Tuesday 20 August 2019

65. அத்தியூர் - காஞ்சிபுரம் - அத்திவரதர் (பிரபந்தம் 5)

அத்தி வரதன் மேல் இயற்றிய வெண்பாக்கள்.

எல்லாப் பாடல்களின் ஈற்றடியும் - அத்தி வரதன் அவன் என்று வரும்.

1.
அத்திகிரி மேவும் அழகன் அழலுமிழும்
அத்திகிரி தன்னை அலரிட்டுக் - கத்திய
அத்தி உயிர்காக்க அத்திக்கில் ஏவிய
அத்தி வரதன் அவன்

அத்திகிரி - ஹஸ்திகிரி/ ஹஸ்தி சைலம் எனப்படும் காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில்
அத்திகிரி - அத் திகிரி - அந்தத் திகிரி - திகிரி - சக்கரம்
அலர் இட்டுக் கத்திய - தாமரைப் பூவை அர்பணித்து, "ஆதி மூலமே" என்று கத்திய யானை
அத்தி - யானை (கஜேந்திரனைக் குறிக்கிறது)
அத்திக்கில் - அந்தத் திசையில்
அத்தி - அத்தி மரத்தால் விஸ்வகர்மா வடித்த வரதராஜ பெருமாள்

2.
அத்தி உருக்கொண்(டு) அமரர்கோன் பூசிக்க
உத்தமத் தானம் உவந்தளித்தோன் - நித்தமும்
பத்திசெய் அன்பர்தம் பாவங்கள் தீர்த்தருளும்
அத்தி வரதன் அவன்

தேவேந்திரன், தான் பெற்ற சாபத்தால், யானையாக மாறினான். பின்னர் காஞ்சிக்கு வந்து யானை உருவில், வரதராஜ சுவாமியைப் பூஜை செய்து சாப விமோசனம் பெற்றான்.

தானம் - இடம் (ஸ்தானம்)

3.
மீனமாய் வந்துயர் வேதத்தைக் காத்தவன்
ஏனமாய் மண்ணை இடந்தவன் - மானவர்
முத்திக்கு வித்துமுன் மூவடி மண்கேட்ட
அத்தி வரதன் அவன்

மீனம் - மீன் - மத்ஸ்யாவதாரம் எடுத்து, வேதங்களை பிரளயத்திலிருந்து காத்தவன்
ஏனம் - பன்றி / வராகம்.
இடத்தல் - குத்தி எடுத்தல். கடலிலிருந்து பூமியைப் பெயர்த்து மேலே கொண்டுவந்தவன்.
மானவர் - மனிதர்கள்
மூவடி மண்கேட்ட - வாமனாவதாரம் குறிப்பு.

4.
படையோரைந் தேந்துபவன்; பாம்பணையான்; பாதம்
அடைவோர்க்(கு) அடைதரும் அப்பன் - விடையோன்றன்
சித்தத் துறைவோன்; திருப்பாற் கடல்வளர்
அத்தி வரதன் அவன்

படையோர் ஐந்து ஏந்துபவன்- பஞ்ச ஆயுதங்கள் - சங்கு, சக்கரம், வில், வாள், கதை
அடைதரும் - அடைக்கலம் தரும்
விடையோன் - சிவ பெருமான்

5.
பேய்முலை நஞ்சுண்ட பிள்ளை; மனம்மயக்கும்
வேய்ங்குழல் ஊதிமகிழ் வித்தகன் - ஆய்க்குலத்தில்
அத்தத்தின் முன்பத்தாம் அல்லில் அடிவைத்த
அத்தி வரதன் அவன்

அத்தத்தின் பத்தாம்நாள் - பெரியாழ்வார் பாடல்.
ஹஸ்த நக்ஷத்ரத்தின் பத்தாம் நக்ஷத்ரம் -
ஹஸ்தத்திலேந்து 10 ஆம் நக்ஷத்ரம் திருவோணம். முன்னோக்கி உத்திரம், பூரம் என்று சென்றால் ரோகிணி பத்தாம் நக்ஷத்திரம் ஆகும். 
கம்ஸனைக் குழப்புவதற்காக பெரியாழ்வாரின் வாக்கு.

கீழ்க்கண்ட தகவலுக்கு - திரு சஹஸ்ரநாமன் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நன்றிகள் பல.

ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம் இவை.மூன்றும் ஜன்ம, அனுஜன்ம, த்ரிஜன்ம நக்ஷத்ரங்கள்.

ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம் செய்ய ப்ரஹ்மதேவருடைய
ப்ரார்த்தனையே காரணம். அதனால் ப்ரஹ்மாவை தேவதையாக உடைய ரோஹிணியில் அவதரணம் ஏற்பட்டது.

யஜுர் வேதத்தில்,
"ரோஹிணீ நக்ஷத்திரம் - ப்ராஜாபதிர் தேவதா " என்பதே இதற்கு நிரூபணம். இங்கு ப்ரஜாபதி என்பது ப்ரஹ்மாவைக் குறிக்கும்.

ரோஹிணியிலிருந்து 10 வது ஹஸ்தம். அதிலிருந்து 10 வது திருவோணம். சேர்த்துக்கொண்ட 3 நக்ஷத்ரங்களையும் கழிக்க, ஸமுதாய நக்ஷத்ர ஸங்கயை 27 வரும்.

6.
அனந்த சரசுள் அறிதுயில் கொள்வோன்
வனஞ்சென் றுறைந்த மகிபன் - சினந்தெதிர்த்த
மத்த கயத்தை மருப்பொசித்து மாட்டிய
அத்தி வரதன் அவன்

அனந்த சரசு - அனந்த சரஸ் புஷ்கரணி.
மத்த கயம் - மத யானை - குவலயாபீடம்

7.
கன்றெறிந்து, கானில் கனியுதிர்த்துக் கோகுலத்தைக்
குன்றெடுத்துக் காத்தவன், "கோவிந்தா" - என்றதனால்
கத்திர பந்துவெனும் கள்ளனையும் ஆட்கொண்ட
அத்தி வரதன் அவன்

கன்று - வத்ஸாசுரன்
கனி - விளாங்கனி - விளாங்கனியாய் நின்ற மற்றொரு அசுரன் - கபித்தாசுரன்
குன்று - கோவர்த்தன மலை
கத்திர பந்து - க்ஷத்திரபந்து என்பவன் - மன்னர் குலத்தில் பிறந்தாலும், தீய வழியில் ஒழுகினான். அதனால் அவன் குடும்பத்தாரே வெறுத்து ஒதுக்க, காட்டில் வாழ்ந்து, கொள்ளை அடித்து வந்தான். முனிவர் ஒருவரால் திருந்தி, "கோவிந்தா" என்று ஜபித்து வந்தால், பாவங்கள் தீரும் என்று அவர் சொல்ல, கோவிந்தா என்று பலமுறை ஜபித்து நற்கதி அடைந்தான்.

8.
கஞ்சனை மாய்த்தவன் கன்றின(ம்) மேய்த்தவன்
தஞ்சமென்(று) அண்டிய சான்றவர் - பஞ்சவர்க்(கு)
உத்தி உணர்த்தித்தேர் ஓட்டி உரமளித்த
அத்தி வரதன் அவன்

சான்றவர் - சிறந்தவர்
பஞ்சவர் - பாண்டவர்
உத்தி - ஆலோசனை/வழி

9.

சாம்பனுந் தேவருஞ் சாலத் திகைப்புறத்
தாம்பினாற் கட்டுண்ட தற்பரன் - பாம்புமிசை
வித்தக நர்த்தனம் வீறுகொண் டாடிய
அத்தி வரதன் அவன்.

சாம்பன் - சிவபெருமான்
தாம்பு - கயிறு
பாம்பு - காளியன்

10.

சிங்கவுரு வேற்றுச் சிறுவன்சொல் கேட்டெழுந்த
துங்கன்; மரையாள் துணைவனரன் - பங்குறையும்
சத்தி தமையன் சமுசார பந்தந்தீர்
அத்தி வரதன் அவன்

சிங்கம் - நரசிம்மர்
சிறுவன் - பிரகலாதன்

மரையாள் துணைவனரன் பங்குறையும்
சத்தி தமையன் - மரையாள் துணைவன்; அரன் பங்குறையும் சத்தி தமையன்.

மரை - தாமரை. மரையாள் - தாமரை மலரில் வீற்றிருக்கும் இலக்குமி.

11.

அத்தி வரதன் அவனெனவட் டாக்கரனைத்
தித்திக்கும் நற்றமிழில் செப்பியவிப் - பத்தும்
பகர்வார் பிறவிப் பயனைப் பெறுவார்
திகழ்கூர் பரமனடி சேர்ந்து.

அத்தி வரதன் அவன் என அட்டாக்கரனை = அட்டாக்கரன் - எட்டெழுத்து மந்திரத்தான் - அஷ்டாக்ஷரன்

பதிகம் நிறைவுற்றது

ஓம் நமோ நாராயணாய

No comments:

Post a Comment