Wednesday 26 July 2017

14. திருக்கற்குடி [உய்யக்கொண்டான் திருமலை] (பதிகம் 8)

வணக்கம்.
அடுத்த பதிகம் - திருக்கற்குடி - உய்யக்கொண்டான் திருமலை.

கலி விருத்தம்.
வாய்பாடு - விளம் மா விளம் மா

பாத்திரம் ஏந்திப் பலிதனில் மகிழும்
சாத்திரம் போற்றும் சற்குரு நாதா!
மாத்திரைப் போதில் வாட்டம ரிந்து
காத்தருள் வாயே கற்குடித் தேவே. 1

வாட்டம ரிந்து - வாட்டம் அரிந்து
அரிதல் - அழித்தல்

தவமது புரிவோய்! தாரணி மார்பா!
சிவசிவ எனநின் சீர்ப்பெயர் சொலாது
பவவினை தனிலே பயந்துழன் றிடுமெம்
கவலைகள் அறுப்பாய் கற்குடித் தேவே. 2

தாரணி மார்பா - தார் அணி மார்பா
தார் = பூமாலை

அருத்தஅம் புலியை அணிந்திடும் அரனே!
நிருத்த!என் றுன்றன் நீள்கழல் பேணா(து)
இருட்டினில் உழலும் எமக்குயர் வான
கருத்தினை அருள்வாய் கற்குடித் தேவே. 3

அருத்த அம்புலி - பாதி நிலா (அர்த்த = அருத்த)
நிருத்த - நிருத்தன் என்பதன் விளி - நிருத்தா. அணுக்க விளி நிருத்த. பெருமா என்பதை பெரும என்றும் விளிப்பதுண்டு. அதுபோல் நிருத்தா என்பதை நிருத்த என்று விளித்துள்ளேன்.
நிருத்தம் = நாட்டியம். நாட்டியம் ஆடுபவன் நிருத்தன்.
கருத்து - மனம்

பொற்பதம் தூக்கிப் பொற்சபை தனிலே
அற்புத நடனம் ஆடிடும் அரசே
கற்பிதச் சூழைக் களைந்திடு வாயே
கற்பகத் தருவே கற்குடித் தேவே. 4

சூலம(து) ஏந்தும் சுத்தசெஞ் சுடரே!
ஆலதன் நிழலில் அமர்ந்தறம் உரைக்கும்
பாலதன் வண்ணா! பாலனைக் காக்கக்
காலனை உதைத்த கற்குடித் தேவே. 5

மார்க்கண்டேயன் காலனால் துரத்தப்பட்டப் போது பல ஆலயங்களில் உள்ள இலிங்கத் திருமேனியை வணங்கி வந்தான்.

உய்யக்கொண்டான் திருமலையில் உள்ள இறைவனை வணங்கிய போது, இறைவன் அவன் முன்னே தோன்றி, "உனக்குப் புத்துயிர் அளிக்கிறேன்" என்று சொன்னார். அதனால் உஜ்ஜீவநாதர் என்று பெயர் பெற்றார்.

பின்னர், திருவேற்காட்டில் மர்கண்டேயனை "சிரஞ்சீவி" என்று அருளி, திருக்கடவூரில் காலனை உதைத்தார் என்று தலவரலாறு தெரிவிக்கிறது.

எயிலவை மூன்றை எரித்தசெந் தழலே!
முயலகன் மேலே ஆடிடும் முதல்வா!
மயிலமர் கோன்சொல் மந்திரப் பொருள்கேள்
கயிலையம் பதியே! கற்குடித் தேவே. 6

எயில் மூன்று - திரிபுரம்
தழல் - தீ
முயலகன் - தீமைகளின் உருவகமான அரக்கன்.
முயலகம் என்பது வலிப்பு வியாதி. அதனால் இறைவன் முயலகன் மீது ஏறி நின்று அவனை வெளிவிடாமல் ஆடுகிறார் என்றால், வியாதிகள் நம்மை அணுகாது காக்கிறார் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.
மயிலமர் கோன் - முருகன்

அருளுடைச் சுடரே! அருமருந் தே!யெம்
பெருவினை பிணியைப் பெயர்த்திடும் பரனே!
ஒருபுறம் உமைக்குத் தந்தநற் சீலா!
கருணையின் உருவே! கற்குடித் தேவே! 7

இமிழ்கடல் தனிலே எழுவிடந் தனைத்தெள்
அமிழ்தெனப் பருகி அவனியைக் காத்தோய்!
தமிழ்தனில் மகிழ்வோய்! தவமுனிக் கருளும்
கமழ்சடை யானே கற்குடித் தேவே. 8

இமிழ் = ஒலித்தல். அலையோசை ஒலிக்கும் கடல்.
கமழ்தல் = மணம் வீசுதல் / பரவுதல். பரவிய சடையன்.

அலையினில் துயிலும் அச்சுதன் தானும்
கலைமகள் கோவும் கண்டறி யானே!
மலைமகள் மருவும் மலர்ச்சுடர் ஒளியே!
கலையமர் கரத்தோய்! கற்குடித் தேவே 9

கலைமகள் கோ = பிரமன்
கலையமர் கரத்தோய் - மான் அமரும் கரம் உடையவர் (மானைக் கையில் கொண்டவர்)

விண்ணவர் போற்றும் வித்தக வேந்தே!
வெண்ணில வணியும் விரிசடை யோனே!
பெண்ணுறை தேகா! பேரெழிற் கோவே!
கண்ணுத லானே! கற்குடித் தேவே! 10

Monday 10 July 2017

13. திருவிடைமருதூர் (பதிகம் 7)

வணக்கம்.

அடுத்த பதிகம் - திருவிடைமருதூர்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

(மங்கள ரூபிணி மதியணி சூலினி என்ற தமிழ்ப் பாடல் அமைப்பு. அயிகிரி நந்தினி அமைப்பும் கூட..)

வாய்பாடு:
விளம் விளம் விளம் விளம்
..விளம் விளம் காய்

மங்கள வடிவினர் மறைதனில் உறைபவர்
..மன்னுயிர் காத்திடும் மன்னரவர்
திங்கள ணிந்திடும் செந்நிற மேனியர்
..தீவினை தீர்த்திடும் தேவரவர்
அங்கயற் கண்ணியின் அங்கரம் பற்றிய
..அம்புலி அதளணி அரசரவர்
எங்களை ஆண்டிடும் எழில்மிகு நாயகர்
..இடைமரு தூருறை இறையவரே. 1

அம்புலி - அம் + புலி -> அழகிய புலி
அதள் - தோல்

விண்ணவர் ஏத்திடும் வித்தகக் குருவவர்
..வெள்விடை ஏறிடும் பாகனவர்
பெண்ணுறை மேனியர் பிறைமதி சூடிடும்
..பேரொளி யாய்த்திகழ் பரமனவர்
கண்ணுதற் தேவவர் கனைகடல் இருந்தெழு
..கார்விடம் தனைநுகர் ஈசனவர்
எண்ணுதற்(கு) இனியவர் எழில்வடி வானவர்
..இடைமரு தூருறை இறையவரே 2

தன்னிகர் அற்றவர் தத்துவம் ஆனவர்
..தண்ணருள் தந்திடும் தேசனவர்
நன்மைகள் யாவையும் நயமுடன் அருள்பவர்
..நரைவிடை மேல்வரும் நம்பனவர்
மின்னொளிர் மேனியர் மெய்ந்நிலை தருபவர்
..மேதினி காத்திடும் பாலனவர்
இன்னிசை தனில்மகி ழும்பர மானவர்
..இடைமரு தூருறை இறையவரே 3

நம்பன் - ஆணிற்சிறந்தோன் ; கடவுள் ; சிவன்.
பாலன் - காவலன் (க்ஷேத்ரபாலன் என்பதில் வருவது போல்)

கடலிருந் தெழுவிடம் தனைநுகர்ந் தவரவர்
..காசினி வாழ்வதற் கருளியவர்
படவர வணிபவர் பழவினை தீர்ப்பவர்
..பணிபவர்க் கருளிடும் பரமனவர்
நடுநிசி யில்நடம் ஆடிடும் நாயகர்
..நாடிடும் அன்பருள் ளிருப்பரவர்
இடரது நசிப்பவர் இன்பம ளிப்பவர்
..இடைமரு தூருறை இறையவரே 4

நீறத னைத்திரு மேனியில் அணிபவர்
..நீண்டழ லானவி கிர்தனவர்
பேறுகள் அருள்பவர் பிஞ்சுவெண் ணிலவணி
..பெருமுலை நாயகி நாதனவர்
ஆறது சூடிடும் அருமறை வித்தகர்
..ஐவிரற் கோவணம் தனையணிவர்
ஏறதில் ஏறிடும் இன்முகம் உடையவர்
..இடைமரு தூருறை இறையவரே 5

விகிர்தன் - கடவுள்
ஏறு - காளை

கூற்றுவ னையிடக் காலினா லுதைத்தவர்
..கூவிள மாலையைச் சூடுபவர்
போற்றிடும் அடியவர்க் கருளினைப் பொழிபவர்
..பொற்சபை யில்நடம் ஆடுபவர்
வேற்றுவி காரமி லாதவர் மானிடர்
..வேதனை யாவையும் விரட்டுபவர்
ஏற்றம ளிப்பவர் இருவினை அறுப்பவர்
..இடைமரு தூருறை இறையவரே 6

அயனவ னுடையொரு சிரந்தனை அரிந்தவர்
..அபயம ளித்திடும் அண்ணலவர்
நயமுட னேநலம் யாவையும் அளிப்பவர்
..நானிலம் போற்றிட ஆடுபவர்
முயலகன் மேல்நடம் ஆடிடும் நாயகர்
..முத்திய ளித்திடும் முத்தனவர்
எயிலவை மூன்றினை எரியுறச் செய்தவர்
..இடைமரு தூருறை இறையவரே 7
அயன் - பிரமன்

மடமையி னால்மதி யால்நினை யாதுவெண்
..மலையினைப் பெயர்த்திட முனைந்தவனின்
மடமையை அழித்திடப் பெருவிரல் ஒன்றினை
..மலையினில் ஊன்றிய மாவலியர்
மிடறத னில்விடம் அதனைய டைத்தவர்
..மேனியில் நீறினைப் பூசுபவர்
இடபம தில்வரும் இசைவடி வானவர்
..இடைமரு தூருறை இறையவரே 8

மடமை - அறிவின்மை / கர்வம்
வெண்மலை - கயிலை மலை (பணி மூடிய வெள்ளை மலை)
*இராவணின் கர்வத்தை அடக்கிய கதை
மிடறு - தொண்டை
நீறு - விபூதி
இடபம் - ரிஷபம் / காளை

நேமியை ஏந்திய நாரண னுங்குளிர்
..நீரச மலர்மிசை உறைபவனும்
பூமியு ளாழ்ந்துமே விண்ணிலெ ழுந்துமே
..புரிதலுக் கரிதென உணர்த்தியவர்
சேமம ளிப்பவர் தேனமர் மலர்திகழ்
..சேவடி தொழுபவர்க் கருளுபவர்
ஏமம ருள்பவர் எங்குமு றைபவர்
..இடைமரு தூருறை இறையவரே 9

நேமி - சக்கரம்
நீரச மலர் - தாமரை மலர்
மிசை - மேல்
நீரச மலர் மிசை உறைபவன் - பிரமன்
சேமம் - நன்மை
ஏமம் - பாதுகாப்பு

குண்டிகைக் கையரும் சாக்கிய ரும்பிற
..கூட்டமும் தாமறி யாப்பெரியர்
வெண்டலை யில்பலி தேர்ந்திடும் அந்தணர்
..விசயருக் கத்திரம் அருளியவர்
துண்டவெண் மதியினைச் சூடிடும் சுந்தரர்
..தூயசெஞ் சுடரெனத் திகழுபவர்
எண்டிசை யோர்புகழ்ந் தேத்திடும் நாயகர்
..இடைமரு தூருறை இறையவரே 10

குண்டிகைக் கையர் - கமண்டலத்தைக் கையில் வைத்திருக்கும் சமணர்கள்
சாக்கியர் - பௌத்தர்கள்
பிற கூட்டம் - மற்ற நாத்திகர்கள்
வெண்டலை - வெள்ளை தலை - பிரம்ம கபாலம்
விசயன் - அர்ஜுனன்

இடைமருதூர் பதிகம் நிறைவுற்றது.

12. காஞ்சி முனி

கலி விருத்தம் - வாய்பாடு -  விளம் மா (அரையடி)

கருணையின் உருவே! காஞ்சியின் முனியே!
வரமிக அருளும் வையகக் குருவே!
கருதிடும் அடியார் கவலைகள் அறுக்கும்
அருமருந் தே!நற் கதியருள் வாயே!

சரண்யா.
08-06-2017

இன்று வைகாசி அனுஷம். காஞ்சி காமகோடி பீடாதிபதி பரமாச்சார்யாள் மகாபெரியவா ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி.