Monday 11 December 2017

23. வண்ணப் பாடல் - 05 - திருவண்ணாமலை


இன்று (02.12.2017) திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா. அண்ணாமலையார் மீது ஒரு வண்ணப் பாடல்.

அடாணா ராகம்
சதுஸ்ர ஜம்பை தாளம் (7) [தகதகிட (2 1/2) + தகிட (1 1/2) + தகதிமிதக (3)]

சந்தக் குழிப்பு:
தனதனன தான தனதான

பெருவினையில் ஊறி நலியாதே
..பிணிமுதுமை ஏதும் அணுகாதே
அரனடியை நாடி மனமார
..அரைநிமிட மேனும் நினைவேனோ
கரியுரிவை பூணும் மறவோனே
..கதியடைய நீயும் அருள்வாயே
எரிவடிவ மான இறையோனே
..எழிலருணை மேவு பெருமானே

நலிதல் - தேய்தல் / அழிதல்
உரிவை - தோல்
மறவன் - வீரன்
எரி - நெருப்பு

குறிப்பு - இங்கு அணுகாதே, நலியாதே ஆகிய இடங்கள், அணுகாமலும், நலியாமலும் என்ற பொருளில் வருகின்றன. அதாவது, வினையில் நாம் ஊறி நலியாமலும், பிணி, முதுமை போன்ற அவஸ்தைகள் நம்மை அணுகாமலும் இருக்க அரனின் தாளை நாடி, மனமார அவரை ஒரு அரை நாழியாவது நினைக்க மாட்டோமா எனுமாறு....

அண்ணாமலையானுக்கு அரோஹரா

சரண்யா.



Friday 8 December 2017

22. வண்ணப் பாடல் - 04 - திருவானைக்கா

ராகம் - துர்கா
தாளம் - சதுஸ்ர ஏகம் (திஸ்ர நடை)

தய்ய தான தனதனனா

வெள்ளை நாவல் அடியமரும்
..மெய்ய னேவெல் விடையுடையாய்
உள்ள மார உனைநினைவேன்
..உய்யு மாறு தனையருள்வாய்
தெள்ளி யார ணியமுறையும்
..செய்ய மேனி உடையவனே
வெள்ள மாகி நிறைபவனே
..வெய்ய ஊறு களையரிவாய்

வெள்ளை நாவல் - ஆனைக்கா ஸ்தல வ்ருக்ஷம்
உய்யு மாறு - உய்யும் ஆறு (வழி)
தெள்ளி - யானை
தெள்ளி ஆரணியம் - ஆனைக்கா
வெள்ளம் - நீர் (அப்பு ஸ்தலம்)
வெய்ய ஊறுகளை அரிவாய் - கொடிய துன்பத்தை அழிப்பாய்

பாடலைக் கேட்க:

https://drive.google.com/open?id=0By387kvntVlPLTRYcmZYeDBKOU0

21. வண்ணப் பாடல் - 03 - திருச்சிராப்பள்ளி

ராகம் - சிந்துபைரவி தாளம் - விலோம சாபு (மிஸ்ரசாபு வின் reverse) சந்தக் குழிப்பு: தனதன தான தனதன தான தனதன தான தனதான வியனென வாகி வளியொளி யாகி விரிபுன லாகி நிலமாகி ..விதையது வாகி விதியது மாகி விமலசொ ரூப நிலையாகி உயரிய ஞான மறைபொரு ளாகி உயிரொலி யாகி நிறைவோனே ..உனதிரு பாத மகிமையை நாளும் உவகையொ டோத அருள்வாயே அயனரி யாதி அமருல கோரும் அறியவொ ணாத வடிவோனே ..அறுமுக னோடு மிபமுக னோடும் அழகுடன் ஆடும் அயிலோனே செயமுக மீது சிறுநகை யோடு சிரகிரி மேவு பெருமானே ..சிறியனை ஆள நரைவிடை ஏறி விழைவொடு நீயும் வருவாயே விதை - மூலம் / தொடக்கம் விதி - முறை / வழிமுறைகள் உயிரொலி - பிரணவம் அயில் - சூலம் செயமுகம் - செய - வெற்றி அல்லது (செய்ய -> செய) அந்தி வண்ணம் (சிவப்பு நிறம்) தவழும் முகம் விழைவொடு - மகிழ்வொடு பாடலைக் கேட்க: https://drive.google.com/open?id=0By387kvntVlPSDBYSXViZjFFLWM சரண்யா

Friday 1 December 2017

20. வண்ணப் பாடல் - 02 - திருமயிலை

ராகம் - நளினகாந்தி தாளம் - ஆதி சந்தக் குழிப்பு: தனதன தனதன தனதான விரிசடை யினிலொலி நதியோடு ..மிளிரழ குடைமதி புனைவோனே கரமதி லொளிமிகு மழுவோடு ..கலையையும் அனலையும் உடையோனே நரையெரு தினிலம ரதிதீரா ..நளினம துரமுக உமைபாகா
திருவடி நிழலினை அருள்வாயே
..திருமயி லையிலுறை பெருமானே பதம் பிரித்த வடிவம் : விரிசடையினில் ஒலிநதியோடு ..மிளிரழ(கு) உடைமதி புனைவோனே கரமதில் ஒளிமிகு மழுவோடு ..கலையையும் அனலையும் உடையோனே நரை எருதினில் அமர் அதிதீரா ..நளின மதுரமுக உமைபாகா திருவடி நிழலினை அருள்வாயே
திருமயிலையில் உறை பெருமானே

சரண்யா.