Thursday, 20 December 2018

49. திருக்கடவூர் - (பதிகம் 21)

அறுசீர் விருத்தம்

மா மா காய் (அரையடி)

வாரி சூடும் வார்சடையன்
..வாம தேவன் மாவலியன்
நாரி ஓர்பால் உடைத்தேகன்
..நமனை உதைத்த அதிதீரன்
மேரு வில்லன் விடையேறி
..வேதம் போற்றும் குருநாதன்
காரிக் கருள்செய் கண்ணுதலான்
..கடவூர் மேவும் கண்மணியே. 1

காரி நாயனார் அவதார ஸ்தலம் திருக்கடவூர்.

நிலவு லாவும் நீள்சடையன்
..நிருத்தம் ஆடும் நிட்களங்கன்
கொலைசேர் மழுவன் துடியேந்தி
..குற்றம் களையும் பேரரசன்
அலகிற் சோதி அம்பலவன்
..அரிய பணிசெய் குங்கிலியக்
கலயர்க் கருள்செய் கறைக்கண்டன்
..கடவூர் மேவும் கண்மணியே. 2

துடி - உடுக்கை
குங்கிலியக் கலய நாயனார் வாழ்ந்து, பணிசெய்த இடம் திருக்கடவூர்.

தார்கொண்(டு) இயமன் கட்டிடவே
..தளரா மனத்தோ(டு) அலர்தூவி
நீர்கொண்(டு) இலிங்க மேனிதனை
..நேர்த்தி யுடனே வழிபட்ட
மார்க்கண் டனுக்கன் றருள்செய்த
..மகவான் அமிர்த கடேசுவரன்
கார்க்கண் டன்கூற் றுதையீசன்
..கடவூர் மேவும் கண்மணியே 3

தார் - கயிறு

நறையார் மலர்கொண்(டு) எப்போதும்
..நமச்சி வாய என்பார்தம்
குறைகள் தீர்க்கும் அமுதீசன்
..கோல வடிவன் பேரொளியன்
நிறைவை அருளும் பேராளன்
..நினைவில் நிறையும் சீராளன்
கறைசேர் கண்டன் காமாரி
..கடவூர் மேவும் கண்மணியே 4

நறை - தேன்

அலையார் கங்கை அணிசடையன்
..அபிரா மியம்மை மணவாளன்
ஒலியின் மூலன் மெய்ப்பொருளன்
..உயிரின் உயிராயத் திகழ்சீலன்
கலியைத் தீர்க்கும் கொடையாளன்
..கரியின் உரிவை போர்த்தியவன்
கலையார் கையன் கட்டங்கன்
..கடவூர் மேவும் கண்மணியே. 5

கலி - கலி தோஷம் / துன்பம்
கரி - யானை
உரிவை - தோல்
கலை - மான்
கட்டங்கன் - கட்டு + அங்கன் = வலிமை மிக்கவன்.
கட்டங்கம் - மழு / கோடரி. மழுவை (கட்டங்கத்தை) ஏந்தியவன் கட்டங்கன் எனவும் கொள்ளலாம்.

பெண்ணோர் பாகன் செய்யொளியன்
..பெற்றம் ஏறும் பெய்கழலன்
வெண்ணீ(று) அணியும் வெங்காடன்
..வேண்டும் வரங்கள் தரும்வள்ளல்
எண்ணார்க்(கு) எட்டா எழிலாளன்
..ஏற்றம் அளிக்கும் திருக்கரத்தான்
கண்ணார் நுதலன் கயிலாயன்
..கடவூர் மேவும் கண்மணியே. 6

"நாதா! நீயே துணை"யென்று
..நவில்வோர்க் கென்றும் அருள்செல்வன்
வேதா முதல்விண் ணவர்போற்றும்
..விமலன் விரிகொன் றைச்சடையன்
மாதோர் கூறன் இளமானும்
..மழுவும் ஏந்தும் ஒளிக்கரத்தான்
காதார் குழையன் விடைப்பாகன்
..கடவூர் மேவும் கண்மணியே. 7

அந்தம் ஆதி இல்லாதான்
..அண்டம் ஆளும் மாமன்னன்
மந்த காசத் தாலெயில்கள்
..மடியச் செய்த மாவலியன்
விந்தை பலசெய் மாமாயன்
..வெந்த நீற்றை அணிவாகன்
கந்தம் கமழும் கொன்றையினன்
..கடவூர் மேவும் கண்மணியே. 8

பெற்றம் உகந்தே றும்தலைவன்
..பேரோர் ஆயி ரங்கொண்டான்
முற்றல் ஆமை யோடேனம்*
..முளைகொம் பரவம் அணிமார்பன் **
வற்றல் ஓட்டி னையேந்தி
..வாசல் தோறும் பலிதேர்வான்
கற்றோர் பரவும் இயமானன்
..கடவூர் மேவும் கண்மணியே. 9

*முற்றல் ஆமை ஓடு, ஏனம்
**முளைக்கொம்பு, அரவம் அணிமார்பன்

முளை - பன்றி.

முளைவெண் மதியம் திகழ்சடையன்
..மூப்பும் பிறப்பும் முடிவுமிலன்
வளைமங் கையவள் மணவாளன்
..மழமால் விடையே றியமறவன்
தளைகள் நீக்கும் தார்மார்பன்
..தவம்செய் முனிவர்க் கருள்பரமன்
களையார் முகத்தன் எண்குணத்தான்
..கடவூர் மேவும் கண்மணியே. 10

மழமால் - என்றும் இளமையாக இருக்கும் திருமால் (மூவா முகுந்தன் (பூத்தவளே புவனம் பதினான்கும் என்ற பாடலில், என்றும் மூவா முகுந்தர்க்கு இளையவளே) என்று அபிராமி பட்டர் பாடியுள்ளார்). சிவனுக்கு, திருமாலே ரிஷபமாக சில சமயத்தில் ஆவார்).

தளை - பந்தம்.
தார் - மலர் மாலை.

களை - அழகு.

பதிகம் நிறைவுற்றது.

பணிவுடன்,
சரண்யா

Friday, 7 December 2018

48. சிவன் கும்மிப் பாடல் - பொது (பதிகம் 20)

வணக்கம்.

சில நாள்களுக்குப் பின் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி.

சிவபெருமான் மீது கும்மிப் பாடல் வடிவில் (பாரதியாரின் கும்மியடி தமிழ்நாடு முழுவதும்.. பாடலை ஒட்டிய சந்தம்) ஒரு பதிகம் செய்துள்ளேன்.

இதில் இரண்டாவது பாடலிலருந்து, ஒவ்வொரு பாடலிலும் சிவபெருமானின் அட்ட வீரச்செயல்கள் வருமாறு அமைத்துள்ளேன்.

தலம் - பொது

1.

வெள்ளிப் பனிமலை மேவும் பரமரை
..மெச்சி அனுதினம் போற்றிடுவோம்
உள்ளம் உருகிட உன்னத நாமங்கள்
..ஒன்றும் விடாமல் செபித்திடுவோம்


2.

மேரு மலையினை வில்லென ஏந்திய
..வீர மிகவுடை வித்தகனார்
கோரச் செயல்கள்செய் தானவர் கள்மூன்று
..கோட்டைகள் வெந்திடச் செய்யரனார்

தானவர்கள் - அசுரர்கள்
மூன்று கோட்டைகள் - திரிபுரம்

செய்யரனார் - செய் அரனார். அரன் - சிவன்.

3.

கன்னல்விற் காமனைக் கண்ணால் எரித்தவர்
..கந்தனைத் தந்தவர் புண்ணியனார்
தன்னிகர் அற்றவர் சத்தியம் ஆனவர்
..தத்துவம் நால்வர்க் குரைசிவனார்

நால்வர்க் குரைசிவனார் - நால்வர்க்கு உரை சிவனார்

4.

காலனைக் காலினால் எற்றிக் கடிந்தவர்
..கானகத் தேயாடும் நித்தனவர்
ஆலகா லத்தினை அஞ்சாமல் உண்டவர்
..ஆழியை மாலுக் கருள்நிமலர்

நித்தன் - சிவனின் ஒரு பெயர். பக்தர்களுக்கு நிதி அவர். அதனால் நித்தன். மேலும் என்றும் சாஸ்வதமானவர். நித்தியமானவர். அதனாலும் நித்தன் என்பார். நிர்த்தம் என்றால் நடனம் என்று பொருள். நிர்த்தன் - நித்தன் என்றும் வழங்கலாம். நடனம் ஆடுபவர்.

5.

அந்தகன் கர்வம் அழித்தவர் ஆதியும்
..அந்தமும் இல்லாத சோதியவர்
சந்திரன் வானதி சூடும் சடாதரர்
..தந்தி முகவனின் தந்தையவர்

6.

ஆனையின் தோலினை ஆடையாய்ப் பூண்டவர்
..அம்பலத் தாடிடும் கூத்தரவர்
மானையும் தீயையும் ஏந்தும் கரத்தவர்
..மங்களம் நல்கிடும் நம்பரவர்

7.

தக்கனின் வேள்வியைச் செற்றவர் நித்தியர்
..சங்கக் குழையணி காதுடையர்
முக்கண்ணர் முன்னவர் மூவாத என்னப்பர்
..மூவிலைச் சூலம் உடைப்பரமர்

8.

வேதங்கள் நான்கும் விரித்தோதும் வல்லவர்
..வெந்துயர் தீர்க்கும் விகிர்தரவர்
சூதம் அறுப்பவர் சுத்த வடிவினர்
..சோதியாய் எங்கும் நிறையிறைவர்

சூதம் - பிறப்பு / துன்பம் / வஞ்சனை

9.

வேதன் சிரமொன்றை வெட்டி எறிந்தவர்
..வேடனுக் கின்னருள் நல்கியவர்
மாதவம் செய்திட்ட பார்த்தனுக் கத்திரம்
..வாஞ்சை யுடன்தந்த வள்ளலவர்

வேடன் - கண்ணப்ப நாயனார்

10.

ஏறதன் மேலேறி எங்கும் திரிபவர்
..ஏற்றம் அளித்திடும் ஈசரவர்
பாறுசேர் ஓட்டினைக் கையினில் கொண்டவர்
..பாவங்கள் போக்கிடும் தேசரவர்

பாறு - புலால் (மாமிச) வாசம். பிரமனின் ஒரு தலையைக் கிள்ளி எடுத்து, அதில் பிக்ஷை ஏற்பவர்.

11.

மாலயன் கண்டில்லா மாசற்ற சோதியை
..மங்கை சிவகாமி நாதரையே
காலையும் மாலையும் கைதொழு தேத்திட
..காணாமற் போய்விடும் நம்வினையே

பதிகம் நிறைவுற்றது.

பணிவுடன்,
சரண்யா

Monday, 13 August 2018

47. திருக்கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம் ஏகாம்ரேஸ்வரர் கோயில்) - பதிகம் (19)

திருக்கச்சியேகம்பம்

அந்தாதி வெண்பா (பத்துப் பாடல்கள்)

ஒரு பாடலின் இறுதி அடியின் கடைசிச் சொல் / அசை, அடுத்த பாடலின் முதல் சொல்/அசையாக வரும்.

1.

நம்பா எனநாளும் நம்பித் துதிப்பவர்க்(கு)
அம்புயக் கையால் அபயம் அளித்திடுவார்
உம்பர் தருவான ஒப்பில்லாக் கச்சியே
கம்பம் உறையும் கனி

இன்றைய பாடல், கனியில் முடிந்துள்ளது. நாளைய பாடல் கனி என்ற சொல்லில் தொடங்கும்.

பத்தாம் பாட்டின் கடைசி வார்த்தை, நம்பா என்பதின் ஒரு அசையாக வரும்.

2.

கனியென்(று) இனித்திடும் கச்சியே கம்பன்
பனிமலை மேவும் பரமன் அவன்தாள்
நினைவார் தமக்கு நிறைவை அருள்வான்
வினைகள் களைவான் விரைந்து

3.

விரைந்தவன் தாளை விரும்பித் தொழுவேன்
பரையொரு பாலுடையன் பாம்பணியும் நாதன்
வரையினையோர் வில்லாய் வளைவீரன் கம்பன்
மரையுடையான் ஈவான் வரம்

பரை - பார்வதி
வரை - மலை (மேரு மலை)
கம்பன் - கம்பா நதி தீரத்தில் அமர்ந்த சிவபெருமான் ஏகம்பன்.
மரை - மான்.

4.

வரமிக நல்கிடும் வள்ளலே! வேந்தே!
அரனே!ஏ கம்பா! அவுணர்தம் மூன்று
புரமதைச் சாய்த்தவனே! புன்மையைத் தீர்க்கும்
பரனே! எளியேனைப் பார்

5.

பாரும் கனலும் படர்விசும்பும் காற்றொடு
நீருமாய் ஆன நிமலனைக் கம்பனைப்
பேரெழி லாரும் பெருமானைப் பாடிநாம்
சீருடன் வாழ்வோம் சிறந்து

6.

சிறந்த அடியார்தம் சிந்தனையில் தங்கும்
நிறைந்த குணமுடைய நேயன் - பிறந்த
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் கம்பன் அவனை
மறவா(து) இருத்தலே மாண்பு

7.

மாண்பருளும் நல்ல மதியருளும் இன்சுவைப்
பாண்கொண்டு பாடும் பணியருளும் அன்பர்கள்
வேண்டும் வரமருளி மெய்யான வீடருளும்
மாண்புடைக்கம் பன்தாள் மலர்

பாண் - பாடல்
மாண்புடைக்கம் பன்தாள் மலர் - மாண்புடைக் கம்பன் தாள் மலர்

மாண்பு - பெருமை

8.

மலர்மாலை சூடி; மதிசூடி; வெள்ளைத்
தலைமாலை சூடி; சதிராடி; வெள்ளி
மலைவாசி; கச்சியின் மன்னன்; அவனே
நிலையை அருளும் நிசம்

வெள்ளைத் தலைமாலை - கபாலங்கள் (மண்டை ஓட்டினால் ஆன) மாலை
சதிராடி - சதிர் ஆடி - சதிர் - நடனம்; நடனம் ஆடுபவன்
வெள்ளி மலை வாசி - கயிலாயத்தில் வசிப்பவன்
கச்சி - காஞ்சிபுரம்
நிலை - முக்தி

9.

நிசமாவான் ஈசன் நிலவணியும் தேசன்
பசுவேறும் பாகன் பரசேந்தும் வீரன்
திசைதோறும் ஆரும் திரிசூலன் தூயன்
எசமானன் கம்பனுக்கீ டேது

பரசு - மழு
எசமானன் - தலைவன்

10.

ஏதமில் ஏகம்பத் தெம்மானை எந்தையைப்
போதம் அருள்வானைப் பொன்போல் மிளிர்வானைச்
சீதனையும் வாரியையும் செஞ்சடைமேல் சூடிடும்
நாதனையே எப்போதும் நம்பு

ஏதமில் - ஏதம் இல் - ஏதம் - குற்றம்
ஏகம்பத் தெம்மானை - ஏகம்பத்து எம்மானை - எம்மான் - பெரியோன்
சீதன் - நிலா
வாரி - கங்கை

குறிப்பு:
நம்பு என்று இப்பாடல் முடிந்தது. முதல் பாடல் நம்பா எனத் தொடங்கியது.

பதிகம் நிறைவுற்றது.

பணிவுடன்,
சரண்யா

Monday, 30 July 2018

46. திருவெறும்பூர் - (பதிகம் 18)

“மாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய் புளிமாங்காய்” - என்ற வாய்பாடு. ஒரோவழி வேறு காய்ச்சீர் வரக்கூடும்.

நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா

மடமாதோர் புரங்கொண்டான் மதியத்தைச் சிரங்கொண்டான்'
நடமாடிப் பலிதேர்வான் நகைத்தேமுப் புரஞ்செற்றான்
இடர்யாவும் களைஈசன் எழிலாரும் எறும்பூரில்
அடலேற்றின் மிசைஊர்வான் அருளாரும் பெருமானே 1

மடமாது ஓர் புரம் கொண்டான் - மட - அழகு. அழகிய பெண்ணை ஒரு பக்கம் கொண்டான்
மதியம் - சந்திரன்
அடல் ஏற்றின் - அடல் ஏறு - அடல் - வலிமை மிக்க

கருதுந்தன் னடியார்கள் கடுந்தொல்லை தனைத்தீர்ப்பான்
ஒருதும்பை மலர்தூவி உளமாரத் துதிசெய்வோர்
இருள்நீக்கி ஒளிசேர்ப்பான் எழிலாரும் எறும்பூரில்
அருளீயும் பரமேசன் அமுதூறும் கரத்தானே 2

ஒரு தும்பை - உயர்வான தும்பை மலர்

ஆலத்தை மிடறேற்றான் அறம்நால்வர்க்(கு) உரைசீலன்
சூலத்தைக் கரமேற்றான் துயர்போக்கும் மணிகூடன்
ஏலப்பூங் குழலாள்கோன் எழிலாரும் எறும்பூரில்
கோலக்கூத் தினையாடும் குறையில்லாப் பெரியோனே 3

மணிகூடம் - திருவெறும்பூர் தலத்தின் மற்றொரு பெயர்
ஏலப்பூங் குழலாள் - திருவெறும்பூர் தலத்தின் அம்பிகை

அமுதூறும் அருந்தாளன் அகிலம்போற் றிடுந்தேசன்
நமனைத்தன் இடக்காலால் நன்றாய்எற் றியதீரன்
இமையோர்கட் கிரங்கீசன் எழிலாரும் எறும்பூரில்
இமவானார் மகளோடே இனிதாக அமர்வோனே 4

பேரோரா யிரங்கொண்டான் பெருநீர்நஞ் சினையுண்டான்
தேரேறிச் சமர்செய்து திரியும்முப் புரஞ்செற்றான்
ஈராறு கரன்தாதை எழிலாரும் எறும்பூரில்
வேரூன்றி அமர்பெம்மன் வினைதீர்க்கும் இறையோனே 5

தலையோட்டில் பலிதேர்வன் தவசீலன் முக்கண்ணன்
அலைவீசும் கடல்தந்த ஆலாலம் விழைந்துண்டான்
இலையாரும் நுனைவேலன் எழிலாரும் எறும்பூரில்
கலையேந்தி நடமாடும் கரைசேர்க்கும் பெருமானே 6

ஒருநான்கு மறைபோற்றும் உயர்ஞான குருநாதன்
திருமார்பில் மணிமாலை சிரமாலை அணிவாமன்
இருநான்கு வரைத்தோளன் எழிலாரும் எறும்பூரில்
திருவாரி வழங்கீசன் செகம்காக்கும் பெருமானே 7

வரை - மலை
இருநான்கு - எட்டு
எட்டுப் பெரிய மலை போன்ற தோள்கள் - அட்ட புஜம் - கைகள் எட்டுடைக் கம்பன் எம்மானை என்ற சுந்தர மூர்த்தி நாயனார் தேவாரம்.

துடியேந்தும் ஒளிக்கரத்தான் துளிர்வில்வம் விழைதூயன்
முடிவில்லான் நிகரில்லான் முதலில்லான் மழுவாளன்
இடுகாட்டில் நடமாடி எழிலாரும் எறும்பூரில்
திடமாக அமர்செய்யன் சிவையோர்பால் உடையானே 8

சிவை - பார்வதி
துடி - உடுக்கை

உரகம்மேல் துயில்வானும் மரையின்மேல் உறைவானும்
சரணங்கள் முடிதேடிச் சலிப்புற்றார் அவர்முன்னோர்
எரியாக எழுபெம்மான் எழிலாரும் எறும்பூரில்
பரிவாய்வீற் றிருகோமான் பணிமாலை அணிவானே 9

உரகம் - பாம்பு
மரை - தாமரை மலர்
எரி - நெருப்பு
பணி - பாம்பு

கணையொன்றால் புரம்மூன்றைக் கனல்மூட்டி எரிவீரன்
சுணைவேலன் உமைபாகன் சுருதிக்குப் புணையாவான்
இணையில்லான் பரமேட்டி எழிலாரும் எறும்பூரில்
துணையாய்வந் தருள்நம்பன் துயர்போக்கும் பெருமானே 10

சுணை - கூர்மை
புணை - ஆதாரம்

பதிகம் நிறைவுற்றது.

பணிவுடன்,
சரண்யா

Thursday, 5 July 2018

45. திருக்கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம் ஏகாம்ரேஸ்வரர் கோயில்) - (பதிகம் 17)

கட்டளைக் கலித்துறை

பண்ணிசை போற்றும் பரனே! விடமார் பணியணிவோய்!
எண்ணுதற் கெட்டா எழிலே! ஒளியே! இறையவனே!
பெண்ணொரு பாகா! பிறைமதி சூடும் பெரியவனே!
கண்ணொரு மூன்றுடைக் கச்சிக் கரும்பே! கனிந்தருளே! 1

உள்ளம் உருகி உமையாள் வணங்க ஒலியுடனே
வெள்ளம் பெருக்கி வெருண்டிட வைத்த மிளிர்சடையா!
துள்ளி எழுந்தவள் தூயவன் உன்றனைத் தொட்டணைக்கக்
கள்ளச் சிரிப்பால் கவர்ந்திட்ட கம்பா! கனிந்தருளே! 2

மண்ணால் இலிங்கம் செய்து, கம்பை ஆற்றின் கரையில் அன்னை, சிவபெருமானை வணங்கினாள். அவள் பக்தியை சோதிக்க, ஐயன், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடச் செய்தார். மிகுந்த ஒலியுடன் வந்த வெள்ளம், இலிங்கத் திருமேனியை ஏதாவது செய்துவிடுமோ என அஞ்சி, இலிங்கத்தை இறுக அணைத்துக்கொண்டாள். பின் கள்ளச் சிரிப்போடு ஐயன், அன்னை முன் வந்து நின்றார்.

மாமரம் கீழே மகிழ்வோ டமர்ந்திடும் மன்னவனே!
சேமம ருள்பவ! தீந்தமிழ்ப் பாட்டில் திளைப்பவனே!
பூமியென் றாகிப் பொலிவோ டிலகிடும் புண்ணியனே!
காமனைக் காய்ந்தவ! கச்சிக் கரும்பே! கனிந்தருளே! 3

காஞ்சி ஸ்தல விருக்ஷம் - மாமரம்
காஞ்சிபுரம் - பிரிதிவி ஸ்தலம்
இலகுதல் - விளங்குதல்

இலைமலி சூலத்தை ஏந்திடும் நாதா! எழிலிமய
மலையர சன்தரு மாதவள் நேயா! வடவரையைச்
சிலையென ஏந்தித் திரிபுரம் சாய்த்த திடமுடையாய்!
கலையணி கையுடைக் கச்சிக் கரும்பே! கனிந்தருளே! 4

எழிலிமய - எழில் இமய / எழிலி மய
எழிலி - மேகம். மேகம் சூழ்ந்த மலை.

இருநாழி நெற்கொண் டிமவான் மடந்தை இருநிலத்தே
திருவாரும் கையால் சிறப்போ டறமிடச் செய்தவனே!
தருநீழல் கீழே சனகா தியர்க்குயர் தத்துவம்சொல்
கருநீல கண்டனே! கச்சிக் கரும்பே! கனிந்தருளே! 5

உலகில் உயிரினங்களுக்கு உணவளித்தல் முதலான 32 அறங்களை புரிய, சிவபெருமான் 2 நாழி நெல் கொடுத்தார். அன்னை, காசியில் அன்னபூரணியாக அந்த நெல்லைக் கொண்டு
அறங்கள் செய்து, இந்தக் காஞ்சியில் அமர்ந்து தவம் செய்தாள் என்பது புராணம்.

நறையார் மலர்கொடு நல்லோர் துதிக்க நலமருள்வோய்!
மறையார் பொருளே! மதிசேர் சடையா! மலர்ச்சுடரே!
அறையார் கழலணி அஞ்செழுத் தோனே! அதிபதியே!
கறையார் மிடறுடைக் கச்சிக் கரும்பே! கனிந்தருளே! 6

அறை - ஓசை

மாலயன் காணா வளர்சோதீ! மாசில்லா மாமணியே!
வேலை விடத்தை விரும்பிய கண்ட! விடையவனே!
சீலம ருள்பவ! சீதனைச் சூடிய சிற்பரனே!
காலனைச் செற்ற கழலுடைக் கம்பா! கனிந்தருளே! 7

பொன்னம் பலத்தே பொலிவுடன் ஆடிடும் புண்ணியனே!
வன்னியு டுக்கை மழுமறி ஏந்திடும் மாமையனே!
வன்புலித் தோலணி வல்லவ! காருண்ய வாரிதியே!
கன்னியொர் பாகமு கந்தவ! கம்பா! கனிந்தருளே! 8

விரிசடை மேலே மிளிரும் நிலவை விழைந்தணிவோய்!
எரிவண னே!வெள் ளெருது மிசையமர் இன்முகனே!
பரசுகம் தந்திடும் பண்ணவ னே!ஒண் பரசுடையாய்!
கரியுரி போர்த்தவ! கச்சிக் கரும்பே! கனிந்தருளே! 9

பண்ணவன் - கடவுள்

அந்தகன் கர்வம் அழித்த அரனே! அருமருந்தே!
வந்தனை செய்வோர் வளமுடன் வாழ வரமருள்வோய்!
சுந்தரர் வேண்டிடத் துல்லியக் கண்ணளி தூயவனே!
கந்தர னே!திருக் கச்சிக் கரும்பே! கனிந்தருளே! 10

சுந்தரருக்குக் கண்பார்வை கொடுத்த தலம் கச்சி ஏகம்பம்.
கந்தரன் - கபாலத்தை ஏந்தியவன்

பதிகம் நிறைவுற்றது.

பி.கு. -

அபிராமி அந்தாதி பாடல்கள், கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ளன.

இலக்கணக் குறிப்பு:

(இலக்கணம் தெரிந்து தான் படிக்க வேண்டும் என்று இல்லை. தெரிந்துகொள்ள விழைவோர், இலக்கணத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். இல்லாவிட்டால், இறை அனுபவத்தை மட்டும் பருகலாம்.)

கட்டளைக் கலித்துறை என்பது நான்கு அடிகள், அடிதோறும் ஐந்து சீர்கள் கொண்ட யாப்பு வகை.

சீர் தோரும் வெண்டளை பயில வேண்டும். அடிதோறும் வெண்டளை பயில வேண்டிய அவசியம் இல்லை.

அடி எதுகை அமைய வேண்டும்.

அடிகளுள், 1, 5 சீர்கள் மோனை நிச்சியம் அமைய வேண்டும். 1,3,5 சீர்கள் மோனை பெற்றிருப்பின் மிகவும் உத்தமம்.

ஒவ்வொரு அடியிலும், நேரசையில் துவங்கினால், 16 எழுத்துக்களும் (மெய் எழுத்துக்கள் நீங்கலாக), நிரையசையில் துவங்கினால், 17 எழுத்துக்களும் (மெய் எழுத்துக்கள் நீங்கலாக) அமைய வேண்டும்.

அடியின் நடுவில் விளங்காய் சீர்கள் வரக்கூடாது. அடியின் ஈற்றுச் சீர், விளங்காய் சீர் அல்லது மாங்கனி சீராக வரவேண்டும். அப்போது தான் எழுத்து எண்ணிக்கை சரியாக இருக்கும்.

பணிவுடன்,
சரண்யா

Tuesday, 26 June 2018

44. திருவான்மியூர் (பதிகம் 16)

அறுசீர் விருத்தம்

விளம் விளம் மா (அரையடி)

புற்றினுள் தோன்றிய முனிவன்
..போற்றிட அருளிய சிவனே!
நற்றவம் புரிபவர்க்(கு) உவந்து
..நலமிக ஈன்றிடும் தருவே!
பற்றிட நின்னடி அன்றிப்
..பரமனே! ஒருபிடிப்(பு) அறியேன்.
மற்றொரு பிறப்பினி வேண்டேன்
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 1

புற்றினுள் தோன்றிய முனிவன் - வால்மீகி.

சென்னியில் முளைமதி வைத்தோய்
..சீறராத் திகழ்மணி கண்டா
கன்னியை இடப்புறம் கொண்டோய்
..கனலுகந்(து) ஆடிடும் செல்வா
இன்னொரு பிறவியைத் தந்(து)இவ்
..எளியனை வாட்டிட வேண்டா
வன்னியின் கீழமர் வேந்தே
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 2

வன்னி மரம் - திருவான்மியூர் ஸ்தல விருக்ஷம்.

தீட்சிதர் வேண்டிட மேற்குத்
..திசையினைப் பார்த்தமர்ந் தோனே
சாட்சியாய் இருந்திடும் அசலா
..சங்கடம் தீர்த்திடும் சதுரா
காட்சியைத் தந்தினி இந்தக்
..கடையனை ஆட்கொளு வாயே
மாட்சிமைப் பொருந்திய மணியே
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 3

தீட்சிதர் - ஶ்ரீ அப்பய்ய தீட்சிதர். வேளச்சேரியில் இருந்த இந்த மகான், அனுதினமும் திருவான்மியூர் வந்து மருந்தீசனை வழிபடுவது வழக்கம். ஒரு நாள் மழை பலமாகப் பொழிந்தது. வான்மியூர் வெள்ளத்தில் மிதந்தது. வேளச்சேரியில் இருந்து வந்த தீட்சிதர், கிழக்கு வாசலை அடையமுடியாமல் தவிர்த்தார்கள். கிழக்கு முகமாக இருக்கும் மருந்தீசனை தரிசிக்க முடியவில்லையே என வருந்தினார். அவரது மன வருத்தத்தை அறிந்த ஈசன், அன்றிலிருந்து மேற்கு முகமாக மாறி அமர்ந்தார். இறைவனை வணங்கி மகிழ்ந்தார்.

அகத்தியர் வணங்கிட அவருக்(கு)
..அரும்பெரும் தத்துவம் உரைத்தோய்
தகத்தகத் திமிதிமி என்று
..தாண்டவம் ஆடிடும் அரசே
சகத்தனில் மீண்டுமித் தமியேன்
..சன்மமெ டுத்திடா(து) அருள்வாய்
மகத்துவம் வாய்ந்தநற் கோவே
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 4

அகத்திய முனிக்கு, இறைவன், மூலிகை மருந்து பற்றிய ஞானத்தை அருளிய தலம் திருவான்மியூர்

திரிபுர சுந்தரி பாகா
..தேனுவிற்(கு) அருளிய தேசா
திரிபுரந் தனையெரி தீரா
..தேனினும் இனியஆ ரமுதா
பரிபுரம் அணிபதம் தன்னைப்
..பாவியென் முடிமிசை இடுவாய்
மருவலர் அசுரரை மாய்த்தோய்
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 5

திரிபுர சுந்தரி - தலத்து இறைவி.

தேனு - காமதேனு. தேவலேகப் பசுவான காமதேனுவால், ஒருமுறை சரியாக பால் தர இயலவில்லை. வசிஷ்டர், பூலோகத்தில் ஒரு காட்டுப் பசுவாய்ப் பிறப்பாய் என்று சாபமிட்டார்.

திருவான்மியூரில் அலைந்து கொண்டிருக்கும் போது, வால்மீகி முனிவர் துறத்திய போது, அவரைக் கண்டு அஞ்சி ஓடியது. அதன் கால் இடறிய இடத்தில் ஒரு சிவலிங்கம் இருந்தது. அதிலிருந்து அந்தப் பசுவிற்கு, பால் சுரக்கத் தொடங்கியது. இறைவனுக்கு இத்தலத்தில் பால்வண்ண நாதர் என்றும் ஒரு பெயர்.

சதியினை இடப்புடை வைத்துச்
..சதிருகந் தாடிடும் தலைவா!
விதியின தொருசிரங் கொய்தோய்!
..வெள்விடை ஏறிடும் தேவா!
கதியென உன்கழல் பிடித்தேன்
..கவலைகள் தீர்த்திடு வாயே
மதுநிறை மலரணி மன்னா!
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 6

புடை - பக்கம்
சதிர் - நடனம்
விதி - பிரம்மா

அரியயன் தேடியும் காணா
..அருட்பெருஞ் சோதியே அரனே
சுரிகுழல் மடந்தையின் பதியே
..தொல்வினை யாவையும் களைந்து
கரிசுடை யேனெனைக் காப்பாய்
..கடமுனிக் கருளிய கரும்பே
வரமிக அருளிடும் இறைவா
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 7

கரிசு - அழுக்கு
கடமுனி - அகத்தியர் (கடம் - குடம்)

ஆதியும் அந்தமும் இல்லா
..அருளுடை நீண்டொளிப் பிழம்பே
பாதிவெண் மதியணி சடையா
..பார்த்தனுக் கருளிய வேடா
கோதிலி குணமிலி எந்தாய்
..கொடியனென் பிழைபொறுப் பாயே
மாதொரு பாலுடை மகிபா
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 8

அறைநிறை கழலணி அழகா
..அழலுடை அரவணி வீரா
கறைநிறை மிடறுடைக் கனியே
..கலைமழு கனலணி கரத்தோய்
பிறைமதி உவந்தணி சடையா
..பிணிதனைக் களைந்திடு வாயே
மறைபுகழ் நிருமல ஈசா
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 9

அறைநிறை கழல் - ஓசை நிறைந்த சிலம்பு
அழலுடை அரவு - நஞ்சு நிறைந்த பாம்பு
கலை - மான்

அலைமலி கங்கையைத் தாங்கும்
..அவிர்சடை யுடைப்பெரு மானே!
தலையினில் மகிழ்வுடன் பலிதேர்
..தலைவ!நின் திருவடி ஒன்றே
நிலையெனக் கருதிடும் அடியார்
..நிறைவினை அடைந்திட அருள்வாய்!
மலைமகள் மருவிடும் தேகா
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 10

நிலை - கதி
நிறைவு - முக்தி

பதிகம் நிறைவுற்றது.

பணிவுடன்,
சரண்யா

Thursday, 14 June 2018

43. திருமால் பதிகம் (பிரபந்தம் 3)

தலம் - பொது

வஞ்சித்துறை

வாய்பாடு - விளம் விளம்

மார்கழிச் செல்வனைக்
கார்முகில் வண்ணனை
ஓர்பவர் வாழ்வினில்
சேர்வது நன்மையே. 1

ஓர்பவர் - வணங்குபவர் (follower)
மாதங்களில் மார்கழியாய் இருப்பதாய்க் கண்ணன் கீதையில் சொல்லியுள்ளார்

பையரா வில்துயில்
ஐயனை ஏத்துவீர்
வையகம் தன்னிலே
உய்யவோர் வழியதே 2

பை அரா - விடம் நிறைந்த பாம்பு
ஏத்துதல் - தொழுதல்

கன்றினம் மேய்ப்பனைக்
குன்றெடுத் தாள்வனை
மன்றுவோர் வாழ்வினில்
என்றுமே இன்பமே 3

குன்றெடுத்து ஆள்வன் - குன்றெடுத்துக் காத்தவன்
ஆளுகை / ஆளுதல் - காத்தல்
மன்றுதல் - வணங்குதல்

மாயனை அடியவர்
நேயனை அழகொளிர்
ஆயனை என்றுமே
வாயினால் பாடுமே 4

ஆலிலை தன்னிலே
கோலமாய்த் துயில்பவன்
காலினைப் பற்றுவோம்
சீலமாய் வாழவே 5

வம்பலர் தூவியே
நம்பியை நித்தமும்
கும்பிடு வார்க்கொரு
வெம்புதல் இல்லையே 6

வம்பு - தேன்
அலர் - மலர்
வம்பலர் - தேன் நிறைந்த மலர்
வெம்புதல் - துயர் அடைதல்

சங்கொடு சக்கரம்
அங்கையில் ஏந்திடும்
பங்கயக் கண்ணனே
மங்களம் அருள்வனே 7

மல்லரை மாய்த்தவன்
வில்லினை ஒசித்தவன்
வல்லமை போற்றிட
தொல்லைகள் இல்லையே 8

ஒசித்தல் - ஒடித்தல் (உடைத்தல்)

மருப்பொசித்த மாதவன் தன்... ஆண்டாள் - நாச்சியார் திருமொழிப் பாடல்

அத்தியைக் காத்தவன்
சத்தியன் அவன்மிசைப்
புத்தியை வைப்பவர்
முத்தியைப் பெறுவரே 9

பூமகள் கேள்வனின்
கோமள மானதோர்
நாமமே நவிலவே
சேமமே சேருமே 10

பதிகம் நிறைவுற்றது.

பணிவுடன்,
சரண்யா

Tuesday, 5 June 2018

42. திருச்சிராப்பள்ளி முத்துக்குமார ஸ்வாமி பதிகம்

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ஸ்ரீ முத்துக்குமார சுவாமியை எண்ணி எழுதிய வெண்பாக்கள்.

விநாயகர் துதி:

தீரா வினையாவுந் தீர்க்கும் கயமுக
வீரா! சிராப்பள்ளி மேவும் குமரனின்
சீலம் புகழச் சிறியேனுக்(கு) உன்னிரு
காலால் அருளுக காப்பு

தண்டத்தை ஏந்திய தாண்டவன் றன்மகனே
அண்டத்தை ஆள்வோனே ஆரமுதே எண்டிசையோர்
கொண்டாடும் முத்துக் குமரா எனக்குன்றன்
தண்டா மரைப்பாதம் தா. 1

அழகன் குமரனை அன்றாடம் போற்றப்
பழவினை யாவும் பறைவது திண்ணம்
தொழுதிடும் அன்பர் துயரைக் களையும்
பழனிவளர் பாலனைப் பாடு. 2

கரமதில் வேலுடைக் கந்தனே! நின்னைக்
கருதிடும் அன்பர் கடுந்துயர் தீர்ப்பாய்;
வருவினை யாதையும் மாய்ப்பாய்; குமரா!
வரமிக ஈவாய் மகிழ்ந்து. 3

அவனது தாளை அடையும் அடியார்
அவலம் அழிவதில் ஐயம் இலையே
சிவன்றன் குமரனைச் சீராய்த் துதிக்க
கவலைகள் தீர்ந்திடும் காண். 4

அடியின் அழகை அகமுவந்து பாட
வடிவே லுடனே வருவான் அருள்வான்
குடியைப் புரக்கும் குமரன் அருளால்
நொடியில் அழிந்திடுமே நோய். 5

திருமால் மருகனே; தீந்தமிழ் ஏத்தும்
குருவே; குமரனே; கோதிலா வள்ளி
மருவும் அழகனே; வானவர் கோவே;
வருவாய்; வரமருள் வாய். 6

கந்தன் பெயரைக் கருத்தினில் வைத்திடச்
சிந்தைக் கவலை சிதைந்திடுமே - வெந்துயர்
தன்னைக் களையும் சரவணன்; வானவர்
மன்னன்; தருவான் வரம். 7

கயமுகனைப் போரினில் கண்டித் தருள்செய்
கயமா முகனிளவால்! கந்தா!என் முன்னே
நயமுடனே நீவந்தால் நன்மைகள் சேரும்!
பயமதுவாய் ஓடும் பயந்து. 8

கயமாமுகன் - கஜமுகாசுரன்
அடுத்து வரும் கயமாமுகன் - விநாயகன்,
இளவால் - இளவல் - தம்பி. விளிக்கும் (அழைக்கும்) போது - இளவால் என்று வரும்.

சிங்க முகனைச் செருவில் அழித்தவன்றன்
தங்கப் பதமிரண்டைச் சாரும் அடியார்க்கு
மங்காப் புகழும் வளமும் நலன்களும்
நங்கோ னருள்வான் நயந்து. 9

சூரனைப் போரினில் தோல்வி யுறச்செய்த
தீரனை ஈசனின் செல்வக் குமரனை
வீரனைக் கற்குன்று மேவும் கருணையனைப்
பூரணனை எந்நாளும் போற்று. 10

சூரன் - சூரபத்மன்.
கற்குன்று - கற்களால் ஆன மலை. - திருச்சிராப்பள்ளி.

பதிகம் நிறைவுற்றது.

Monday, 21 May 2018

41. அம்பாள் - சத்தி அடியே சரண்

1.

உலகைப் படைத்திடும் உத்தமி வாமி
அலகிலாப் பீடுடை அம்மை - நிலையான
பத்தியைத் தந்திடும் பார்வதி ஆதிபரா
சத்தி யடியே சரண்

ஸ்ரீ மாதா என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் தொடங்குகிறது.

2.

வையத்தைக் காக்கும் வயிரவி சாமுண்டி
பையராப் பூணும் பரமனார் பாகத்தாள்
எத்திக்கும் போற்றும் எழிலுடையாள் ஆதிபரா
சத்தி யடியே சரண்

ஸ்ரீ மஹாராக்ஞீ, ஸ்ரீ மத் சிம்ஹாசனேஸ்வரி என்று தேவியின் காத்தல் பற்றி சஹஸ்ரநாமம் கூறுகிறது. சிவ வாம பாக நிலையாம் என்று மீனாக்ஷி பஞ்சரத்னம் வர்ணிக்கின்றது.

3.

இருநாழி நெற்கொண்(டு) இருநிலத்தே முப்பத்(து)
இருவறம் செய்த இழையாள் - பெருமுலையாள்
முத்திதரும் வித்தகி மும்மலம் தீர்த்திடும்
சத்தி யடியே சரண்

சிவபெருமான் அளந்த இருநாழி நெல் கொண்டு, 32 அறங்களை அம்பாள் செய்தாள் என்று புராணம் கூறுகிறது. தர்மசம்வர்தனி என்ற நாமம் இதனைக் குறிக்கும்.

4.

அடியாரை அன்போ(டு) அரவணைக்கும் அன்னை
மிடிதீர் விமலை மிளிரும் மணிமுடியாள்
சத்தியம் ஆனவள் தாபங்கள் தீர்த்திடும்
சத்தி யடியே சரண்

5.

இமவான் மடந்தை இபமுகன் அன்னை
அமரர்கள் போற்றும் அரசி - அமுதினும்
தித்திக்கும் வாக்குடையாள் செய்யொளியாள் ஆதிபரா
சத்தி யடியே சரண்

"நிஜ சல்லாப மாதுர்ய விநிர் பர்த் சித கச்சபி" என்று லலிதா சஹஸ்ரநாமம் அழைக்கிறது. அதாவது, அம்பாளின் குரல், சரஸ்வதியின் வீணாகானத்தை விட இனியது என்று குறிப்பு. தேனார்மொழிவல்லி, மதுரபாஷிணி என்ற நாமங்கள் இதனைக் குறிக்கும்.

செய்யொளியாள் - சிவந்த வண்ணத்தாள் - சிந்தூராருண விக்ரஹாம் - லலிதா சஹஸ்ரநாம த்யான ஸ்லோகம்

6.

துட்டரை மாய்ப்பவள் தூயவள் அன்பர்தம்
கட்டத்தைத் தீர்ப்பவள் கற்பகம் - அட்டமா
சித்தியைத் தந்திடும் சின்மயி ஆதிபரா
சத்தி யடியே சரண்

7.

சிந்தைக் கவலைகள் தீர்க்குஞ்சிந் தாமணி
வந்திப் பவர்க்கருளும் வாராகி - எந்தாய்நற்
புத்தியை நல்கிடும் பூரணி ஆதிபரா
சத்தி யடியே சரண்

8.

இந்திரையும் வாணியும் ஏற்றமிகு சாமரங்கள்
வந்தித்து வீச மகிழ்பவள் - சிந்திக்கும்
பத்தர்க் கருளும் பராத்பரி ஆதிபரா
சத்தி யடியே சரண்

ஸ சாமர ரமா வாணி ஸவ்ய தக்ஷிண சேவிதா (சஹஸ்ரநாமம்)

9.

கந்தனைத் தந்தவள் கண்ணுதலான் பாகத்தாள்
விந்தைகள் செய்பவள் வேதங்கள் - வந்திக்கும்
வித்தகி பஞ்சினும் மெல்லடியாள் ஆதிபரா
சத்தி யடியே சரண்

10.

எல்லைகள் அற்றவள் இன்பங்கள் சேர்ப்பவள்
தொல்லைகள் தீர்ப்பவள் சோர்விலள் - நல்லோர்தம்
சித்தத்தின் உள்ளே திகழ்பவள் ஆதிபரா
சத்தி யடியே சரண்

Sunday, 13 May 2018

40. வண்ணப் பாடல் - 13 - தேதியூர்

ராகம்: ஹமீர்கல்யாணி
தாளம்: மிஸ்ரசாபு

தான தானன தான தானன
 தான தானன தானனா

பாதி மாதுடை மேனி யா!பரி
 பால கா!பர மேசனே!
பாவி யேன்நல மோடு வாழஉ
 பாய மேயருள் நாதனே!

சோதி யாயெழு தூய வா!திரி
 சூல பாணி!வி காசனே!
தோணி யாய்வரு தோழ னே!நதி
 சூடி யே!கரு ணாகரா!

மேதி ஊர்நமன் ஓட வேஉதை
 வீர னே!நட ராசனே!
வேழம் ஈருரி பூணும் நாயக!
 வேதம் ஆர்குரு நாதனே!

தேதி யூருறை தேவ தேவ!அ
 தீத! தேசுடை ஆதிரா!
சேவில் ஏறிடும் ஈச னே!மதி
 சேர்ச டாதர! தேசனே! 

பாடலைக் கேட்க:


அன்புடன்,
சரண்யா

Friday, 4 May 2018

39. வண்ணப் பாடல் - 12 - திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்)

ராகம்: ஹிந்தோளம்
தாளம்: அங்க தாளம் - 4 + 6 (தகதிமி தக தகதிமி)

தனதன தனன தான தனதன தனன தான
 தனதன தனன தான தனதான

உயரிய மறைக ளோதி ஒளிமிகு மலர்கள் தூவி
 உனதிரு வடியை நாளும் நினைவோரின்
உறுதுயர் இடர்கள் யாவும் உலையிடை மசக மாகி
 உறைவிடம் எதுமி லாது கடையேறும்

இயலிசை நடனம் ஆரும் இனியவ! எழிலு லாவும்
 இளமதி முடியின் மீது புனைவோனே!
இருளினை அரியும் ஞான ஒளிமிகு நினது பார்வை
 எளியவன் எனது மீதும் விழவேணும்

நயமொடு நமசி வாய எனநிதம் நவிலு வோர்கள்
 நலமுடன் இனிது வாழ அருள்வோனே!
நரைஎரு தினிலு லாவி! நகுதலை உடைய வீர!
 நடுநிசி யினிலெ ஆடும் அயிலோனே!

முயலகன் முதுகின் மீது களிநட மிடும கேச!
 முதலிடை முடிவி லாத பெரியோனே!
முயலொடு கயல்க ளாடும் முகில்வரை பரவு சோலை
 முதுகுவ டமரும் ஆதி இறையோனே!

உலை - கொல்லனின் நெருப்பு
மசகம் - கொசு (சிறிய பூச்சி என்னும் படி)
நகுதலை - பிரம்ம கபாலம்
குவடு - குன்று
முது குவடு - முதுகுன்றம்

பாடலைக் கேட்க:
https://drive.google.com/open?id=1OIRHPLogXr2vaPylN0HXPysf7GWP9t8g

Friday, 27 April 2018

38. வண்ணப் பாடல் - 11 - திருவண்ணாமலை

ராகம்: சங்கராபரணம் 
தாளம்: ஆதி

சந்தக் குழிப்பு:

தனதனன தான தனதனன தான
.தனதனன தான தனதான

இமகிரிகு மாரி யொடுநடனம் ஆடும்
.இனியவ!வி சால குணநேயா!

..இளமதியும் ஆறும் எழிலுடனு லாவும்
...இருசடைவி னோத! அழகோனே!

கமலமல ரானும் அரியுமறி யாத
.கடைமுதலி லாத அழலோனே!

..கரியினுரி பூணும் மறவ!விடை யேறி!
...கடையனெனை ஆள வரவேணும்

நமலுமொரு பாலன் நலமொளிற வாழ
.நமனையுதை கால! அயிலோனே!

..நரலையுமிழ் ஆலம் அதைநுகரும் ஈச!
...நமசிவய ஓத அருள்வோனே!

அமரவுல கோரும் அனுதினமும் ஆரும்
.அமலகுரு நாத! பெரியோனே!

..அரவுதலை மாலை அணியுமதி தீர!
...அருணகிரி மேவு பெருமானே!

நமலுதல் - வணங்குதல்
நமலும் ஒரு பாலன் - மார்க்கண்டேயன்
ஒளிறுதல் - விளங்குதல்
நலம் ஒளிற வாழ - நலம் விளங்க வாழ
ஆர்தல் - அனுபவித்தல்



Tuesday, 24 April 2018

37. வண்ணப் பாடல் - 10 - திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்)

ராகம் - அம்ருதவர்ஷினி
தாளம் - சதுஸ்ர ஏகம்


சந்தக் குழிப்பு:
தனனந் தனனந் தனதான

குளிரும் புனலஞ் சடைமேலே
..குலவும் பதி!உன் றனைநாட
எளியன் படும்வெந் துயர்தீரும்
..இனிதென் றுமெயென் றனைநாடும் 
வளமும் புகழுந் தருவோனே
..வளைமங் கையுடன் புணர்வோனே
முளையிந் துவணிந் திடுவோனே 
..முதுகுன்(று) அமரும் பெருமானே

இனிதென் றுமெயென் றனைநாடும் - 
இனிது என்றுமெ என்றனை நாடும்

முளையிந் துவணிந் திடுவோனே -
முளை இந்து அணிந்திடுவோனே

முளை இந்து - வளர் பிறை.

பாடலைக் கேட்க:


Friday, 20 April 2018

36. வண்ணப் பாடல் - 09 - திருவானைக்கா (கரிவனம்)

ராகம்: பிலஹரி
தாளம்: ரூபகம் (சதுஸ்ர ரூபகம்) [1 த்ருதம், 1 லகு (நான்கு அக்ஷரம்) = 2 + 4 = 6 எண்ணிக்கை]

தனத்த தனதன தனதன தனதன தனதான

விரித்த சடையினில் விரிநதி இளமதி முடிவோனே
.விழித்த கணமதில் ரதிபதி தனைஎரி அனலோனே

கருத்த மதகரி யதனுரி வையையணி மறவோனே
.கழுத்தி லலைகட லினிலெழு விடமதை உடையோனே

அருத்தி யுடனரு மலர்களை அணிகுளிர் புனலோனே
.அரிக்கி ளையவளின் அருதவ மதில்அகம் மகிழ்வோனே

சிரித்த முகமொடு கரிவனம் அதிலமர் பெருமானே
..சிறப்பொ டடியவர் உலகினில் உயர்வுற அருள்வாயே 

அருத்தியுடன் அருமலர்களை - ஆசையுடன் அருமையான மலர்களை

பாடலைக் கேட்க:
https://drive.google.com/open?id=1kO9SwQXed5B4cVkoj8RMeaVpczSPXI-L

Wednesday, 18 April 2018

35. திருவாலவாய் [திரு ஆலவாய் / மதுரை] (பதிகம் 15)

வணக்கம்.

அடுத்த பதிகம்

அறுசீர்ச் சந்த விருத்தம்.

தான தானன தானனா (அரையடி)

சில இடங்களில் தான என்ற இடம், தந்த என்றும், தானன என்ற இடம் தனதன என்றும் வரும்.

பாதி மாதுடை மேனியன்
..பாதி மதியணி வேணியன்
சோதி யாயெழு தூயவன்
..சுந்த ரன்சிவ சங்கரன்
நீதி கூறிய நேரியன்
..நீறு பூசிய நிட்களன்
ஆதி யாகிய ஆரியன்
..ஆல வாயுறை ஐயனே. 1

நேரியன் - நுண்ணறிவுடையவன்

நீதி கூறிய நேரியன் -
பாண்டியன் சபையில் வந்து சாட்சி சொன்னது, வாதம் செய்தது.

பாறு சேர்தலை அங்கையன்
..பாணம் ஏவிடும் வல்லவன்
ஏற தேறிடும் இன்முகன்
..ஏதம் ஏதுமி லாதவன்
வேறு பாடறி யாதவன்
..வேதம் ஆகமம் ஆனவன்
ஆறு சூடிடும் அம்பலன்
..ஆல வாயுறை ஐயனே. 2

பாறு சேர்தலை அங்கையன் - கழுகுகள் தொடரக்கூடிய புலால் நாற்றம் நிறைந்த தலையோட்டைக் கொண்ட கையன்.

சம்பந்தர் தேவாரம் - திருப்பராய்த்துறை.

நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை யண்ணலே.

வந்தி யின்சுமை உற்றவன்
..மாற னிடமடி பெற்றவன்
கந்த வேளைய ளித்தவன்
..கார ணப்பொரு ளானவன்
நந்தி மேல்வரும் நாயகன்
..ஞான பண்டிதன் ஆதிரன்
அந்தி வண்ணமு டையவன்
..ஆல வாயுறை ஐயனே. 3

ஆதிரன் - பெரியோன்

வெள்ளி யம்பல மீதிலே
..மென்சி ரிப்பொடு நர்த்தனம்
துள்ளி ஆடிடும் வித்தகன்
..சொல்லு தற்கரி தானவன்
கள்ளி னும்மினி தானவன்
..கண்ணி யையணி மாமையன்
அள்ளி அள்ளிவ ரம்தரும்
..ஆல வாயுறை ஐயனே. 4

கள் - தேன்
கண்ணி - மாலை
மாமை - அழகு

நீல வண்ணனும் வேதனும்
..நேடி யும்மறி யாவொளி
கால னையுதை கழலினன்
..காம னையெரி கண்ணினன்
ஆல நீழலில் அமர்பவன்
..ஆதி யோகநி ராமயன்
ஆல காலம ருந்திய
..ஆல வாயுறை ஐயனே. 5

மோன மாய்மர நீழலில்
..மூவி ரல்களு யர்த்தியே
ஞான போதம ருள்பவன்
..நானி லம்புகழ் நர்த்தனன்
மீன லோசனி நாயகன்
..மேரு வைவளை சாகசன்
ஆனை ஈருரி போர்த்தவன்
..ஆல வாயுறை ஐயனே. 6

வாரி சூடிய சென்னியன்
..வாம தேவன்நி ரஞ்சனன்
பூர ணத்துவம் ஆனவன்
..புன்மை யையழி அற்புதன்
*தாரு காவன முனிவர்தம்
..தாட றுத்தவொர் இரவலன்
ஆர ணங்கொரு பாலுடை
..ஆல வாயுறை ஐயனே. 7

வாரி - கங்கை
தாடு - வலிமை

*இறைவன், திருப்பராய்த்துறை என்னும் ஸ்தலத்தில், தாருகாவன முனிவர்களின் வலிமை, கர்வத்தை, பிக்ஷாடனார் கோலத்தில் வந்து தகர்த்த வரலாறு

வெற்ப ரைமகள் நாயகன்
..விற்ப னன்செய மேனியன்
சிற்ப ரன்திரு மால்தொழும்
..செஞ்ச டாதரன் சின்மயன்
கற்ப கத்தரு வாய்வரம்
..கனிவு டன்தரும் ஆதிபன்
அற்பு தம்பல புரிபவன்
..ஆல வாயுறை ஐயனே. 8

வெற்பரை - வெற்பு அரை
வெற்பு - மலை
அரை - அரசன்
செய - சிவப்பு

சாம வேதமு கப்பவன்
..தாபம் ஏதுமி லாதவன்
சேமம் அருளிடும் ஐம்முகன்
..சேத னன்சசி சேகரன்
நாமம் ஆயிரம் உடையவன்
..நாதம் அதிலுறை நாயகன்
ஆமை நாகம ணிந்திடும்
..ஆல வாயுறை ஐயனே. 9

சாம வேதம் உகப்பவன் - சாம வேதம் கேட்டு மகிழ்பவன்

சிந்த னைசெயும் அன்பருள்
..தேனெ னத்திக ழும்பரன்
சந்தி ரன்சல மகளையும்
..சடையில் அணிபவன் சத்தியன்
மந்தி ரப்பொருள் ஆனவன்
..மாயை விலகவ ருள்பவன்
அந்த மில்புகழ் உடையவன்
..ஆல வாயுறை ஐயனே. 10

பதிகம் நிறைவுற்றது.

சரண்யா

Friday, 30 March 2018

34. திருப்பராய்த்துறை (பதிகம் 14)

பல்வகை வெண்பாக்கள்.

அலையார் நதிசூடும் அண்ணலை; என்றும்
நிலையாய் இருக்கும் நிறைவைக்; - கலையார்
அராவணி கண்டனை; அண்டம் பணியும்
பராய்த்துறை நாதனைப் பாடு. 1

கலை - ஒளி / அழகு
நிறைவு - அனைத்திற்கும் எல்லையாக (முடிவாக) இருப்பவர்

தோடணி ஈசனைத் தூமலர்க் கொன்றையைச்
சூடிடும் தேசனைச் சோதிப் பிழம்பாக
நீடுயர்ந்(து) ஓங்கு நியரைப் பராய்மரக்
காடுறை கள்வனைக் காண். 2

நீடு - என்றும் நிலையாய் இருப்பது
உயர்ந்து - அளவில் வளர்ந்து வருவது
ஓங்கு - எல்லா இடங்களிலும் பரவுவது
நியர் - ஒளி

நீடுயர்ந்(து) ஓங்கு நியரைை -
என்றும் நிலையாய் இருந்து, வளர்ந்து, பரவும் ஒளியை

பிறையை அணிந்திடும் பிஞ்ஞகனை எங்கும்
உறைவோனை வெள்விடைமேல் ஊர்வோனை வேதம்
பறையும் பொழில்சூழ் பராய்த்துறை தன்னில்
நிறையும் பதியை நினை. 3

கழலும் சடைமுடியும் காண முயன்ற
அழகன் அயனிடையே நின்ற அழலைப்
பழவினை தீர்க்கும் பராய்த்துறை தேவைத்
தொழுதிடச் சேரும் சுகம். 4

கழல் - திருவடி
அழகன் - திருமால்
அழல் - தீ

கருப்புவில் ஏந்திய காமனைக் காய்ந்த
நெருப்பனைத் தொண்டர்க்கு நேயனை மேரு
பருப்பதவில் ஏந்தும் பராய்த்துறை யானை
விருப்புடனே என்றும் விழை. 5

விழைதல் - மதித்தல்

சித்தியைத் தந்திடும் தேவாதி தேவனைப்
புத்தியுள் நின்றொளிர் புண்ணிய மூர்த்தியைப்
பத்தர்க் கருள்செய் பராய்த்துறை நாதனை
நித்தமும் நெஞ்சில் நிறுத்து. 6

கயிலை மலையானைக் காரிருளில் நட்டம்
பயிலும் நிருத்தனைப் பாவை பசும்பொன்
மயிலாள் மருவும் பராய்த்துறை யானை
அயிலேந்தும் கோவை அடை. 7

பசும்பொன் மயிலாம்பிகை - திருப்பராய்த்துறை அம்பாள் பெயர்.
அயில் - சூலம்.

வெண்ணிலவைச் சூடும் விமலனை வேயமுதைப்
பெண்ணுறையும் தேகனைப் பெற்றமுவந் தூர்வானைப்
பண்ணிசை போற்றும் பராய்த்துறை நாதனை
எண்ணிடுவார்க்(கு) ஏற்றம் எளிது. 8

பெற்றமுவந் தூர்வானை - பெற்றம் உவந்து ஊர்வானை
பெற்றம் - எருது

கோதிலாக் கோமானைக் கூற்றுதைத்த தீரனைச்
சூதம் அறுப்பானைச் சுந்தரத் தேமலர்ப்
பாதனைச் சான்றோர் பறையும் பராய்த்துறை
நாதனை நம்புதல் நன்று. 9

சூதம் - பிறப்பு

தாயிற் சிறந்த தயாபரனைத் தத்தளிக்கும்
சேயனெனைக் காப்பவனைச் சீர்புனல் காவிரி
பாயும் எழிலார் பராய்த்துறை மேவிய
மாயனை நாவார வாழ்த்து. 10

சரண்யா

Wednesday, 7 March 2018

33. திருமால் - சிவன் சிலேடைகள்

1.
கிரியினை ஏந்திடுவான் கெட்டவிடம் உண்டான்
கரியினை மாய்த்தான் கரிக்கருள் செய்தான்
வரமிகவே தந்திடுவான் வையம் அளக்கும்
அரியை அரனென்(று) அறி

திருமால்:
  • கோவர்த்தன மலையை ஏந்திய தீரன் 
  • பூதனையிடம் விடந்தோய்ந்த பாலை அருந்தியவன்
  • குவலயாபீடம் என்ற யானையை மாய்த்தவன்
  • கஜேந்திரனுக்கு அருள் செய்தவன்
  • வரமிக அருள்பவன்
  • திரிவிக்கிரமனாய் உலகை அளந்தவன்

சிவன்:
  • திரிபுர சம்ஹாரம் போது மேரு மலையை வில்லாக ஏந்தியவன்
  • பாற்கடலில் வந்த விடத்தை உண்டவன் 
  • தாருகா வன முனிவர் ஏவிய யானையைக் கொன்று, அதன் தோலை உரித்து மேலாடையாக அணிந்தவர்
  • ஆனைக்காவில் பூஜை செய்த யானைக்கு முக்தி அளித்தவர்
  • வரங்கள் பல தருபவர்
  • இந்த உலகம் வாழ படியளப்பவர் (2 நாழி நெல் அளந்து அன்னையுடன் 32 வகை அறங்கள் வளர்த்தார்.


2.
வில்லேந்தி மாற்றாரை வெல்லும்; அடியார்கள்
சொல்லில் மகிழும்; சுடராழி கொள்ளும்;
எருதைத் தழுவி எழிலாளைச் சேரும்
திருமால் சிவனென் றுணர்

ஆழி - பெரியது/சக்கரம்
சுடர் - நெருப்பு/ஒளி.

திருமால்:
  • இராமனாய் வில்லேந்தி இராவணாதி அசுரர்களை வென்றார்.
  • அடியார்கள் பாடலில் மகிழ்வார்.
  • ஒளியுடைய சக்கரத்தைக் கையில் வைத்துக் கொண்டவர்.
  • நப்பின்னை பிராட்டியை மணம் செய்து கொள்ள, கண்ணனாய் வந்து காளையை அடக்கினார்.

சிவன்:
  • திரிபுர ஸம்ஹாரத்திற்காக வில்லேந்தினார்.
  • அடியார்கள் பாடலில் மகிழ்வார்.
  • அளவற்ற தேஜஸ் (தேசு) தன்னிடம் கொண்டவர்.அல்லது பெரிய நெருப்பினைக் கையில் ஏந்தியவர்.
  • ரிஷபத்தைத் தழுவி, அதன் மேல் ஏறி, அன்னை பார்வதியுடன் சேர்ந்து அமர்வார்.

3.
கங்கை நதிதந்தான் கார்முகில் போலருள்வான்
சங்கொலி தன்னில் திளைப்பான் எழிலாரும்
மங்கைக் கிடமளித்தான் மாயம்செய் ஈசனைப்
பங்கயக் கண்ணனாய்ப் பார்

திருமால்:
  • விஷ்ணு, திரிவிக்கிரமனாய் உலகை அளந்தபோது, பிரம்மா தன் கமண்டல நீரால் அவர் பாதத்தை அபிஷேகம் செய்ய, அதுவே ஆகாச கங்கையாய்க் கீழே வந்தது.
  • பாஞ்சஜன்யத்தை ஊதி குதூகலமாய் பாரத யுத்தத்தை நடத்தினார்.
  • திருமால், இலக்குமிக்குத் தன் மார்பில் இடம் அளித்தார்

சிவன்:
  • சிவபெருமான் தன் சடையில் அந்த பிரவாகத்தைத் தாங்கி, பாரத பூமியில் ஓடச் செய்தார், பகீரதன் வேண்டுதலினால்.
  • சிவபெருமான் விரும்பும் 18 இசை வாத்தியங்களில், சங்க நாதமும் ஒன்று
  • சிவன், பார்வதிக்குத் தன் இடபாகம் தந்தார்.


4.
கம்பம் தனிலெழும் கையில் மழுவேந்தும்
வம்பார் இலைசூடும் வான்நீலம் ஆர்ந்திடும்
கொம்பணியும் பாம்பின்மேல் கோலமாய்க் கூத்தாடும்
நம்பனை நம்பியென்று நம்பு

  • கம்பம் - திருக்கச்சி ஏகம்பம் / தூண்
  • மழு - சிவன் கையில் மழு / பரசுராமர் கை கோடரி
  • இலை - வில்வம் / துளசி
  • வான்நீலம் - பெரிய விடம் (நீல நிற விடம்) கழுத்தில் நிறையும் / அழகிய நீல மேனி
  • கொம்பு - பன்றிக் கொம்பு அணிதல் / வராக அவதாரம்
  • பாம்பின் மேல் கூத்து - திருவாசி (பாச்சிலாச்சிராமம்) என்ற தலத்தில் பாம்பின் மேல் நடராஜர் ஆடுவார். முயலகன் இருக்காது. / காளிய நடனம்.
  • நம்பன் - சிவன் / நம்பி - விஷ்ணு


அன்புடன்,
சரண்யா

32. சிவன் சிலேடைகள்

1. அன்பே சிவன்

எங்கும் நிறைந்திருக்கும் ஏசுபவர்க்(கு) எட்டாது
பங்கம் அறியாது பற்றிடுவார்க்(கு) என்றும்பேர்
இன்பம் அளிக்கும் இதயத்துள் தங்கிடும்
அன்பே சிவனென்(று) அறி

2. தேங்காய் - சிவன்

முக்கண் பதிந்த முகமிருக்கும் ஓடேந்தும்
செக்கச் சிவந்தநல் தேசுலவும் நீராரும்
ஓங்கி வளரும் ஒளிமதிக் கீற்றணியும்
தேங்காய் சிவனெனச் செப்பு

தேங்காய்:
  • முகப்பில் மூன்று புள்ளிகள் இருக்கும்
  • மேலுள்ள ஓடு காயைத் தாங்கும்
  • செக்கச் சிவந்த (shades of brown) ஓடாக இருக்கும்
  • இளநீர் நிறைந்திருக்கும்
  • உயரத்தில் (உயர்ந்த மரத்தில்) வளரும்
  • உடைத்து நறுக்கினால், அழகிய நிலாவைப் போன்ற வெள்ளை நிறத் துண்டம் இருக்கும்


சிவன்:
  • முகத்தில் மூன்று கண்கள் உடையவர்
  • பிரம்ம கபாலத்தைக் கையில் கொண்டவர்
  • சிவந்த ஒளி வீசும் மேனியர்
  • கங்கை நீர் பாயும் சடையர்
  • உயர்ந்து வளரும் சோதி
  • ஒளிவீசும் நிலாத்துண்டம் அணிபவர்


3. மயில் - சிவன்

நீல மணிகண்டன் நீண்முடிக் கொண்டையன்
கோலமாய்க் காட்டினில் கூத்தாடும் சீலன்
அயிலுடைப் பேரரசன் அஞ்சிறகு பூணும்
மயிலைச் சிவனென வாழ்த்து

சிவன்:
  • விடமுண்டதால் கழுத்தில் மணி போல் நீல நிறத்தில் கறை இருக்கும்.
  • நீண்ட சடைமுடிக் கொண்டை இருக்கும்
  • அழகாக காட்டில் நடனமாடும் வித்தகன்
  • அயில் = சூலம் (கூறிய வேல்). சூலத்தைக் கையில் ஏந்தும் பெரியவன்.
  • அழகிய கொக்கின் இறகை அணிவார்

மயில்:
  • நீல நிறத்தில் கழுத்து இருக்கும் (மயில் கழுத்து colour) என்று சொல்வது உண்டு.
  • தலையில் கொண்டை நீட்டிக்கொண்டிருக்கும்.
  • அழகாய் காட்டில் நடமிடும் திறமை உடையது.
  • அயில் - அழகு. அழகுடைய பெரிய பறவை. (பறவைகளுள் அழகில் இதுவே அரசன்)
  • அழகிய தோகை (இறகுகள்) இருக்கும்.

4. புத்தகமும் சிவனும்

ஞானியர் போற்றிடும் ஞானத்தை நல்கிடும்
தானாய்த் திரிவோர்க்குத் தக்க துணையாகும்
சீலர் மனத்துள் திகழ்ந்திடும் நல்லதொரு
நூலைச் சிவனென நோக்கு

  • அறிவுள்ளோர் போற்றும் பொருள்
  • அறிவைத் தரும் பொருள்
  • தானாய்த் திரிவோர்க்கு - தனியாக இருப்பவர்களுக்கு மிக நல்ல துணையாய் இருக்கும் பொருள்
  • சீலர் - உயர்ந்த குணம் படைத்தவர் மனத்தினுள் எப்போதும் திகழும் பொருள்
  • நூல் - புத்தகம்
  • நல்ல புத்தகமும் எம் ஐயன் சிவபெருமானும் ஒன்றே என்று காண்க.

5. சிவன் - விளக்கு

எரியினை ஏந்திடும் எங்கும் பரவும்
இருளினை நீக்கும் இழையை அணியும்
அருமலர் ஏற்கும் அகத்தில் திகழும்
அரனே அணையா விளக்கு.
  • எரி - நெருப்பு / சுடர்
  • இழை - முப்புரி நூல் / திரி
  • விளக்கிற்கும் பூவைத் தூவி பூஜை செய்வர்
  • அகம் - மனம் / இல்லம்
6. சின்டெக்ஸ் டேங்க் - சிவன் சமீபத்தில், சென்னையில் பறக்கும் இரயிலில் சென்ற போது, குடியிருப்பு வளாகங்களில், மொட்டை மாடியில், தண்ணீருக்காக வைக்கப்பட்டிருந்த, பல "Sintex" தொட்டிகள் சிவலிங்கத் திருமேனிகள் போல் தோன்றியன. அதனை வைத்து அடியேனின் முயற்சி. நீரினைத் தாங்கிநிற்கும் நேரத்தில் தந்தருளும் பாரினில் உள்ளோர்க்குப் பாங்குடனே - சீருடைய மன்றத்தில் மையமாய் மாண்போ டிலங்கிடும் சின்டெக்ஸ்நீர்த் தொட்டி சிவன் சிவன்: *முடியில் கங்கையை வைத்திருப்பார் *பாரில் உள்ளோர் வேண்டிட, தகுந்த நேரத்தில் தகுந்தனவற்றைத் தருவார். *சிறப்புடைய சபையில் நடுநாயகமாக பெருமையோடு விளங்குவார் சின்டெக்ஸ்டேங்க்: *தன்னுள்ளே தண்ணீரைத் தேக்கி வைத்திருக்கும் *மக்களுக்கு வேண்டிய போது, தேக்கிய தண்ணீரைத் தரும் *மொட்டை மாடியில் (திறந்த வெளியில்) முக்கிய இடம் பிடித்திருக்கும்.


அன்புடன்,
சரண்யா

31. பொது சிலேடைகள்

1. காசும் உலகும்

சுற்றிச் சுழலும் சுகத்தை அளித்திடும்
பற்றைக் கொடுத்துப் பரமன் நினைவகற்றும்
மாசு கலந்த மனத்தினைத் தந்திடுமிக்
காசினி ஆகுங்காண் காசு

காசினி - உலகம்.

காசு:
  • பலரிடமும் சுற்றி, நம்மிடம் வரும்.
  • வேண்டியதைப் பெற்றுக் கொடுத்து சுகத்தை அளிக்கும்.
  • பல பொருட்களின் மீது பற்றைத் தந்து, இறைவன் பற்றிய நினைவை நம்மிடமிருந்து விலக்கிவிடும்.
  • பேராசை, கஞ்சத் தனம் போன்ற தாழ்ந்த குணம் நிறைந்த மனத்தினைக் கொடுக்கும்.


உலகம்:
  • சூரியனைச் சுற்றும், தன்னைத் தானே சுழற்றிக் கொள்ளும்.
  • வெளிப்படையாக பார்க்க இன்பம் தருவதாய் இருக்கும், இங்கு வீடு, நிலம் வாங்க வேண்டும் என்ற பற்றைக் கொடுக்கும்.
  • இதுவே நிரந்தரம் என்ற மாயையைத் தந்து இறைவன் பற்றிய நினைவை மறைத்து விடும்.
  • பல குற்றங்கள் செய்ய தூண்டும்.

2. செல்பேசியும் செபமாலையும்

அல்லும் பகலும் அமர்ந்திடும் கையினில்;
தொல்லை தருமே தொலைத்தோர் மனதிற்குச்;
செல்லும் இடமெங்கும் சேர்ந்துடன் வந்திடும்
செல்லாகும் சீர்செபமா லை

3. வேப்பமரமும் தாயும்

இலையை விரிக்கும் இதத்தைக் கொடுக்கும்
நிலையைக் குலைத்திடு நோயினை நீக்கிடும்
காப்பினை இட்டுயர் காவல் அளித்திடும்
வேப்பமரம் தாயென மெச்சு

தாய்:
  • வாழை இலையை விரித்து உணவு பரிமாறுவாள்
  • அன்பு மொழியால் இதத்தை மட்டுமே தருவாள்
  • நம்மை வாட்டிடும் துன்பத்தைத் தன் அரவணைப்பால் துடைத்திடுவாள்
  • காப்பு - திருநீறு அல்லது இரட்சைக் கயிற்றைக் கைகளில் கட்டி, காவல் அளிக்க வைப்பாள்

வேப்பமரம்:
  • இலைகளை விரித்து நல்ல நிழலைக் கொடுத்து நமக்கு இதமளிக்கும்.
  • பல நோய்களுக்கு மருந்து வேப்பங்கொழுந்து/காய்
  • ஊர் எல்லைகளில் காவல் புரியும் தெய்வமாய்க் கருதப்படும். மற்றொன்று, வேப்பிலைக் காம்பினைக் காப்பாக சிறுவர்களுக்குக் கட்டுவார்கள். அம்மை நோயின் போது படுக்கைக்கு அருகிலும், வீட்டு வாசலிலும் வேப்பிலையை வைப்பார்கள்.


4. நிலவும் உயிரும்

சமீபத்தில் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம உபன்யாசம் கேட்கும் போது, அம்பாள் எவ்வித மாறுதலும் இல்லாதவள் என்றும் ஜீவராசிகளுக்கே ஆறு விதமான மாறுதல்கள் (பிறத்தல், இருத்தல், வளர்தல், மாறுபடுதல், தேய்தல், இறத்தல்) உண்டு என்றும் கேட்டேன். எனக்கு நிலவின் நினைவு வந்தது (பிறந்து-வளர்ந்து-தேய்ந்து-மறைந்து மீண்டும் பிறந்து...). அதனால் நிலவையும் உயிரினத்தையும் ஒப்பிட்டு ஒரு சிலேடை முயன்றேன்.

குறிப்பு - சந்திரனின் கலைகள் - இரண்டு வகை.

1. அழியாது எப்போதுமே இருக்கக் கூடிய 16 கலைகள் (15 திதி நித்யா தேவிகள் + ஸதா என்னும் கண்ணுக்குப் புலப்படாத கலை (அம்பாளே தான்)).

2. வளர்ந்து - தேய்ந்து சுழலக்கூடிய 15+15 = 30 கலைகள்.

இப்பாடலில் அடியேன் எடுத்துக் கொண்டுள்ளது இந்த இரண்டாம் வகையான கலைகளே.

நன்றி திரு பாலு மாமா (Sahasranaman Balasubramanian)

இதில் இறப்பிற்குப் பின் அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபிறப்பு உண்டு என்பதால் அதனையும் இறுதியில் சேர்த்துள்ளேன்.

பாடல்:

புதிதாய்ப் பிறக்கும் பொலிவோ டிலகும்
அதிவேக மாய்வளரும் அன்றாடம் மாறும்
குலையும் இறக்கும் குலாவிப் பிறக்கும்
நிலவும் உயிரினமும் நேர்

  • இலகுதல் - விளங்குதல்
  • குலைதல் - தேய்தல் (deterioration)
  • குலாவுதல் - வளைதல் (மீண்டும் / again)
  • இறந்ததும் சுற்றித் திரிந்து மீண்டும் பிறவி எடுத்தல்


அன்புடன்,
சரண்யா

Friday, 23 February 2018

30. சிவனின் கழலைத் தொழுவோமே - பொது (பதிகம் 13)

நமச்சிவாய வாழ்க!

வணக்கம்.

அடுத்த பதிகம்.

சிருங்கேரி சங்கராச்சார்யர் அனந்தஸ்ரீ விபூஷித பாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகள் அவர்கள் எழுதிய "கருட கமண தவ சரண கமலமிஹ" என்ற விஷ்ணு ஸ்துதியை ஒட்டிய சந்தத்தில், கவிஞர் திரு. சிவசிவா அவர்கள் எழுதிய பதிகத்தின் யாப்பை வைத்து, அடியேன் எழுதிய பதிகம்.

தலம் - பொது

நாலடிமேல் ஈரடி வைப்பு

சந்தம்:
தனன தனதனன
தனன தனதனன
தனன தனதனன தானா
தனன தனதனன தானா
.. தனனா தனனா தனதானா
.. தனனா தனனா தனதானா

சில பாடல்களில் தனன என்னும் இடங்களில் தந்த, தன்ன, தான போன்ற சந்தங்களும் வரலாம்.
தனதனன என்னும் இடத்தில், தானதன, தந்ததன, தன்னதன என்றும் வரலாம்.

1.
எருது மிசையமரும்
அருண நிறமுடைய
நிரதி சயநிமல ரூபன்
கருணை பொழியும்அமு தீசன்
..சிவனின் கழலைத் தொழுவோமே
..கவலைக் கடலைக் களைவோமே.

நிரதிசய - அதிசயத்திற்கும் அப்பாற்பட்டது

2.
அசையும் அரவணியும்
இசையில் உளமகிழும்
நிசியில் நடனமிடும் ஈசன்
அசலன் அசலமகள் நேசன்
.. சிவனின் கழலைத் தொழுவோமே
..கவலைக் கடலைக் களைவோமே

அசலன் - சலனம் அற்றவன் / கடவுள்
அசலம் - அசைவற்றது / மலை

3.
சுருதி விழையுமரன்
அரிய மலரொளியன்
இருளை அரியும்அறி வாளன்
அருளி மகிழும்அரு ளாளன்
..சிவனின் கழலைத் தொழுவோமே
..கவலைக் கடலைக் களைவோமே.

அரிய மலர் ஒளியன் - அதி அற்புதமான மலர் போல் அழகினைக் கொண்டவன்.. இதுவரை யாரும் அதுபோன்ற அழகைக் கண்டதில்லை

இருள் - அறிவின்மை.
அரி - களைதல்

4.
சூலம் அணையழகன்
ஆலம் உடைமிடறன்
ஆல நீழலமர் வேதன்
ஞாலம் ஆளும்நட ராசன்
..சிவனின் கழலைத் தொழுவோமே
..கவலைக் கடலைக் களைவோமே

5.
இருவர் அறியாத
ஒருவன்; வளைமங்கை
மருவும் அணிநீல கண்டன்
பரவி ஒளிவீசும் அண்டன்
..சிவனின் கழலைத் தொழுவோமே
..கவலைக் கடலைக் களைவோமே

இருவர் - அரி அயன்
அணி - அழகு
அண்டன் - அண்டத்தின் தலைவன்

6.
கம்பம் அதிலுறையும்
வம்பு மலரணியும்
நம்பன் நிமலனுமை பாகன்
உம்பன் விடையமரும் வாகன்
..சிவனின் கழலைத் தொழுவோமே
..கவலைக் கடலைக் களைவோமே

கம்பம் - கச்சி ஏகம்பம்
வம்பு மலர் - மணம்வீசும் மலர்
உம்பன் - தேவன்
வாகன் - அழகன்

7.
கனக சபையிலிரு
முனிவர் அகமகிழ
இனிய நடனமிடும் வானன்
நினைவில் இணையுமெழில் ஏனன்
..சிவனின் கழலைத் தொழுவோமே
..கவலைக் கடலைக் களைவோமே

இரு முனிவர் - பதஞ்சலி, வ்யாக்ரபாதர்
இணைதல் - சேர்தல்
வானன் - ஆகாய வடிவானவன்
ஏனன் - பன்றிக் கொம்பினை அணிபவன்.

8.
தென்னி லங்கையதன்
மன்னன் அகமழிய
வன்ன விரலையிடு பாதன்
மின்னு மணியணியும் நாதன்
..சிவனின் கழலைத் தொழுவோமே
..கவலைக் கடலைக் களைவோமே

அகம் - அகந்தை
வன்ன விரல் - அழகிய விரல்.

9.
பாதி மதியணியும்
ஆதி அந்தமிலன்
நாத மயமான மூலன்
வேதம் ஓதுதவ சீலன்
..சிவனின் கழலைத் தொழுவோமே
..கவலைக் கடலைக் களைவோமே

ஆதி அந்தமிலன் = பிறப்பு இறப்பு இல்லாதவன்.
மூலன் = அனைத்தும் சிவபெருமானிடத்திருந்தே வருகிறது.

நாத மயமான மூலன் (குறிப்பு):
சிவபெருமானின் கரத்தில் இருக்கும் உடுக்கை சத்தத்திலிருந்து, ஓம்காரம், வேதம், வியாகரணம் முதலிய வேத அங்கங்கள் யாவும் தோன்றியது என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டது.

10.
கங்கை ஆர்சடையன்
மங்கை ஓர்பங்கன்
அங்க மாலையணி தேசன்
துங்க வடிவுடைய நேசன்
..சிவனின் கழலைத் தொழுவோமே
..கவலைக் கடலைக் களைவோமே

அங்கம் - எலும்பு.
துங்கம் - தூய்மை

பதிகம் நிறைவுற்றது.

சரண்யா

Tuesday, 6 February 2018

29. வண்ணப் பாடல் - 08 - திருமீயச்சூர்

ராகம்: சுருட்டி
தாளம்: மிஸ்ர சாபு (எடுப்பு அரையிடம் தள்ளி)

தானத் தானன தந்ததான

பாதத் தாமரை என்றும்நாடிப்
..பாசத் தோடெழு மன்பர்மீது
சீதத் தேமல ரங்கையாலே
..சேமத் தோடுயர் வன்பொடீவாய்
நாதத் தாதிய கண்டசோதி
..நாகத் தாரணி சுந்தரேசா
வேதத் தோடிசை யுஞ்சுசீலா
..மீயச் சூருறை தம்பிரானே

பதம் பிரித்த வடிவம்:

பாதத் தாமரை என்றும் நாடிப்
..பாசத்தோ(டு) எழும் அன்பர்மீது
சீதத் தேமலர் அங்கையாலே
..சேமத்தோ(டு) உயர்(வு) அன்பொ(டு) ஈவாய்
நாதத்(து) ஆதி அகண்டசோதி
..நாகத்தார் அணி சுந்தரேசா
வேதத்தோ(டு) இசையும் சுசீலா
..மீயச்சூர் உறை தம்பிரானே

பாதத்தாமரை - இறைவனின் பாதம் ஆகிய தாமரையை

எழுதல் - தொழுதல்

சீதத் தேமலர் அங்கை - குளிர்ந்த தேன் நிறைந்த மலர் போன்ற அழகிய கை

சேமத் தோடுயர் வன்பொடீவாய் - சேமத்தோடு உயர்வு அன்பொடு ஈவாய்

சேமம் - வளம் (prosperity)
உயர்வு - சிறப்பு / புகழ் (fame)

நாகத் தார் - நாக மாலை (நாகங்களை மாலையாக அணிதல்)



Friday, 2 February 2018

28. வண்ணப் பாடல் - 07 - திருவான்மியூர்

ராகம் - தர்மவதி
தாளம் - கண்ட சாபு

தனதான தானதன தனதான

குருவாகி ஆலினடி அமர்வோனே!
..குறையாவு மேயரியும் இறையோனே!

சிரமீது வாரிமதி அணிவோனே!
..சிறியேனுன் ஆடலினில் மகிழ்வேனோ?

பரிபூர ணா!விமல! பரமேசா!
..பசுகாம தேனுபணி அமுதீசா!

திரிசூலி வாலையவள் மணவாளா!
..திருவான்மி யூரிலுறை பெருமானே!

*அரிதல் - களைதல்
*தேவலோக பசுவான காமதேனு வணங்கிய ஈசன்.
*அமுதீசன் என்றும் இத்தலத்தில் சிவனுக்குத் திருநாமம்
*வாலை - அழகிய பெண்

பாடலைக் கேட்க:
https://drive.google.com/open?id=0By387kvntVlPU0NZNXJOcGVMbUE

Wednesday, 31 January 2018

27. வண்ணப் பாடல் - 06 - திருஆலவாய் (மதுரை)

பாகேஸ்வரி ராகம்
சதுஸ்ர ஏக தாளம் (திஸ்ர நடை)

தான தான தனதனனா

ஆல நீழல் அடியமரும்
..ஆதி யோக குருமணியே!
ஞால மீதில் உயர்வுறவே
..ஞான போதம் அருளுகவே;
சூல பாணி! சுடரொளியே!
..தூய னே!து யரையரிவாய்;
ஆல காலம் உறுமிடறோய்!
..ஆல வாயின் அதிபதியே!

ஞான போதம் - ஞான உபதேசம்.

பாடலைக் கேட்க:

https://drive.google.com/open?id=0By387kvntVlPcGFXcUQ4RjNuSjg

Tuesday, 30 January 2018

26. திருமூக்கீச்சரம் (உறையூர்) (பதிகம் 12)

வணக்கம்.

அடுத்த பதிகம் - திருமூக்கீச்சரம் (உறையூர்)

எண்சீர் விருத்தம்.

வாய்பாடு - காய் காய் மா தேமா (அரையடி)

சேவேந்தும் சேவடியை உடையாய் போற்றி
..செல்வங்கள் தனபதிக்குத் தந்தாய் போற்றி
நாவேந்தும் நாமங்கள் கொண்டாய் போற்றி
..நன்மைபல எமக்கென்றும் தருவாய் போற்றி
மூவேந்தர் பூசித்த முதல்வா போற்றி
..மோனத்தில் ஆழ்ந்திருக்கும் குருவே போற்றி
தேவேந்தி ரன்போற்றும் திருவே போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 1

குறிப்புகள்:
சேவேந்தும் சேவடி:
சே - நந்தி / ரிஷபம். பிரதோஷ காலத்தில் நந்தியின் தலைமேல் கொம்பிற்கு இடையில் நின்று ஆடுகிறார் சிவன் என்பது ஐதீகம். மேலும் அதிகார நந்தி உற்சவத்தில் நந்தி, தன் இருகரங்களால் இறைவனின் திருவடிகளைத் தாங்குவார்.

அதனால் சேவேந்தும் சேவடியை உடையாய் என்று பாடியுள்ளேன்.

தனபதி - குபேரன் (இந்தப் பதிகம் அக்ஷய திரிதியை அன்று தொடங்கினேன்)

நாவேந்தும் நாமங்கள் - நமது நா உச்சரிக்கும் நாமங்கள்

மூவேந்தர் - சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆராதிக்கும் பெருமான், உறையூர் பஞ்சவர்ண சுவாமி.

திருமூக்கீ்ச்சரம் - இன்றைய நாளில் உறையூர் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் - ஸ்ரீ பஞ்சவர்ண சுவாமி. இறைவி - காந்திமதி அம்மை. செங்கட் சோழனால் திருப்பணி செய்யப்பட்ட மாடக்கோயில்களுள் ஒன்று. யானைகள் நுழைய முடியாத சிறு வாயில் உள்ளதால் மூக்கீச்சரம் என்று திருமுறைகள் கூறுகின்றன.

தசமுகனின் செருக்கறுத்த சதுரா போற்றி
..தலையோட்டில் பலிதேரும் தலைவா போற்றி
விசயனுக்குப் பாசுபதம் அளித்தாய் போற்றி
..வெள்விடைமேல் வருகின்ற விமலா போற்றி
முசுகுந்தன் துதிசெய்த விடங்கா போற்றி
..முத்தமிழில் மகிழ்ந்திடுமெம் முத்தே போற்றி
திசையெண்மர் பணிந்தேத்தும் தேவே போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 2

முசுகுந்தன் பூஜை செய்த 7 சோமாஸ்கந்த விக்ரகங்கள் சப்த விடங்கத் தலங்களில் உள்ளன. அதனால் விடங்கா என்ற விளியைப் பயன்படுத்தியுள்ளேன்

மங்கைக்கோர் கூறளித்த மன்னா போற்றி
..மதுமல்கு மலரணியும் பெம்மான் போற்றி
கங்கைக்குச் சடையிலிடம் தந்தாய் போற்றி
..காவிரியின் தென்கரையில் அமர்ந்தாய் போற்றி
அங்கண்ணாள் காந்திமதி நாதா போற்றி
..அம்பலத்தில் ஆடிடுமெம் அரசே போற்றி
செங்கண்ணன் செய்மாடத் துறைவோய் போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 3

காந்திமதி - உறையூரில் அம்பாளின் பெயர் காந்திமதி.
உறையூர், செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்.

பத்திக்குப் பரிந்திடும்சிற் பரனே போற்றி
..பண்ணிசையில் உறைகின்ற பதியே போற்றி
எத்திக்கும் நின்றேத்தும் எழிலே போற்றி
..இடபத்தின் மேலேறும் இறையே போற்றி
முத்திக்கு வழிசெய்யும் வித்தே போற்றி
..முன்நடுபின் இல்லாத மூலா போற்றி
தித்திக்கும் தமிழ்க்கடலில் திளைப்பாய் போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 4

கரியுரியைத் தரித்திடும்மா தேவா போற்றி
..கையினில்தீ ஏந்திநடம் புரிவோய் போற்றி
அரிஅயனும் காணாத சோதீ போற்றி
..அடிபணிவார்க் கருளிடும்அற் புதமே போற்றி
நரியையுயர் பரியாகச் செய்தாய் போற்றி
..நாடகங்கள் பலசெய்த நம்பா போற்றி
திரிபுரத்தைச் சிரிப்பாலே எரித்தாய் போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 5

உயர் பரி - உயர்ரகக் குதிரை

மறைநான்கும் புகழ்ந்தேத்தும் மணியே போற்றி
..மருள்நீக்கி ஆட்கொள்ளும் ஒளியே போற்றி
குறையேதும் இல்லாத கோவே போற்றி
..குற்றங்கள் பொறுத்திடும்சற் குருவே போற்றி
பிறைமதியைச் சடைமுடியில் முடிந்தோய் போற்றி
..பேதையென்றன் உளம்கவரும் கள்வா போற்றி
சிறைவண்டார் மலர்சூடும் சீலா போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 6

சிறை - அழகு

புகழ்ச்சோழன் பூசனைசெய் பொலிவே போற்றி
..புண்ணியம்செய் அடியார்தம் புகலே போற்றி
இகழ்ந்தாரைத் தண்டிக்கும் அரனே போற்றி
..எளியாருக் கெளிதான ஈசா போற்றி
நிகழ்ந்தேறும் அனைத்திற்கும் சாட்சீ போற்றி
..நினைத்தெழுவார் இடர்களையும் நிமலா போற்றி
திகழ்ந்தோங்கி ஒளிவீசும் சுடரே போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 7

புகழ்சோழன் அவதார தலம் - உறையூர்
புகல் - துணை
நினைத்தெழுவார் - நினைத்து எழுவார்

நறையாரும் மலர்ப்பாத நம்பா போற்றி
..நள்ளிருளில் நடமாடும் நாதா போற்றி
மறிமழுவைக் கையேந்தும் பதியே போற்றி
..மாறனது சபைவந்த அம்மான் போற்றி
நிறமைந்தாய் உதங்கர்முன் நின்றாய் போற்றி
..நினைவினிலே நிலவுகின்ற நிறைவே போற்றி
சிறியேனை ஆட்கொள்ளும் செல்வா போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 8

மாறன் - பாண்டியன்
அம்மான் - பாண்டியனின் சபைக்கு ஒரு வணிகனின் மாமனாக வந்து சிவபெருமான் வாதம் செய்தார்.

உதங்க மகரிஷிக்கு ஐந்து நிறங்களில் இந்தக்கோவிலில் சிவபெருமான் காட்சி தந்தார்

தக்கன்செய் பெருவேள்வி தகர்த்தாய் போற்றி
..சலந்தரனை மாய்த்திட்ட சதுரா போற்றி
துக்கத்தைத் துடைத்தருளும் தூயா போற்றி
..சுடராழி மாலுக்குத் தந்தாய் போற்றி
கொக்கின்வெண் சிறகணியும் கோவே போற்றி
..கொடியின்மேல் இடபத்தைக் கொண்டாய் போற்றி
சிக்கல்கள் தீர்த்திடுமெம் ஐயா போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 9

அன்னவத்தே எழுவிடத்தை நுகர்ந்தோய் போற்றி
..ஆறங்கம் அருமறையின் கருவே போற்றி
இன்னிசையுள் உறைகின்ற சுவையே போற்றி
..ஈறில்லாப் பெருமையுடை எம்மான் போற்றி
பொன்னவையில் நடமாடும் புனிதா போற்றி
..புலித்தோலை அரையிலணி பரனே போற்றி
தென்னனுடல் வெப்பொழித்த தீரா போற்றி
..திருமூக்கீச் சரத்தமுதே போற்றி போற்றி. 10

அன்னவம் - கடல்
தென்னன் - பாண்டியன்

பதிகம் நிறைவுற்றது.

சரண்யா 

Tuesday, 16 January 2018

25. சிவன் சேவடி போற்றி - பொது (பதிகம் 11)

வணக்கம்.

சந்தவசந்தம் google குழுவில் 2017 ஜூன் மாதத்தில், கவிஞர் திரு வி. சுப்பிரமணியன் (சிவசிவா) அவர்கள் ஷட்பதி என்னும் கன்னட யாப்பைப் பற்றி எடுத்துச்சொல்லி, அதில் ஒரு பதிகம் எழுதிருந்தார். அவரது படைப்பால் உந்தப்பட்டு, அடியேனும் அந்தப் புதிய யாப்பினைக் கையாள விரும்பினேன். சிவபெருமான் அருளால் அவர் மீது இந்த ஷட்பதி அமைப்பில் ஒரு பதிகம் எழுதினேன்.

ஸ்தலம் - பொது.

ஷட்பதி பற்றி, அவர் சொல்லியவை சில - உங்கள் பார்வைக்காக.

கன்னடத்தில் "ஷட்பதி" என்ற பாடல் அமைப்பு - இலக்கியங்களில் பல பாடல்கள் உள்ளனவாம். (இக்காலத்திலும் எழுதுகின்றனரா என்று அறியேன்).
இந்த "ஷட்பதி" என்ற பாடல் அமைப்பின் யாப்புக் குறிப்புச் சுருக்கம் -

(நான் அறிந்த அளவில்):

X X
X X
X X X +1

X X
X X
X X X +1

X = எவ்வகைச் சீர்/சீர்கள் அமைப்பும் இருக்கலாம். அதே அமைப்பு "X"

குறியீடு காட்டும் எல்லா இடங்களிலும் வரும்.

1. ஆறு அடிகள்
2. எல்லா அடிகளிலும் ஒரே எதுகை பயின்று வரும்.
3. 1,2,4,5 - அடிகள் அளவொத்து அமைவன. சீர் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணாக அமையும். (உதாரணமாக - அடிக்கு 2 சீர்களோ 4 சீர்களோ). அடியின் முதற்பாதியில் உள்ள சீர் அமைப்புப் பிற்பாதியிலும் அமையும்.
4. 3,6 - இவ்வடிகள் அளவொத்து அமைவன. ஏனைய அடிகளைவிட நீளமாக அமைவன. (இவ்வடிகளின் அமைப்பு: முதலடியின் சீர் அமைப்பு + முதலடியின் முதற்பாதி சீர் அமைப்பு + இறுதியில் கூடுதலாக ஓர் நெடில் எழுத்து).

ஷட்பதி அமைப்பில் அடியேனின் அர்ப்பணம்.

சிவன் சேவடி போற்றி

ஷட்பதி அமைப்பில் சிவபெருமான் மீது பத்துப் பாடல்கள்.

தலம் - பொது.

மா மா
மா மா
மா மா மாங்காய் (அரையடி)

மறைகள் புகழும்
இறைவன் கழலை
முறையாய் நாமும் பணிவோ மே
பிறையை அணியும்
கறைசேர் கண்டன்
நிறைவை நமக்குத் தருவா னே. 1

முடியா மறையின்
முடிவா னவனின்
அடியை எண்ணித் துதிப்போ மே
அடியும் இடையும்
முடிவும் இல்லா
விடையன் வெற்றி தருவா னே. 2

அடி இடை முடிவு இல்லா - ஆதி மத்ய அந்த ரஹித
விடையன் - எருதில் வருபவன்

விடையே றிவரும்
சடையன் தாளைத்
திடமாய் நாமும் பிடிப்போ மே
நடரா சனெனும்
படகைப் பற்றிக்
கடலைக் கடந்து களிப்போ மே. 3

கடல் - ஸம்ஸாரம்

கேடில் லாத
தோடன் கழலை
நாடி நன்மை அடைவோ மே
ஈடில் லாத
சேடன் அருளால்
ஓடி வினைகள் ஒழியும் மே. 4

கேடு இல்லாத - கெடுதல் இல்லாத (அழிவு இல்லாத)
தோடன் - தோடுடைய செவியன் - தோடணிந்தவன்
சேடன் - பெரியவன்

சதியோ டிசையும்
பதியின் பதத்தைக்
கதியென் றேநாம் அடைவோ மே
மதில்மூன் றெரித்த
நதியைப் புனைந்த
மதியன் புகழைப் பறைவோ மே. 5

சதி - பார்வதி
இசைதல் - சேர்தல்
மதியன் - நிலவைத் தலையில் அணிபவன்
பறைதல் - பாடுதல்

நரையே றேறும்
பரமன் பதத்தை
உருகி நிதமும் தொழுவோ மே
மரையை ஏந்தும்
பரையோர் பாகன்
கரையேற் றிநமைக் காப்பா னே. 6

நரையே றேறும் - நரை ஏறு ஏறும்
நரை - வெள்ளை
ஏறு - காளை மாடு
மரை - மான்
பரை - பெண் / பராசக்தி

மழுவை ஏந்தும்
அழகன் சிவனின்
கழலை நாமும் தொழுவோ மே
மழையாய் அருளைப்
பொழியும் இறைவன்
நிழலாய் நம்மைத் தொடர்வா னே. 7

கரியின் தோலை
உருவி அணிந்த
அரையன் அடியைப் பணிவோ மே
நரியைப் பரியாய்
உருமாற் றியவன்
விரைவாய் வந்து காப்பா னே. 8

அலையார் கடலில்
நிலைகொண் டவனும்
அலர்மேல் உறையும் அயனும் மே
நிலமும் வானும்
அலைந்தும் அறியாத்
தலைவன் தாளைப் பணிவோமே. 9

மணியார் கண்டன்
பிணிவார் சடையன்
பணிவார்க் கருளும் பரமே சன்
அணியார் உமையை
அணையும் தலைவன்
துணையாய் நமக்கு வருவா னே. 10

பிணிவார் சடை - கட்டிய நீண்ட சடை
அணியார் உமை - அணி - அழகு. அழகு நிறைந்த உமா தேவி
அணைதல் - சேர்தல் / புணர்தல் - அர்த்தநாரீஸ்வரர் என்று கொள்ள வேண்டும்

பதிகம் நிறைவுற்றது.

பணிவுடன்,
சரண்யா

Thursday, 4 January 2018

24. திருவானைக்கா (பதிகம் 10)

ஆனைக்கா அண்ணல் மீது மற்றொரு பதிகம். முன்னர் எழுதிய பதிகத்தில், கூறப்படாத தல சிறப்புகள் சிலவற்றை இதில் சேர்த்துள்ளேன்.

நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா.

காய் காய் காய் காய்.

வெண்ணாவல் கீழமரும் வேதத்தின் மெய்ப்பொருளைப்
பண்ணாரும் பரமனைத்தென் ஆனைக்கா உறைவானைப்
பெண்ணாரும் மேனியனைப் பிறைமௌலிப் பெம்மானைக்
கண்ணாரும் நுதலானைக் கண்ணாரக் கண்டேனே. 1

  • வெண்ணாவல் - திருவானைக்கா ஸ்தல வ்ருக்ஷம் - வெள்ளை நாவல். 
  • பண்ணாரும் பரமன் - இசையால் சூழப்பட்டவன் அல்லது பண்கள் யாவும் புகழ்ந்து அனுபவிக்கும் பரமன்.


வண்டினமும் மயிலினமும் வந்தமரும் சோலையினில்
எண்டிசையோர் நின்றேத்த இனிதாக அமர்ந்தானைக்
கண்டமதில் ஆலாலம் கருநாகம் அணிவானை
அண்டமெங்கும் நிறைவானை ஆனைக்காக் கண்டேனே. 2

சோழனது முத்துவடம் ஏற்றானைச் சுந்தரனின்
தோழனுமாய்த் தூதனுமாய் ஆனானைத் துதிசெய்த
வேழமதற்க் கருளியநல் வித்தகனைத் திருமாலுக்(கு)
ஆழியுகந் தளித்தானை ஆனைக்காக் கண்டேனே. 3


  • சோழ மன்னன், காவிரியில் நீராடிய போது, அவனது முத்து மாலை நழுவி, ஆற்றில் வீழ்ந்தது. வீழ்ந்த கணத்தில், அம்மன்னன், "இறைவா, நீயே ஏற்றுக்கொள்வாயாக" என்று சம்புகேசரை வேண்ட, அடுத்த நாள், திருமஞ்சனக் குடத்தில் அந்த ஆரம் இருந்தது.

செங்கண்ணன் கட்டியதோர் சீர்மாடம் அமர்ந்தானை
வெங்கண்மாத் தோலினைத்தன் மேனியின்மேல் அணிவானை
நங்கண்முன் நிறைவானை நால்வேதம் புகழ்வானை
அங்கண்மூன் றுடையானை ஆனைக்காக் கண்டனே. 4

  • செங்கண்ணன் - செங்கட் சோழன். (முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து ஜம்புகேஸ்வரரை பூஜை செய்ததன் பயனாய் அடுத்த பிறவியில் சோழ மன்னனாக பிறந்து, (முற்பிறவியில் யானையிடம் கொண்ட வெறுப்புத் தொடரவே இப்பிறவியிலும்) யானைகள் நுழைய முடியாத மாடக் கோயில்கள் 72 ஐக் காவிரி ஆற்றின் கரையில் கட்டினான். திருச்சி உறையூர், சுவாமிமலை, திருநறையூர் சித்தீச்சரம், அழகாப்புத்தூர், திருப்பேணுப்பெருந்துறை (கும்பகோணம் அருகில் உள்ளவை) போன்றவை.
  • வெங்கண்மா - கோபம் கொண்ட கண்கள் உடைய யானை. (அட்ட வீரட்டச் செயல்களில் ஒன்று)
  • நங்கண் - நம் கண்
  • அங்கண் - அம் கண் - அழகிய கண்


ஊதியமாய்த் திருநீற்றைத் தந்தெயிலொன் றமைத்தானை
வேதியனை வேண்டுபவர்க் கருள்வோனை மின்னொளிரும்
சோதியனைத் தூயவனைத் துயரறுக்கும் நாயகனை
ஆதியந்தம் ஆனவனை ஆனைக்காக் கண்டேனே. 5


  • திருநீற்றுப் பிரகாரம் (விபூதி பிரகாரம்) உண்டான சம்பவம். 
  • ஆதியந்தம் ஆனவனை - தோற்றமும் முடிவும் சிவனே.


பந்தற்செய் சிலம்பியினைப் பாராளச் செய்தானைச்
செந்தீயாய் நிமிர்ந்தானைச் சேர்ந்தறியாக் கையானை
வெந்தீயைக் கையேந்தி வெங்காட்டில் விளையாடும்
அந்தண்பூம் புனலானை ஆனைக்காக் கண்டேனே. 6

  • சிலம்பி - சிலந்தி 
  • வலை அமைத்து வணங்கிய சிலந்தி, அடுத்த பிறவியில் செங்கட் சோழனாய், ஆனைக்காவில் பிறந்தார். யானைகள் நுழையமுடியா மாடக் கோயிலைக் கட்டினார்.
  • சேர்ந்தறியாக் கையன் - கூப்பிய கைகள் இல்லாதவன். நமக்கு ஏதாவது வேண்டுமென்றாலோ அல்லது நம்மைவிட பெரியவரைப் பார்த்தாலோ நாம் கைகளைக் கூப்பி வணங்குவோம். ஆனால் இறைவனிடம் எல்லாம் இருக்கிறது. அவருக்கு வேண்டுவது என்று எதுவும் இல்லை. மேலும் இறைவனே பெரியவன். அவரைவிடப் பெரியவன் வேறு யாரும் இல்லை. ஆதலால் அவர் கைகளைக் கூப்ப வேண்டியது இல்லை. அவர் கைகள் சேர்ந்து இருக்காது. சேர்ந்தறியாக் கையானை என்று மாணிக்கவாசக பெருமான், திரு அம்மானையில் பாடியுள்ளார்.
  • வெங்காடு - இடுகாடு
  • அந்தண்பூம் புனல் - அம் (அழகிய) தண் (குளிர்ந்த) பூம் புணல் (பூப் போல் வாசம் மிகுந்த நீர் - அப்பு லிங்கம்)

பிரமனது பாவத்தைப் போக்கியநற் பெரியோனை
அரவமுடன் அருமலர்கள் பலவணியும் அழகோனைத்
திருவருளைத் தருவோனைத் தென்னானைக் காவானைக்
கருமேக மிடறோனைக் கண்ணாரக் கண்டேனே. 7


  • திலோத்தமையின் அழகில் ஒரு கணம் மனத்தை இழந்த பிரமனுக்கு ஸ்த்ரீ தோஷம் உண்டானது. அதிலிருந்து விடுவிக்கும் பொருட்டு, இத்தலத்தில், அன்னை ஐயனாகவும், ஐயன் அன்னையாகவும் வேடமிட்டு, பிரம்மா முன் சென்றனர். பெண் உருவத்தில் ஐயனைக் கண்ட பிரமன், தோஷத்திலிருந்து விடுபெற்றார்.


மறையாரும் பெரியானை வானதியை முடிந்தானை
நறையூறும் தாள்தூக்கி நடமாடும் வல்லானைச்
சிறையென்றும் நிறைந்தூறும் திருவானைக் காவுறையும்
கறைசேரும் கழுத்தானைக் கண்ணாரக் கண்டேனே. 8

  • மறை - வேதம்; ஆர்தல் - அனுபவிக்கும்
    • வேதம் யாவும் அனுபவிக்கும் பெரியவனை
  • வானதி - வானிலிருந்து தோன்றிய நதி - கங்கை. சத்ய லோகத்தில் இருக்கும் பிரமனின் கமண்டல நீரே கங்கை.
    • முடிதல் - அணிதல்
    • கங்கையை தலையில் அணிந்தானை. 
  • நறை - தேன். 
    • தேன் ஊறும் இனிய காலைத் தூக்கி நடனம் ஆடும் வல்லவனை
    • (மலர்களால் அடியார்கள் சிவனை பூஜிப்பதால், அம்மலர்கள் அவன் பாதத்தில் சேர்கிறது. அதனால் அம்மலர்களின் தேன், சிவன் காலடியில் ஊறுகிறது)
  • சிறை - நீர்நிலை. ஆனைக்காவில் ஜம்புநாதருக்குக் கீழே எப்போதும் ஊற்று ஒன்று, ஊறிக்கொண்டே இருக்கும்.
    • நீர் நிலைகள் என்றும் ஊறும் (வற்றாத) திருவானைக்காவில் உறையும் கறை படிந்த (விடமுள்ளதால்) கழுத்துடையவனைக் கண்ணாரக் கண்டேனே

புனலாரும் சடையானைப் புறத்தார்க்குச் சேயோனைக்
கனலேந்தும் கரத்தானைக் கைத்தூக்கி ஆள்வானை
மனதாரத் துதிப்போர்க்கு வரம்வாரிப் பொழிவானை
அனலாகி எழுந்தானை ஆனைக்காக் கண்டேனே. 9


  • புறத்தார்க்குச் சேயோன் - மாறுபட்ட கருத்து உடையோர்க்கு (வேதத்தை மதிக்காதோர்) எட்டாதவன்.
  • கைத்தூக்கி ஆள்வான் - அபயம் அளிப்பவன் (அபய ஹஸ்தம் தூக்கிய நிலையில் இருக்கும்) அல்லது நமது கையைப் பிடித்து சம்ஸார சாகரத்திலிருந்து நம்மைத் தூக்கி ஆள்பவன்


மும்மூன்று துளைமுன்நின் றேத்திடுவார்க் கருள்வானை
ஐம்மூன்று விழியானை அகிலாண்ட நாயகிக்குச்
செம்மூன்று விரல்தூக்கிச் சிவஞானம் தந்தானை
ஐம்பூதம் ஆனோனை ஆனைக்காக் கண்டேனே. 10
  • மும்மூன்று - ஒன்பது துளைகள் உள்ள சாளரம் வழியாக இறைவனைப் பார்ப்பது மிகவும் விசேஷம்.
  • ஐம்மூன்று - ஐம்முகம் உடைவர். ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்கள். ஆக 15 கண்கள். ஆனைக்கா கோவிலுக்கு அருகில் பஞ்ச முக லிங்கம் (இராஜேஸ்வரம் என்று அந்தக் கோவிலுக்குப் பெயர்).


ஆனைக்கா அண்ணலின் அருள் வேண்டி...

பணிவுடன்,
சரண்யா.