Friday 24 November 2017

19. திருநறையூர் (நாச்சியார்கோவில்) (பிரபந்தம் 2)

திருநறையூர் (நாச்சியார்கோவில்)
[கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது]

நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா

காய் காய் காய் காய்

மூவுலகை ஈரடியால் முன்பொருநாள் அளந்தானை;
மாவலியின் கருவத்தை மறித்தானை; இடைமேய்க்கும்
கோவலனை; இன்னருளைக் கொடுப்பானை; மாமருவும்
தேவனையென் ஆரமுதைத் திருநறையூர்க் கண்டேனே. 1

மறித்தல் - அழித்தல்
மா - திருமகள்

கீதையினை அருள்செய்த கேசவனைக் குழலூதும்
யாதவனைக் கோபியர்கள் யாவர்க்கும் கோமானைக்
கோதையருள் பாமாலை கொண்டாடும் மாதவனைச்
சீதையவள் நாயகனைத் திருநறையூர்க் கண்டேனே. 2

நீர்மல்கும் கடலைத்தன் நிலையாகக் கொண்டானைப்
பேர்மல்கும் பெரியானைப் பேரொளியாய்த் திகழ்வானைக்
கார்மல்கும் மேனியனைக் கதிராழி கொண்டானைச்
சீர்மல்கும் சீதரனைத் திருநறையூர்க் கண்டேனே. 3

கடல் - பாற்கடல்
நிலை - இருப்பிடம்

மாவாயைப் பிளந்தானை மத்தகரி கொன்றானை
மூவானை முதலானை முன்நடுபின் இல்லானை
நாவாரப் பறைவோர்க்கு நல்லருளைத் தருவானைத்
தேவாதி தேவனைநான் திருநறையூர்க் கண்டேனே. 4
மா - குதிரை
மத்தகரி - மத யானை (குவலயாபீடம்)
பறைதல் - புகழ்தல்

விண்ணவர்கள் யாவர்க்கும் வேயமுதம் தந்தவனை
எண்ணவொணா எழிலானை ஏற்றமெமக் களிப்பானைப்
பண்ணிசைக்கும் பாவலனைப் பார்த்தனவன் சாரதியைத்
திண்ணியதோள் உடையானைத் திருநறையூர்க் கண்டேனே. 5

கானகத்தில் நடந்தானைக் கடுந்துயரங் கொண்டானைத்
தானவர்கள் யாவரையும் சாய்த்தானைத் துதிசெய்த
வானவரைக் காத்தானை வஞ்சுளையை மணந்தானைத்
தீனனெனைக் காப்பானைத் திருநறையூர்க் கண்டேனே. 6

வஞ்சுளை - மேதாவி மகரிஷிக்கு மகளாக வகுளத்தின் (மகிழ மரத்தின்) அடியில் மஹாலக்ஷ்மி தோன்றினாள். அவளுக்கு வஞ்சுளா தேவி என்று பெயரிட்டார். பெருமாள் வைகுண்டத்திலிருந்து இறங்கி வந்து இங்கு மணந்தார்.

புள்ளரையன் மேலேறிப் பொலிவோடு வருவானை
வெள்ளமிசை ஆலிலையில் துயில்வானை அடியார்கள்
உள்ளமெனும் இல்லத்துள் உறைகின்ற உத்தமனைத்
தெள்ளியசீர் சிங்கத்தைத் திருநறையூர்க் கண்டேனே. 7

புள்ளரையன் - கருடன். கல் கருடன் உற்சவம் நாச்சியார்க்கோவிலில் மிகவும் பிரசித்தி.

காமனவன் தாதையினைக் கார்முகில்போல் கறுத்தானை
வாமதேவ னைத்தனது வலப்புறத்தில் வைத்தானைப்
பூமகளைக் காத்தானைப் புவிவாழப் பிறந்தானைத்
தீமைகளைக் களைவானைத் திருநறையூர்க் கண்டேனே. 8

காமன் - மன்மதன்
தாதை - தந்தை
வாமதேவன் - சிவன் (சங்கர நாராயண வடிவத்தில் சிவன் வலது புறமும் திருமால் இடது புறமும் இருப்பார்)
பூமகள் - பூமா தேவி

அக்கரமோர் எட்டாலே அழைத்திடவே வருவானைத்
துக்கமதைத் துடைப்பானைச் சுடராழி யைக்கொண்டு
சிக்கலவை அறுப்பானைச் சிங்கமுகப் பெருமானைத்
திக்கெதிலும் நிறைவானைத் திருநறையூர்க் கண்டேனே. 9

துக்கம் - துன்பம்
சிக்கல் - இடையூறு
திக்கெதிலும் - எல்லாத் திக்குகளிலும், இடங்களிலும் நிறைந்தவன்.

அலையிடையே அரவுமிசை அறிதுயிலும் அச்சுதனை
நிலைகொடுக்கும் பெரியானை நிரைதன்னை மேய்ப்பானைக்
கலையுடைய கோகுலத்தைக் காப்பதற்குக் குடையாகச்
சிலையெடுத்துப் பிடித்தானைத் திருநறையூர்க் கண்டேனே. 10

அறிதுயில் - யோகநிஷ்டை
நிலை - வீடுபேறு
நிரை - பசுக்கூட்டம்
கலை - ஒளி/அழகு
சிலை - கோவர்த்தன மலை