Thursday 12 December 2019

67. காஞ்சி முனி - எண்சீர் விருத்தம்

வணக்கம்.

காஞ்சி மாமுனி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமிகள் மேல் ஒரு விருத்தம்.

எண்சீர் விருத்தம்

அரையடி வாய்பாடு: காய் காய் மா தேமா

அன்றாலின் நிழலமர்ந்த குருவே போற்றி
..அனுஷத்தில் அவதரித்த திருவே போற்றி

மன்றத்துள் நடமாடும் மணியே போற்றி
..வையகத்தும் நடமாடும் தருவே போற்றி

என்றென்றும் நின்தாளைப் பணிவார்க்(கு) இன்பம்
..இசைவோடு தந்திடும்நல் தேவே போற்றி

கன்றுக்காய் இரங்கிவரும் பசுவைப் போ(ல்)இக்
..கடையேற்கும் அருள்காஞ்சி முனியே போற்றி

தரு - கற்பக விருட்சம்
ஈற்றடியில் அருள் காஞ்சி முனி என்று வினைத்தொகையாக வைத்துள்ளேன். எப்போதும் அருளுவார் என்றவாறு.

சரண்யா 

Tuesday 24 September 2019

66. தஞ்சைப் பெரிய கோயில் (பதிகம் 28)

வணக்கம்.

தஞ்சை பிரகதீஸ்வரர் மேல் ஒரு பதிகம்.

அறுசீர் விருத்தம்.

மா விளம் தேமா (அரையடி)

1.
நாமம் ஆயிரம் கொண்ட
..நாத ஆதியும் தேவும்
காமன் வெந்திட அன்று
..கண்ணால் நோக்கிய கோவும்
சேமம் அருளிடு வானும்
..சேவின் மேல்வரு வானும்
சாமம் பெரிதுகப் பானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

2.

தெய்வத் திருமுறை தன்னைத்
..தில்லைப் பதியினில் கண்ட
வைய கத்தினை ஆண்ட
..மன்னன் அருண்மொழித் தேவன்
கையால் செய்பணி ஏற்ற
..கண்ணோர் மூன்றுடை யானும்
தையற் கிடமளித் தானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

நம்பியாண்டார் நம்பி அவர்களின் துணைக்கொண்டு, திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரின் அருள்வாக்கால், தில்லையில் நடராஜரின் சன்னிதி அருகில் உள்ள ஒரு அறையில் தேவாரப் பாடல் சுவடிகள் உள்ளதை அறிந்த இராஜராஜ சோழன், அவற்றை மீட்டு, நமக்குக் கிடைக்கும்படி செய்தார்.

அருண்மொழித் தேவன் - இராஜராஜ சோழன்

தையல் - பெண் (பார்வதி)

3.

கண்ணார் நுதலுடை யானும்
..கருத்தில் நிறைந்திடு வானும்
பெண்ணோர் பாகனும் வெள்ளைப்
..பெற்றம் மிசையமர் வானும்
பண்ணார் தமிழினில் ஆரும்
..பரனும் கயல்குதித் தாடும்
தண்ணார் வயலுடை யானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

தஞ்சையில் உள்ள நீர் வளம் மிக்க வயல்கள் யாவும் இறைவனுடைய வயல்கள் என்றவாறு...

4.

மழுவும் வன்னியும் ஏந்தும்
..வனப்பார் இணைக்கரத் தானும்
பழுதில் அடியவர் செய்யும்
..பணியை விரும்பிடு வானும்
குழையார் செவியுடை யானும்
..கொடிபோல் இடையுடை மங்கை
தழுவும் மார்புடை யானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

5.

சங்கை தவிர்த்திடு வானும்
..சதியோ டிசைந்திடு வானும்
வெங்கண் கரியுரி தன்னை
..மேனி மேலணி வானும்
அங்கை குவித்திடும் அன்பர்க்(கு)
..அஞ்சேல் என்றருள் வானும்
தங்கம் போல்மிளிர் வானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

6.

ஏங்கும் அடியவர்க் கென்றும்
..இரங்கி அருளிடு வானும்
ஓங்கு பெருஞ்சுட ராக
..உயர்ந்து பரவிடு வானும்
தீங்கி ழைத்திடு செற்றார்
..சிதைய மேருவை வில்லாய்த்
தாங்கும் கரமுடை யானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

7.

மேவார் முப்புரம் அன்று
..வேவப் புன்னகைத் தானும்
நாவால் நவிற்றிடு வார்க்கு
..நன்மை பலவளிப் பானும்
பாவம் தீர்த்திடு வானும்
..பாவைக் கிடமளித் தானும்
தாவும் புனற்சடை யானும்
..தஞ்சைப் பெருவுடை யானே.

8.

பவளம் போல்மிளிர் வானும்
..பனியார் மலையுறை வானும்
துவசத் தினிலெரு தேற்ற
..துரியத் தினிலமர் வானும்
குவளை விழியுடை யம்மை
..குலவும் வீறுடை யானும்
தவளப் பொடியணி வானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

துவசத் தினிலெரு தேற்ற
..துரியத் தினிலமர் வானும்

துவசத்தினில் எருது ஏற்ற
..துரியத்தினில் அமர்வானும்

துவசம் - கொடி
துரியம் - உயர்ந்த யோக நிலை (ஸஹஸ்ரார சக்ரம் எனவும் கொள்ளலாம்)

கொடியில் இடபத்தை வைத்துக்கொண்ட உயர்ந்த யோக நிலையில் அமர்வானும் என்னும்படியாக..

குவளை விழியுடை யம்மை
..குலவும் வீறுடை யானும்

குவளைப்பூ போன்ற கருவிழிகள் கொண்ட அன்னை, தன்னோடு சேரும் பெருமை மிக்கவன்.

9.

இமவான் மகிழ்மரு கோனும்
..எளியார்க் கிரங்கிடு வானும்
கமலன் சிரத்தினைக் கிள்ளிக்
..களைந்த வல்லவன் தானும்
நமனை எற்றிய கோவும்
..நலமார் மறையுறை வானும்
சமகத் தினில்திளைப் பானும்
..தஞ்சைப் பெருவுடை யானே

10.

அஞ்செ ழுத்துடை யானும்
..அல்லில் நடமிடு வானும்
பஞ்சம் தீர்த்திடு வானும்
..பணியை அணிந்திடு வானும்
நெஞ்சில் நிறைந்திடு வானும்
..நீறு பூசிடு வானும்
தஞ்சம் அளித்திடு வானும்
..தஞ்சைப் பெருவுடை யானே.

பணிவுடன்,
சரண்யா

Tuesday 20 August 2019

65. அத்தியூர் - காஞ்சிபுரம் - அத்திவரதர் (பிரபந்தம் 5)

அத்தி வரதன் மேல் இயற்றிய வெண்பாக்கள்.

எல்லாப் பாடல்களின் ஈற்றடியும் - அத்தி வரதன் அவன் என்று வரும்.

1.
அத்திகிரி மேவும் அழகன் அழலுமிழும்
அத்திகிரி தன்னை அலரிட்டுக் - கத்திய
அத்தி உயிர்காக்க அத்திக்கில் ஏவிய
அத்தி வரதன் அவன்

அத்திகிரி - ஹஸ்திகிரி/ ஹஸ்தி சைலம் எனப்படும் காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில்
அத்திகிரி - அத் திகிரி - அந்தத் திகிரி - திகிரி - சக்கரம்
அலர் இட்டுக் கத்திய - தாமரைப் பூவை அர்பணித்து, "ஆதி மூலமே" என்று கத்திய யானை
அத்தி - யானை (கஜேந்திரனைக் குறிக்கிறது)
அத்திக்கில் - அந்தத் திசையில்
அத்தி - அத்தி மரத்தால் விஸ்வகர்மா வடித்த வரதராஜ பெருமாள்

2.
அத்தி உருக்கொண்(டு) அமரர்கோன் பூசிக்க
உத்தமத் தானம் உவந்தளித்தோன் - நித்தமும்
பத்திசெய் அன்பர்தம் பாவங்கள் தீர்த்தருளும்
அத்தி வரதன் அவன்

தேவேந்திரன், தான் பெற்ற சாபத்தால், யானையாக மாறினான். பின்னர் காஞ்சிக்கு வந்து யானை உருவில், வரதராஜ சுவாமியைப் பூஜை செய்து சாப விமோசனம் பெற்றான்.

தானம் - இடம் (ஸ்தானம்)

3.
மீனமாய் வந்துயர் வேதத்தைக் காத்தவன்
ஏனமாய் மண்ணை இடந்தவன் - மானவர்
முத்திக்கு வித்துமுன் மூவடி மண்கேட்ட
அத்தி வரதன் அவன்

மீனம் - மீன் - மத்ஸ்யாவதாரம் எடுத்து, வேதங்களை பிரளயத்திலிருந்து காத்தவன்
ஏனம் - பன்றி / வராகம்.
இடத்தல் - குத்தி எடுத்தல். கடலிலிருந்து பூமியைப் பெயர்த்து மேலே கொண்டுவந்தவன்.
மானவர் - மனிதர்கள்
மூவடி மண்கேட்ட - வாமனாவதாரம் குறிப்பு.

4.
படையோரைந் தேந்துபவன்; பாம்பணையான்; பாதம்
அடைவோர்க்(கு) அடைதரும் அப்பன் - விடையோன்றன்
சித்தத் துறைவோன்; திருப்பாற் கடல்வளர்
அத்தி வரதன் அவன்

படையோர் ஐந்து ஏந்துபவன்- பஞ்ச ஆயுதங்கள் - சங்கு, சக்கரம், வில், வாள், கதை
அடைதரும் - அடைக்கலம் தரும்
விடையோன் - சிவ பெருமான்

5.
பேய்முலை நஞ்சுண்ட பிள்ளை; மனம்மயக்கும்
வேய்ங்குழல் ஊதிமகிழ் வித்தகன் - ஆய்க்குலத்தில்
அத்தத்தின் முன்பத்தாம் அல்லில் அடிவைத்த
அத்தி வரதன் அவன்

அத்தத்தின் பத்தாம்நாள் - பெரியாழ்வார் பாடல்.
ஹஸ்த நக்ஷத்ரத்தின் பத்தாம் நக்ஷத்ரம் -
ஹஸ்தத்திலேந்து 10 ஆம் நக்ஷத்ரம் திருவோணம். முன்னோக்கி உத்திரம், பூரம் என்று சென்றால் ரோகிணி பத்தாம் நக்ஷத்திரம் ஆகும். 
கம்ஸனைக் குழப்புவதற்காக பெரியாழ்வாரின் வாக்கு.

கீழ்க்கண்ட தகவலுக்கு - திரு சஹஸ்ரநாமன் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நன்றிகள் பல.

ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம் இவை.மூன்றும் ஜன்ம, அனுஜன்ம, த்ரிஜன்ம நக்ஷத்ரங்கள்.

ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம் செய்ய ப்ரஹ்மதேவருடைய
ப்ரார்த்தனையே காரணம். அதனால் ப்ரஹ்மாவை தேவதையாக உடைய ரோஹிணியில் அவதரணம் ஏற்பட்டது.

யஜுர் வேதத்தில்,
"ரோஹிணீ நக்ஷத்திரம் - ப்ராஜாபதிர் தேவதா " என்பதே இதற்கு நிரூபணம். இங்கு ப்ரஜாபதி என்பது ப்ரஹ்மாவைக் குறிக்கும்.

ரோஹிணியிலிருந்து 10 வது ஹஸ்தம். அதிலிருந்து 10 வது திருவோணம். சேர்த்துக்கொண்ட 3 நக்ஷத்ரங்களையும் கழிக்க, ஸமுதாய நக்ஷத்ர ஸங்கயை 27 வரும்.

6.
அனந்த சரசுள் அறிதுயில் கொள்வோன்
வனஞ்சென் றுறைந்த மகிபன் - சினந்தெதிர்த்த
மத்த கயத்தை மருப்பொசித்து மாட்டிய
அத்தி வரதன் அவன்

அனந்த சரசு - அனந்த சரஸ் புஷ்கரணி.
மத்த கயம் - மத யானை - குவலயாபீடம்

7.
கன்றெறிந்து, கானில் கனியுதிர்த்துக் கோகுலத்தைக்
குன்றெடுத்துக் காத்தவன், "கோவிந்தா" - என்றதனால்
கத்திர பந்துவெனும் கள்ளனையும் ஆட்கொண்ட
அத்தி வரதன் அவன்

கன்று - வத்ஸாசுரன்
கனி - விளாங்கனி - விளாங்கனியாய் நின்ற மற்றொரு அசுரன் - கபித்தாசுரன்
குன்று - கோவர்த்தன மலை
கத்திர பந்து - க்ஷத்திரபந்து என்பவன் - மன்னர் குலத்தில் பிறந்தாலும், தீய வழியில் ஒழுகினான். அதனால் அவன் குடும்பத்தாரே வெறுத்து ஒதுக்க, காட்டில் வாழ்ந்து, கொள்ளை அடித்து வந்தான். முனிவர் ஒருவரால் திருந்தி, "கோவிந்தா" என்று ஜபித்து வந்தால், பாவங்கள் தீரும் என்று அவர் சொல்ல, கோவிந்தா என்று பலமுறை ஜபித்து நற்கதி அடைந்தான்.

8.
கஞ்சனை மாய்த்தவன் கன்றின(ம்) மேய்த்தவன்
தஞ்சமென்(று) அண்டிய சான்றவர் - பஞ்சவர்க்(கு)
உத்தி உணர்த்தித்தேர் ஓட்டி உரமளித்த
அத்தி வரதன் அவன்

சான்றவர் - சிறந்தவர்
பஞ்சவர் - பாண்டவர்
உத்தி - ஆலோசனை/வழி

9.

சாம்பனுந் தேவருஞ் சாலத் திகைப்புறத்
தாம்பினாற் கட்டுண்ட தற்பரன் - பாம்புமிசை
வித்தக நர்த்தனம் வீறுகொண் டாடிய
அத்தி வரதன் அவன்.

சாம்பன் - சிவபெருமான்
தாம்பு - கயிறு
பாம்பு - காளியன்

10.

சிங்கவுரு வேற்றுச் சிறுவன்சொல் கேட்டெழுந்த
துங்கன்; மரையாள் துணைவனரன் - பங்குறையும்
சத்தி தமையன் சமுசார பந்தந்தீர்
அத்தி வரதன் அவன்

சிங்கம் - நரசிம்மர்
சிறுவன் - பிரகலாதன்

மரையாள் துணைவனரன் பங்குறையும்
சத்தி தமையன் - மரையாள் துணைவன்; அரன் பங்குறையும் சத்தி தமையன்.

மரை - தாமரை. மரையாள் - தாமரை மலரில் வீற்றிருக்கும் இலக்குமி.

11.

அத்தி வரதன் அவனெனவட் டாக்கரனைத்
தித்திக்கும் நற்றமிழில் செப்பியவிப் - பத்தும்
பகர்வார் பிறவிப் பயனைப் பெறுவார்
திகழ்கூர் பரமனடி சேர்ந்து.

அத்தி வரதன் அவன் என அட்டாக்கரனை = அட்டாக்கரன் - எட்டெழுத்து மந்திரத்தான் - அஷ்டாக்ஷரன்

பதிகம் நிறைவுற்றது

ஓம் நமோ நாராயணாய

Friday 16 August 2019

64. புஜங்கம் அமைப்பு - பொது (பதிகம் 27)

வணக்கம்.

"ப்ரபும் பிராண நாதம் விபும் விச்வநாதம்" என்று தொடங்கும் சிவாஷ்டகம், எட்டு ஸ்லோகங்களும் பலஸ்துதி ஒன்றுமாக ஒன்பது அழகிய துதிகள் கொண்டது.

சிவாஷ்டகத்தை ஒட்டி புஜங்க அமைப்பில் மூவடி மேல் ஓரடி வைப்பு என்பது போல் முயற்சி செய்துள்ளேன்.

புஜங்கம் என்றால் சமஸ்க்ருதத்தில் பாம்பு என்ற பொருள். சுப்ரமண்ய புஜங்கமும் இதே அமைப்பில்.

அதாவது நான்கு அடிகள்.
ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள்.
ஒவ்வொரு சீரிலும் இந்த அமைப்பு இருக்கும்.

குறில் - நெடில் - நெடில்.

குறில் - 1 மாத்திரை (ஒலிக்கும் நேரம் / கண் இமைக்கும் நேரம் என்று வைத்துக்கொள்ளலாம் - மாத்திரை)
நெடில் - 2 மாத்திரைகள்

சந்தத்தில் த னா னா என்று வரும்.

நெடில் எழுத்து

நெடிலாகவோ (கா என்பது போல)

அல்லது

குறில் + [மெல்லின/வல்லின] ஒற்று (சங் / சத் ) அல்லது

நெடில் + [மெல்லின/வல்லின] ஒற்று (மூன்/ சாத்)

என்பது போலவும் வரலாம்.

இடையின ஒற்று, மாத்திரைக் கணக்குப் பெறாது.

இந்த அமைப்பு, ஒரு பாம்பு ஊர்வது போல் இருப்பதால் புஜங்கம் என்ற பெயர் பெற்றது.

தலம் - பொது.

வாய்பாடு:
தனானா × 4 அல்லது தனாதான தானா × 2

1.
சிரத்தே நிலாவோ டுசீரா றுசூடும்
கருத்தன் கரித்தோ லுடுத்தும் சுசீலன்
சிரிப்பா லெயில்மூன் றெரித்திட் டதீரன்
சிவன்சங் கரன்சம் புதாள்போற் றிபோற்றி

சிரத்தே நிலாவோடு சீராறு சூடும்
கருத்தன் கரித்தோல் உடுத்தும் சுசீலன்
சிரிப்பால் எயில்மூன்(று) எரித்திட்ட தீரன்
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி

எயில் - கோட்டை (மூன்று எயில் - திரிபுரம்). மந்தஹாசத்தால் சிவபெருமான் திரிபுரத்தை எரித்தார் என்றும் சில புராணங்கள் கூறுகின்றன.

2.
தரங்கக் கட‌ற்றந்த ஆலாலம் உண்டான்
மரங்கீழ் அமர்ந்தன் றுநால்வர்க் குரைத்தான்
சிரந்தாழ்த் தியென்றும் பணிந்தார்க் கருள்செய்
சிவன்சங் கரன்சம் புதாள்போற் றிபோற்றி

தரங்கக் கடல்தந்த ஆலாலம் உண்டான்
மரங்கீழ் அமர்ந்தன்று நால்வர்க்(கு) உரைத்தான்
சிரம் தாழ்த்தி என்றும் பணிந்தார்க்(கு) அருள்செய்
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி

தரங்கக் கடல் - ஒலிக்கும் கடல்

3.
புராணன்ப சும்பொன் பொருப்பேந் துவீரன்
முராரிக் களித்தான் முனைப்போ டொராழி
அராவா டுகண்டன் பணைத்தோ ளிபங்கன்
சிவன்சங் கரன்சம் புதாள்போற் றிபோற்றி

புராணன் பசும்பொன் பொருப்பேந்து வீரன்
முராரிக்(கு) அளித்தான் முனைப்போ(டு) ஒர் ஆழி
அரா ஆடு கண்டன் பணைத்தோளி பங்கன்
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி

பசும்பொன் பொருப்பு - மேரு மலை

4.
புலித்தோ லுடுத்தும் புயங்கன் விகிர்தன்
புலிப்பா தருக்குப் புகல்தந் தவீசன்
ஒலிக்கும் சிலம்பொன் றணிந்தா டுமெம்மான்
சிவன்சங் கரன்சம் புதாள்போற் றிபோற்றி

புலித்தோல் உடுத்தும் புயங்கன் விகிர்தன்
புலிப்பாதருக்குப் புகல்தந்த ஈசன்
ஒலிக்கும் சிலம்பொன்(று) அணிந்தாடும் எம்மான்
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி

புலிப்பாதர் - வியாக்ரபாதர்

5.
விடங்கப் பிரான்வெண் ணிலாச்சூ டிகொன்றை
வடங்கொண் டமார்வன் வனப்பார் மடந்தை
இடங்கொண் டநாதன் இடர்தீர் விசிட்டன்
சிவன்சங் கரன்சம் புதாள்போற் றிபோற்றி

விடங்கப் பிரான் வெண்ணிலாச்சூடி கொன்றை
வடம் கொண்ட மார்வன் வனப்பார் மடந்தை
இடம் கொண்ட நாதன் இடர்தீர் விசிட்டன்
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி

விடங்கன் - அழகன்
விசிட்டன் - பெரியவன்

6.
தயாளன் சதுர்வே தமாறங் கமானான்
வியாழன் பணிந்தேத் துமாலங் குடிக்கோன்
மயானத் திலாடும் மகேசன் நடேசன்
சிவன்சங் கரன்சம் புதாள்போற் றிபோற்றி

தயாளன் சதுர்வேதம் ஆ(று)அங்கம் ஆனான்
வியாழன் பணிந்தேத்தும் ஆலங்குடிக் கோன்
மயானத்தில் ஆடும் மகேசன் நடேசன்
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி

7.
விடங்கொள் மிடற்றான் மிளிர்செஞ் சடைக்கண்
படங்கொள் அராப்பூண் பரன்நா ரிபாகன்
திடங்கொள் புயத்தான் சிதானந் ததேவன்
சிவன்சங் கரன்சம் புதாள்போற் றிபோற்றி

விடங்கொள் மிடற்றான் மிளிர் செஞ்சடைக்கண்
படங்கொள் அராப்பூண் பரன் நாரிபாகன்
திடங்கொள் புயத்தான் சிதானந்த தேவன்
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி

8.
வனத்தில் தவஞ்செய் தவில்லான் தனக்கு
மனத்தால் மகிழ்ந்தத் திரந்தன் னையீந்தான்
அனைத்துக் குமாதா ரமாவான் அதீதன்
சிவன்சங் கரன்சம் புதாள்போற் றிபோற்றி

வனத்தில் தவம் செய்த வில்லான் தனக்கு
மனத்தால் மகிழ்ந்(து) அத்திரம் தன்னை ஈந்தான்
அனைத்துக்கும் ஆதாரம் ஆவான் அதீதன்
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி

9.
எருத்தே றுமெம்மான் எழில்சேர் நிசிந்தன்
அருத்தித் துவந்தோர் அவத்தைக் கெடுப்பான்
நிருத்தன் நெருப்புப் பிழம்பாய் நிமிர்ந்தான்
சிவன்சங் கரன்சம் புதாள்போற் றிபோற்றி

எருத்(து) ஏறும் எம்மான் எழில்சேர் நிசிந்தன்
அருத்தித்து வந்தோர் அவத்தைக் கெடுப்பான்
நிருத்தன் நெருப்புப் பிழம்பாய் நிமிர்ந்தான்
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி

10.
உவந்தே யளித்தா னுமைக்கோர் புறத்தை
இவன்றா னெலாமென் றிருக்கும் சனத்தின்
பவந்தன் னைமாற்றும் பவன்வா மதேவன்
சிவன்சங் கரன்சம் புதாள்போற் றிபோற்றி

உவந்தே அளித்தான் உமைக்கோர் புறத்தை
இவன்தான் எ (ல்)லாம் என்(று) இருக்கும் சனத்தின்
பவம் தன்னை மாற்றும் பவன் வாமதேவன்
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி

சனம் - மக்கள்
பவம் - ஸம்ஸாரம்
மாற்றுதல் - நீக்குதல்
பவன், வாமதேவன் - சிவனின் ஒரு பெயர்

சரண்யா

Tuesday 23 July 2019

63. வண்ணப் பாடல் - 16 - திருநெல்வேலி (தாமிர சபை)

ராகம் - கானடா
தாளம் - மிஸ்ர சாபு

தத்த தத்த தனதான

முப்பு ரத்தை விழியாலே
..முற்ற ழித்த மறவோனே
அப்பு மத்தம் அணிவோனே
..அற்ப னுக்கும் நிழல்தாராய்
வெப்பொ ழித்த இறையோனே
..வெற்பி றைக்கு மருகோனே
செப்ப வைக்குள் நடமாடீ
..சித்தொ ருக்கம் அருளாயே

அப்பு - நீர் (கங்கை)
மத்தம் - ஊமத்த மலர்

வெப்பொழித்த - வெப்பு = ஒழித்த - கூன் பாண்டியனின் வெப்பு நோய் ஒழிக்க சம்பந்தருக்கு அருள் செய்த சொக்கநாத பெருமான்.

வெற்பிறை - வெற்பு + இறை - வெற்பு - மலை. மலையரசன் - இமவான்.

செப்பவை - செப்பு = அவை - தாமிர சபை - திருநெல்வேலி தாமிர சபை.

சித்தொருக்கம் - சித்து + ஒருக்கம் - மன ஒருமைப்பாடு.

பாடலைக் கேட்க
https://drive.google.com/open?id=1Ll9cQXs75yHx1_gfcWTfcKMeAGKg25Zw

சரண்யா

Monday 22 July 2019

62. திருவண்ணாமலை (பதிகம் 26)

கலி விருத்தம்

வாய்பாடு - மா x 4

1.

விடையே றிவரும் விமலன் சுடலைப்
பொடிபூ சியவன் புனிதன் கரிய
விடமார் மிடற்றன் வினைதீர்ப் பவன்மெய்
அடியார்க் கருள்வான் அருணா சலனே.

2.

என்போ டாமை அரவம் அணிவான்
முன்பின் இல்லான் மூலன் ஆவான்
இன்ப வடிவன் இன்னல் தீர்ப்பான்
அன்பர்க் கருள்வான் அருணா சலனே

3.

கண்டம் கரியன் கண்மூன் றுடையன்
பண்டை வினையைப் பாழ்செய் பெரியன்
வண்டார் குழலி மருவும் நாதன்
அண்டத்(து) இறைவன் அருணா சலனே

4.

வானோர் துயரை மாட்டும் பெருமான்
மானும் மழுவும் வண்கை ஏந்திக்
கானத் தினிலே களிப்பாய் நடிக்கும்
ஆனை உரிபூண் அருணா சலனே

வண்கை - அழகிய கை
கானம் - காடு
நடித்தல் - நடனமாடுதல்
மாட்டுதல் - அழித்தல்

5.

செய்ய நிறத்தன் சேயோன் தாதை
வெய்யோன் பல்லைத் தகர்த்த வீரன்
கையில் பிரம கபாலம் ஏந்தி
ஐயம் தேர்வான் அருணா சலனே

செய்ய நிறத்தன் - சிவந்த நிறம் கொண்டவன்
சேயோன் தாதை - முருகன் தாதை
வெய்யோன் - சூரியன். சூரியனின் பல்லைத் தகர்த்தவன். தக்ஷனின் யக்ஞத்தில் தக்ஷனோடு சேர்ந்து சிவனை, சூரியனும் அவமதித்தான். அதனால் வீரபத்திரர்(சிவன் ஸ்வரூபம்) சூரியனின் பல்லை உடைத்தார்.
கையில் பிரமனது (ஐந்தாவது தலையைக் கொய்து ) கபாலத்தை வைத்துக்கொண்டு பிக்ஷை ஏற்பார் சிவன்.

6.

இம்மை மறுமை இயக்கம் களைவான்
செம்மை அருளும் சீரார் கரத்தன்
எம்மை ஆளும் எழிலார் ஈசன்
அம்மை அப்பன் அருணா சலனே

சீர் ஆர் - சீர் நிறைந்த கரம் உடையவன்.. சிறப்பு மிகு கரம் கொண்டவன்

7.

விரல்மூன் றுயர்த்தி விருட்சத் தடியில்
குருவாய் அமர்வோன் கொன்றைச் சடையோன்
அரியும் அயனும் அலைந்தும் அறியா
அரிய சோதி அருணா சலனே

8.

நரையே றுமிசை அமரும் நல்லான்
புரமூன் றினைவெண் பொடியாக் கியவன்
பரையோர் பாகன் பகவன் படமார்
அரவம் அணிவான் அருணா சலனே

நரை - வெள்ளை
ஏறு - ரிஷபம்
மிசை - மேல்

புரமூன்று - திரிபுரம்
வெண்பொடி - சாம்பல்

பரை - பராசக்தி

9.

மணியார் கண்டன் மலையான் மருகன்
பணியார் அறியா பரமன் நிமலன்
நணியார்க் கருள்வான் நம்பன் நக்கன்
அணியார் சடையன் அருணா சலனே

மணியார் கண்டன் - விடம் உண்டதால் கறுத்த கழுத்துடையவன்.. கருநிற மணி போன்ற கழுத்துடையவன்.
மலையான் - பர்வத ராஜன்
மருகன் - மருமகன்
பணியார் அறியாப் பரமன் - தன்னை வணங்காதோரால் அறிய முடியாத பரமன்
நிமலன் - தூயவன்
நணியார் - அருகில் வருவோர் அவர்களுக்கு அருள்பவன்
நம்பன் - நம்முடையவன்
நக்கன் - திகம்பரன்
அணியார் சடையன் - அழகிய சடை உடையவன்

10.

கண்ணார் நுதலான் கயிலை மலையான்
நண்ணார் புரத்தை நகையால் எரித்தான்
உண்ணா முலையாள் உடையான் எழில்சேர்
அண்ணா மலையான் அருணா சலனே

பதிகம் நிறைவுற்றது.

சரண்யா

Thursday 4 July 2019

61. குறும்பா - பொது (பதிகம் 25)

அனைவருக்கும் வணக்கம்.

குறும்பா வகை ஒன்றில் சிவபெருமான் மீது ஒரு பதிகம் எழுதியுள்ளேன்.

தலம் - பொது

ஐந்து அடிகள்.
அடிதோறும் வெண்டளை பயிலும்.
அடிகள் 1,2,5 - 3 சீர்கள்
அடிகள் 3,4 - 2 சீர்கள்
1,2 ஆம் அடிகள் முதல் சீர் மோனை
3,4 ஆம் அடிகள் முதல் சீர் மோனை
1,3,5 - முதல் சீரில் எதுகை.
1,2,5 - ஈற்றுச் சீர் இயைபு
3,4 - ஈற்றுச் சீர் இயைபு

வாய்பாடு:

காய் காய் மா
காய் காய் மா
காய் காய்
காய் காய்
காய் காய் மா

1.
கையினிலே ஏந்திடுவான் ஓடு
காதினிலே சூடிடுவான் தோடு
பையரவம் ஆர்கண்டன்
பார்புகழும் கார்கண்டன்
தையலொரு பாகனைநீ நாடு

2.
சென்னியிலே வைத்திடுவான் ஆறு
தேகமதில் பூசிடுவான் நீறு
வன்னியினை ஏந்திடுவான்
மன்றமதில் ஆடிடுவான்
மன்னுபுகழ் ஈசனெனக் கூறு

3.
மாலயனும் காணவொணாச் சோதி
வைய(ம்)முத லானவற்றிற்(கு) ஆதி
சீல(ம்)மிகத் தந்திடுவான்
தீவினைகள் தீர்த்திடுவான்
நீலமணி கண்டனெனப் போதி

போதி - போதித்தல்

4.

ஆனைமுகன் ஆறுமுகன் தாதை
அன்பருக்குக் காட்டிடுவான் பாதை
ஞானமருள் மௌனகுரு
நன்மையருள் தேவதரு
ஏனனவன் நீக்கிடுவான் சூதை

ஏனம் - பன்றி, பன்றிக்கொம்பை, சிவன் ஆபரணமாய் அணிந்துள்ளார். அதனால் ஏனன் என்னும் பெயர் அவர்க்கு.
சூது - பிறப்பு முதலிய துன்பம்

5.
அப்பனுடை வாகனமாம் மாடு
ஆடரங்காம் வெள்ளைநிறக் காடு
அப்புறையும் அஞ்சடையன்
அக்கரமோர் ஐந்துடையன்
ஒப்புயர்வில் லாதவனைப் பாடு

வெள்ளைநிறக் காடு - திருவெண்காடு

6.
அந்தகனின் கர்வமழித் தானே
ஆதவனின் பல்லையுடைத் தானே
சுந்தரனின் தோழனவன்
தூயசெழுஞ் சோதியவன்
சந்திரனை உச்சியில்வைத் தானே

7.
நாற்றிசையும் ஏத்துமுயர் நாமம்
நவில்வார்க்குத் தந்திடுமே ஏமம்
கூற்றுதைத்த பெம்மானைக்
கோலமிகு எம்மானைப்
போற்றிமகிழ் வார்பெறுவார் சேமம்

8.
அற்புதங்கள் ஆற்றுகின்ற மாயன்
அன்னைசிவ காமிமகிழ் நேயன்
அற்பனெனைக் காத்திடுவான்
அஞ்செலெனக் கூறிடுவான்
பொற்சபையில் ஆடுமுயர் தூயன்

9.

நான்மறையும் ஏத்துகின்ற நாதன்
நாண்மலர்கள் ஆர்ந்திடும்பொற் பாதன்
பான்மதிசேர் செஞ்சடையன்
பார்வதியோர் பாலுடையன்
மான்மழுவை ஏந்துமுயர் வேதன்

10.

தில்லையிலே ஆடிடுவான் கூத்து
சீர்பெறுவாய் நீயதனைப் பார்த்து
கல்லாலின் கீழமர்வான்
சொல்லாமல் சொல்லிடுவான்
எல்லையிலா ஈசனைநீ ஏத்து

பதிகம் நிறைவுற்றது.

நமச்சிவாய வாழ்க.

அன்புடன்,
சரண்யா

Wednesday 12 June 2019

60. திருக்காளத்தி - (பதிகம் 24)

திருக்காளத்தி

நாலடித் தரவு கொச்சக் கலிப்பா

1.
சடைமேல்வெண் மதியணிவோய் சங்கடம்தீர்க் கும்சதுரா
உடையானே உமைபாகா உயர்ஞானம் அருள்வோனே
விடையேறி வருவோனே வெவ்வினைகள் களைந்திந்தக்
கடையேனைக் காப்பாயே காளத்திப் பெருமானே

2.
பிறையாரும் சடையோனே பிறப்பிறப்பில் லாத்தேவே
மறையாரும் வழியாலே மகிபாஉன் அடிபணியும்
குறையாரும் சிறியேனின் குற்றங்கள் பொறுப்பாயே
கறையாரும் மிடற்றோனே காளத்திப் பெருமானே

பிறப்பிறப்பில் லாத்தேவே - பிறப்பு இறப்பு இல்லாத் தேவே
ஆர்தல் - நிறைதல், நிரம்புதல், திகழ்தல், அனுபவித்தல்
பிறையாரும் சடையோன் - நிலா திகழும் சடை உடையவன்
மறையாரும் - வேதங்கள் அனுபவிக்கும்/போற்றும்
குறையாரும் - குறை நிரம்பியுள்ள
கறையாரும் - விடம் உள்ளதால் கரிய நிறம் நிறைந்த

3.

நரைஎருதின் மேலேறி நானிலம்போற் றிடவருவோய்
பரையினையோர் கூறுகந்தோய் பகலிரவென் றெப்போதும்
இரைதேடி அலைகின்ற ஈனனெனைக் கைதூக்கிக்
கரைசேர்த்த ருள்வாயே காளத்திப் பெருமானே

4.

நண்ணார்தம் புரம்மூன்றை நகையாலே எரித்தோனே
விண்ணோர்கள் துயர்தீர்த்தோய் விடையேறும் வித்தகனே
பண்ணவனே பணிந்தேத்தும் பத்தனெனைக் காப்பாயே
கண்ணப்பர்க் கருள்கோவே காளத்திப் பெருமானே

5.
கூற்றுக்குக் கூற்றோனே கொல்களிற்றை உரித்தோனே
மாற்றார்க்குச் சேயோனே வணங்கிடுவார்க் கென்றென்றும்
ஊற்றான உத்தமனே ஓங்கிவளர் ஒளிப்பிழம்பே
காற்றாகி நிறைவோனே காளத்திப் பெருமானே

6.

வாரணமும் மாசுணமும் சிலந்தியுமன் றேத்திடவே
பூரணமாய் அருள்செய்த புண்ணியனே! மலரோனும்
நாரணனும் காணவொணா நாயகனே! அனைத்திற்கும்
காரணமாய் நின்றவனே! காளத்திப் பெருமானே!

காளத்தியை, சீகாளத்தி என்று கூறுவார். சீ - சிலந்தி, காள - பாம்பு, அத்தி - யானை. மூன்றும் சிவபெருமானை வணங்கி, நற்கதி அடைந்த தலம்.

7.
ஆலமர நீழலமர்ந்(து) அறநெறியை உரைப்போனே
நீலமணி மிடற்றோனே நீலியமர் மேனியனே
ஓலமிடும் தீனனென(து) ஊறுகளைக் களைவோனே
காலனஞ்ச உதைத்தோனே காளத்திப் பெருமானே

8.

அங்கசனை எரித்தோனே ஆதியந்தம் இல்லோனே
மங்கையொரு பங்கினனே மாசுணம்சூழ் மிடற்றோனே
கொங்குமலி கொன்றைவிழை கோமானே எழிலொலிசேர்
கங்கைமலி சடையோனே காளத்திப் பெருமானே

கொங்கு - தேன்
அங்கசன் - மன்மதன்

9.
பண்ணாரும் இறையோனே படிகம்போல் மிளிர்வோனே
எண்ணார்முப் புரம்தன்னை கணையொன்றால் எரித்தோனே
பெண்ணோர்பால் உடையோனே பிறப்பறுக்கும் பெரியோனே
கண்ணோர்மூன் றுடையோனே காளத்திப் பெருமானே

10.

அலைபரவும் கடல்தந்த ஆலாலம் உண்டோனே
மலையரசன் மகள்கேள்வா மதிசேர்செஞ் சடையோனே
கலைகளுக்கோர் அதிபதியே காலத்தைக் கடந்தோனே
கலையணியும் கரத்தோனே காளத்திப் பெருமானே

பணிவுடன்,
சரண்யா

Saturday 25 May 2019

59. தில்லை - (பதிகம் - 23)

வணக்கம்.

அடுத்த பதிகம்.

தில்லை (சிதம்பரம்)

அறுசீர் விருத்தம்
மா மா காய் (அரையடி)

1.
அருவாய் உருவாய் அருவுருவாய்
..அருள்பா லிக்கும் ஆண்டவனும்
கருணை பொழியும் கற்பகமும்
..கருமா மணியார் மிடற்றானும்
மருவார் புரம்மூன் றெரித்தானும்
..மருவி என்னுள் புகுந்தானும்
திருநா ளைப்போ வார்பணியும்
..திருவார் தில்லை நாயகனே

ஆகாயம் - அரு
நடராஜர் - உரு
மூலநாதர் (இலிங்கம்) - அருவுரு

திருநாளைப் போவார் - நந்தனார்

2.
உற்ற துணையாய் வருவானும்
..உயிரின் உயிராய் உறைவானும்
குற்றம் இல்லாக் கோமானும்
..கொன்றை மலரை அணிவானும்
பெற்றம் உகந்தே றும்தேவும்
..பெரிய புராணம் அளித்தானும்
சிற்றம் பலத்தே நடம்புரியும்
..திருவார் தில்லை நாயகனே

பெரிய புராணம் அரங்கேற்றம் நடைபெற்றது தில்லையில் (அலகிற் சோதியன் அம்பலத்து ஆடுவான்)

3.
நாவால் நமச்சி வாயவென்று
..நாளும் நவிலும் அடியார்க்குச்
சாவா திருக்கப் பணிவானும்
..சபையில் ஆடும் அதிபதியும்
மூவா யிரவர்க் கருள்வானும்
..மோன குருவாய் அமர்வானும்
தேவா ரத்தைத் தந்தானும்
..திருவார் தில்லை நாயகனே

மூவாயிரவர் - தில்லை வாழ் அந்தணர் மூவாயிரம் பேர்
இராஜராஜ சோழன், நம்பியாண்டார் நம்பியின் துணையோடு தில்லையில், மூவர் பாடிய தேவாரத்தை ஒரு அறையிலிருந்து எடுத்தார்.

4.
தகரா காசத் துறைவானும்
..சனகா தியர்க்கோர் ஆசானும்
மகமா யைதீர்க் கும்பரமும்
..மணிவா சகர்சொல் கேட்பானும்
முகமோர் ஐந்து கொண்டானும்
..மொழிக்கும் மதிக்கும் சேயானும்
செகமேத் திடும்நற் பண்ணவனும்
..திருவார் தில்லை நாயகனே

புக்தி முக்தி ப்ரத தகராகாசம் (ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர் ஆனந்த நடன பிரகாசம் என்ற சிதம்பர ஸ்தல க்ருதி)
மாணிக்கவாசகர் சொல்ல, நடராசப் பெருமான் ஓலையில் எழுதிய திருவாசகம் - குறிப்பு

சேயான் - தொலைவானவன் / எட்டாதவன்.
மொழி - வாக்கு
மதி - அறிவு

வார்த்தையாலும் அறிவாலும் "இவன் இப்படிப்பட்டவன்" என்று வரையறுக்க முடியாதவன்.

தகராகாசம் - தஹராகாசம் = அண்டத்தில் ஆடும் பிரான் பிண்டமான ஜீவனுக்குள்ளும் ஆடுகிறான். பேரம்பலம் - சிற்றம்பலம் (தஹராகாசம்).. இவ்வாறு இறைவனை தியானித்தால் ஆத்ம ஞானம் கிடைக்கும் என்று கூறுவார்.

5.
தவமே புரிவோர் நாயகனும்
..தவள வனம்வாழ் நாயகனும்
உவமா னமிலா நாயகனும்
..உலகுக் கெல்லாம் நாயகனும்
நவகோள் பணியும் நாயகனும்
..நாவுக் கரசர் நாயகனும்
சிவகா மியம்மை நாயகனும்
..திருவார் தில்லை நாயகனே

தவள வனம் - தவளம் - வெள்ளை நிறம். திருவெண்காடு ஸ்தலம்.
நாவுக்கரசர் - தாச மார்க்க பக்தி.

6.
ஆலம் உண்ட அருட்கடலும்
..ஆணும் பெண்ணும் ஆனவனும்
காலன் அஞ்ச உதைத்தவனும்
..காமன் வேவ விழித்தவனும்
மாலுக் காழி அளித்தவனும்
..மலரோன் சிரத்தைக் கொய்தவனும்
சீலர் பணியும் சிற்பரனும்
..திருவார் தில்லை நாயகனே

மாலுக் காழி அளித்தவனும் - மாலுக்கு ஆழி அளித்தவன். மஹாவிஷ்ணுவிற்குச் சக்கரத்தை அளித்தவர் சிவபெருமான்.

7.
வம்பார் மலரும் வானதியும்
..மதியும் அணியும் சடையானும்
"நம்பா" என்று கழல்பணியும்
..நல்லோர் தம்மைக் காப்பவனும்
அம்போ ருகனும் நாரணனும்
..அலைந்தும் அறிய முடியாத
செம்பொற் சோதி ஆனவனும்
..திருவார் தில்லை நாயகனே

அம்போருகன் - பிரமன்
நாரணன் - நாராயணன் - விஷ்ணு

8.
கற்றார் போற்றும் கண்ணுதலும்
..கரையில் லாத கனைகடலும்
மற்றோர் அறியா மாமலையும்
..மதிப்போர் மனத்தில் வசிப்பவனும்
வற்றல் ஓடொன் றுடையானும்
..வன்னி ஏந்தும் கையானும்
செற்றார் புரத்தைச் செற்றானும்
..திருவார் தில்லை நாயகனே

கனைத்தல் - ஒலித்தல்
கனைகடல் - ஒலியுடைய (ஆரவாரம் செய்யும்) கடல்
மற்றோர் - மாற்றுக் கருத்து உடையோர் (நாத்திகர்) / அறிவற்றவர்கள்
செற்றார் - பகைவர்

9.
வீணை ஏந்தி நாரதரும்
..வீறு கொண்ட தும்புருவும்
காணக் கனக சபையினிலே
..களிப்பாய் நடனம் புரிவோனும்
பாணம் தன்னைப் பார்த்தனுக்குப்
..பாங்காய்த் தந்த வல்லவனும்
சேணம் அளிக்கும் பெரியவனும்
..திருவார் தில்லை நாயகனே

சிதம்பரத்தில் - ஆனந்த நடனம் - களிப்பாய் நடனம் புரிதல் - குறிப்பு
சேணம் - உயர்வு

10.
கற்ப னைக்கெட் டாதவனும்
..கலைகட் கெல்லாம் அதிபதியும்
வெற்பை வில்லாய் எடுத்தவனும்
..வேதம் போற்றும் விற்பனனும்
பொற்ச பையில் பதஞ்சலிக்கும்
..புலிக்கால் முனிக்கும் அருள்பவனும்
தெற்குத் திசைநோக் கும்சிவனும்
..திருவார் தில்லை நாயகனே

புலிக்கால் முனி - வ்யாக்ரபாதர்

பணிவுடன்,
சரண்யா

Friday 10 May 2019

58. வண்ணப் பாடல் - 15 - திருக்கஞ்சனூர்

கஞ்சனூர்

கஞ்சனூரில் அருள்புரியும் சிவபெருமான் மீது ஒரு வண்ணப் பாடல்.

ஆபோகி ராகம்
மிஸ்ர சாபு தாளம்

தந்த தானன தந்த தானன
..தந்த தானன தனதான

துங்க நீறணி சங்க ராகடி
.துங்கி லேநட மிடுவோனே
..சுந்த ராஅப யங்க ராமிகு
...தொந்த தீவினை களைவோனே

எங்கு மேதிக ழும்ப ராவண
.எந்தை யேஉன திருதாளை
..என்று மேதொழு மன்பர் மீதுன
...தின்ப மாமழை பொழிவாயே.

பொங்க ராவுட னங்க மாலைபு
.னைந்த நாயக அதிதீரா
..பொங்கு மாவிட முண்ட பாலக
...புங்க வாபர குருதேசா

கங்கை யோடிள இந்து சூடிடு
.கந்த வார்சடை அழகோனே
..கந்த வேளையு கந்த ணைபவ
...கஞ்ச னூருறை பெருமாளே

பதம் பிரித்த வடிவம்.

துங்க நீறணி சங்கரா! கடி
.துங்கிலே நடமிடுவோனே!
..சுந்தரா! அபயங்கரா! மிகு
...தொந்த தீவினை களைவோனே!

எங்குமே திகழும் பராவண!
.எந்தையே! உனது இருதாளை
..என்றுமே தொழும் அன்பர் மீது உனது
...இன்ப மாமழை பொழிவாயே.

பொங்கு அராவுடன் அங்கமாலை
.புனைந்த நாயக! அதிதீரா!
..பொங்கு மாவிடம் உண்ட பாலக!
...புங்கவா! பரகுரு! தேசா!

கங்கை யோடு இள இந்து சூடிடு
.கந்த வார்சடை அழகோனே!
..கந்த வேளை உகந்து  அணைபவ!
...கஞ்சனூர் உறை பெருமாளே!

கடி துங்கி - பயம் தரக்கூடிய இரவு
துங்கி - இரவு என்னும் பொருள் பார்த்தேன். இரவிலே என்பது போல், துங்கிலே என்று அமைத்தேன். துங்கியிலே என்று வரவேண்டும். சந்தத்திற்காக "யி" என்ற எழுத்தை விட்டுவிட்டேன். பேச்சு வழக்காக இருப்பது போல வைத்துளேன்.


பாடலைக் கேட்க:
https://drive.google.com/open?id=1B3TRT4ejwp7SuWVNQzo1mB3lA4-cr9ae

Monday 29 April 2019

57. வண்ணப் பாடல் - 14 - திருவேரகம்

திருவேரகம்

ராகம் - ஹமீர்கல்யாணி
தாளம் - ஆதி (கண்ட நடை)

தானதன தானதன தானதன தானதன
..தானதன தானதன தனதான

ஆறுமுக வேல்முருக! மால்மருக! மாமயிலில்
.ஆடிவிளை யாடிவரும் அழகோனே
..ஆகமமும் நான்மறையும் ஆருமிறை யே!கருணை
...ஆரடியை யேஅடைய அருள்வாயே

வீறுடைய தோள்வலிய! தேவகணம் மேன்மையுற
.மேவலரின் ஈடரியும் அதிதீரா!
..மேழகம தேறிவரும் மேதினிகு மாரனினை
...நாயக!வி சாக!குக! குமரேசா!

நீறணியும் மேனியுடை நேயரவர் தீவினையை
.நீறெனவெ காயுமுமை புதல்வோனே!
..நீபமலர் மாலையணி வீர!சிவ பால!குண
...நேய!குற மாதுமகிழ் மணவாளா!

ஏறதனின் மேலமரும் ஈசனது காதில்மிக
.ஏமமுறு போதனைசெய் குருநாதா
..ஈரமுடை மாவொடெழில் மேவுமுயர் சோலைநிறை
...ஏரகநி லாவிஎமை உடையோனே

பதம் பிரித்த வடிவம்:

ஆறுமுக வேல்முருக! மால்மருக! மாமயிலில்
.ஆடி விளையாடி வரும் அழகோனே
..ஆகமமும் நான்மறையும் ஆரும் இறையே! கருணை
...ஆர் அடியையே அடைய அருள்வாயே

வீறுடைய தோள்வலிய! தேவகணம் மேன்மையுற
.மேவலரின் ஈடரியும் அதிதீரா!
..மேழகம் அது ஏறிவரும் மேதினி குமார(ன்) நினை
...நாயக! விசாக! குக! குமரேசா!

நீறணியும் மேனியுடை நேயர் அவர் தீவினையை
.நீறெனவெ காயும் உமை புதல்வோனே!
..நீபமலர் மாலை அணி வீர! சிவ பால! 
...குணநேய! குறமாது மகிழ் மணவாளா!

ஏறு அதனின் மேல் அமரும் ஈசனது காதில் மிக
.ஏமம் உறு  போதனைசெய் குருநாதா
..ஈரம் உடை மாவொடு எழில் மேவும் உயர் சோலைநிறை
...ஏரகம் நிலாவி எமை உடையோனே!


ஆருமிறையே - ஆரும் இறையே - ஆர்தல் - அனுபவித்தல். 
கருணை ஆர் அடியை - ஆர்தல் - நிறைதல். கருணை நிறையும் பாதங்கள்.

வீறுடைய தோள் வலிய -  வீறு - பெருமை. பெருமை நிறைந்த வலிமையான தோள்கள் உடையவன்.
மேவலர் - பகைவர் (அசுரர்கள்)
ஈடு - வலிமை / தகுதி

மேழகம் - செம்மறி ஆடு
மேதினி குமாரன் - பூமியின் பிள்ளை - அங்காரகன். அங்காரகனின் அதிபதி முருகன்.

திருநீறு அணியும் அன்பர்களின் தீவினைகளை எரித்து, சாம்பலாக்கும் உமை பாலன்.

நீபம் - கடம்பம்

ஏமம் - உயர்வானது (ஹேமம் - தங்கம்)
உறுதல் - நிறைதல்
ஈரம் - பசுமை
மா - வயல்
ஈரம் உடை மா - நீர் நிறைந்த பசுமையான வயல்.



Monday 22 April 2019

56. திருஅன்பிலாலந்துறை - (பதிகம் - 22)

வணக்கம்.

அடுத்த பதிகம்.

திருஅன்பிலாலந்துறை (அன்பில்)

அறுசீர் விருத்தம்

எல்லாச் சீர்களும் மாச்சீர்

செய்யன் சசிசேர் சடையன்
..செங்கண் மாத்தோல் உடையன்
மெய்யன் மாதோர் பாகன்
..வெல்லும் மழுவை ஏந்தும்
கையன் கயிலை நாதன்
..கண்ணார் நுதலன் விமலன்
ஐயன் உறையும் கோயில்
..அன்பில் ஆலந் துறையே. 1

செய்யன் - செய் என்றால் சிவப்பு. சிவந்த மேனியன்.
மா - யானை. மதம் கொண்டதால், யானையின் கண் சிவந்திருக்கும். யானையின் தோலை அணிந்தவர்.

சித்தத் துள்ளே நிறையும்
..தேவன் விடைமேல் ஊரும்
பித்தன் பேயன் கொடிய
..பிணிகள் தீர்க்கும் ஈசன்
முத்தி அருளும் முதல்வன்
..முளைவெண் மதியை அணியும்
அத்தன் உறையும் கோயில்
..அன்பில் ஆலந் துறையே 2

வையம் வாழ விடத்தை
..மகிழ்ந்து புசித்த நேசன்
கையில் மானும் மழுவும்
..கனலும் கொண்ட தேசன்
பையார் நாகம் அணியும்
..பரமன் பிரமன் சிரத்தில்
ஐயம் தேர்வான் கோயில்
..அன்பில் ஆலந் துறையே 3

விருத்தன் பாலன் விடையன்
..வெங்காட் டினிலே இரவில்
நிருத்தம் ஆடும் சீலன்
..நிமலன் வேதம் உணர்ந்த
கருத்தன் கமல மலரான்
..கருவம் கடிந்த கோமான்
அருத்தன் உறையும் கோயில்
..அன்பில் ஆலந் துறையே. 4

வம்பார் கொன்றைச் சடையன்
..வடிவார் மங்கை கேள்வன்
நம்பன் நாத வடிவன்
..ஞானம் அருளும் போதன்
உம்பர் தருவாய் வரங்கள்
..உவந்த ளிக்கும் வள்ளல்
அம்பொன் வண்ணன் கோயில்
..அன்பில் ஆலந் துறையே. 5

அன்பில் தலத்து இறைவி - சௌந்தரநாயகி. அதனால் வடிவார் மங்கை என்று வைத்தேன்.

சூலம் ஏந்தும் கையன்
..சோதி வடிவன் தூயன்
வேலன் தாதை அடியார்
..மிடியைப் போக்கும் மன்னன்
கோலச் சடையில் தேனார்
..கொன்றை அணியும் வாமன்
ஆல மிடற்றான் கோயில்
..அன்பில் ஆலந் துறையே 6

வண்டார் குழலி நாதன்
..வாரி சூடும் இறைவன்
சண்டே சுரருக் கருளும்
..சடிலன் அம்மை யப்பன்
கண்டத் துள்ளே ஆல
..காலம் அடைத்த தீரன்
அண்டத் அரசன் கோயில்
..அன்பில் ஆலந் துறையே. 7

முப்பு ரத்தைக் காய்ந்த
..முக்கட் பரமன் அனலன்
ஒப்பு யர்வில் லாத
..ஒருவன் மாறன் உடலின்
வெப்பு நோயொ ழித்த
..வெந்த நீற்றன் விகிர்தன்
அப்பன் உறையும் கோயில்
..அன்பில் ஆலந் துறையே. 8

ஒருவன் - ஏகன். அவன் மட்டுமே நிலையானவன். உயர்ந்தவன். Ultimate, supreme.

மாறன் - பாண்டியன்.

தஞ்சம் அடைவார்க் கருளும்
..தலைவன் நெற்றி நயனன்
பஞ்சம் தீர்க்கும் கையன்
..பஞ்சக் கரத்தான் தந்தை
வஞ்சம் இல்லாப் பெரியோன்
..வாம தேவன் குழகன்
அஞ்சல் தீர்ப்பான் கோயில்
..அன்பில் ஆலந் துறையே. 9

அஞ்சல் - பயம் அடைதல்

பாதி மதிசேர் சடையன்
..பரிதி அனைய ஒளியன்
வேதம் போற்றும் தேவன்
..விறகு விற்ற செல்வன்
சீதப் புனலை எளிதாய்ச்
..சென்னி தன்னில் ஏற்ற
ஆதி உறையும் கோயில்
..அன்பில் ஆலந் துறையே. 10

விறகு விற்ற செல்வன் - பாண்டிய நாட்டுத் திருவிளையாடல்களுள் ஒன்று (விறகு வெட்டியாக வந்தது)

சீதப் புனல் - குளிர்ந்த நீர் - கங்கை

பதிகம் நிறைவுற்றது.

பணிவுடன்,
சரண்யா

Wednesday 13 March 2019

55. திருப்பரங்குன்றம் பதிகம்

திருப்பரங்குன்றம்

அறுசீர் விருத்தம்

அரையடி வாய்பாடு - மா மா காய்

தீரா வினைகள் களைவானும்
..தேவர் குறையைத் தீர்த்தானும்
ஆரா வமுதாய் இனிப்பானும்
..அழகின் உருவாய்த் திகழ்வானும்
காரார் தேகன் மருகோனும்
..கயிலை நாதன் சேயோனும்
பாரோர் போற்றும் பெரியோனும்
..பரங்குன் றமரும் பெருமானே. 1

கயமா முகனுக் கிளையவனும்
..கதிர்வேல் கையில் கொண்டவனும்
வயலூர் தனிலே உறைபவனும்
..வள்ளிக் கிசையும் அழகோனும்
அயனின் கர்வம் கடிந்தவனும்
..அரனுக்(கு) உபதே சித்தவனும்
பயம்போக் கியெமைக் காப்பவனும்
..பரங்குன் றமரும் பெருமானே. 2

அருண கிரிக்கோர் ஆசானாய்
..அரிய தமிழைத் தந்தோனும்
கரியின் கொம்பைப் புணர்வோனும்
..கருமா மிடற்றன் புதல்வோனும்
சுருதிப் பொருளாய் நிறைவோனும்
..சூரன் மார்வைத் துளைத்தோனும்
பரிவோ டெமக்கும் அருள்வோனும்
..பரங்குன் றமரும் பெருமானே. 3

அரிய தமிழ் தானளித்த மயில் வீரா, செபமாலை தந்த சற்குருநாதா என்று அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

கரி - யானை. யானை வளர்த்த பெண் - தெய்வானை.
கொம்பு - கொடி போன்ற அழகிய, மென்மையான பெண்.
சந்ததம் பந்தத் தொடராலே பாடலில் - தந்தியின் கொம்பைப் புணர்வோனே என்று வரும்.

நீபத் தொடையார் மார்பினனும்
..நிறைவெண் மதிபோல் முகத்தவனும்
தீபத் தொளியாய் மிளிர்பவனும்
..தெய்வ யானை நாயகனும்
ஆபத் துகளை அழிப்பவனும்
..அருளை வாரி அளிப்பவனும்
பாபத் திரளைத் தகர்ப்பவனும்
..பரங்குன் றமரும் பெருமானே. 4

நீபம் - கடம்பு. கடம்ப மலர் மாலை திகழும் மார்பன்.

எண்ணத் துள்ளே நிறைவானும்
..ஏத மில்லா எழிலானும்
விண்ணோர் இடுக்கண் களைந்தானும்
..வேதம் போற்றும் வித்தகனும்
கண்ணின் மணியாய் அடியாரைக்
..காக்கும் கருணை மாகடலும்
பண்ணின் முதலாய்த் திகழ்வானும்
..பரங்குன் றமரும் பெருமானே. 5

ஏதம் - குற்றம்

அச்சம் தீர்க்கும் அயிலோனும்
..அங்கா ரகனுக் கதிபதியும்
உச்சம் அடியார்க் களிப்பவனும்
..ஓங்கா ரத்தின் கருப்பொருளும்
கொச்சை நகரின் கோமானும்
..குறமின் கொடியோ டிணைவானும்
பச்சை மயில்மீ தமர்வானும்
..பரங்குன் றமரும் பெருமானே. 6

அங்காரகனின் (செவ்வாய்) அதிபதி முருகன் என்பார்.
கொச்சை நகர் - சீர்காழி. திருஞானசம்பந்தர் அவதரித்த ஊர். சம்பந்தர், முருகப் பெருமானின் அவதாரம் என்று சொல்வார்கள்.

நற்ற வத்தோர் உள்ளொளியும்
..நக்கீ ரர்போற் றும்மிறையும்
ஒற்றை மருப்பன் சோதரனும்
..உயர்மெய்ஞ் ஞானம் தருபவனும்
சுற்றி வந்த பகைமைதனைத்
..தோல்வி அடையச் செய்தவனும்
பற்றைப் போக்கும் பெரியவனும்
..பரங்குன் றமரும் பெருமானே. 7

நக்கீரர் - திருமுருகற்றுப்படை பாடத் தொடங்கிய இடம் திருப்பரங்குன்றம்

ஒற்றை மருப்பன் - ஒற்றைக் கொம்பு / தந்தம் கொண்டவன் - ஏகதந்தன் - விநாயகன்

சத்தி வேலைப் பிடித்தோனும்
..சமரம் புரியும் சதுரோனும்
சித்தர் போற்றும் குருபரனும்
..செந்தில் மேவும் சேவகனும்
முத்திப் பேற்றை அளிப்போனும்
..முத்த மிழ்ச்சங் கக்கோனும்
பத்தர்க் கருளும் பரம்பொருளும்
..பரங்குன் றமரும் பெருமானே. 8

முத்தமிழ்ச் சங்கம் - மதுரை பாண்டியன் சபையில் முருகப்பெருமான் அமர்ந்து கட்டிக் காத்தார்.

மங்கை பங்கன் விழியிருந்து
..வந்த கதிரில் உதித்தவனும்
கங்கை நதியின் அணைப்பாலே
..கவினார் பொய்கை அடைந்தவனும்
துங்க ஆறு முகத்தானும்
..தொல்வி னைகள் அறுப்பானும்
பங்கம் அறியாப் பாலகனும்
..பரங்குன் றமரும் பெருமானே. 9

அவனி உய்யப் பிறந்தானும்
..அணுவின் அணுவாய் உறைவானும்
சிவனுக் குயர்மந் திரப்பொருளைச்
..செவியில் உபதே சித்தானும்
குவளைக் கண்ணாள் குஞ்சரியும்
..குறமின் கொடியும் அணைதேவும்
பவசா கரத்தை அரிவோனும்
..பரங்குன் றமரும் பெருமானே. 10

பணிவுடன்,
சரண்யா

Monday 11 February 2019

54. சித்திரக்கவி - 3



டமருக பந்தம் - சிவன்

உடுக்கை (டமரு) வடிவம் கொண்ட சித்திரக்கவி.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தின், இடதுகைப் பக்கம், கீழிருந்து மேல் சென்று, மீண்டும், மேலிருந்து கீழ் (சரிவாக) வரவேண்டும். வலதுகைப் பக்கம் கீழே வந்ததும், மீண்டும் மேலே செல்ல வேண்டும். மேல் வலப்பக்கம் சென்றதும், மீண்டும் சரிவாக கீழே இறங்க வேண்டும். தொடங்கிய இடத்தில் முடிக்க வேண்டும்.

மஞ்சள் நிறத்தில் குறியிட்டுள்ள எழுத்துகள் ஒன்றியிருக்க வேண்டும்.



மாதொரு பாகா வேதா
தாதையே நாத யோகீ
கீதனே ஏகா தேசா
சாதுவே நாதா வாமா

தாதை - தந்தை
ஏகா - ஏகன் என்பதன் விளி. ஏகனே என்று அழைப்பதை ஏகா என்றும் வழங்கலாம்.
தேசா - தேசனே. தேஜஸ் உடையவன்
சாது - முனிவன்.
வாமா - அழகா. வாமம் - அழகு.

சரண்யா

Friday 8 February 2019

53. சித்திரக்கவி - 2

கோமூத்ரி

சிவன்

பாத்திரம் ஏந்தும் பவனே போற்றி
சாத்திரம் போற்றும் பரனே போற்றி

படத்தைக் கண்டால் உங்களுக்குத் தெளிவாகும். ஒரு மாடு (கோ), சிறுநீர் கழித்துக்கொண்டு நடந்தால், அதன் வால், அந்த நீரினை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் மாற்றி மாற்றி அடிக்கும் அல்லவா? அது போல் இருக்கும் இந்த அமைப்பு.




திருமயிலை கபாலீஸ்வரர் கோவிலில், சுவற்றில் எழுதி இருக்கும் வாக்கியம் ஒன்று கூட, இவ்வகையைச் சாரும்.

கயிலையே மயிலை
மயிலையே கயிலை

                           

52. சித்திரக்கவி - 1

நரமுக விநாயகர் - நன்றுடையான் கோயில், திருச்சி.

நாளை விநாயக சதுர்த்தியை முன்னிட்டு இன்று உங்களுடன் பகிர்கிறேன். சந்தவசந்தம் என்ற இணையக்குழுமத்தில் நடந்த சித்திரக்கவியரங்கில், அடியேன், விநாயகரின் அருளால் எழுதியது.

அஷ்ட நாக பந்தம்

வெண்பா:

நரமுகவி நாயக ஞால முதலே
கருணா முதமே கணாதிப தீர
கவலையவம் தீது களைவோய்நா தாதி
பவதாக மரிமகி பா

பதம் பிரித்த வடிவம்

நரமுக விநாயக ஞால முதலே
கருணாமுதமே கணாதிப தீர
கவலை அவம் தீது களைவோய் நாதாதி
பவ தாகம் அரி மகிபா

கருணாமுதமே - கருணா அமுதமே - கருணை பொழியும் அமுதம்
நாதாதி - நாதத்தின் ஆதி (ப்ரணவ ஸ்வரூப வக்ரதுண்டம்)
அவம் - கீழ்மை
பவதாகம் - பிறவிப் பிணி
அரி - அழிப்பாய்
மகிபா - மகிமை மிக்கவனே.

படத்தில் எட்டு வண்ணத்தில் பாம்புகள் உள்ளன. ஒவ்வொரு வண்ணப் பாம்பிலும் இதே வரிகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து காணப்படும்.



சரண்யா

Wednesday 16 January 2019

51. நவகிரக வெண்பா

சூரியன்

காரிருள் நீக்கும் கதிரவன் ஏழ்பரித்
தேரிலு லாவரும் சேவகன் ஆரியன்
வீரியம் நல்கிடும் வித்தகன் மித்திரன்
சூரியனே என்றும் துணை

ஏழ் பரி - ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் உலா வருபவன்
சேவகன் - வழி நடத்துபவன் ((ஞான) ஒளியைத் தந்து நமக்கு வழி காட்டுபவன்)
ஆரியன் - ஆசான் / பெரியோன்
வீரியம் - வீரம்
மித்திரன் - நண்பன் / சூரியனின் 12 நாமங்களில் ஒன்று

சந்திரன்

சிந்தைக்(கு) அதிபதியே சீதக் கதிருடையாய்
சுந்தர நாயகனே தூவெண் ணிறமுடையாய்
இந்திரை சோதரனே ஈசன் தலையமரும்
சந்திரனே நல்லருள் தா

சிந்தை - மனம்
இந்திரை - திருமகள் (இலக்குமி) - பாற்கடலைக் கடைந்த போது, சந்திரன் வந்தான். பின்னர் இலக்குமி தேவி வந்தாள் என்பது புராணம்.

அங்காரகன்

செங்கண் உடையோனே செம்மறி ஆடேறும்
மங்கள நாயகனே வச்சிர வேலுடையாய்
நங்கை நிலமகளின் நன்மகனே வீரமுடை
அங்கா ரகனே அருள்

அங்காரகனின் வாகனம் செம்மறி ஆடு.
வச்சிர வேல் - கூர்மையான வேல் (சக்தி ஆயுதம் [சூலம்])
பூமா தேவியின் குமாரன்

புதன்

மதிதாரை மைந்தன் மதியைத் தருவோன்
நதிசூடி பத்தர்க்கு நன்மை அருளும்
சதுரன் கவித்திறன் தந்திடும் சாந்தன்
புதபக வானே புகல்

மதி - சந்திரன்
தாரை - சந்திரனின் ஒரு மனைவி
சந்த்ர தாரா சுதம் என்று ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர் புதம் ஆச்ரயாமி சததம் கீர்த்தனையில் பாடியுள்ளார்.
மதியைத் தருவோன் - புத்தியைத் தருபவன். புத்தி தாதா என்று புதனுக்கு ஒரு பெயர்.
நதிசூடி - சிவபெருமான். (சங்கர பக்த சிதம் சதானந்த சஹிதம்)
சாந்தன் - சாந்தமானவன் - ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்..
புகல் - பாதுகாப்பு

குரு

அரிசனம் ஆடை அணியும் அரசைப்
பெரியவனை வல்லவனைப் பேச்சிற் கிறையை
மருளை அகற்றிடும் மங்களத் தேவ
குருவை நிதமும் குறி

அரிசனம் - மஞ்சள்
மஹா பல விபோ என்று தீட்சிதர் பாடியுள்ளார்.
பேச்சிற் கிறையை - பேச்சிற்கு இறையை
பேச்சு - வாக்கு (கீஷ்பதே)

சுக்கிரன்

சக்கர பாணியின் தண்ணருளால் கண்ணொன்றை
அக்கணமே பெற்ற அறிவிற் சிறந்தவனை
வக்கிரம் தீர்ப்பவனை வல்லசுரர் ஆசானைச்
சுக்கிரனை நாளும் துதி

சக்கரபாணி - மஹா விஷ்ணு
மஹா விஷ்ணு, வாமனாவதாரம் எடுத்தபோது, மஹா பலியிடமிருந்து மூன்றடி மண்ணைப் பெறும் போது, சுக்ராசார்யார் வண்டாக மாறி, பலி சக்கரவர்த்தியின் கமண்டலத்தின் மூக்கினை அடைத்துக்கொண்டார். அப்போது, வாமன மூர்த்தி, ஒரு தர்பையால் அந்த மூக்கினைக் குத்தவே, வண்டின் ஒரு கண் போயிற்று. வந்தவர் மகாவிஷ்ணு ஆனதால், சுக்கிரனுக்கு ஒரு கண் மட்டுமே போய், மற்றொரு கண் தப்பித்தது.
ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர், கேசவ கடாக்ஷ நேத்ரம் என்று ஸ்ரீ சுக்ர பகவந்தம் பாடலில் பாடியுள்ளார்.
வக்கிரம் - வறுமை

சனைச்சரன்

கருநிற மேனியன் காக்கைமேல் ஏறி
வருகிற தீரன் மறலிக்(கு) இளையன்
பனிச்சடை ஈசனின் பத்தர்க் கருளும்
சனைச்சரன் தாளே சரண்

மறலி - எமன்.
பனிச்சடை ஈசனின் பத்தர்க் கருளும் - சிவபெருமானின்  பக்தர்களுக்கு அனுக்ரகம் புரிவான். தீட்சிதரின் நவகிரக கீர்த்தனை - திவாகர தனுஜம் - அதில் வரும் ஒரு வரி.
பவானீஸ கடாக்ஷ பாத்ர பூத -
பக்திமதாம் அதிஸய ஸுப பலதம்
பவானீஸ - பவானியின் பதி - சிவபெருமான். சிவபெருமானின் கடாக்ஷம் பெற்றவர்களுக்கு (பக்தர்களுக்கு), அதிசயிக்கும் வகையில் நற்பலன்களை அருளுபவன்.

ராகு

சுராசுரனைச் சூலக் கரத்தானை அன்பர்
உரோகம் அகற்றிடும் உத்தமனை மின்னும்
அராவுடல் கொண்ட அதிகோர மான
இராகுவை எந்நாளும் ஏத்து

தீட்சிதரின் நவகிரக கீர்த்தனை, ஸ்மராம்யஹம் சதா ராகும் என்ற பாடலில் வரும் தகவல்கள் சில:
சுராசுரம் - சுர - அசுரம் - பாதி உடல் தேவர்களைப் போல், பாதி உடல் அசுரர் உடல். பாற்கடலில் இருந்து வந்த அமுதத்தின் ஒரு துளியை உண்டதால் ஒரு பாதி  தேவர் உடல் பெற்றான் அசுரனான ராகு.
ரோகஹரம் - உபாதைகளைத் (உரோகம்) தீர்ப்பவன்
சூலாயுத தர கரம் - சூலாயுதத்தைக் கையில் ஏந்தியவன்.
அதிகோரமான - கராள வதனம் - பயங்கர வடிவம் உடையவன்.

கேது

கிரகணத்தின் மூலன் இராகுவிற்குக் கேள்வன்
உரகத் தலையன் மனித உடலினன்
வாதம் வழக்குகளில் வெற்றியைத் தந்திடும்
கேது களைந்திடுவான் கேடு

கேள்வன் - தோழன் (இணையாகக் காணப்படுபவர்கள்)
மஹாஸுரம் கேதுமஹம் பஜாமி என்ற தீக்ஷிதர் கீர்த்தனையில்,
உரகத் தலையன் - மஹா விசித்ர மகுட தரம் (விசித்திர மகுடம் - பாம்பின் தலையே மகுடம்)
நர பீட ஸ்திதம் ஸுகம் (மனித உடல் - அதுவே அவன் அமரும் பீடம்)
நவ க்ரஹ யுதம் ஸகம் (புதிதாக உருவான கிரகம் - ராகு; அவனது தோழன்)
க்ரஹணாதி கார்ய காரணம் - கிரகணத்திற்குக் காரணமானவன்
என்று பாடுகிறார்.

நவக்கிரக வெண்பா நிறைவுற்றது.
நவகோள் மகிழ்ந்து நன்மை அளிக்கட்டும்.
நமச்சிவாய வாழ்க!!

சரண்யா

Wednesday 2 January 2019

50. திருஅன்பில் (பிரபந்தம் 4)

திருஅன்பில் (திருச்சிராப்பள்ளி, கொள்ளிடத்திற்கு அருகில், லால்குடியைத் தாண்டி அமைந்துள்ள சிற்றூர் - அன்பில்)

அறுசீர் விருத்தம்

விளம் மா மா (அரையடி)

1.
கொள்ளிடக் கரையில் துயிலும்
..குறைவிலா அழகு நம்பீ
தெள்ளியின் துயர்தீர்த் தவனே
..திருமகள் மருவும் மார்பா
புள்ளினைக் கொடியாய் ஏற்றோய்
..புண்ணியக் குவையே பரமா
அள்ளிவ ரங்கள் தருவாய்
..அன்பிலில் உறையும் அமுதே

அழகு நம்பி - அன்பில் தலத்து இறைவன் - சுந்தர ராஜ பெருமாள் / வடிவழகிய நம்பி
தெள்ளி - யானை (இங்கு கஜேந்திரனைக் குறிக்கும்)
புள் - பறவை - இங்கு கருடனைக் குறிக்கும்
குவை - குவியல். நாம செய்த புண்ணியத்தின் பலன், இறைவனை அனுபவித்தல்.

2.
கையினில் ஒளிரும் ஆழி
..கவின்மிகு சங்கம் கொண்டோய்
பையரா வின்மேல் துயில்வோய்
..பங்கய நாபா அனந்தா
மையுறு மேனி உடையோய்
..மதுமலர் மாலை அணிவோய்
ஐயனே சிறியேற்(கு) இரங்காய்
..அன்பிலில் உறையும் அமுதே.

3.
படவரா வணையாய்க் கொண்டோய்
..பச்சைமா மலைமே னியினாய்
குடமெடுத் தாடும் கோவே
..குணதிசை நோக்கும் தேவே
வடவரை மத்தாய் வைத்து
..மாகடல் கடைந்த மணியே
அடலெரு(து) ஏழை வென்றோய்
..அன்பிலில் உறையும் அமுதே

படவராவணை - பட அரா அணை - படமெடுக்கும் பாம்பு படுக்கை.

குடமெடுத்தாடும் கோ - குடம் எடுத்து ஆடும் கோ (தலைவன்). ராசக்ரீடையில் குடம் எடுத்து ஆடுதல் ஒரு பகுதி.
குண திசை - கிழக்குத் திசை. அன்பிலில், பெருமாள், கிழக்கு நோக்கிய திருமுகம்.

வடவரை - வட வரை - வரை - மலை. வடக்கில் இருக்கும் மந்திர மலை. வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி - சிலப்பதிகாரப் பாடல்.

அடல் எருது - அடல் என்றால் கோபம். கோபம் கொண்டு பாய்ந்து வந்த எருதுகள் ஏழினை, நப்பின்னைப் பிராட்டியைக் கரம் பிடிக்கும் முன், கண்ணன் அடக்கி, வென்றான்.

4.
துண்டவெண் பிறையான் துயரைத்
..துடைத்தவா! துவரைப் பதியே!
தண்டமிழ்ப் பாவில் மகிழ்வோய்!
..தண்டுழாய் அணியும் மார்பா!
கொண்டலின் வண்ணம் கொண்டோய்!
..குன்றினைக் குடையாய்ப் பிடித்தோய்!
அண்டம(து) உண்ட அரியே!
..அன்பிலில் உறையும் அமுதே!

துண்டவெண் பிறையான் துயரைத் துடைத்தவா - துண்ட வெண் பிறையான் = சிவன். திருக்கண்டியூரில், பிரமனின் சிரம் ஒன்றைக் கொய்ததால், சிவனுக்கு ஏற்பட்ட தோஷத்தைக் களைய, ஹர சாப விமோசன பெருமாள் என்ற திருநாமத்தில், திருக்கண்டியூரில் தோன்றி, சிவனின் தோஷத்தைப் போக்குகிறார்.

துவரைப் பதி - துவாரகா பதி

தண்டுழாய் = தண் துழாய் = குளிர்ந்த துளசி

கொண்டல் - மேகம்

அண்டம் அது உண்ட அரி - பிரளய காலத்தில், நாராயணனின் வயிற்றினுள் உலகம் இருந்தது.

5.
அதலமோ(டு) ஏழ்கீழ் உலகும்
..அவனியோ(டு) ஏழ்மேல் உலகும்
பதமிரண் டாலே அளந்தோய்
..பணிமிசைப் பள்ளி கொள்வோய்
மதுரமாய்க் குழலி சைத்து
..மாடுமேய்த் திடுபா லகனே
அதமனென் றனையும் காப்பாய்
..அன்பிலில் உறையும் அமுதே

பதமிரண்டாலே அளந்தோய் - இரண்டு அடியால் அளந்தவனே
அதமன் - கீழ்த்தனமானவன்

6.
தாயவள் போலே வேடம்
..தரித்துவந் தரவ ணைத்த
பேயவள் பாலை உண்டு
..பின்னவள் உயிரை உண்டாய்
மாயலீ லைகள் செய்யும்
..மரகத வண்ணா கண்ணா
ஆயர்தம் குலத்து மணியே
..அன்பிலில் உறையும் அமுதே

7.
சிலையினை எடுத்தொ டித்துச்
..சீதையை மணந்த சீலா
கலையுரு வோடு வந்த
..கல்லமா ரீசன் தன்னை
நிலையிழந் தொழியச் செய்தோய்
,,நின்மலா நீல வண்ணா
அலைகடல் அடைத்து டைத்தோய்
..அன்பிலில் உறையும் அமுதே

சிலை - வில்
கலை - மான்
கல்லன் - தீயவன்

அலைகடல் அடைத்து உடைத்தோய் - இராமர், கடலில் பாலம் கட்டியது - கடலை அடைத்தது ஆகும். இலங்கையிலிருந்து திரும்பிய பொது, அந்தப் பாலத்தை உடைத்ததாகவும் கூறப்படுகிறது.

8.
காலினால் சகடம் உதைத்த
..கருநிற மேனிக் கண்ணா
நாலிரண் டெழுத்து டையோய்
..நானிலம் போற்றும் தேவா
வாலியை வென்ற வீரா
..மாருதிக் கருள்செய் தோனே
ஆலிலை தனிலே துயில்வோய்
..அன்பிலில் உறையும் அமுதே

9.
வாரணம் அழைக்க வந்த
..வல்லவா ஆதி மூலா
பூரணா புன்மை தீர்ப்போய்
..புண்டரி கனுக்க ருள்செய்
நாரணா மதுரை மைந்தா
..நான்மறை பணியும் மகிபா
ஆரணங் கிடுக்கண் களைந்தோய்
..அன்பிலில் உறையும் அமுதே

புண்டரிகன் - பண்டரிபுரத்தில் வசித்த ஒரு பக்தன். வயோதிகர்களான பெற்றோர்களுக்குச் சேவை செய்தவன். பாண்டுரங்கனாக ஸ்ரீ மந் நாராயணர் அவன் வீட்டு வாசலில், அவன் கொடுத்த செங்கல் மீது நின்றார். அந்த இடமே இன்று பண்டரிபுரம்.

ஆரணங்கு - பெண் - திரௌபதி

10.
"எங்குளான் அரி"யென் றெழுந்த
..இரணிய னதாகம் பிளந்த
சிங்கமே! சீதைக் காகச்
..சீர்நிறை இலங்கை மீது
பொங்கியம் பெய்தி அழித்த
..பூபதீ! செங்கண் உடையோய்!
அங்கணார்க் கோர்கூ றுகந்தோய்!
..அன்பிலில் உறையும் அமுதே

இரணிய னதாகம் - இரணியனது ஆகம்
ஆகம் - மார்பு
அங்கணார்க் கோர்கூ றுகந்தோய் - அங்கணார்க்(கு) ஓர்கூ(று) உகந்தோய்
அங்க(ண்)ணார் - சிவன்

11.

*நவயுவ னாய்வந் தன்று
..நான்முகன் கர்வம் கடிந்தோய்
**தவமுனி மண்டூ கருக்குத்
..தண்ணருள் தந்த இறைவா
கவலைகள் தீர்த்தென் றனக்குன்
..கழலிணை காட்சி தருவாய்
அவனியைக் காக்கும் அரசே
..அன்பிலில் உறையும் அமுதே

*பிரமன், அழகிய உயிர்களைப் படைப்பதில் தான் வல்லவன் என்று மிகவும் கர்வம் கொண்டிருந்தார். இத்தலத்தில், விஷ்ணு, பிரமன் முன்.ஒரு அழகிய இளைஞனின் உருக்கொண்டு, அவர் முன் தோன்றினார். இதுவரை, தாம் இவ்வாறு ஒரு உயிரைப் படைத்ததில்லையே என்று குழம்பினார். பின்னர், சங்கு சக்கரமுடன் பிரமனுக்குக் காட்சிக்கொடுத்து, அழகு என்பது புறத்தோற்றத்தில் இல்லை. தூய மனமே அழகானது என்று கூறி அருளினார். (நவ - புதிய; யுவ - இளைஞன்)

**சுதப முனிவர் நீரிலும், நிலத்திலும் அமர்ந்து தவம் செய்யக்கூடிய வல்லமை உடையவர். ஒருமுறை, கொள்ளிட நதியில் தவம் செய்துகொண்டிருந்த போது, துர்வாச முனிவர் அங்கே வந்தார். அவர் வந்ததை கவனிக்காத சுதபர், தொடர்ந்து நிஷ்டையில் அமர்ந்திருந்தார். கோபம் கொண்ட துர்வாசர், சுதபரை, தவளையாக மாறுவாய் என்று சபித்தார். துர்வாசர் வந்திருப்பதை அறியாக் காரணத்தால், வந்தனம் செய்யாது இருந்தமைக்கு மன்னிக்குமாறு சுதபர் முறையிட, சாபத்தை மாற்ற முடியாது. எனினும், விரைவில் மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்கப் பெற்று, பழைய உருவம் பெறுவாய் என்று துர்வாசர் கூறிச் சென்றார். தவளையாய் இருந்து தவம் செய்ததால், சுதபருக்கு, மண்டூக மகரிஷி என்ற பெயர் வந்தது. அன்பில் தலத்து இறைவன் அருளால், மீண்டும் பழைய உருவம் பெற்றார்.

பதிகம் நிறைவுற்றது.

அன்பில் தனிலே அருளும் அழகனின்
அன்பே அரணாம் நமக்கு

பணிவுடன்,
சரண்யா