Tuesday 26 June 2018

44. திருவான்மியூர் (பதிகம் 16)

அறுசீர் விருத்தம்

விளம் விளம் மா (அரையடி)

புற்றினுள் தோன்றிய முனிவன்
..போற்றிட அருளிய சிவனே!
நற்றவம் புரிபவர்க்(கு) உவந்து
..நலமிக ஈன்றிடும் தருவே!
பற்றிட நின்னடி அன்றிப்
..பரமனே! ஒருபிடிப்(பு) அறியேன்.
மற்றொரு பிறப்பினி வேண்டேன்
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 1

புற்றினுள் தோன்றிய முனிவன் - வால்மீகி.

சென்னியில் முளைமதி வைத்தோய்
..சீறராத் திகழ்மணி கண்டா
கன்னியை இடப்புறம் கொண்டோய்
..கனலுகந்(து) ஆடிடும் செல்வா
இன்னொரு பிறவியைத் தந்(து)இவ்
..எளியனை வாட்டிட வேண்டா
வன்னியின் கீழமர் வேந்தே
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 2

வன்னி மரம் - திருவான்மியூர் ஸ்தல விருக்ஷம்.

தீட்சிதர் வேண்டிட மேற்குத்
..திசையினைப் பார்த்தமர்ந் தோனே
சாட்சியாய் இருந்திடும் அசலா
..சங்கடம் தீர்த்திடும் சதுரா
காட்சியைத் தந்தினி இந்தக்
..கடையனை ஆட்கொளு வாயே
மாட்சிமைப் பொருந்திய மணியே
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 3

தீட்சிதர் - ஶ்ரீ அப்பய்ய தீட்சிதர். வேளச்சேரியில் இருந்த இந்த மகான், அனுதினமும் திருவான்மியூர் வந்து மருந்தீசனை வழிபடுவது வழக்கம். ஒரு நாள் மழை பலமாகப் பொழிந்தது. வான்மியூர் வெள்ளத்தில் மிதந்தது. வேளச்சேரியில் இருந்து வந்த தீட்சிதர், கிழக்கு வாசலை அடையமுடியாமல் தவிர்த்தார்கள். கிழக்கு முகமாக இருக்கும் மருந்தீசனை தரிசிக்க முடியவில்லையே என வருந்தினார். அவரது மன வருத்தத்தை அறிந்த ஈசன், அன்றிலிருந்து மேற்கு முகமாக மாறி அமர்ந்தார். இறைவனை வணங்கி மகிழ்ந்தார்.

அகத்தியர் வணங்கிட அவருக்(கு)
..அரும்பெரும் தத்துவம் உரைத்தோய்
தகத்தகத் திமிதிமி என்று
..தாண்டவம் ஆடிடும் அரசே
சகத்தனில் மீண்டுமித் தமியேன்
..சன்மமெ டுத்திடா(து) அருள்வாய்
மகத்துவம் வாய்ந்தநற் கோவே
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 4

அகத்திய முனிக்கு, இறைவன், மூலிகை மருந்து பற்றிய ஞானத்தை அருளிய தலம் திருவான்மியூர்

திரிபுர சுந்தரி பாகா
..தேனுவிற்(கு) அருளிய தேசா
திரிபுரந் தனையெரி தீரா
..தேனினும் இனியஆ ரமுதா
பரிபுரம் அணிபதம் தன்னைப்
..பாவியென் முடிமிசை இடுவாய்
மருவலர் அசுரரை மாய்த்தோய்
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 5

திரிபுர சுந்தரி - தலத்து இறைவி.

தேனு - காமதேனு. தேவலேகப் பசுவான காமதேனுவால், ஒருமுறை சரியாக பால் தர இயலவில்லை. வசிஷ்டர், பூலோகத்தில் ஒரு காட்டுப் பசுவாய்ப் பிறப்பாய் என்று சாபமிட்டார்.

திருவான்மியூரில் அலைந்து கொண்டிருக்கும் போது, வால்மீகி முனிவர் துறத்திய போது, அவரைக் கண்டு அஞ்சி ஓடியது. அதன் கால் இடறிய இடத்தில் ஒரு சிவலிங்கம் இருந்தது. அதிலிருந்து அந்தப் பசுவிற்கு, பால் சுரக்கத் தொடங்கியது. இறைவனுக்கு இத்தலத்தில் பால்வண்ண நாதர் என்றும் ஒரு பெயர்.

சதியினை இடப்புடை வைத்துச்
..சதிருகந் தாடிடும் தலைவா!
விதியின தொருசிரங் கொய்தோய்!
..வெள்விடை ஏறிடும் தேவா!
கதியென உன்கழல் பிடித்தேன்
..கவலைகள் தீர்த்திடு வாயே
மதுநிறை மலரணி மன்னா!
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 6

புடை - பக்கம்
சதிர் - நடனம்
விதி - பிரம்மா

அரியயன் தேடியும் காணா
..அருட்பெருஞ் சோதியே அரனே
சுரிகுழல் மடந்தையின் பதியே
..தொல்வினை யாவையும் களைந்து
கரிசுடை யேனெனைக் காப்பாய்
..கடமுனிக் கருளிய கரும்பே
வரமிக அருளிடும் இறைவா
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 7

கரிசு - அழுக்கு
கடமுனி - அகத்தியர் (கடம் - குடம்)

ஆதியும் அந்தமும் இல்லா
..அருளுடை நீண்டொளிப் பிழம்பே
பாதிவெண் மதியணி சடையா
..பார்த்தனுக் கருளிய வேடா
கோதிலி குணமிலி எந்தாய்
..கொடியனென் பிழைபொறுப் பாயே
மாதொரு பாலுடை மகிபா
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 8

அறைநிறை கழலணி அழகா
..அழலுடை அரவணி வீரா
கறைநிறை மிடறுடைக் கனியே
..கலைமழு கனலணி கரத்தோய்
பிறைமதி உவந்தணி சடையா
..பிணிதனைக் களைந்திடு வாயே
மறைபுகழ் நிருமல ஈசா
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 9

அறைநிறை கழல் - ஓசை நிறைந்த சிலம்பு
அழலுடை அரவு - நஞ்சு நிறைந்த பாம்பு
கலை - மான்

அலைமலி கங்கையைத் தாங்கும்
..அவிர்சடை யுடைப்பெரு மானே!
தலையினில் மகிழ்வுடன் பலிதேர்
..தலைவ!நின் திருவடி ஒன்றே
நிலையெனக் கருதிடும் அடியார்
..நிறைவினை அடைந்திட அருள்வாய்!
மலைமகள் மருவிடும் தேகா
..வான்மியூர் தனிலுறை மருந்தே! 10

நிலை - கதி
நிறைவு - முக்தி

பதிகம் நிறைவுற்றது.

பணிவுடன்,
சரண்யா

Thursday 14 June 2018

43. திருமால் பதிகம் (பிரபந்தம் 3)

தலம் - பொது

வஞ்சித்துறை

வாய்பாடு - விளம் விளம்

மார்கழிச் செல்வனைக்
கார்முகில் வண்ணனை
ஓர்பவர் வாழ்வினில்
சேர்வது நன்மையே. 1

ஓர்பவர் - வணங்குபவர் (follower)
மாதங்களில் மார்கழியாய் இருப்பதாய்க் கண்ணன் கீதையில் சொல்லியுள்ளார்

பையரா வில்துயில்
ஐயனை ஏத்துவீர்
வையகம் தன்னிலே
உய்யவோர் வழியதே 2

பை அரா - விடம் நிறைந்த பாம்பு
ஏத்துதல் - தொழுதல்

கன்றினம் மேய்ப்பனைக்
குன்றெடுத் தாள்வனை
மன்றுவோர் வாழ்வினில்
என்றுமே இன்பமே 3

குன்றெடுத்து ஆள்வன் - குன்றெடுத்துக் காத்தவன்
ஆளுகை / ஆளுதல் - காத்தல்
மன்றுதல் - வணங்குதல்

மாயனை அடியவர்
நேயனை அழகொளிர்
ஆயனை என்றுமே
வாயினால் பாடுமே 4

ஆலிலை தன்னிலே
கோலமாய்த் துயில்பவன்
காலினைப் பற்றுவோம்
சீலமாய் வாழவே 5

வம்பலர் தூவியே
நம்பியை நித்தமும்
கும்பிடு வார்க்கொரு
வெம்புதல் இல்லையே 6

வம்பு - தேன்
அலர் - மலர்
வம்பலர் - தேன் நிறைந்த மலர்
வெம்புதல் - துயர் அடைதல்

சங்கொடு சக்கரம்
அங்கையில் ஏந்திடும்
பங்கயக் கண்ணனே
மங்களம் அருள்வனே 7

மல்லரை மாய்த்தவன்
வில்லினை ஒசித்தவன்
வல்லமை போற்றிட
தொல்லைகள் இல்லையே 8

ஒசித்தல் - ஒடித்தல் (உடைத்தல்)

மருப்பொசித்த மாதவன் தன்... ஆண்டாள் - நாச்சியார் திருமொழிப் பாடல்

அத்தியைக் காத்தவன்
சத்தியன் அவன்மிசைப்
புத்தியை வைப்பவர்
முத்தியைப் பெறுவரே 9

பூமகள் கேள்வனின்
கோமள மானதோர்
நாமமே நவிலவே
சேமமே சேருமே 10

பதிகம் நிறைவுற்றது.

பணிவுடன்,
சரண்யா

Tuesday 5 June 2018

42. திருச்சிராப்பள்ளி முத்துக்குமார ஸ்வாமி பதிகம்

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ஸ்ரீ முத்துக்குமார சுவாமியை எண்ணி எழுதிய வெண்பாக்கள்.

விநாயகர் துதி:

தீரா வினையாவுந் தீர்க்கும் கயமுக
வீரா! சிராப்பள்ளி மேவும் குமரனின்
சீலம் புகழச் சிறியேனுக்(கு) உன்னிரு
காலால் அருளுக காப்பு

தண்டத்தை ஏந்திய தாண்டவன் றன்மகனே
அண்டத்தை ஆள்வோனே ஆரமுதே எண்டிசையோர்
கொண்டாடும் முத்துக் குமரா எனக்குன்றன்
தண்டா மரைப்பாதம் தா. 1

அழகன் குமரனை அன்றாடம் போற்றப்
பழவினை யாவும் பறைவது திண்ணம்
தொழுதிடும் அன்பர் துயரைக் களையும்
பழனிவளர் பாலனைப் பாடு. 2

கரமதில் வேலுடைக் கந்தனே! நின்னைக்
கருதிடும் அன்பர் கடுந்துயர் தீர்ப்பாய்;
வருவினை யாதையும் மாய்ப்பாய்; குமரா!
வரமிக ஈவாய் மகிழ்ந்து. 3

அவனது தாளை அடையும் அடியார்
அவலம் அழிவதில் ஐயம் இலையே
சிவன்றன் குமரனைச் சீராய்த் துதிக்க
கவலைகள் தீர்ந்திடும் காண். 4

அடியின் அழகை அகமுவந்து பாட
வடிவே லுடனே வருவான் அருள்வான்
குடியைப் புரக்கும் குமரன் அருளால்
நொடியில் அழிந்திடுமே நோய். 5

திருமால் மருகனே; தீந்தமிழ் ஏத்தும்
குருவே; குமரனே; கோதிலா வள்ளி
மருவும் அழகனே; வானவர் கோவே;
வருவாய்; வரமருள் வாய். 6

கந்தன் பெயரைக் கருத்தினில் வைத்திடச்
சிந்தைக் கவலை சிதைந்திடுமே - வெந்துயர்
தன்னைக் களையும் சரவணன்; வானவர்
மன்னன்; தருவான் வரம். 7

கயமுகனைப் போரினில் கண்டித் தருள்செய்
கயமா முகனிளவால்! கந்தா!என் முன்னே
நயமுடனே நீவந்தால் நன்மைகள் சேரும்!
பயமதுவாய் ஓடும் பயந்து. 8

கயமாமுகன் - கஜமுகாசுரன்
அடுத்து வரும் கயமாமுகன் - விநாயகன்,
இளவால் - இளவல் - தம்பி. விளிக்கும் (அழைக்கும்) போது - இளவால் என்று வரும்.

சிங்க முகனைச் செருவில் அழித்தவன்றன்
தங்கப் பதமிரண்டைச் சாரும் அடியார்க்கு
மங்காப் புகழும் வளமும் நலன்களும்
நங்கோ னருள்வான் நயந்து. 9

சூரனைப் போரினில் தோல்வி யுறச்செய்த
தீரனை ஈசனின் செல்வக் குமரனை
வீரனைக் கற்குன்று மேவும் கருணையனைப்
பூரணனை எந்நாளும் போற்று. 10

சூரன் - சூரபத்மன்.
கற்குன்று - கற்களால் ஆன மலை. - திருச்சிராப்பள்ளி.

பதிகம் நிறைவுற்றது.