Tuesday 2 May 2017

10. திருநல்லம் (கோனேரிராஜபுரம்) - (பதிகம் 5)

அடியேனின் அடுத்த பதிகம் -
திருநல்லம். தற்போது, கோனேரிராஜபுரம் என்று அழைக்கப்படுகிறது.

கலி விருத்தம்.
மா மாங்காய்  (அரையடி)

அமுதத் துளிவீழ்ந்த அரச வனமேவும்
இமையோர் பணிந்தேத்தும் இடபக் கொடியோனே
உமையோ டமர்வோனே உவந்து நடமாடி
நமையுங் காப்பாயே நல்லத் துறைவோனே. 1

அமுதத் துளிவீழ்ந்த அரச வனம் - பத்ராஷ்வத்த வனம் என்று பவிஷ்ய  புராணத்தில், உத்தர காண்டத்தில்  இத்தலம் போற்றப்படுகிறது. பத்ரம் - தங்கம்.

அஷ்வத்தம் - அரசு.

அரச மரங்கள் நிறைந்த காடு. ப்ரளயத்தின் போது, ஈசன் அமுத கலசத்தை அம்பால் சாய்த்த போது, சில துளிகள் இத்தலத்தில் வீழ்ந்தது. அதனால் பொன்னிறமாக காட்சி அளித்தது.

பூமித் தாயன்று புனித நீர்கொண்டு
சேமம் உறவேண்டிச் சிறப்பாய்த்  துதிசெய்ய
ஏமம் தந்தோனே இனிதின் இனிதான
நாமம் பலகொண்ட நல்லத் துறைவோனே. 2

பூமி தேவி, ஹிரண்யாக்ஷனிடம் சிக்கி அல்லல் பட்டு, விஷ்ணுவால் காப்பாற்றப் பட்டதும் இங்கு வந்து சிவனை (உமாமகேஸ்வரரை)  வணங்கி நலம் பெற்றாள். பூமித் தீர்த்தம் என்று அன்னை உண்டாக்கிய குளம் ஒன்று  இக்கோவிலில் உள்ளது.

நீல கண்டத்தில் நெடிய அராச்சூடும்
கோல வடிவான கொன்றைச் சடையோனே
ஆல நீழற்கீழ் அறங்கள் உரைப்போனே
ஞாலங் காப்போனே நல்லத் துறைவோனே. 3

அரா - பாம்பு.

எட்டுத் திசையோரும் ஏத்தும் எழிலோனே!
பிட்டுப் பெறவேண்டிப் பிரம்பால் அடிபெற்றோய்!
மட்டு மலர்மாலை மார்பில் அணிவோனே!
நட்டம் பயில்வோனே! நல்லத் துறைவோனே! 4

எட்டுத் திக்பாலகரும், திருநல்லத்தைச் சுற்றி அவரவர்களுக்கு உரியதான திக்குகளில் கோவில் அமைத்து உமாமகேஸ்வரரை அந்தந்தக் கோவிலில் வழிபட்டனர்.

1. நாகம்பாடி (கிழக்கு - இந்திரன்)
2. அன்னியூர் (தென்கிழக்கு - அக்னி)
3. கருவிலி (தெற்கு - யமன்)
4. வயலூர் (தென்மேற்கு - நிருதி)
5. சிவனாரகரம் (மேற்கு - வருணன்)
6. வைகல் (வடமேற்கு - வாயு)
7. புதூர் (வடக்கு - குபேரன்)
8. நல்லாவூர் (வடகிழக்கு - ஈசானன்)

ஆகிய கோவில்கள்.

வேத கானத்தை விழைந்து மகிழ்வோனே
பேத மில்லோனே பெருமை உடையோனே
போதந் தருவாயே புன்மை தீர்ப்பாயே
நாத மயமான நல்லத் துறைவோனே. 5

விழைதல் - விரும்புதல்
பேதம் - வேறுபாடு / மாற்றம்
போதம் - ஞானம்.
புன்மை - துன்பம்.

தஞ்சம் அடைவோரைத் தாங்கி அருள்வாயே 
வஞ்சம் தீர்ப்பாயே வளங்கள் சேர்ப்பாயே
கொஞ்சும் அலைசூழ்ந்த கோலக் கடற்றந்த
நஞ்சு தனையுண்ட நல்லத் துறைவோனே. 6

*வஞ்சம் - கபடம்/சிறுமை
*கொஞ்சும் அலைசூழ்ந்த கோலக் கடல் - பாற்கடல். திருமால், பாம்பணையில் அங்கு துயில்வதால், அவரைக் கொஞ்சி அலைகள் விளையாடுகின்றன என்று கற்பனை செய்து எழுதியது.

மானும் சுடுதீயும் மழுவும் இவையேந்திக்
கானந் தனிலாடும் கச்சைக் கழலோனே
வானும் மண்ணெங்கும் வளர்செஞ் சுடரோனே
ஞானம் அருள்வாயே நல்லத் துறைவோனே. 7

கானம் - காடு.
கச்சை - சதங்கை.

இலங்கை யரையன்றன் இறுமாப் பழித்தோனே
கலங்கி யவன்செய்த கானம் கேட்டோனே
சலங்கை தனைக்கட்டிச் சதிரா டுங்கோவே
நலங்கள் அருள்வாயே நல்லத் துறைவோனே. 8

கதியென் றடைவோர்குக் கருணை புரியாயே;
விதியின் சிரங்கொய்தோய்! வில்வத் தொடையோனே!
சதியை இடங்கொண்டு சதியோ டிசைந்தாடும்
நதியைப் புனைந்தோனே! நல்லத் துறைவோனே!. 9

விதி - பிரமன்.
சதி - பார்வதி.
சதி - தாளம் (ஜதி)

நிமிர்புன் சடைமேலே நிலவை அணிவோனே 
குமிண்புன் னகைகொண்ட கோவின் கழற்பேணாச் 
சமணர் முதலார்க்குச் சற்றும் அருளானே
நமனைக் கடிந்தோனே நல்லத் துறைவோனே. 10

குமிண் புன்னகை கொண்ட கோ - குனித்த புருவமும் பாடலில் வருவது போல - குமிண் சிரிப்பு.

சமணர் முதலார்க்கு - சமணர் முதலான நாத்திகர்களுக்கு.

அருளானே - அருளாதவனே.

நமன் - எமன்.