Thursday 30 March 2017

08. அம்பாள்

மலையரசன் தான்செய்த மாதவம்; ஆடற்
கலையரசன் கைப்பிடித்த கற்பகம்; ஆடும்
அலையரசன் மேற்றுயில் அச்சுதன்றன் தங்கை;
நிலையரசி தாளே நிலை.

நிலையரசி - என்றும் அன்னையே அரசி.
நிலை - சத்தியம் / சாஸ்வதம்

Thursday 23 March 2017

07. திருமயிலை சிங்காரவேலவன்

சந்தப் பாடல்.
அடியேனின் முதல் முயற்சி.

சந்தம்:
தனதனன தனதான

திருமயிலை சிங்காரவேலவன்

கயிலைமலை தனிலாடும்
..கருணைமிகு பெரியோனின்
நயனவெழு கதிரோனே
..நளினமுக முருகோனே
இயலிசையில் மகிழ்வோனே
..இமையவர்தம் இறையோனே
மயிலைநகர் உறைவேளே
..மனநிறைவு தருவாயே

கதிரோனே-கதிரிலிருந்து வந்தவன் அல்லது கதிரொத்த பிரகாசம் உடையவன்.



Thursday 16 March 2017

06. ஆலிலை அழகன்

ஆலிலை அழகன்


அறுசீர் விருத்தம்
வாய்பாடு - காய் மா காய் (அரையடி)
ஆலிலையில் துயிலும் அழகோனே
..அறநெறியைத் தழைக்கச் செய்தோனே
நீலமயில் இறகை அணிந்தோனே
..நெஞ்சதனின் உள்வந்(து) அமர்வாயே
கோலவடி வான கோமானே
..கொஞ்சுகுழல் ஊதி மகிழ்வோனே
ஞாலமதைக் காக்கும் திருமாலே
..ஞானநிலை தன்னை அருள்வாயே

05. திருமயிலை - (மயிலாப்பூர், சென்னை) - (பதிகம் 3)

திருமயிலை (மயிலாப்பூர், சென்னை)

திருமுக்கால் அமைப்பு.
வாய்பாடு:
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் மா
திருஞானசம்பந்தரின் "திடமலி மதிலணி.." என்னும் சிறுகுடித் தேவாரத்தின் உந்துதலால் உதித்தவை.

வரமிக அருளிடும் மயிலையில் உறைதரு
கரமதிற் கலையுடை யீரே
கரமதிற் கலையுடை யீருமைத் தொழுபவர்
திரமது பெறுவது திடமே 1

திரம் - வலிமை
திடம் - உறுதி/நிச்சயம்

மதியணி சடையுடை மயிலையில் உறைதரு
நதியினைப் புனைந்திடு வீரே
நதியினைப் புனைந்திடு வீருமை நவில்பவர்
விதியது விலகுதல் விதியே. 2

'விதி' பொருள் முறையே:
விதி - ஊழ் (பழவினை)
விதி - இயல்பு.

மாதொரு புறமுடை மயிலையில் உறைதரு
சோதியாய் ஆழ்ந்தெழுந் தீரே
சோதியாய் ஆழ்ந்தெழுந் தீருமைத் துதிப்பவர்
கோதது குலைந்திடும் உடனே 3

கோது - குற்றம்

மதுநிறை மலர்திகழ் மயிலையில் உறைதரு
மதிலவை மூன்றெரித் தீரே
மதிலவை மூன்றெரித் தீருமை வழிபடச்
சதிகளைத் தகர்த்திடு வீரே 4

மறைகளும் புகழ்ந்திடும் மயிலையில் உறைதரு
பிறைமதி அணிசடை யீரே
பிறைமதி அணிசடை யீருமைப் பேணவே
குறைகளும் கொள்வது குறையே 5

மருங்கடை மதனெரி மயிலையில் உறைதரு
அருங்கழல் இரண்டுடை யீரே
அருங்கழல் இரண்டுடை யீருமை அடைந்திட
பெருங்கலி வல்வினை பிரிவே. 6

வானவர் போற்றிடும் மயிலையில் உறைதரு
மானமர் கரமுடை யீரே
மானமர் கரமுடை யீருமை வாழ்த்திடத்
தானொடு தனதகன் றிடுமே 7

வல்லசு ரனைச்செறு மயிலையில் உறைதரு
கொல்லர வினையணிந் தீரே
கொல்லர வினையணிந் தீருமைக் குவிபவர்
வல்லமை பெற்றிடு வாரே 8

வல்லசுரன் - இராவணன்
செறுதல் - அடக்குதல்
கொல்லரவு - கொல்லும் வல்லமை படைத்த பாம்பு
குவிதல் - வணங்குதல்

மாலயன் அறிகிலா மயிலையில் உறைதரு
காலனைக் கடிந்துதைத் தீரே
காலனைக் கடிந்துதைத் தீருமைப் புகழ்பவர்
சீலராய்ச் சிறந்திடு வாரே 9

மாவிடை ஏறிடும் மயிலையில் உறைதரு
மாவிடந் தனைநுகர்ந் தீரே
மாவிடந் தனைநுகர்ந் தீருமை வணங்கிட
மாவிடர் உறுவது மாய்வே. 10

மாவிடை - பெரிய ரிஷபம்
மாவிடம் - பெரிதாய் திரண்ட விடம்
மாவிடர் - மா இடர் - பேரிடர்.
மாய்வு - மறைவு

இப்பாடல்கள் தேவாரத்தில் திருமுக்கால் என்று குறிப்பிடப்படும் பதிகங்களின் அமைப்பில் அமைந்தவை.

இவற்றை "ஆசிரிய இணைக்குறட்டுறை" என்று கருதலாம்.

முதல் அடியும் மூன்றாம் அடியும் அளவடி; இரண்டாம் அடியும் நான்காம் அடியும் சிந்தடி.

இப்பாடல்களில் இரண்டாம் அடி மீண்டும் மூன்றாம் அடியில் வரும். (இடைமடக்கு).

Friday 3 March 2017

04. திருஆலவாய் (மதுரை) - (பதிகம் 2)

ஆலவாயான் விருத்தம்

கலி விருத்தம்
வாய்பாடு - தேமா கூவிளம்  (அரையடி).

ஞால மேத்திடும் ஞான சீலனே
சூல மேந்திடும் சுத்த சோதியே
கால காலனே கந்தன் தந்தையே
ஆலின் கீழமர் ஆல வாயனே. 1

கான கத்திலே கச்சைக் கட்டியே
வான வர்களும் வாழ்த்த ஆடிடும்
மீன லோசனி  மேவும் நாதனே
ஆனைத் தோலணி ஆல வாயனே. 2

*கச்சை - சதங்கை

கோதி லாதவன் கோல மேனியன்
சோதி யானவன் சோர்வி லாதவன்
தாதி லாதவன் தாபம் தீர்ப்பவன்
ஆதி யானதென் ஆல வாயனே. 3

*கோது - குற்றம்
*கோலம் - அழகு
*தாது - தோற்றம்/மூலம்

ஏற தேறியே எங்கும் வந்திடும்
நீறு பூசிய நீல கண்டனே
பேறு நல்கிடும் பிஞ்சு வெண்மதி
ஆறு சூடிடும் ஆல வாயனே. 4

*ஏறு - காளை மாடு
*ஏற தேறியே - ஏறு அது ஏறியே.

மன்னன் வேண்டிட மாறி ஆடிடும்
இன்னல் நீக்கிடும் இன்ப வெள்ளமே
மின்னல் போலவே மேனி கொண்டொளிர்
அன்ன மேந்திடும் ஆல வாயனே. 5

*பாண்டிய மன்னனுக்காக இடதுக்காலை நிலத்தில் ஊன்றி, வலதுக்காலை மேலே தூக்கி ஆடிய வைபவம்.
*அன்னம் ஏந்திடும் - பலி தேர்ந்து உண்பது.

தீயும் நீரதும் தீண்டி டாமலே
மாயம் செய்தவர் மானம் காத்தவர்
தாயு மானவர் தண்ணி ழல்தரும்
ஆய தேசுடை ஆல வாயனே. 6

*சம்பந்தர், சமணர்களை எதிர்த்து  அனல், புனல் வாதங்களில் வெற்றி பெறுவதற்குக் காரணமானவர், சொக்கநாத பெருமான் என்று பொருள் வர முதல் இரு அடிகளைப் பாடியுள்ளேன்.
*ஆய தேசு - ஆயம் - தங்கம். பொன் போல் ஒளிர்பவன்.

முப்பு ரத்தினை முற்றுங் காய்ந்தவர்
வெப்பு நோயறு வெந்த நீற்றினர்
அப்ப ராளுடைப் பிள்ளை பாடிய
அப்ப னேதிரு ஆல வாயனே. 7

*பாண்டியனின் வெப்பு நோய், சம்பந்தர் பாடிய திருநீற்றுப் பதிகத்தால் தீர்ந்தது. நோயினைத் தீர்த்தவர் சொக்கநாத பெருமான் என்பதால், நோயினை  வெற்றி கொண்டவர் (அறுத்தவர்) ஆலவாய் அண்ணல் என்று பாடியுள்ளேன்.
*வெந்த நீற்றினர் - திருநீறு அணிந்தவர்
*ஆளுடைப் பிள்ளை - ஞானசம்பந்தர்

மாலும் வேதனும் ஆழ்ந்தெ ழுந்துமே
சால நேடியும் சற்றுங் கண்டிலர்
கோல வெண்கடல் தன்னில் தோன்றிய
ஆல முண்டதென் ஆல வாயனே. 8

*ஆல முண்டதென் ஆல வாயனே - ஆலம் உண்டது என் ஆலவாயனே/ ஆலம் உண்ட தென் ஆலவாயனே

மண்ணைத் தூக்கினார் வந்திக் காகவே
புண்ணைத் தாங்கினார் பைம்பொன் மேனியில்
வண்ண மைந்துடை மண்ணு யிர்க்கருள்
அண்ண லேதிரு ஆல வாயனே. 9

*வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தபோது, மக்கள் யாவரும் மண்ணைச் சுமந்து, அணைக்கட்ட முற்பட்டனர். அப்போது வந்தி என்னும் பிரட்டிக்காக, பெருமான், மண்ணைச் சுமந்து, பிட்டைக் கூலியாக அவளிடமிருந்து பெற்று, மன்னனிடம் சரிவர வேளை செய்யாததால் பிரம்பால் அடிபெற்றார். அந்த அடி, அனைவரின் முதுகிலும் விழுந்தது.
*வண்ண மைந்துடை - நிறங்கள் ஒரைந்துடையாய் - மாணிக்கவாசகர் சிவபுராணம் ப்ரயோகம்.

தொண்டை யில்விடம் தேக்கிக் காத்தவர்
மண்டை யோட்டுவெண் மாலை  பூண்டவர்
துண்டத் திங்களை சூடும் சுந்தரர்
அண்டம் ஆளுமென் ஆல வாயனே. 10

*துண்டத் திங்கள் - பிறை நிலா
*சுந்தரர் - அழகானவர். மதுரை பெருமானின் பெயரும் - சுந்தரேசர்.