை யேறும் வேதியனே
மண்ணுயிர்க் கென்றும் மகிழ்வோடு
.. வரங்களை அருளும் மன்னவனே
தண்ணருள் உவந்து தருவோனே
.. சத்தியம் அதனை உரைப்போனே
கண்ணுதற் தேவே கருப்பொருளே
.. கரிவனம் மேவும் பெருமானே. 3
ஏவிய மரையும் எரிதழலும்
.. ஏந்திநின் றாடும் இறையோனே
கூவிள மாலை தனையணிந்த
.. குற்றமொன் றில்லாக் கோமானே
பூவினைத் தூவிப் புகழ்வோர்க்குப்
.. பூமியில் சிறந்த பேறருளும்
காவிரிக் கரையில் அமர்ந்தோனே
.. கரிவனம் மேவும் பெருமானே. 4
மரை - மான்.
தழல் - நெருப்பு.
தாருகாவன முனிவர்கள் சிவன் மீது ஏவியவற்றை தன் கைகளில் தாங்கி ஆடினார்.
கூவிளம் - வில்வம்.
அந்தகன் மமதை அழித்தோனே
.. ஆதவன் பல்லைத் தகர்த்தோனே
இந்திரன் முதலா வெண்டிசையோர்
.. ஏத்திடும் இன்பக் கழலோனே
தந்தியின் முகனைத் தந்தோனே
.. தத்துவப் பொருளாய் நின்றோனே
கந்தனைப் பெற்ற கருணையனே
.. கரிவனம் மேவும் பெருமானே. 5
*அந்தகன் - அந்தகாசுரன்.
*ஆதவன் பல்லைத் தகர்த்தல் - தக்கன், சிவனை மதியாது வேள்வியை நடத்தினான். அங்கே சிவன் சென்ற போது, பலரும் அவரை அவமதித்தனர். பகன் எனப்படும் தை மாதத்திற்குரிய சூரியன், நடந்தவற்றைக் கண்டு நகைத்தான். அதனால் கோபமுற்ற வீரபத்திரர், ஆதவனின் பல்லை உடைத்தார். பல் இல்லாத காரணத்தால், சூரியனுக்கு மிருதுவான, முந்திரி போன்றவை சேர்க்காத உணவை (சர்க்கரைப் பொங்கல் போன்றவை) சங்கராந்தி அன்று நிவேதனமாக கொடுக்கிறோம்.
*தந்தியின் முகனை - தந்தி இன்முகனை. இன்முகம் - ஸுமுகம் என்று விநாயகனுக்குப் பெயர்.
நாரியொர் பாகம் கொண்டவனே
.. நான்மறை போற்றும் நாயகனே
நீரது வாகி அமர்ந்தோனே
.. நீண்டழ லாகி நிமிர்ந்தோனே
சூரியன் முதலொன் பதுகோள்கள்
.. துதிசெய அருளும் ஆரியனே
காரிருள் நீக்கும் கதிரொளியே
.. கரிவனம் மேவும் பெருமானே. 6
*நாரி - பெண்
*நீரது வாகி அமர்ந்தோனே - ஆனைக்கா, அப்பு ஸ்தலம். நீரினைக் கொண்டு லிங்கத் திருமேனி செய்து, அம்பாள் வழிபட்டாள்.
*சூரியன் முதலொன் பதுகோள்கள் - சூரியன் முதல் ஒன்பது கோள்கள்.
*ஆரியனே - பெரியவனே
பைம்முக நாகம் அணிந்தோனே
..பத்தருக் கருளும் பரம்பொருளே
ஐம்முகங் கொண்ட அருளோனே
..ஐம்பெரும் பூதம் ஆனோனே
மைம்முக வேழம் உரித்தோனே
..வன்புலித் தோலை அணிந்தோனே
கைம்மழு வேந்தி நடஞ்செய்யும்
..கரிவனம் மேவும் பெருமானே. 7
பைம்முக நாகம் - சினத்தால் சீறும் படமெடுக்கும் நாகம்.
பத்தர் - அடியவர்.
ஐம்முகம் - ஸத்யோஜாதம் முதலிய ஐந்து முகங்கள்.
மைம்முக வேழம் - கரிய முகமுடைய யானை. யானையின் தோலுரித்தல் - அட்டவீரச் செயல்களில் ஒன்று.
கைம்மழு - கையில் மழு (சம்பந்தர் சிராப்பள்ளி தேவாரம் - நன்றுடையானை.... என்ற பதிகத்தில், இரண்டாம் பாடலில் கைம்மகவேந்தி... என்ற ப்ரயோகம், இங்கு கைம்மழு வேந்தி என்று உபயோகப்படுத்தியுள்ளேன்)
மலையினைத் தூக்க நினைத்தோனை
.. வலுவிழந்(து) அரற்றச் செய்தோனே
வலையினைப் பின்னு சிலந்திக்கு
.. வரமிக அளித்த வல்லோனே
தலையெனும் கலனில் பலிதேர்ந்து
.. தவமதில் மகிழும் சடையோனே
கலையினைக் கையிற் கொண்டோனே
.. கரிவனம் மேவும் பெருமானே. 8
வலுவிழந் தரற்றச் செய்தோனே - வலு இழந்து அரற்றச் செய்தோனே.
அரற்றல் - புலம்பல்.
தலை - தலை ஓடு
கலன் - கையில் கொண்ட பொருள்
பலி தேர்தல் - யாசித்தல்
கலை - மான்.
சோமனை யணியும் சுந்தரனே
.. சோதியாய் நீண்டு வளர்ந்தோனே
தூமலர்க் கொன்றைத் தொடையோனே
.. தோடணி செவியை உடையோனே
மாமணி கண்டம் கொண்டோனே
.. மாதவன் வணங்க மகிழ்ந்தோனே
காமனை முற்றும் காய்ந்தோனே
.. கரிவனம் மேவும் பெருமானே. 9
பாலதன் வண்ணம் கொண்டோனே
.. பாரினைக் காக்கும் பாலகனே
மாலினை இடத்தே வைத்தோனே
.. மானுடம் வாழ அருள்வோனே
ஆலதன் நிழலில் அமர்வோனே
.. அறநெறி நால்வர்க் குரைப்போனே
காலினைத் தூக்கி நின்றாடும்
.. கரிவனம் மேவும் பெருமானே. 10
பாலகன் - காவலன். (க்ஷேத்திர பாலகர்).