Friday 23 February 2024

81. வண்ணப் பாடல் - சிக்கல்

தத்த தனதான தத்த தனதான 

    தத்த தனதான தனதான 


பித்த மொடுவீளை சுற்று வளியோடு 

    பெட்ட கமதான உடல்மீதே

பித்த னெனவாகி முற்றி மனமாடி 

    பெற்பு நிலைமாறி உழலாதே 


பத்தி நெறிபேணும் உத்த மர்களோடு

    பத்தி செயும்வாழ்வை அடைவேனோ 

பத்ம மணிபாதம் நித்தம் மறவாது 

    பற்றும் நினைவான தருள்வாயே 


முத்த னையமூரல் அத்தி மகளோடு 

    முற்று மகிழ்வோடு வருவேளே 

முக்க ணிறையோனும் மெச்ச உபதேசம் 

    மொய்த்த குருநாத முருகோனே 


தித்தி மொழி வேலை ஒத்த விழிமாது 

    சித்ர வளிநாத மயிலேறித் 

திக்கு முழுதாளும் வித்த கவிநோத

    சிக்க லுறையாறு முகவேளே 

     

பதம் பிரித்த வடிவம் 

பித்தமொடு ஈளை சுற்று வளியோடு 

    பெட்டகம் அதான உடல்மீதே

பித்தன் எனவாகி முற்றி மனம் ஆடி 

    பெற்பு நிலைமாறி உழலாதே 


பத்தி நெறிபேணும் உத்தமர்களோடு

    பத்தி செயும்வாழ்வை அடைவேனோ 

பத்ம மணிபாதம் நித்தம் மறவாது 

    பற்றும் நினைவான(து) அருள்வாயே 


முத்தனைய மூரல் அத்தி மகளோடு 

    முற்று மகிழ்வோடு வருவேளே 

முக்கண்  இறையோனும் மெச்ச உபதேசம் 

    மொய்த்த குருநாத முருகோனே 


தித்தி மொழி வேலை ஒத்த விழிமாது 

    சித்ர வளிநாத மயிலேறித் 

திக்கு முழுதாளும் வித்தக விநோத

    சிக்கல் உறை ஆறு முகவேளே 

     

பெற்பு - இயல்பு 

தித்தி - இனிய 

Tuesday 20 February 2024

80. திருத்தணிகை - வண்ணப் பாடல்

தனதனன தனன தந்தத் தனதான

பவசலதி தனில ழுந்தித் தொலையாதே
பரசமய உணர்வி லொன்றிக் கிடவாதே
சிவமுறையு முனது செம்பொற் கழலோதிச்
சிறியனென திகழ்வு துஞ்சித் தெளிவேனோ

குவடிடிய அயில்வி டுஞ்சத் துவரூபா
குறமகளை இனிது கொஞ்சிக் குழைவோனே
தவமுனிவ ரமரர் சிந்தைக் கினியோனே
தணிகைமலை மருவு கந்தப் பெருமானே

பதம் பிரித்த வடிவம்:

பவ சலதி தனில் அழுந்தித் தொலையாதே
பரசமய உணர்வில்‌ ஒன்றிக் கிடவாதே
சிவம்‌ உறையும் உனது செம்பொற் கழலோதிச்
சிறியன் என(து‌) இகழ்வு துஞ்சித் தெளிவேனோ

குவ(டு) இடிய அயில் விடும் சத்துவ ரூபா
குறமகளை இனிது கொஞ்சிக் குழைவோனே
தவமுனிவர் அமரர் சிந்தைக்(கு) இனியோனே
தணிகைமலை மருவு கந்தப் பெருமானே