Tuesday 23 July 2019

63. வண்ணப் பாடல் - 16 - திருநெல்வேலி (தாமிர சபை)

ராகம் - கானடா
தாளம் - மிஸ்ர சாபு

தத்த தத்த தனதான

முப்பு ரத்தை விழியாலே
..முற்ற ழித்த மறவோனே
அப்பு மத்தம் அணிவோனே
..அற்ப னுக்கும் நிழல்தாராய்
வெப்பொ ழித்த இறையோனே
..வெற்பி றைக்கு மருகோனே
செப்ப வைக்குள் நடமாடீ
..சித்தொ ருக்கம் அருளாயே

அப்பு - நீர் (கங்கை)
மத்தம் - ஊமத்த மலர்

வெப்பொழித்த - வெப்பு = ஒழித்த - கூன் பாண்டியனின் வெப்பு நோய் ஒழிக்க சம்பந்தருக்கு அருள் செய்த சொக்கநாத பெருமான்.

வெற்பிறை - வெற்பு + இறை - வெற்பு - மலை. மலையரசன் - இமவான்.

செப்பவை - செப்பு = அவை - தாமிர சபை - திருநெல்வேலி தாமிர சபை.

சித்தொருக்கம் - சித்து + ஒருக்கம் - மன ஒருமைப்பாடு.

பாடலைக் கேட்க
https://drive.google.com/open?id=1Ll9cQXs75yHx1_gfcWTfcKMeAGKg25Zw

சரண்யா

Monday 22 July 2019

62. திருவண்ணாமலை (பதிகம் 26)

கலி விருத்தம்

வாய்பாடு - மா x 4

1.

விடையே றிவரும் விமலன் சுடலைப்
பொடிபூ சியவன் புனிதன் கரிய
விடமார் மிடற்றன் வினைதீர்ப் பவன்மெய்
அடியார்க் கருள்வான் அருணா சலனே.

2.

என்போ டாமை அரவம் அணிவான்
முன்பின் இல்லான் மூலன் ஆவான்
இன்ப வடிவன் இன்னல் தீர்ப்பான்
அன்பர்க் கருள்வான் அருணா சலனே

3.

கண்டம் கரியன் கண்மூன் றுடையன்
பண்டை வினையைப் பாழ்செய் பெரியன்
வண்டார் குழலி மருவும் நாதன்
அண்டத்(து) இறைவன் அருணா சலனே

4.

வானோர் துயரை மாட்டும் பெருமான்
மானும் மழுவும் வண்கை ஏந்திக்
கானத் தினிலே களிப்பாய் நடிக்கும்
ஆனை உரிபூண் அருணா சலனே

வண்கை - அழகிய கை
கானம் - காடு
நடித்தல் - நடனமாடுதல்
மாட்டுதல் - அழித்தல்

5.

செய்ய நிறத்தன் சேயோன் தாதை
வெய்யோன் பல்லைத் தகர்த்த வீரன்
கையில் பிரம கபாலம் ஏந்தி
ஐயம் தேர்வான் அருணா சலனே

செய்ய நிறத்தன் - சிவந்த நிறம் கொண்டவன்
சேயோன் தாதை - முருகன் தாதை
வெய்யோன் - சூரியன். சூரியனின் பல்லைத் தகர்த்தவன். தக்ஷனின் யக்ஞத்தில் தக்ஷனோடு சேர்ந்து சிவனை, சூரியனும் அவமதித்தான். அதனால் வீரபத்திரர்(சிவன் ஸ்வரூபம்) சூரியனின் பல்லை உடைத்தார்.
கையில் பிரமனது (ஐந்தாவது தலையைக் கொய்து ) கபாலத்தை வைத்துக்கொண்டு பிக்ஷை ஏற்பார் சிவன்.

6.

இம்மை மறுமை இயக்கம் களைவான்
செம்மை அருளும் சீரார் கரத்தன்
எம்மை ஆளும் எழிலார் ஈசன்
அம்மை அப்பன் அருணா சலனே

சீர் ஆர் - சீர் நிறைந்த கரம் உடையவன்.. சிறப்பு மிகு கரம் கொண்டவன்

7.

விரல்மூன் றுயர்த்தி விருட்சத் தடியில்
குருவாய் அமர்வோன் கொன்றைச் சடையோன்
அரியும் அயனும் அலைந்தும் அறியா
அரிய சோதி அருணா சலனே

8.

நரையே றுமிசை அமரும் நல்லான்
புரமூன் றினைவெண் பொடியாக் கியவன்
பரையோர் பாகன் பகவன் படமார்
அரவம் அணிவான் அருணா சலனே

நரை - வெள்ளை
ஏறு - ரிஷபம்
மிசை - மேல்

புரமூன்று - திரிபுரம்
வெண்பொடி - சாம்பல்

பரை - பராசக்தி

9.

மணியார் கண்டன் மலையான் மருகன்
பணியார் அறியா பரமன் நிமலன்
நணியார்க் கருள்வான் நம்பன் நக்கன்
அணியார் சடையன் அருணா சலனே

மணியார் கண்டன் - விடம் உண்டதால் கறுத்த கழுத்துடையவன்.. கருநிற மணி போன்ற கழுத்துடையவன்.
மலையான் - பர்வத ராஜன்
மருகன் - மருமகன்
பணியார் அறியாப் பரமன் - தன்னை வணங்காதோரால் அறிய முடியாத பரமன்
நிமலன் - தூயவன்
நணியார் - அருகில் வருவோர் அவர்களுக்கு அருள்பவன்
நம்பன் - நம்முடையவன்
நக்கன் - திகம்பரன்
அணியார் சடையன் - அழகிய சடை உடையவன்

10.

கண்ணார் நுதலான் கயிலை மலையான்
நண்ணார் புரத்தை நகையால் எரித்தான்
உண்ணா முலையாள் உடையான் எழில்சேர்
அண்ணா மலையான் அருணா சலனே

பதிகம் நிறைவுற்றது.

சரண்யா

Thursday 4 July 2019

61. குறும்பா - பொது (பதிகம் 25)

அனைவருக்கும் வணக்கம்.

குறும்பா வகை ஒன்றில் சிவபெருமான் மீது ஒரு பதிகம் எழுதியுள்ளேன்.

தலம் - பொது

ஐந்து அடிகள்.
அடிதோறும் வெண்டளை பயிலும்.
அடிகள் 1,2,5 - 3 சீர்கள்
அடிகள் 3,4 - 2 சீர்கள்
1,2 ஆம் அடிகள் முதல் சீர் மோனை
3,4 ஆம் அடிகள் முதல் சீர் மோனை
1,3,5 - முதல் சீரில் எதுகை.
1,2,5 - ஈற்றுச் சீர் இயைபு
3,4 - ஈற்றுச் சீர் இயைபு

வாய்பாடு:

காய் காய் மா
காய் காய் மா
காய் காய்
காய் காய்
காய் காய் மா

1.
கையினிலே ஏந்திடுவான் ஓடு
காதினிலே சூடிடுவான் தோடு
பையரவம் ஆர்கண்டன்
பார்புகழும் கார்கண்டன்
தையலொரு பாகனைநீ நாடு

2.
சென்னியிலே வைத்திடுவான் ஆறு
தேகமதில் பூசிடுவான் நீறு
வன்னியினை ஏந்திடுவான்
மன்றமதில் ஆடிடுவான்
மன்னுபுகழ் ஈசனெனக் கூறு

3.
மாலயனும் காணவொணாச் சோதி
வைய(ம்)முத லானவற்றிற்(கு) ஆதி
சீல(ம்)மிகத் தந்திடுவான்
தீவினைகள் தீர்த்திடுவான்
நீலமணி கண்டனெனப் போதி

போதி - போதித்தல்

4.

ஆனைமுகன் ஆறுமுகன் தாதை
அன்பருக்குக் காட்டிடுவான் பாதை
ஞானமருள் மௌனகுரு
நன்மையருள் தேவதரு
ஏனனவன் நீக்கிடுவான் சூதை

ஏனம் - பன்றி, பன்றிக்கொம்பை, சிவன் ஆபரணமாய் அணிந்துள்ளார். அதனால் ஏனன் என்னும் பெயர் அவர்க்கு.
சூது - பிறப்பு முதலிய துன்பம்

5.
அப்பனுடை வாகனமாம் மாடு
ஆடரங்காம் வெள்ளைநிறக் காடு
அப்புறையும் அஞ்சடையன்
அக்கரமோர் ஐந்துடையன்
ஒப்புயர்வில் லாதவனைப் பாடு

வெள்ளைநிறக் காடு - திருவெண்காடு

6.
அந்தகனின் கர்வமழித் தானே
ஆதவனின் பல்லையுடைத் தானே
சுந்தரனின் தோழனவன்
தூயசெழுஞ் சோதியவன்
சந்திரனை உச்சியில்வைத் தானே

7.
நாற்றிசையும் ஏத்துமுயர் நாமம்
நவில்வார்க்குத் தந்திடுமே ஏமம்
கூற்றுதைத்த பெம்மானைக்
கோலமிகு எம்மானைப்
போற்றிமகிழ் வார்பெறுவார் சேமம்

8.
அற்புதங்கள் ஆற்றுகின்ற மாயன்
அன்னைசிவ காமிமகிழ் நேயன்
அற்பனெனைக் காத்திடுவான்
அஞ்செலெனக் கூறிடுவான்
பொற்சபையில் ஆடுமுயர் தூயன்

9.

நான்மறையும் ஏத்துகின்ற நாதன்
நாண்மலர்கள் ஆர்ந்திடும்பொற் பாதன்
பான்மதிசேர் செஞ்சடையன்
பார்வதியோர் பாலுடையன்
மான்மழுவை ஏந்துமுயர் வேதன்

10.

தில்லையிலே ஆடிடுவான் கூத்து
சீர்பெறுவாய் நீயதனைப் பார்த்து
கல்லாலின் கீழமர்வான்
சொல்லாமல் சொல்லிடுவான்
எல்லையிலா ஈசனைநீ ஏத்து

பதிகம் நிறைவுற்றது.

நமச்சிவாய வாழ்க.

அன்புடன்,
சரண்யா