Thursday 20 December 2018

49. திருக்கடவூர் - (பதிகம் 21)

அறுசீர் விருத்தம்

மா மா காய் (அரையடி)

வாரி சூடும் வார்சடையன்
..வாம தேவன் மாவலியன்
நாரி ஓர்பால் உடைத்தேகன்
..நமனை உதைத்த அதிதீரன்
மேரு வில்லன் விடையேறி
..வேதம் போற்றும் குருநாதன்
காரிக் கருள்செய் கண்ணுதலான்
..கடவூர் மேவும் கண்மணியே. 1

காரி நாயனார் அவதார ஸ்தலம் திருக்கடவூர்.

நிலவு லாவும் நீள்சடையன்
..நிருத்தம் ஆடும் நிட்களங்கன்
கொலைசேர் மழுவன் துடியேந்தி
..குற்றம் களையும் பேரரசன்
அலகிற் சோதி அம்பலவன்
..அரிய பணிசெய் குங்கிலியக்
கலயர்க் கருள்செய் கறைக்கண்டன்
..கடவூர் மேவும் கண்மணியே. 2

துடி - உடுக்கை
குங்கிலியக் கலய நாயனார் வாழ்ந்து, பணிசெய்த இடம் திருக்கடவூர்.

தார்கொண்(டு) இயமன் கட்டிடவே
..தளரா மனத்தோ(டு) அலர்தூவி
நீர்கொண்(டு) இலிங்க மேனிதனை
..நேர்த்தி யுடனே வழிபட்ட
மார்க்கண் டனுக்கன் றருள்செய்த
..மகவான் அமிர்த கடேசுவரன்
கார்க்கண் டன்கூற் றுதையீசன்
..கடவூர் மேவும் கண்மணியே 3

தார் - கயிறு

நறையார் மலர்கொண்(டு) எப்போதும்
..நமச்சி வாய என்பார்தம்
குறைகள் தீர்க்கும் அமுதீசன்
..கோல வடிவன் பேரொளியன்
நிறைவை அருளும் பேராளன்
..நினைவில் நிறையும் சீராளன்
கறைசேர் கண்டன் காமாரி
..கடவூர் மேவும் கண்மணியே 4

நறை - தேன்

அலையார் கங்கை அணிசடையன்
..அபிரா மியம்மை மணவாளன்
ஒலியின் மூலன் மெய்ப்பொருளன்
..உயிரின் உயிராயத் திகழ்சீலன்
கலியைத் தீர்க்கும் கொடையாளன்
..கரியின் உரிவை போர்த்தியவன்
கலையார் கையன் கட்டங்கன்
..கடவூர் மேவும் கண்மணியே. 5

கலி - கலி தோஷம் / துன்பம்
கரி - யானை
உரிவை - தோல்
கலை - மான்
கட்டங்கன் - கட்டு + அங்கன் = வலிமை மிக்கவன்.
கட்டங்கம் - மழு / கோடரி. மழுவை (கட்டங்கத்தை) ஏந்தியவன் கட்டங்கன் எனவும் கொள்ளலாம்.

பெண்ணோர் பாகன் செய்யொளியன்
..பெற்றம் ஏறும் பெய்கழலன்
வெண்ணீ(று) அணியும் வெங்காடன்
..வேண்டும் வரங்கள் தரும்வள்ளல்
எண்ணார்க்(கு) எட்டா எழிலாளன்
..ஏற்றம் அளிக்கும் திருக்கரத்தான்
கண்ணார் நுதலன் கயிலாயன்
..கடவூர் மேவும் கண்மணியே. 6

"நாதா! நீயே துணை"யென்று
..நவில்வோர்க் கென்றும் அருள்செல்வன்
வேதா முதல்விண் ணவர்போற்றும்
..விமலன் விரிகொன் றைச்சடையன்
மாதோர் கூறன் இளமானும்
..மழுவும் ஏந்தும் ஒளிக்கரத்தான்
காதார் குழையன் விடைப்பாகன்
..கடவூர் மேவும் கண்மணியே. 7

அந்தம் ஆதி இல்லாதான்
..அண்டம் ஆளும் மாமன்னன்
மந்த காசத் தாலெயில்கள்
..மடியச் செய்த மாவலியன்
விந்தை பலசெய் மாமாயன்
..வெந்த நீற்றை அணிவாகன்
கந்தம் கமழும் கொன்றையினன்
..கடவூர் மேவும் கண்மணியே. 8

பெற்றம் உகந்தே றும்தலைவன்
..பேரோர் ஆயி ரங்கொண்டான்
முற்றல் ஆமை யோடேனம்*
..முளைகொம் பரவம் அணிமார்பன் **
வற்றல் ஓட்டி னையேந்தி
..வாசல் தோறும் பலிதேர்வான்
கற்றோர் பரவும் இயமானன்
..கடவூர் மேவும் கண்மணியே. 9

*முற்றல் ஆமை ஓடு, ஏனம்
**முளைக்கொம்பு, அரவம் அணிமார்பன்

முளை - பன்றி.

முளைவெண் மதியம் திகழ்சடையன்
..மூப்பும் பிறப்பும் முடிவுமிலன்
வளைமங் கையவள் மணவாளன்
..மழமால் விடையே றியமறவன்
தளைகள் நீக்கும் தார்மார்பன்
..தவம்செய் முனிவர்க் கருள்பரமன்
களையார் முகத்தன் எண்குணத்தான்
..கடவூர் மேவும் கண்மணியே. 10

மழமால் - என்றும் இளமையாக இருக்கும் திருமால் (மூவா முகுந்தன் (பூத்தவளே புவனம் பதினான்கும் என்ற பாடலில், என்றும் மூவா முகுந்தர்க்கு இளையவளே) என்று அபிராமி பட்டர் பாடியுள்ளார்). சிவனுக்கு, திருமாலே ரிஷபமாக சில சமயத்தில் ஆவார்).

தளை - பந்தம்.
தார் - மலர் மாலை.

களை - அழகு.

பதிகம் நிறைவுற்றது.

பணிவுடன்,
சரண்யா

Friday 7 December 2018

48. சிவன் கும்மிப் பாடல் - பொது (பதிகம் 20)

வணக்கம்.

சில நாள்களுக்குப் பின் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி.

சிவபெருமான் மீது கும்மிப் பாடல் வடிவில் (பாரதியாரின் கும்மியடி தமிழ்நாடு முழுவதும்.. பாடலை ஒட்டிய சந்தம்) ஒரு பதிகம் செய்துள்ளேன்.

இதில் இரண்டாவது பாடலிலருந்து, ஒவ்வொரு பாடலிலும் சிவபெருமானின் அட்ட வீரச்செயல்கள் வருமாறு அமைத்துள்ளேன்.

தலம் - பொது

1.

வெள்ளிப் பனிமலை மேவும் பரமரை
..மெச்சி அனுதினம் போற்றிடுவோம்
உள்ளம் உருகிட உன்னத நாமங்கள்
..ஒன்றும் விடாமல் செபித்திடுவோம்


2.

மேரு மலையினை வில்லென ஏந்திய
..வீர மிகவுடை வித்தகனார்
கோரச் செயல்கள்செய் தானவர் கள்மூன்று
..கோட்டைகள் வெந்திடச் செய்யரனார்

தானவர்கள் - அசுரர்கள்
மூன்று கோட்டைகள் - திரிபுரம்

செய்யரனார் - செய் அரனார். அரன் - சிவன்.

3.

கன்னல்விற் காமனைக் கண்ணால் எரித்தவர்
..கந்தனைத் தந்தவர் புண்ணியனார்
தன்னிகர் அற்றவர் சத்தியம் ஆனவர்
..தத்துவம் நால்வர்க் குரைசிவனார்

நால்வர்க் குரைசிவனார் - நால்வர்க்கு உரை சிவனார்

4.

காலனைக் காலினால் எற்றிக் கடிந்தவர்
..கானகத் தேயாடும் நித்தனவர்
ஆலகா லத்தினை அஞ்சாமல் உண்டவர்
..ஆழியை மாலுக் கருள்நிமலர்

நித்தன் - சிவனின் ஒரு பெயர். பக்தர்களுக்கு நிதி அவர். அதனால் நித்தன். மேலும் என்றும் சாஸ்வதமானவர். நித்தியமானவர். அதனாலும் நித்தன் என்பார். நிர்த்தம் என்றால் நடனம் என்று பொருள். நிர்த்தன் - நித்தன் என்றும் வழங்கலாம். நடனம் ஆடுபவர்.

5.

அந்தகன் கர்வம் அழித்தவர் ஆதியும்
..அந்தமும் இல்லாத சோதியவர்
சந்திரன் வானதி சூடும் சடாதரர்
..தந்தி முகவனின் தந்தையவர்

6.

ஆனையின் தோலினை ஆடையாய்ப் பூண்டவர்
..அம்பலத் தாடிடும் கூத்தரவர்
மானையும் தீயையும் ஏந்தும் கரத்தவர்
..மங்களம் நல்கிடும் நம்பரவர்

7.

தக்கனின் வேள்வியைச் செற்றவர் நித்தியர்
..சங்கக் குழையணி காதுடையர்
முக்கண்ணர் முன்னவர் மூவாத என்னப்பர்
..மூவிலைச் சூலம் உடைப்பரமர்

8.

வேதங்கள் நான்கும் விரித்தோதும் வல்லவர்
..வெந்துயர் தீர்க்கும் விகிர்தரவர்
சூதம் அறுப்பவர் சுத்த வடிவினர்
..சோதியாய் எங்கும் நிறையிறைவர்

சூதம் - பிறப்பு / துன்பம் / வஞ்சனை

9.

வேதன் சிரமொன்றை வெட்டி எறிந்தவர்
..வேடனுக் கின்னருள் நல்கியவர்
மாதவம் செய்திட்ட பார்த்தனுக் கத்திரம்
..வாஞ்சை யுடன்தந்த வள்ளலவர்

வேடன் - கண்ணப்ப நாயனார்

10.

ஏறதன் மேலேறி எங்கும் திரிபவர்
..ஏற்றம் அளித்திடும் ஈசரவர்
பாறுசேர் ஓட்டினைக் கையினில் கொண்டவர்
..பாவங்கள் போக்கிடும் தேசரவர்

பாறு - புலால் (மாமிச) வாசம். பிரமனின் ஒரு தலையைக் கிள்ளி எடுத்து, அதில் பிக்ஷை ஏற்பவர்.

11.

மாலயன் கண்டில்லா மாசற்ற சோதியை
..மங்கை சிவகாமி நாதரையே
காலையும் மாலையும் கைதொழு தேத்திட
..காணாமற் போய்விடும் நம்வினையே

பதிகம் நிறைவுற்றது.

பணிவுடன்,
சரண்யா