Friday 20 March 2020

70. வேலவா நீ வா விரைந்து

வேலவா நீ வா விரைந்து என்ற ஈற்றடியை வைத்து ஒரு வெண்பாப் பதிகம்.

1.
உலகென்னும் ஆடரங்கில் உன்னிரு தாளை
நிலையுறச் செய்து நிருத்தம் பலவாட
ஆலவாய் மேவும் அரனார் அருள்மைந்தா
வேலவா நீவா விரைந்து

நிருத்தம் - ஆடல் (இவ்விடத்தில் லீலைகள் / திருவிளையாடல்கள்)

ஆலவாய் - மதுரைக்கு மற்றொரு பெயர். மதுரையில், சொக்கநாதர் பல திருவிளையாடல்களை நடத்தியுள்ளார். அதுபோல அந்த, மதுரை அண்ணலின் மைந்தனான வேலவனை, ஆட வருமாறு அழைக்கிறேன்.

பதம் பிரித்து:

உலகு என்னும் ஆடரங்கில் உன் இரு தாளை
நிலையுறச் செய்து நிருத்தம் பல ஆட
ஆலவாய் மேவும் அரனார் அருள் மைந்தா
வேலவா நீ வா விரைந்து

இவ்வுலகில் இறைச் சிந்தனை நிலைபெற வேண்டும். அதற்கு, இறைவனின் பாதங்களை, அவன் இங்குப் பதிக்க வேண்டும். அவன் திருவிளையாடல்களால் நன்மை பல நடந்தேற வேண்டும். அதற்காக விரைந்து வா என்று வேண்டுகிறேன்.

2.

உடலே மதிலாய் உளமே உனக்கோர்
இடமாய் அமைத்தேன் இசைவோ(டு) உடனமர
மாலின் மருகா மயிலின் மிசையேறி
வேலவா நீவா விரைந்து

மதில் - கோட்டை
ஓர் இடம் - பெரிய இடம் - அரண்மனை
உடன் அமர - இப்போதே அமர
அமர என்பது இவ்விடத்தில் வசிக்க என்று பொருள் கொள்ள வேண்டும்

3.

ஏதும் அறியா எளியேனைக் காத்துநற்
போதம் அருளிடவே புண்ணிய பாதனே
ஆலின் நிழலமர் அத்தனுக்(கு) அத்தனே
வேலவா நீவா விரைந்து

அத்தன் - குரு
ஆலின் நிழலமர் அத்தன் - தக்ஷிணாமூர்த்தி (சிவபெருமான்)
அத்தனுக்கு அத்தன் - குருவிற்கு குரு

4.

நாமம் பலவும் நவின்றிடுவார்க்(கு) ஏமமும்
சேமமும் நல்கிடவே சேந்தனே ஏமமே
ஆலிலை மேல்துயிலும் அச்சுதனுக்(கு) ஓர்மருகா
வேலவா நீவா விரைந்து

ஏமம் - பாதுகாப்பு
சேமம் - நலம்

ஏமமே என்ற விளி - தங்கம் அல்லது உயர்ந்த பொருள்.

5.

பவமற உன்றன் பதத்தைப் பிடித்தேன்
"கவலாதே" என்று கனிவாய்ச் - சிவன்மகிழ்
பாலனே ஓர்சொல் பகரவே சக்திவடி
வேலவா நீவா விரைந்து

6.

பொன்னையும் பெண்ணையும் பூமியையும் எண்ணியெண்ணிச்
சின்னத் தனமாய்த் திரிகின்ற என்னையுன்
நாலும் இரண்டும் நவிலச்செய்(து) உய்த்திட
வேலவா நீவா விரைந்து

நாலும் இரண்டும் - ஷடாக்ஷர மந்த்ரம். சரவண பவ

7.

காமம் முதலான கள்ளத் தனங்களினால்
தூமத்தில் தத்தளிக்கும் சூதன்யான் - சேமமுறக்
கோலக் குறமகளும் குஞ்சரியும் புடைசூழ
வேலவா நீவா விரைந்து

தூமம் - புகை. இருள் என்று இங்கு பொருள்படும்.

வைணவ சம்ப்ரதாயத்தில், ஜீவாத்மா இறப்பிற்குப் பின்னர்,
அர்ச்சிராதி மார்க்கம், தூமாதி மார்க்கம் ஆகிய இரண்டு வழியில் பயணம் செய்யும் என்று சொல்வார்கள்.

அர்ச்சிராதி என்றால் ஒளி நிறைந்த பாதை. வைகுந்த பதவி கிடைக்கும். தூமாதி என்றால் இருள் நிறைந்த பாதை. மீண்டும் பிறப்பு உண்டாகும்.

சூதன் - சூது நிறைந்தவன்

8.

தினையும் நறுநெய்யும் தேனொடு பாகும்
கனியும் கலந்தளித்தேன் கந்தா - இனிவரும்
காலமெலாம் உன்றன் கழல்பணிவேன் காத்தருள
வேலவா நீவா விரைந்து

9.

மும்மலத்தால் கட்டுண்ட மூர்க்கன்யான் உய்யநின்
செம்மலர்த் தாளையென் சென்னிவைப்பாய் - மொய்ம்புமிகு
வேலும் மயிலும் வினையறுக்கும் என்றுணர்த்த
வேலவா நீவா விரைந்து

10.

பூழியணிந் துன்றன் புதுமலர்த் தாள்பணிந்தேன்
பாழிமலி பன்னிரு தோளுடையாய் - ஆழிசூழ்
ஞாலம் புகழ்ந்திடும் ஞாதாவே ஆட்கொள்ள
வேலவா நீவா விரைந்து

பூழி - திருநீறு
பாழி - பெருமை
மலிதல் - மிகுதல்
ஆழி - கடல்
ஞாதா - ஞானம் உடையவன்

பதிகம் நிறைவுற்றது.

வேலவா போற்றி!

சரண்யா